அண்மைக் நாட்களில் திருகோணமலை இந்துக்கல்லூரி ‘ஆடை மரபு’ சார்ந்து முஸ்லிம் ஆசிரியர்கள் அபயா அணிய தடை விடுக்கப்பட்டு பின் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து முகப்புத்தகத்தில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நானும் முன்னெப்பொழுதுமில்லாதவாறு பங்கு பற்றியுள்ளேன். எனது கப்பியூட்டரும் ‘அழகி’யும் மக்கர் பண்ணியதால் ஆங்கிலத்தில் எனது விவாதங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன். அதனால், “நீ என்ன தமிழில் பேச முடியாதா,” எனக்கூறி நான் சொன்ன முக்கியவரலாற்று குறிப்புக்களை ஒருவர் தனது போஸ்ட்டிலிருந்து வெட்டியுமுள்ளார். இவ்விவாதங்களில் இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு சில தமிழரும் தீவிரமாக பங்களிக்கின்றனர்.
சம்பந்தனின் திருகோணமலை இந்துக்கல்லூரி விடயத்தையிட்ட வாக்குமூலம் பாரபட்சமானது. இலங்கை அரச பாடசாலைளெங்கும் நிலவும் பன்மைத்தன்மை, ஆசிரியர்கள் மத்தியில், ஆடை, மதக் கைப்பிடிப்புக்கள் பற்றி இருக்க வேண்டிய ஜன நாயகத் தன்மை, பன்மைத்தன்மை, சகிப்புத்தன்மை போன்றவைக்கு மேலாக இந்து கல்லூரியின் ‘மரபை’ பாதுகாக்கும் தீவிர நோக்கோடு வாக்குமூலத்தை வெளியிட்டிருக்கிறார். எதுவித மாற்றமும் இந்துக்கல்லூரியில் அவசியமில்லை என்று கூறுவதனால் பழமை பேணும், மாற்றத்தை எதிர்க்கும் சிறு பான்மையினரின் விருப்பை உதாசீனம் செய்யும் ஒரு வாக்குமூலத்தை வெளியிட்டிருக்கிறார்.
இலங்கையில் ஜனனாயகத்தையும், பன்மைத்துவத்தையும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் விரும்பும் எம்மில் பலர் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய புள்ளிகளால் இரு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப் பட்ட . ஆர்.எஸ்.எஸ் பற்றியும் அதன் ஊடுருவல் பற்றியும் சட்டை செய்யாமல் இருந்தது பெரிய பிழை தான். தற்சமயம் ஒரு பாடசாலையின் உள் விவகாரம் அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளது. காரணம் மத வெறியும் இனக்குரோதமும் தமிழ் மக்களில் அரசியலில் புகுந்து, அரசியல் கதையாடல்களில் ஆயுதங்களாக பாவிக்கப்படுகின்றன. இந்த ஊடுருவலின் பின்னணி தமிழ் தேசிய வாதிகளின் அரசியல் வங்குரோத்தடைந்துள்ளதனாலும் ஒரு தேக்க நிலையில் உள்ளதாலும் இந்திய அரசில் எல்லாவற்றுக்கும் தங்கியிருப்பதனாலும் தான். தற்பொழுதுள்ள இந்திய அரசு இந்து பாஸிஸ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் இன் கர்ப்பத்திலிருந்து வந்த பா.ஜ.க வின் கையில் உள்ளதனால் அவ்வரசாங்கத்தின் விருப்புக்கிணங்குவது இந்த தேக்க நிலையடந்திருக்கும் இவ்வியக்கத்தின் பரிதாபகமான நிலை. அதனால் இந்த இந்து பாஸிஸ நச்சை 30 வருட கால போரின் பின் நலிவடைந்திருக்கும் எம்மக்கள் மத்தியில் விதைக்கின்றனர். இனங்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமான அரசியல் செய்வதெனின் இவர்கள் கடையைக் கட்ட வேண்டி வரும் எனத்தான் இந்த கைங்கரியத்தில் இறங்கியுள்ளனர் என யோசிக்க வேண்டியுள்ளது.
(Nirmala Rajasingam)