(வர்கீஸ் கே.ஜார்ஜ்)
பாஜகவை காங்கிரஸ் நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டிய மாநிலங்களில் மூன்றில் இனி காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியில் இருப்பார்கள்; கடந்த ஆண்டு குஜராத்தில் பாஜகவுக்கு உயிராபத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஆனால், ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இப்போது ஆட்டம் சூடுபிடித்துவிட்டது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்ற ஓராண்டின் சாதனைச் சுருக்கம் இதுதான்.
ராகுல் கொண்டுவந்த முக்கிய மாற்றங்கள்
காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்ற பிறகு, கட்சியின் மூத்த தலைவர்களையும் இளைய தலைமுறையையும் பிணைக்கும் வேலையைச் செய்து முடித்தார் ராகுல். ‘வயது பதினெட்டாக இருந்தாலும் எண்பதாக இருந்தாலும் கட்சி நிர்வாகத்தில் அனைவருக்கும் பங்கு உண்டு’ என்ற உத்தியைக் கடைப்பிடித்தார். கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட மூன்று அம்சத் திட்டம் ஒன்றைக் கட்சி நிர்வாகிகளிடையே முன்வைத்தார். வெவ்வேறு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களைக் கட்சியில் நிர்வாகப் பணிக்குச் சேருங்கள், கட்சி அமைப்புகளை வலுப்படுத்துங்கள், சமூக நீதி காக்க கட்சித் தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்கள். அதாவது, சமூகத்தின் கீழ்நிலையில் இருப்பவர்களுக்கும் கட்சிக்குள் பிரதிநிதித்துவமும் மரியாதையும் அளியுங்கள் என்பதே அது.
புதிய நிர்வாகிகள் ஒவ்வொரு மாதத்திலும் மூன்று வாரங்களைத் தாங்கள் பொறுப்பேற்கும் மாநிலங்களில் செலவழிக்க வேண்டும். கீழே வாக்குச்சாவடி வரை ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டும். எல்லாத் தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகள் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். வேட்பாளர் தேர்வில் அவர்களுடைய கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அவர்களுடைய யோசனைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகளைக் கட்சி நிர்வாகிகள் வலியச் சென்று அணுக வேண்டும். கட்சியின் செயல் திட்டங்களிலும் அமைப்புகளிலும் சமூக நீதிக்கு நிச்சயம் இடமளிக்க வேண்டும்.
இந்துவுக்கான வரையறை
பாஜக மதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தொடுத்த தாக்குதலைச் சரியாகவே கையாண்டார் ராகுல். ‘ராகுல் காந்தி இந்துவே அல்ல, அது மட்டுமல்ல – இந்துக்களுக்கு எதிரான கருத்துள்ளவர்’ என்ற பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக ராகுல் காந்தி தன்னையே மாற்றிக்கொண்டார். தன்னுடைய இந்து மத அடையாளத்தையும் இறை பக்தியையும் வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இது சரியா என்பது தனி விவாதத்துக்கு உரியது. ஆனால், அவர் மேற்கொண்ட புனிதப் பயணங்களும் கோயில் யாத்திரைகளும் மத்திய தர வர்க்கத்தினரிடையே அவரைப் பற்றி மாற்றார் பரப்பிய பொய்யுரைகளைப் பொடிப்பொடியாக்கின.
வெவ்வேறு மாநிலங்களில் காங்கிரஸுக்குக் கிடைத்த இடங்கள் வெவ்வேறு விதமாக இருப்பதற்குக் காரணம் வெவ்வேறுவிதமான உத்திகளும் வியூகங்களும்தான். சத்தீஸ்கரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – குறிப்பாக யாதவ்கள், குர்மிகள், சாஹூக்கள் காங்கிரஸுக்கு ஆதரவாகக் கணிசமாக வாக்களித்தனர். இப்பிரிவினர் போட்டியிட அதிக தொகுதிகளை ஒதுக்கியது, விவசாயிகளின் துயரங்கள் குறித்து எல்லாப் பொதுக்கூட்டங்களிலும் ராகுல் உணர்ச்சிகரமாகப் பேசியது இப்பிரிவு மக்களை காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்துள்ளது. கட்சி அமைப்பு வலிமையானதாகவும், முன்கூட்டியே சிந்துத்துச் செயல்படுவதாகவும் மாறியது. ரமண் சிங் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எதிராக இருந்த அதிருப்தியை காங்கிரஸ் எவ்வளவு பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு இங்கு பயன்படுத்திக்கொண்டது.
ராஜஸ்தானில் மாநில பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சச்சின் பைலட்டின் இடைவிடா முயற்சியும் விடாப்பிடியான செயல்பாடுகளும் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டின. அவருக்கும் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட்டுக்கும் இடையிலான பதற்றம் வேகத்தை அவ்வப்போது குறைத்தன. மத்திய பிரதேசத்திலும் இதுபோல நடந்தது. காங்கிரஸுக்கு ஆதரவான சமூகத்திரட்சியும் இவ்விரு மாநிலங்களிலும் வலுவாக இல்லை.
விளைவாக பெருவெற்றி இங்கு சாத்தியம் ஆகவில்லை. ஆனால், பாஜக வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
அடுத்தது என்ன?
தேர்தலில் வெற்றிபெற உதவும் வியூகம், ஆட்சி அதிகாரத்துக்குப் பொருந்தாது. ராகுல் காந்தி முன்னால் உள்ள உடனடி சவால் இதுதான். சத்தீஸ்கருக்கு முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் அது எளிதல்ல. மூத்த தலைமுறையின் எதிர்பார்ப்பையும், இளைய தலைமுறையின் துடிப்பையும் ஒரே நேரத்தில் பூர்த்திசெய்தாக வேண்டும். கட்சிக்குள் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் போட்டியிட வாய்ப்பு தந்ததைப் போலவே ஆட்சியதிகாரத்திலும் பங்கு தர வேண்டும். அதே சமயம், கட்சிக்குள் இருக்கும் மேல்தட்டு சாதியினருக்கும் இடம் தந்தாக வேண்டும்.
இனி தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எந்த அரசியல் அணி திரண்டாலும் அதில் காங்கிரஸ்தான் மையமாக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் காங்கிரஸுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையில் புதிய பரிமாற்றங்களுக்கு வழியேற்பட்டுவிட்டது. பாஜகவை எதிர்ப்பதாகப் பெரும்பான்மையான மாநிலக் கட்சிகள் அறிவித்தாலும் காங்கிரஸ் கட்சியை அவற்றால் இயல்பாக ஏற்றுக்கொண்டுவிடவும் முடியாது.
தெலங்கானாவிலும் மிசோரத்திலும் மாநிலக் கட்சிகளின் பெருவெற்றியைச் சுட்டிக்காட்டி எல்லா மாநிலக் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் கடுமையாகப் பேரம் பேசும். பாஜகவுக்கு ஒரே மாற்று காங்கிரஸ்தான் என்பதை வலியுறுத்தித் தனக்கு முதன்மை இடம் தருமாறு எல்லா தோழமைக் கட்சிகளிடமும் வலுவாகப் பேரம் பேசியாக வேண்டும் காங்கிரஸ். ஏதோ ஒருவர் விரும்புகிறார் என்பதால் ஏற்பட்டுவிடுவதல்ல அரசியல் கூட்டு. தங்களுடைய கட்சியைக் காத்துக்கொண்டு மேற்கொண்டு முன்னேறவும் உதவும் என்றால்தான் கட்சிகள் கூட்டணிக்கு முயலும். இந்துத்துவக் கட்சியை அதன் வளர்ச்சிக்கு உதவிய மாநிலங்களிலேயே சந்தித்த ராகுல் அந்தப் போராட்டத்தை அடுத்து உத்தர பிரதேசம், பிஹாருக்கும் கொண்டுசெல்ல வேண்டும். நாடு முழுமைக்கும் அவர் கொண்டுசெல்வார்.
(தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்)