இந்தியா எப்போதும் தமிழ் மக்கள் பக்கம் நிற்கிறது என்கிற பிம்பம் உடைந்து, சுக்குநூறாகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இருந்தாலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ தொடர்வது போல, இந்தியா மீதான நம்பிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன.
இன்றுவரை, தமிழ் மக்களினதோ இலங்கையில் வாழும் தேசிய இனங்களினதோ சுயநிர்ணய உரிமையை இந்தியா ஏற்றுக் கொண்டது கிடையாது. மலையகத் தமிழர்களது நலன்காக்கும் நடவடிக்கைகளில் கூட, இந்தியா முழுமனதுடன் நடந்து கொண்டதில்லை.
இன்றுகூட, தமிழ் மக்களது எதிர்காலத்தை, இந்தியாவிடம் அடகுவைக்கத் தயாராக இருப்பவர்கள் இருக்கிறார்கள். மோடியிடம் பேசி, இந்து-ஈழம் என்று இந்திய ஆதரவைப் பெறலாம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும், வரலாறை அறியாமல் பேசுகிறார்கள் என்று கூறுவது கடினம். இங்கே கேள்விக்கு உட்படுத்த வேண்டியது, இவ்வாறு இந்தியத் தலையீட்டையும் ஆதரவையும் கோருவோரின் நோக்கங்களையே ஆகும்.
“இந்தியா அதன் மேலாதிக்கத்தை, இந்தியாவுக்கு வெளியிலும் விஸ்தரிப்பதாகவும் அதற்கு எதிரான போராட்டம், இலங்கை வாழ் அனைத்து மக்களின் விடுதலைப் போராட்டத்தின் பகுதியாகும்” என்று, சண்முகதாசனின் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, அதனது அவதானிப்பை 1960களில் வெளியிட்டது. சீனாவுக்கு எதிரான ஒரு யுத்தத்தை இந்தியாவே வலிந்து தொடக்கியதும், ‘சிக்கிமை’ இந்தியாவுடன் இணைத்துக் கொண்டமை ஆகியவை, இந்திய விஸ்தரிப்புவாதத்தை வெளிப்படையாகப் புலப்படுத்திய நிகழ்வுகளாயின.
முன்னர், “இலங்கையைப் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?” என்று கேட்டபோது, “காலம் வரும்” என அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியிருந்தார். அத்துடன், இந்தியா தொடர்ச்சியாக அதன் அயல் நாடுகளுடன், இந்திய நலன்களையே முன்னிறுத்தியது. பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, இலங்கை ஆகியவற்றுடன் இந்தியா கொண்டிருக்கும் மேலாதிக்கம் வெளிப்படையானதாகும்.
இலங்கையைப் பொறுத்த வரையில், இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறிப்பாக, நேரு-கொத்தலாவல உடன்பாடு, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமா-இந்திரா ஒப்பந்தம், பிற்காலத்தில் 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை-இந்திய சமாதான உடன்பாடு, சுதந்திர வர்த்தக உடன்பாடு போன்றவற்றில் இந்திய மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
1970களின் பிற்பகுதியில் ஒப்பீட்டளவில், தென்னாசியப் பிராந்திய நாடுகளில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் இலங்கை முன்னணியில் இருந்தது. இந்தியாவுக்குச் சரணடையாத அரசியல் தலைமைகள் இங்கிருந்தன. இந்த நிலையைச் சீர்குலைப்பதற்கு இந்தியாவுக்கு வசதியாகக் கிடைத்த துருப்பே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை. பல தமிழ் இளைஞர் குழுவினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டது. அவற்றில் பலவற்றை, இந்தியாவே இயங்கியது; இதன் உச்சக் கட்டமே, 1987 இலங்கை-இந்திய சமாதான உடன்படிக்கை ஆகும்.
இவ்வாறு தொடர்ச்சியாக, இந்தியாவின் மேலாதிக்கத்தை அவதானிக்க முடிந்தபோதும், இந்திய விஸ்தரிப்புவாத மேலாதிக்கத்துக்கு எதிரான போக்கு, சீனச் சார்பான நிலைப்பாடு என்றே இன்றும் வாதாடுவோர் இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்பது, இந்தியாவைச் சிதைக்கும் நிலைப்பாடல்ல. அது இந்திய மேலாதிக்கத்திடமிருந்து இலங்கையைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கும் போராட்டத் தந்திரோபாயமும் இந்திய மக்களுக்குக் காட்டும் ஒத்துழைப்புமாகும்.
தமிழீழக் கோரிக்கை, வட்டுக்கோட்டைத் தீர்மானமாக முன்வைக்கப் பட்டபோது, இப்பிரிவினைக் கோரிக்கை சாத்தியமற்ற ஒன்று என்று தூர நோக்கத்துடன் எடுத்துக் கூறியவர்கள் இருந்தார்கள். இலங்கையின் பொருளாதார அரசியல் சமூகச் சூழலின் யதார்த்தம் அதற்கு இடம் கொடுக்க மாட்டாது என்றும் இந்தியாவின் பிராந்திய நலனுக்குச் சாதகமானதாக இல்லாத காரணத்தால், இந்தியா அதற்கு இடம் கொடுக்காது என்றும் தூர நோக்கத்துடன் எடுத்துக் கூறியவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர்.
பங்காளதேசப் பிரிவினையை இந்தியா 1971இல் சாத்தியமாக்கியது போன்று ,இலங்கையிலும் தமிழீழத்தைப் பிரித்தெடுத்துத் தரும் என்ற நம்பிக்கை நாடாளுமன்றத் தமிழ்த் தேசியவாதிகள் தொட்டு, ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர் இயக்கங்கள் வரை இருந்து வந்தது.
அவ்வாறு, இந்தியாவின் உதவியுடனோ, அமெரிக்க- மேற்குலக ஏகாதிபத்தியத் தலையீட்டுடனோ பிரிக்கப்படும் தமிழீழம், ஒரு போதும் சுதந்திரமும் சுயாதிபத்தியமும் கொண்டதாக இருக்க மாட்டாது என்று வலியுறுத்தியோரின் கூற்றுகள், ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ ஆகின.
பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்ப்பதற்குத் தமிழ்த் தலைமைகள் குறுந்தேசியவாத நிலையையே எடுத்தன. இந்தியா தமக்குக் கை கொடுத்து விமோசனம் பெற்றுத் தரும் என்றும் நம்பி இருந்தனர். அதற்குத் ‘தாய் நாடு’ என்றும் ‘தொப்புள் கொடி உறவு’ என்றும் உரிமை கொண்டாடினர்.
ஆனால், இவை யாவும் இன்றைய நிலையில், ‘பொய்யாய்க் கனவாய் பழங்கதையாய் போய்’ நிற்பதைத் தரிசிக்க முடிகின்றது. இந்தியாவின் இன்றைய சுயரூப வெளிப்பாட்டு நிலையைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், சிலர் இப்போது இந்தியாவைக் கண்டித்தும் நொந்தும் கொள்கின்றனர். இன்னும் சிலர் காலச் சூழல் மாறும் போது, இந்தியா ஈழத் தமிழர்களுக்கு கை கொடுத்துக் கரை சேர்க்கும் என்ற நப்பாசையிலும் இருந்து வருகின்றனர்.
இந்தியா, தனது பிராந்திய நலனுக்காக எதை விட்டுக் கொடுக்க வேண்டும், எதை அழுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில், அன்றும் இன்றும் தெளிவாகவே இருந்து வந்துள்ளது. அந்தவகையில் தான், இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை ஊடாக, இந்தியா தனது மேலாதிக்கக் காய்களை நகர்த்தி வந்திருக்கிறது.
இந்த யதார்த்தமும் உண்மையும் இலங்கையின் தமிழ்த் தேசியவாதத்தை குறுந் தேசியவாதமாக வளர்த்தெடுத்து வந்த அனைத்து தரப்பினருக்கும் ஆரம்பத்திலேயே புரிந்திருக்க வேண்டும். இவர்கள், தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் இலங்கையில் அவர்களது இருப்பின் நிலைப்பையும் தூர நோக்கத்துடன் அணுகி, அதற்கான கொள்கையை வகுத்து முன்னெடுத்திருந்தால், இந்தியாவை நம்பி மோசம் போயிருக்க நேர்ந்திராது.
அது மட்டுமன்றி, இலங்கைத் தமிழர்களின் தலைவிதியைத் தாங்களாகவே தமது சொந்தப் போராட்டங்கள் மூலம் தீர்மானிப்பதைத் தடுத்து, தாமே சகல உரிமைகளையும் வென்றெடுத்துத் தருவதாகக் கூறித் தமிழர் தலைமைகள் தமது கைகளில் பொறுப்பெடுத்துக் கொண்டன.
நாடாளுமன்ற அரங்கில் விவாதத் திறமையாலும் பேரப் பேச்சாலும் தமிழர் உரிமைகளை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது ஒரு சோக நாடகமாக முடிந்தது. இன்று காலச்சக்கரம் சுழன்று, நாடாளுமன்றில் பேசி வெல்வார்கள் என்ற நம்பிக்கை, மீண்டும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நாங்கள் நாற்பத்து நான்கு ஆண்டுகள் பின்நோக்கிப் பயணித்துள்ளோம்.
மறுபுறம், ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம், இப்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பது என்றளவாகச் சுருங்கியுள்ளது. அதன் உருவாக்கத்துக்கு அடிப்படையான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மய்யப்படுத்தி, இந்திய ஆதரவைக் கோருவது என்ற விதமான நகர்வுகள் நடக்கின்றன. இங்கே மூன்று விடயங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
முதலாவது, ஈழத்தமிழரின் விடுதலைக்கான போராட்டம், இன்று 13ஆம் அரசமைப்புத் திருத்தத்தைக் காப்பதற்கான போராட்டமாகச் சுருங்கிய அவலநிலைக்கு, நாம் எவ்வாறு வந்தடைந்தோம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். இது யாருடைய நலன்களுக்கானது. யார், ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை மறுத்து வந்தார்களோ, அவர்களுடைய நிகழ்ச்சிநிரலின் பகுதியாகவே, ஈழத்தமிழர் அரசியல் சுருங்கிய சோகம், எவ்வாறு நிகழ்ந்தது? அதை நிகழ்த்தியோர் யார்?
இரண்டாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை சிலாகிப்போர் கவனிக்கத் தவறுகிற விடயம் யாதெனில், தமிழ் மக்களின் எண்ணங்கள் பற்றி அவர்களுடன் கலந்தாலோசனை இல்லாமலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் புதிய பரிமாணங்களான முஸ்லிம் தேசியவாத அரசியல் பற்றியும் மலையக மக்களின் இருப்பும் தேசிய இன அடையாளமும் பற்றிய அக்கறையே இல்லாமலும், இந்திய ஆட்சியாளர்களும் இலங்கையின் ஆட்சியாளர்களும் 1987 இல் செய்த உடன்படிக்கையே, இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். இதன் நோக்கமும் பயனும் பற்றிய ஆழமான கேள்விகளை வடபுலத்து இடதுசாரிகள் மட்டுமே வெளிவெளியாக எழுப்பினார்கள். அவர்கள் எழுப்பிய மாதிரியே, உடன்படிக்கை ஏற்பட்டு இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றி எல்லோருக்கும் விளங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னமும் விளங்கியதாகத் தெரியவில்லை.
மூன்றாவது, இலங்கை அரசாங்கம் 13ஐ ஒழிக்க முடிவு செய்தால், அது இந்திய நலன்களுக்கு பங்கம் ஏற்படாத வண்ணம் இருக்குமாயின், அதை அனுமதிப்பதில் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இராது. இலங்கையில் இந்திய நலன்களைக் காக்க, எத்தனையோ வழிகள் உண்டு. அதில், 13 நிச்சயமான ஒன்றல்ல. எனவே, ‘போக இயலாத இடத்துக்கு வழிசொல்பவர்கள்’ குறித்து, இனியாவது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.