சமூக வலைத்தளங்கள், இந்திய, உள்ளூர் ஊடகங்கள் போன்றவற்றில், ‘பாரதிய ஜனதா கட்சியின் கிளை’ என்ற செய்தி வெளியாகியிருந்த போதிலும், “அவையெல்லாம் கட்டுக்கதையாகும்” என அரசாங்கம் பதிலளித்துவிட்டது.
இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் ஊடாக முடிச்சு அவிழ்க்கப்பட்ட ‘இரட்டை பிரஜைவுரிமை’ கொண்டவர்கள், பாராளுமன்றத்துக்குள் செல்லமுடியும் என்பதையும் உத்தேச புதிய அரசியலமைப்பின் வரைபில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாய் சொல்லப்படும் சில விடயங்களையும் வைத்து, ‘கிளை’ விவகாரத்துக்கு உத்தேச பதிலொன்றை அரசாங்கம் வழங்கியுள்ளது.
அதாவது, உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் காணொளிகளோ, ஒலிப்பதிவுகளோ தங்களுக்குக் கிடைக்கவில்லை; “இது வெறும் தேநீர் கடைப்பேச்சாகும்” என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவருமான உதயன் கம்மன்பில, “தேசப்பற்றாளர்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். ஒரு கட்டுக்கதை” என்கிறார்.
ஆனால், மேற்படி விவகாரத்தில் இலங்கையில் அரசியலமைப்பு, பாராளுமன்ற தேர்தல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் ஆராயும் போது, பாரதிய ஜனதா கட்சியின் கிளையை இலங்கையில் நிறுவுவது ஒருபோதுமே சாத்தியப்படாது.
1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரமே, அரசியல் கட்சிகள் பதியப்படுகின்றன. கடந்த வருடங்களில் மட்டுமே 150க்கும் மேற்பட்ட கட்சிப்பதிவு விண்ணப்பங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்திருக்கின்றன எனினும், ஆறு கட்சிகள் மட்டுமே பதியப்பட்டன. இவ்வாறிருக்கையில் வெளிநாட்டு கட்சியொன்றை உள்நாட்டில் பதிவது எப்படி?
கட்சியொன்று, தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் செயற்பாட்டு அரசியலில் இருக்கவேண்டும். அக்காலப்பகுதியில் கணக்காய்வு அறிக்கையை பேணியிருத்தல் அவசியம். கட்சியின் கொள்கை, நிர்வாக சபையொன்று இயக்கத்தில் இருந்திருக்கவேண்டும். இவ்வாறான நிலைமையில், புதிய கட்சியொன்றை எடுத்த எடுப்பிலேயே எவ்வாறு பதியமுடியுமென்ற கேள்வி எழும்புகின்றது.
நேர்முகத் தேர்வின் போது நிராகரிக்கப்பட்ட கட்சியொன்று, அடுத்த ஒரு வருடத்துக்குப் பின்னரே விண்ணப்பிக்கவே முடியும். இவையெல்லாம் சட்ட ஏற்பாட்டில் அச்சொட்டாக இருப்பதால், பாரதிய ஜனதா கட்சியின் இந்த அறிவிப்பு, உள்ளூர் அரசியலைக் குழப்பிவிட்டு அதில் குளிர்காய முயற்சிக்கும் முயற்சியாகவே பார்க்கின்றோம்.
ஆட்சியிலிருக்கும் தாமரை மொட்டை சின்னமாகக் கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் உட்கட்சி பூசல்கள் வலுப்பெற்றுள்ளன. இதற்கிடையில், மலர்ந்திருக்கும் தாமரை, உள்ளூரில் மலரமுடியாது. இவையெல்லாமே “முடவன், கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை”யாகும் என்பதே எமது அவதானிப்பாகும்.
(Tamil Mirror)