(சிவகாமி)
வாழ்வின் பின்னோக்கிய பயணமிது
சிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான்.இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு.அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள் ,வயல்கள் ,காடுகள், தென்னம் தோப்புகள் ,தோட்டங்கள் ஆறுகள் ,சிறிய குளங்கள் ,கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை. அதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள்.
எந்த நவீன நாகரீக வாழ்க்கையும் தீண்டாத தூய்மையான இயற்கையாகவிருந்தது அக்கிராமம் . கிராமத்தில் ஆரம்ப பாடசாலைகள் இரண்டும் உயர் வகுப்புக்குரிய பாடசாலை ஒன்றுமிருந்தது. மிக முக்கியமாக அங்கு ஆங்கில மொழியின் வாசனை சிறிதாக கூட இல்லையெனலாம். அப்படி இருந்த பாடசாலையில் தான் அம்மக்கள் தம் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகளும் கள்ளமில்லா கல்வியையும் தம் மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டிய வாழ்க்கையையும் பின்பற்றி வாழ்ந்தார்கள். பாடசாலை செல்வது மாலைநேரங்களில் ,சனி ஞாயிறு ,விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு உதவியாக தோட்டங்களிலும் வயல்களிலும் உதவியாக இருப்பது போன்ற வற்றில் ஈடுபட்டதால் வாழ்வின் போக்கையும் அதன் தாற்பரியங்களையும் உணர்ந்தவர்களாயிருந்தார்கள் அந்தப் பிள்ளைகள்.
சிவகாமி மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தபடியால் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தன் கிராமத்தில் அமைதியாக வறுமையின் சுவடுகளுடனே வாழ்ந்தாள். படிப்பும் ஓரளவு புரிந்தும் புரியாமலும் தானிருந்தது.பாடமாக்கி ஒப்புவித்தலுக்காக படிக்கவுமில்லை.ஏதோ படித்தாள். வாழ்வில் எந்த இலட்சியமுமில்லை.இளமையில் வறுமை என்பது கொடுமை தான் என்பதை அவளது உள்ளுணர்வுக்குப் புரிந்தது என்னவோ, சிறுவயதில் தாயாரின் கடுமையான நோயும் அத்துடன் சேர்ந்திருந்த படியால் வாழ்வு என்னவோ இன்பமாக இருக்கவில்லை என்பது என்னவோ உண்மை தான்.
ஏழ்மையிலும் அவளிடம் ஏதோ ஓர் துடுக்குத்தனமிருந்தது. வாழ்வில் இரு சகோதரர்களை ஆறு மாதத்துக்குள் இழந்தது அவளுக்கு வாழ்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இளவயது மிகவும் துன்பத்துக்குள்ளாகிய நேரமது அவளுக்கு.தனது இளைய தம்பி அவளின் அன்புக்கும் ஆசைக்குமுரிய கண்ணன். அவளின் தாயார் மிகவும் நோயுற்றிருந்த வேளை அவள் தான் 13 வயது காலகட்டத்தில் தாயாக தன் சகோதரன் சிவகரனை வளர்த்தாள். அவனின் இறப்பும் அவளின் தமையன் விக்கினேஸ்வரனின் இழப்பும் ஆறுமாதங்குள்ளாகவே அவளின் பிஞ்சு உள்ளத்தை வாட்டித் தான் போட்டு விட்டது.
ஆனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை யாராலும் தவிர்க்க முடியுமா என்ன ?அப்படியே வாழ்வு வசந்தங்களையும் அள்ளித்தருமா என்ன? அது தன் பாதையில் ஓடிக்கொண்டு தானிருந்தது. வறுமையிலிருந்து மீள ஆண்டவனும் எந்தக் கருணையும் காட்டவில்லை. இப்போ அவளுக்கு மூன்று சகோதரிகள் .இவளே மூத்தவள்.நல்லாகப் படித்து வாழ்வில் ஓர் அரச உத்தியோகத்தைப் பெற்று வீட்டாரின் வறுமைக்கு ஓர் முற்றுப்புள்ளி தேட வேண்டும் என்று ஓர் கட்டத்தில் நினைத்துப் படித்தாள்.
உயர்தரம் படித்த அவளால் மேற்கொண்டு எதுவுமே செய்ய முடியவில்லை. அரசவேலை வாய்ப்பும் கிடைக்க யாரின் ஆதரவோ சிபாரிசோ இல்லை. ஆதலால் அரச உத்தியோகமுமில்லை. அதன் பின் தோட்டம் செய்யத் தொடங்கி மழை பொய்த்து எல்லாம் அழிந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் தாயாரின் நோயும் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கே பல தடவை முயன்றுமிருக்கிறாள் சிவகாமி.அவளைப் பொறுத்தவரையில் வாழ்வு மிகவும் அழுத்தமான கடுமையான பதிவுகளை அவள் வாழ்வில் பதி்த்திருந்தது.
சாப்பாட்டுக்கே கஸ்டம். பட்டினி .ஒழுங்காக உடுத்த உடுப்பில்லை. அவள் பாடசாலையில் கல்வி கற்கும் போது அவளின் பாடசாலை சீருடை மிகவும் கிழிந்து நைந்து போய் அதற்கு அவள் ஒட்டுப் போட்டுத் தைத்திருப்பாள். ஓர் முறை அவள் படித்த பாடசாலைக்கு நாட்டின் அரசியல் பிரமுகர் ஒருவர் வந்தார். அப்போது அவளிடம் காலுக்கு வெள்ளைப் பாதணி சப்பாத்து வாங்க காசில்லாமல் அவள் அந்த பிரமுகரின் வருகையின் போது மக்கள் கூட்டத்தினரோடு சேர்ந்து அந்த பிரமுகரின் வருகையை எதிர்கொண்டு ரசித்தாள்.
இப்படியான வாழ்வில் சிவகாமி வாழ்ந்த காலத்தில் தான் நாட்டில் விடுதலைப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்திருந்தது. விடுதலையைப்பற்றி எதுவித அறிவுமற்ற அவள் அவளின் தோழியின் உதவியுடன் அதில் இணைந்தாள். எதுவுமே தெரியாத அவள் எந்த விடுதலை இயக்கத்தில் இணைகிறாள் என்றே தெரியாது . அவளின் தோழியுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவளைப்பொறுத்தவரை அவள் எல்லாவற்றிலும் தோற்று வீட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியில் வெளியேறியது தான். எந்தக் கொள்கையோ பற்றோ அன்றில் விளக்கமோ இல்லை. சொந்த மண்ணிலிருந்து அவள் வேறு நாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டாள். ஆரம்பத்தில் அவளால் அங்கும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தான் சாப்பிடும் ஒவ்வொருகணமும் தன்குடும்பத்தார் சாப்பி்ட்டார்களா என்று ஏங்கி கண்ணீர் விட்டிருக்கிறாள்.வாழ்வு வடுக்களை மட்டுமல்ல ஆறாத காயங்களையும் சேர்த்து விடுவது என்னமோ உண்மை தான்.
(தொடரும்…..)