(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேர்தல்கள் எப்போதும் சுவை நிறைந்தவை. அவற்றின் முடிவுகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஆச்சரியத்தையும் விட அதைச் சுற்றி நடக்கும் விடயங்களே கவனத்தை வேண்டுவன. ஆனால் தேர்தல்கள் என்பவை வெற்றி தோல்விகளுடன் முடிந்து போகின்றன. ஆனால் அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், கதையாடல்களும் உருவாகும் உரையாடற் கோலங்களுமோ அச்சமூகங்களை ஆள்கின்றன. ஆனால் இவை கவனம் பெறுவதில்லை. மாறாக இவை அவற்றுக்கேயுரிய நுண்ணரசியலைத் திறம்படச் செய்கின்றன. சமூகத்தில் ஆழமாக ஊடுருவி அவை ஏற்படுத்தும் கருத்துருவாக்கங்கள் என்றென்றைக்குமானவை. இவை பேசப்படுவதில்லை. இவை பேசப்படாமல் போவதற்கான முக்கிய காரணம் தேர்தல்கள் என்பவை ஜனநாயகத்தின் குறிகாட்டியாக மட்டுமே நோக்கப்படுகின்றன. இதன் ஆபத்துக்களின் ஆழம் எமக்குப் புரிவதில்லை.