மூன்று தசாப்தங்களாக நடந்து முடிந்த போரின் பின், 2009 ம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய இழப்பின் தாக்கத்தினால், முன்னாள் போராளிகள் என்று கூறிக் கொண்டு இன்னும் இலங்கையில் வாழும் ஆயுதக் குழுக்களின் அடி மட்டத்திலிருந்தவர்கள், வேறு வழியில்லாமலும், நிர்ப்பந்தத்தினாலும் உள்வாங்கப்பட்டப்பட்டவர்கள் அப்படியொரு வரலாறு தங்கள் எதிர்காலச் சந்ததிக்கு வேண்டாம் என்று தீர்க்கமாக உள்ளனர். மேலும் அவர்களில் பலர் புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்றும், அவர்களில் சிலருக்காக, முரண்பாட்டைத் தவிர்த்து இயல்பான வாழ்வியலோடு இணைந்து கொண்டு செயற்பட கருத்தரங்குகளும், பயிற்சிப்பட்டறைகளும் இன்றுவரை நடக்கும் வேளையில், இன்னும் முகநூல் பதிவுகளாகவும், பத்திரிகைச் செய்திகளாகவும் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைப் பற்றியும், உயர்மட்டத்தினரைப் பற்றியும், அவர்களது பிணக்குகள், ஒருவர் மற்றவருக்கு செய்த நீதி, அநீதி என்பன பற்றியுமே கூறுகின்றன. ஒரு சாரார், குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்டு நலிவடைந்த நிலையில் உள்ளோர், அனைத்தையும் ஒரு பக்கம் தள்ளி வைத்து, இன்றைய வாழ்வியல் நிலையை சமாளித்து எதிர்நீச்சல் அடிக்கின்றனர். அதேவேளை இன்னோர் சாரார், பழையதைப் புறந்தள்ள விடாமல் செய்திகளாலும், பதிவுகளாலும் சிலரை முறுக்கேற்றிய வண்ணமேயுள்ளனர்.
இந்நிலையில் புதியதொரு பிரளயமாக மதவெறி ஆரம்பித்துள்ளது. இவ்வளவிற்கும் இப்பிரளயங்களின் ஆரம்ப கர்த்தாக்களும், உயர் செயற்பாட்டாளர்களும், ஏனைய உலகிலிருந்து வேறுபடாமல், அநேகமாக ஆண்களாகவே இருக்கின்றனர். பாதிப்புள்ளாவோரில் அநேகர் அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும், சிறியவரும், முதியோருமே. பாதிப்புள்ளாவோரின் பலம் குன்றிய சமூக அந்தஸ்தினாலும், செல்வாக்கினாலும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படும் இச்செயற்பாடுகளைத் தடுக்க முடியாதுள்ளனர்.
அனைவரும் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்த வேண்டும். எமது நாட்டின் தலைவர்கள் அமெரிக்காவின் வழமைக்கு மாறாக தனது தலைமைப் பதவிக் காலத்தில் எந்தவொரு போரிலும் பங்கு பற்றாத President Jimmy Carter போன்ற சாந்தமான, புத்திசாதுரியமான தலைவரோ, நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern போன்று, அண்மையில் நடந்த மதஎதிர்ப்பு நிகழ்விற்கு தமது மக்களுக்குப் பாடம் புகட்டும்படி நடந்த துணிச்சலான தலைவரோ, தனது நாட்டினதும், மக்களினதும் முன்னேற்றமே முக்கியம் என்று செயற்படும் சீனாவின் President Xi Jiping தலைவரோ அல்ல.
ஆகவே சமூகங்களின் ஒற்றுமையை நொருக்கும் இத்தீய செயற்பாடுகளை நிறுத்த, ஒவ்வொரு சமூகத்திலும் பலத்தைப் பிரயோகிக்கும் சக்திகளான ஆண்களாலே மட்டுமே முடியும். அவர்கள்தான் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.