(சிவகாமி)
வாழ்வின் பின்னோக்கிய பயணமிது
சிவகாமி தனக்கான தன் பெயரை இயக்கத்தில் மாற்றி வேறு ஓர் அடையாளப் பெயருடன் செயலாற்றத் தொடங்கினாள். அங்கு போன பின்பு தன்னை சிவகாமி நிறைய கற்றலுக்குட்படுத்தினாள். தேடலுக்குட்படுத்தினாள். ஆனால் என்னவோ அவளின் சித்தத்தில் தர்மமும் நீதியும் இருந்தது. அப்போது தான் அவளுக்கு வழிகாட்ட சுதாக்கா ,மனோமாஸ்டரின் பேச்சுக்கள் புரிந்தது. பிடித்தும் போய் விட்டது. அவர்களை அவள் நேசித்தது மட்டுமல்ல மதித்து நடந்து அவர்களின் உரைகளைக் கவனித்து தன்னைச் செதுக்கினாள்.பல தேடல்களை தானே தேடினாள்.ஆனால் விடை எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் கூட உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காத எண்ணத்தை மட்டும் அவள் சித்தத்தில் பதிய விட்டிருந்தாள்.
இக்கட்டத்தில் தான் அவள் சார்ந்த இயக்கத்தில் உட்கட்சி முரண்பாடு ஏற்பட்டது .அக்கட்டத்தில் தான் அவள் மனோமாஸ்டரின் கருத்துக்களில் இருந்த நியாயத்தைப் புரிந்து மனோமாஸ்டருடன் பிரிந்து சென்ற குழுவுடன் இணைந்தாள். இந்த நேரத்தில் அவள் தன்னை ஓர் கருத்தும் இலட்சியமும் கொண்ட ஓர் போராளியாக சீரமைத்திருந்தாள். அந்த நேரம் அவள் தமிழ் சிங்களம் முஸ்லீம் என்று பிரித்துப்பார்க்காமல் எல்லோருமே மனிதர்கள் தான் எல்லோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு அவர்கள் பெறவேண்டும் என்பதிலும் இதை யாராலும் தட்டிப்பறிக்கவோ திருடவோ முடியாது என்பதை உணர்ந்திருந்தாள்.
உட்கட்சிப் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போது சிவகாமியுமிருந்தாள்.வெற்றி பெற்றது என்பதை விட அக்குழு அதை நடத்தி காட்டியது.அப்படியான ஒரு முற்போக்குக் குழுவில் சிவகாமி இருந்து நிறையவற்றைக் கற்றாள்.எதிர்காலத்தில் அக்குழுவினருடனேயே இணைந்து மக்களுக்கான விடுதலைக்கு உழைக்க வேண்டுமென்பதில் குறியாயிருந்த சிவகாமிக்கு அந்த விடுதலையில் தன்குடும்மும் அதைப் போன்ற குடும்பங்களும் வசந்தத்தைப் பெறும் என்று பெரிய எதிர்பார்ப்பிருந்தது.அந்த நேரம் அந்த சிந்தனை அவளை மிகவும் சந்தோசத்தின் உச்சிக்கு அழைத்து தான் சென்றிருந்தது. அது மிகவும் கற்பனை என்பதை அவள் பின்னாளில் உணர்ந்து குமுறி அழுதிருக்கின்றாள்.
தான் சார்ந்த முற்போக்குக் குழுவுக்கு சரியான தலைமை மனோமாஸ்டர் என்பது அவளுக்குத் தெரியும். அப்போது தான் அந்த கொடூர துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கொடூரப்புலிகளால் மனோமாஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டது.அவ்வேளை அந்தக் குழுவில் எல்லோருமே திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட ஓர் உணர்வோடு செயலற்றிருந்தார்கள்.அது மிகவும் வேதனை மிகுந்த காலகட்டம். போராளிகளினது நிலை ஒரு புறம் ,சரியான தலைமையை தமிழ்மக்கள் இழந்து விட்டது மிகவும் பேரிடியாகவே அவள் அதைப் பார்த்து மிகவும் அழுதாள்.வேறொர் நாட்டில் சாப்பாட்டுக்கும் இருப்பிடத்துக்கும் மிகவும் கஸ்டமான நிலையில் மனோமாஸ்ரின் தம்பி ராஜனும்,ரஞ்சித் தும் ஏனைய தோழர்களும் பெண் போராளிகளை மிகவும் நல்ல முறையில் பாதுகாத்தார்கள்.
மனோமாஸ்டரின் அக்காவின் கழுத்து தங்கச்சங்கிலியைக் கூட விற்று சாப்பாட்டுக்கு பயன்படுத்தினார்கள். மறக்கமுடியாத எதையும் எதிர்பார்க்காத இவ்வுதவிகள் இன்றும் நினைவுகூரப்பட்டு நன்றிக்குரியவையாக பேணப்படுகிறது சிவகாமியின் இதயத்தில்.மனோமாஸ்டரின் மரணமும் சரியான வழிகாட்டலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல பொருளாதார வசதியோ பாதுகாப்பு வசதியோ இல்லாத காரணத்தால் சிவகாமியினதும் அவளின் முற்போக்கு சிந்தனையாளர்களின் கனவும் எல்லாமே அவர்கள் எல்லோரையும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பி விடத்தூண்டி விட்டது. உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை மட்டும் சுமந்தபடி வாழ்வு மிகவும் வரட்சியாக ஓடவும் தான் தொடங்கியது எல்லோரையும் போல் சிவகாமிக்கும்.
சிவகாமி தான் தனது போராட்டத்தை தொடர முடியாமல் திரும்பி நாட்டுக்கு வந்த நேரம் அவளின் தாயார் இறந்து பதினாறு நாட்களாகி விட்டிருந்தது. மிகவும் வேதனையையும் துன்பத்தையும் எதிர் கொண்டு சுக்குநூறாகியிருந்தாள். வீட்டின் பொருளாதார நிலையும் மிகவும் மோசமாக இருந்தது. ஏதாவது வேலை தேட வேண்டும் வீட்டைப் பார்க்க வேண்டுமென்ற நிலையில் மீண்டும் தோட்டம் செய்யத் தொடங்கினாள். அதிலும் முன்னேற முடியவில்லை. சிறு சிறு தொழில்கள் செய்து பார்த்தாள் எதிலும் முன்னேறி குடும்பத்துக்காக எதையும் செய்ய முடியவில்லை.
மிகவும் வெறுத்த நிலையிலிருந்த போது தான் ஓர் மருந்தகத்தில் முந்நூறு ரூபா சம்பளத்தில் வேலை கிடைத்தது.அப்போது விடுதலை இயக்கங்கள் பல இருந்த காலகட்டம்.அந்த மருந்தகமும் ஓர் விடுதலை இயக்கத்தின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது. ஏதோ ஓர் நிம்மதியுடன் வருமானம் குறைவு என்றாலும் அந்த மருந்தகம் அந்தக் கிராமத்துக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் விடயமாக இருந்தது. அது ஓர் மக்களுக்கான சேவையுமாக இருந்தது.
அதில் திருப்தியுடன் வேலை பார்த்த போது தான் விடுதலைப்புலிகளால் அந்த மருந்தகம் அதன் பெயர் மக்கள் நல மருத்துவச் சங்கம் என்பது புலிகளின் துணைத்தளபதி சுசிலனால் அடாவடியாக கைப்பற்றப்பட்டது. சிவகாமியிடமிருந்து பல விளக்கங்கள் கூறப்பட்டும் அந்த கொடிய மிருகமான சுசிலனால் தலைமையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் எந்த விளக்கமுமில்லாமல் அந்த கிராமத்துக்கான சேவை நிலையமான அந்த மருந்தகம் தடைசெய்யப்பட்டது.
உண்மையிலேயே அந்த மருந்தகம் தாழ்த்தப்பட்ட சாதியினர் பத்து பேர்கள் கொண்ட ஓர் குழுவினரால் தொடங்கப்பட்டது. முழுக்க முழுக்க அந்த பத்து பேரின் பணம் தான் முதலீடு.ஆனால் EPRLF இல் இருந்த ஓர் போராளி அவர் சிவகாமியின் ஊரைச் சேர்ந்த ஓர் முற்போக்குப் போராளி சுந்தர் என்ற அமலனின் ஆலோசனையின் பெயரில் கிராமத்தின் நன்மை கருதி தொடங்கப்பட்ட ஓர் சேவை மையம். அதில் யாருக்கும் எந்தவித இலாப நோக்கமும் இல்லை. முழுக்கு முழுக்க மக்களுக்காக உதவுவதிற்காக தொடங்கப்பட்டு அது நிறைய கடுமையான நோயாளிகளையும் காப்பாற்றி யிருந்தது. கடுமையான நோயாளிகளின் அந்த நேர நோயின் கொடுமைகளையும் தீர்த்திருந்தது. அதை பிரபாகரனின் கொடூர மனம் அதிகார வெறிபிடித்த கோழைகளால் தாங்க முடியாமல் தடை செய்யப்பட்டது.
(தொடரும்….)