இனவாதத்துக்கு உடனடியாக விலங்கிடப்பட வேண்டும்

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் 30 வருடங்களாக போரினால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட மக்களால் இன்னமும் முழு அளவில் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாத நிலைமையே காணப்படுகின்றது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாகவே இருந்தனர். இவர்கள் எப்போது தமது சொந்த வாழ்விடங்களுக்குப் போக முடியுமோ என்ற ஏக்கப் பெருமூச்சுவிட்ட வண்ணமே இருந்தனர், இன்றும் இருக்கின்றனர்.

கடந்த அரசின் இறுதி கால கட்டத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் வடக்கில் முக்கியமாக மன்னார் மாவட்டத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணுக்குச் சென்று மீளக்குடியேற ஆசைப்பட்டனர்.

அந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பொருட்டு அன்று மீள்குடியேற்ற அமைச்சராக பதவி வகித்த ரிஷாத் பதியுதீன் அரசுடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். 25 வருடங்களுக்கு மேலாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய மக்களால் மீண்டும் குடியேறுவதற்காக சொந்த காணிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு அங்கு காடுகள் வளர்ந்து மூடப்பட்டிருந்தது.

அந்த மக்கள் காணிகளை மிகக் கஷ்டத்துடன் அடையாளம் கண்டு துப்புரவு செய்ய முற்பட்ட போது சில இனவாதச் சக்திகள் கூச்சல் போடத் தொடங்கினர். வில்பத்து வனப் பகுதியில் காடுகளை அழித்து அமைச்சர் ரிஷாத் முஸ்லிம்களை குடியேற்ற முற்படுவதாகத் தெரிவித்து நாட்டில் இனவாதத்தைத் தூண்டிவிடும் முனைப்பில் ஈடுபட்டனர்.

வன இலாகத் திணைக்களத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் கூட இந்த இனவாதச் சக்திகளுடன் இணைந்து கடந்த காலத்தில் செயற்பட்டு வந்ததை வெளிப்படையாகவே காண முடிந்தது. ராவணா பலய, பொதுபலசேனா உட்பட பல தென்னிலங்கை இனவாதச் சக்திகள் தவறான ஆவணங்களைக் காண்பித்து தென்னிலங்கை மக்களை திசைதிருப்பி இனவாதத்தை மீண்டும் தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபட்ட வண்ணமே உள்ளன.

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ய மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் ஆட்சியில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பல அமைச்சர்களும் பேசினர். சிலர் இனவாதச் சிந்தனையுடன் செயற்பட்ட போதும் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து தவறாக புரிந்து கொண்டிருந்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வில்பத்து வனப் பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து விரிவாக ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

வில்பத்து வனப் பிரதேசத்துக்குச் சொந்தமான எந்த காடுகளும் அழிக்கப்படவில்லை எனவும் முஸ்லிம்கள் தமது சொந்த நிலங்களில் மட்டுமே குடியேறும் முயற்சிகளையே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததோடு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வில்பத்து காட்டை அழித்து தனது மக்களை மீளக்குடியேற்றுவதாக தீய சக்திகள் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதனை சிங்கள மக்கள் நம்பக்கூடாது எனவும் பகிரங்கமாகவே தெரிவித்து வந்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையப் பெற்ற தேசிய அரசாங்கத்தில் ரிஷாத் பதியுதீனுக்கு வேறு அமைச்சு வழங்கப்பட்ட போதிலும் அவர் தனது பிரதேச மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சொந்த மண்ணில் மீளக் குடியேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் பல சேனாக்களும், பலயாக்களும் இனவாதத்தை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பான்மைச் சிங்கள மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் ஒரு பாரிய மறைமுகச் செயற்பாடுகளில் இச்சக்திகள் இயங்கிவருவதாக அறிய முடிகிறது.

கடந்த வாரத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்த தகவலின்படி எதிர்வரும் 19 ஆம் திகதியன்று ‘சூழலியலாளர்கள்’ எனும் போர்வையில் இந்த இனவாதச் சக்திகள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காப் பகுதியில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முனைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி நாட்டை அழிவின் பக்கம் இட்டுச் செல்லும் இது போன்ற முயற்சிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் இடமளிக்குமா? நாட்டில் இனநல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பகீரதப்பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு காலகட்டத்தில் மீளவும் நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்குச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. இனவாதச் சக்திகளுக்கும், இனவாதச் செயற்பாடுகளுக்கும் தடை போடப்பட வேண்டிய கட்டாயத்துக்குள் நாடு இருக்கின்றது.

இன மத மொழி பேதங்களைக் கடந்து நல்லாட்சி ஒன்றையே இலக்காகக் கொண்ட ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் குறுகிய எண்ணங்களைக் கொண்ட இனவாதச் சக்திகளின் கைகளுக்கு விலங்கிட்டு இனநல்லிணக்கத்தை உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலவரம் இன்று உருவாகியுள்ளது.

இந்த இனவாதச் சக்திகள் இன்று சில ஊடகங்களை தமது பிரசாரத்துக்குப் பயன்படுத்த முனைகின்றன. கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது இதன் பின்னணியில் இயங்கும் ஒரு ஊடகத்தின் செய்தியாளர் வில்பத்து காடழிப்பு என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். உடனடியாகவே நிலைமையை புரிந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன அந்த ஊடகவியலாளருக்கு சாட்டையடியாக பதிலளித்துள்ளார்.

வில்பத்து வனப் பகுதியில் எந்தவித காடழிப்பும் இடம்பெறவில்லை. ரிஷாத் பதியுதீன் ஒரு முஸ்லிம் என்பதன் காரணத்தினாலேயே அவர் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகக் கூறியதோடு, யுத்தத்தின் போது வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு போக முயற்சிப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது எனவும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

போதும் இனவாதம் பேசி நாட்டை சீரழித்தது நாட்டில் மற்றொரு இனக் கலவரம் வேண்டாம், எந்தச் சக்தியாவது அவ்வாறு முயற்சித்தால் அதனை வேரோடு வெட்டிச் சாய்ப்பதன் மூலமே நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்த முடியும். இதனையே நாம் அரசுக்குச் சொல்லி வைக்கின்றோம்.

(Thinakaran)