ஜெயபாலன். த உடன் இணைந்து சாகரன்
தங்கள் சொந்த அரசியல் லாபத்திற்காக எம் பி ஆசனத்திற்காக தமிழ் தேசியத்தை அழுங்குப் பிடியில் வைத்துள்ள தமிழ் அரசியல் தலைமைகளும் அவர்களைக் காவடி எடுக்கும் ஊடகங்களும் மக்களை பிளவுபடுத்தி இனவாதத்தைத் தூண்டுவதற்கு எப்போதும் நெய்கொண்டு திரிகின்றனர். அவர்களுக்கு அண்மையில் கிடைத்தது பொலிஸார் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட படுகொலைத் துப்பாக்கிப் பிரயோகம்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அதனை மூடிமறைத்து விபத்தாக மாற்றலாம் என்று பொலிஸார் மேற்கொண்ட முட்டாள்தனமான நடவடிக்கைகளும் சில மணி நேரங்களிலேயே அம்பலமாகியதும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட பொலிஸார் கைது செய்யப்பட நிர்ப்பந்திக்கப்பட்டதும் பொலிஸ்மா அதிபர் தவறை ஏற்றுக்கொண்டமையும் தெரிந்ததே. பொலிஸாரின் சாதகமான எதிர்வினைக்குக் காரணம் தமிழ் அரசியல் வாதிகள் அல்ல. யாழ் மருத்துவ மனையைச் சுற்றி வளைத்த பல்லின மாணவ சமூகமே.
ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையை வைத்து இனவாத அரசியலை முன்னெடுக்க தமிழ் அரசியல் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் அவர்களுக்கு எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. யாழில் வெளியாகும் தீபம் பத்திரிகை யாழில் நடந்த எதிர்ப்புப் போராட்டங்களில் சிங்கள மாணவர்கள் பங்கேற்கவில்லை எனறு செய்தி வெளியிட்டனர். அதற்கு ஆதாரமாக முஸ்லீம் மாணவர்கள் போராட்டத்தில் நின்ற படத்தை வெளியிட்டனர். உண்மையில் யாழ் பல்கலையில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களும் அப்போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களைப் படம் எடுத்துப் போட தீபம் விரும்பவில்லை என்பதே உண்மை.
ஒரு சில அரசியல்வாதிகளின் காவடிகள் பல்கலைக்கழகத்தில் மாணவரகள் மத்தியில் தங்களுக்கன வேலைகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் அவர்களால் கணிசமான தாக்கத்தை இன்னமும் ஏற்படுத்த முடிவில்லை. ஆனால் சிறு சிறு அசம்பாவிதங்களை ஏற்படுத்துகின்றனர். அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படும் போது அதனை தங்களுக்கு சாதகமாக்க முற்படுகின்றனர். தமிழ் – சிங்கள மாணவர்களிடையேயான மோதலிலும் இதனைக் காணலாம்.
யாழ் பல்கலையில் சிங்கள மாணவர்களின் கண்டி நடனம் தொடர்பான சர்ச்சையில் யாழ் பல்கலையைச் சேர்ந்த தமிழ் மாணவர்களும் தடி பொல்லுகளுடன் தயார் நிலையில் நின்றனர். முதலில் தாக்குதலையும் நடத்தினர். ஆனால் தமிழ் ஊடகங்கள் திட்டமிட்ட முறையில் தமிழ் மாணவர்கள் தடி பொல்லுகளுடன் தாக்குதலை நடத்திய படங்களை வெளியிடவில்லை. சிங்கள மாணவர்கள் தடி பொல்லுகளுடன் வந்த படங்கள் தமிழ் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
சிங்கள மாணவர்களுக்கு எதிரான பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இனவாதத் தீக்கு நெய்யூற்றி ஆராதித்தனர் சில அரசியல் தலைமைகள்.
பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பான விடயத்தில் பல்கலை மாணவர்கள் விழித்துக்கொண்டனர். மரண நிகழ்வுகளை மேடையாக்க இந்த அரசியல்வாதிகள அணிவகுத்துச் சென்றனர். ஆனால் அரசியல் வாதிகள் யாரையும் மாணவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.
யாழில் கொல்லப்பட்ட மாணவர்களுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் இனமத பேதம் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலைகளை வன்மையாகக் கண்டித்தனர்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக தங்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல் தங்கள் சுயநல அரசியலுக்காகவும் மக்களைச் சூடேற்றவும் அப்புகாமிக்கு எதிராக அப்புராசாவை தூண்டிவிடுகின்றனர்.
கண்டிய நடனத்தை காரணம் காட்டி அடிதடி என்று புறப்பட்ட சில தினங்களுக்குள் யாழ் பல்கலைக் கழம் சென்றேன் என்ன அதிசயம் என் கண்களில் தெரிந்த சுவரொட்டிகள் எல்லாம் இன ஐக்கியத்தை வலியுறுத்தி தமிழில் எழுதியவை யாழ் பல்கலைக் கழகத்திற்குள் காட்சியளித்தன. தமிழ் ஊடகங்களில் வந்த செய்திகளுக்கு புறம்பான ஒரு சூழல் அங்கு நிலவியதை சிறித நேரத்தில் உணர்ந்தேன். கண்டிய நடனக் ‘கலவரம்’ நடைபெறும் போது சிங்களவரும் தமிழரும் சம அளவில் கலந்து கொண்ட கதிர்காமத்தில் நின்றேன் அங்கும்…..? இது சம்மந்தமாக கட்டுரை ஒன்றை மறு தினம் வவுனியாவில் இருந்தும் எழுதினேன்.