(Karunakaran Sivarasa)
கடந்த புதன்கிழமை (18.07.2018) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுகப்படுத்தலும் நடந்தது.இது ஒரு சாதாரண நிகழ்வல்ல. ஏதோ புத்தக வெளியீட்டு நிகழ்வுதானே என்று ஒதுக்கி விடக்கூடியதும் அல்ல.
இந்த நாட்டின் எதிர்காலத்துடன் சம்மந்தப்பட்ட நிகழ்வு இது.
பரஸ்பர நல்லெண்ணங்களே இலங்கையின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்குமான அடிப்படையாகும். அதை இந்த நிகழ்வு தன்னிடத்தில் கொண்டிருந்தது.
பலமான தரப்புகளால், மிக நேர்த்தியாக கூர் திட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் பகை முரணைக் கடந்து, பரஸ்பரப் புரிந்துணர்வுக்கு அடித்தளமிடும் முயற்சியில் எப்போதும் நன்முயற்சியாளர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
இப்பொழுதும் அப்படியானவர்கள் தங்களை அர்ப்பணித்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் வசதிகளோ வளங்களோ உள்ளவர்கள் அல்ல. இதயத்தில் நிறைந்திருக்கும் நல்லெண்ணங்களே இவர்களின் பலமும் வளமும். அதுவே நட்சத்திரங்கள். அத்தகையவர்களின் கூட்டுமுயற்சியே இந்தப் புத்தகங்களின் மொழிபெயர்ப்பும் வெளியீடுமாகும்.
வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களில் ஒன்று “மரக தோரணம்”. கலாநிதி பிரபாத் ஜயசிங்ஹவின் சிறுகதைகள். இரண்டாவது நூல், “இவ்விரகசிய சாளரத்தால் உற்று நோக்கின்”. இது கௌஷல்ய குமாரசிங்ஹவுடைய நாவல். இந்த இரண்டு புத்தகங்களையும் மொழிபெயர்த்தது விமல் சாமிநாதன்.
மூன்றாவது புத்தகம், நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” என்ற நாவல். இதை சிங்களத்திலிருந்து தமிழ்ப்படுத்தியிருப்பவர் அனுஷா சிவலிங்கம்.
இந்தப் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களும் இவற்றை மொழிபெயர்த்தவர்களும் இனவாதத்தைக் கடந்த சிந்தனையாளர்கள். தமிழ் சிங்கள மொழிச் சமூகங்களுக்கிடையில் பரஸ்பரப் புரிந்துணர்வும் நல்லுறவும் வேண்டும் என இதயத்தில் விரும்புகின்றவர்கள். இதன் நிமித்தமாகவே தங்களுடைய எழுத்துகளை சமூகப் பரிமாற்றம் செய்கின்றனர். அந்த வகையில்தான் இவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இதைச் செய்வதற்கு முன் வந்திருந்தனர்.
இந்த மூன்று புத்தகங்களையும் அஹச மீடியா வேக்ஸ் (Ahasa Media Works) வெளியிட்டுள்ளது. அஹசவின் பணியே புதிய அரசியல் பண்பாடொன்றை உருவாக்கும் வகையிலான சிந்தனைப் புலத்தை உருவாக்கிக் கட்டமைப்பதாகும். இதற்காக அது தமிழிலும் சிங்களத்திலும் நூல்களை வெளியிட்டு வருகிறது. சந்திப்புகளைச் செய்கிறது. மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கிறது. மிக எளிய முறையில், ஆனால் தாக்கமான செயற்பாடுகளாக அஹசவின் பணிகள் உள்ளன.
இது பகை மறப்பு, நல்லெண்ண முயற்சிகளை முன்னெடுத்தல், பரஸ்பரப் புரிந்துணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றை முன்னெடுக்கும் காலம் . இதற்காகப் பெருமளவு பணமும் மனித ஆற்றலும் பிற வளங்களும் செலவழிக்கப்படுகின்றன. ஆனால், அஹச எந்தப் பெரிய நிதிப்பலமும இல்லாமல் தன்பாட்டுக்குச் சமூகங்களுக்கிடையில் இறங்கி வேலை செய்கிறது. இதை ஆதரிப்பதே நமது முன்னால் உள்ள பணி.
மடிக்குள்ளே மருந்திருக்கும்போது மலையெல்லாம் தேடுவதைப்போல காலடிக்கு வந்த நற்காரியத்தை காணாமல் விட்டதே இங்கே நடந்திருக்கிறது.
சிங்களத்திலிருந்து தமிழ்ப்படுத்திய மூன்று புத்தகங்களோடு அஹசவும் அதன் எழுத்தாளர்களும் பிற கலைஞர்களும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தனர். யாழ்ப்பாணச் சமூகத்துடன் உரையாடுவதற்கு அவர்கள் விரும்பியிருந்தனர். யாழ்ப்பாணத்தின் ஊடகங்கள் வழியாகப் பேசுவதற்கும் தயாராக இருந்தனர். ஆனால் எதிர்பார்த்தளவுக்கு இதில் தமிழ்த்தரப்பு ஈடுபடவில்லை. வழமையைப்போல ஒரு மாற்றத்தை விரும்புகின்ற ஒரு வட்டத்தினர் மட்டும் கலந்து கொண்டு உரையாடினர். பெருந்தரப்பு காணாமலிருந்தது. அல்லது பார்க்க விரும்பவில்லை. அல்லது பொருட்படுத்தவில்லை.
ஆனால், அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய நிகழ்வு புதிய வரலாற்றுக்கு ஒரு தொடக்கமே. நல்லெண்ணத்தோடு வந்திருக்கிறோம். வாருங்கள் கைகோர்ப்போம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே வந்திருந்த இந்தத் தோழமைகள் தங்கள் இனிய தொடக்கத்தை நிகழ்த்தினர்.