வடிவேலு பாணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருகோணமலையில் போட்ட டீலிங்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திருகோணமலையில் விசித்திரமான முறையில் கட்சியை வளர்க்க பாடுபட்டு வருகிறார்கள். அங்குள்ள தொழிலதிபர் ஒருவரின் ‘அலப்பறை’ நிபந்தனைகளிற்கு உட்பட்டு, கட்சி தலைமை விசித்திர முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த போக்கை, வடிவேலுவின் பாணியில்- இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்- என்று ஆதரவாளர்கள் நகைச்சுவையாக குறிப்பிடுகிறார்கள்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த தொழிலதிபர் ராதா, திருகோணமலையில் பல ஹொட்டல்களை நடத்தி வருகிறார். திருகோணமலையில் கட்சியை வளர்க்க விரும்பிய தலைமை, ராதாவை அணுகியது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் ராதா அதற்கு ஒத்துக்கொண்டார்.
அதாவது- கட்சியின் தலைமை, கஜேந்திரகுமாரோ, கஜேந்திரனோ திருகோணமலைக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட தேவையில்லை, திருகோணமலைக்குள் அனைத்தையும் நானே பார்த்துக் கொள்வேன் என்பதே. வேட்பாளர் தெரிவும் தன்னுடையதாகவே இருக்கும் என்றும் நிபந்தனை விதித்தார்.
உள்ளூராட்சி தேர்தலிற்கு முன்னதாக கஜேந்திரகுமார் திருகோணமலை பயணம் செய்தபோதும், தென்னமரவாடியுடன் திரும்பிவிட்டார். திருகோணமலைக்குள் காலடி வைக்கவில்லை. திருகோணமலையில் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களில் ராதாவே முன்னிலை வகித்தார். அந்த பிரசார சுவரொட்டிகளில் கட்சியின் தலைவருடைய படங்கள் அச்சிடப்படவில்லை. மாறாக சில இடங்களில் தொழிலதிபர் ராதாவின் புகைப்படத்துடனேயே சுவரொட்டிகள், பனர்கள் தயாராகியுள்ளன.
இதைவிட அடுத்த சுவாரஸ்யம்- வேட்பாளர் பட்டியலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நீண்டகால செயற்பாட்டாளர்களான ஶ்ரீனேஸ்வரன், குகன் ஆகிய இருவரும் தலைமையின் வேண்டுகோளினடிப்படையில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். திருகோணமலை பட்டினத்தில் போட்டியிட்ட ஶ்ரீஞானேஸ்வரன் (இவர் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்), தம்பலகாமத்தில் போட்டியிட்ட குகன் ஆகியோர் வெற்றியடைந்தனர். இவர்கள் இருவரையும் உடனடியாக பதவிவிலக வேண்டுமென ராதா நிபந்தனை விதித்தார். அப்படி விலகாத பட்சத்தில் தனது வெற்றிபெற்ற ஆதரவாளர்கள் சுயேச்சையாக செயற்படுவார்கள் என்றார். இதையடுத்து வேறுவழியில்லாமல் அவர்கள் இருவரையும் பதவிவிலக வைத்தது கட்சி.
கறாரான கொள்கை நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இப்படி கட்சியை வளர்க்கலாமா?
(Arun Ambalavaanar)