தை மாதப் பிறப்பு என்பது மண்ணை நம்மி வாழும் விவசாய பெருமக்கள், தம் நன்றிக்கடனை சூரியனுக்கு பொங்கலிட்டும், மறுநாள் உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளுக்கும், பயிருக்கு உரமான எருவை தந்த தமது பட்டி மாடுகளுக்கும், அனைத்துக்கும் மேலாக பயிர்கள் விளைந்து பலன் தரும்வரை தம்மை தக்கவைக்க, பால் தந்த பசுவுக்கும் நன்றி செலுத்தும் நாள்.
பள்ளிக்காலப் பொங்கல் என் உறவுகளுடனும், கல்லூரிக்காலம் நண்பர்களுடனும், விடுதலைப் போராட்ட காலத்தில் தோழர்களுடனும். புலம்பெயர்ந்த பின்பு தனிமையிலும் கடந்து போகின்றது. இன்பமான நினைவுகளும் கொடிதான பல பிரிவுகளும் மனதில் நிழலாடுகிறது. மீண்டும் மீண்டும் அசைபோடத் தோன்றுகிறது.
பள்ளிப்பருவத்தில் மானிப்பாயில் நான் வாழ்ந்த வீட்டுக்கும் விவசாயத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இருந்தும் தமிழர் திருநாள் என்பதால் அந்த நாச்சார் வீட்டு நடு முற்றத்தில், பொங்கல் நிகழ்வு அரங்கேறும். முன்னிரவே நீரூற்றி கழுவிய நிலத்தில், அரிசி மாவினால் கோலம் போடுவது முதல், ஆரம்பக்கட்ட பணிகள் என்னுடையது.
மாவிடிக்கும் உலக்கை தான் எனது அடிமட்டம். இரட்டைக்கோடு போட்டு நாலு பக்கமும் நடுவில் பாதை விட்டு எல்லைக்கோடுகள் போட்டபின், மூலைகளில் உதய சூரியன், குடம் குத்துவிளக்கு, நெற்கதிர், கரும்பு என மாவினால் படம் வரையப்படும். புற்று மண்ணில் செய்து வைத்திருந்த அடுப்பை தூக்கி வந்து நடுவில் வைத்து விட்டு, அதற்கு திருநீறு சந்தணம் குங்குமம் பூசுவேன்.
விறகு காலையில் வாங்கிவந்த வீரமர விறகுடன் வளவில் விழுந்த தென்னம் பாளை எரிவதற்கு தயார் நிலையில் இருக்கும். பொங்கல் பானை மிகப்பெரிய செப்பினால் செய்தது. வருடா வருடம் பொங்கலுக்கு சிலதினம் முன்புதான் அது பரணில் இருந்து இறங்கும். அதற்குப் பழப்புளியை குருமண்ணில் கலந்து, தென்னம் தும்பால் தேய் தேய் என தேய்த்துக் குளியல் கொடுத்தால், பளபள என ஜொலிக்கும்.
மாவிலை, மஞ்சள் இலையை வாழை நாரில் கட்டி பொங்கல் பானைக்கு தாலி கட்டியபின், நீறு பூசி பொட்டிட்டு செம்பரத்தை பூவும் வைத்த பின் பார்த்தால் புதுமணப் பெண்போல் இருக்கும். பொங்கல் பொருட்கள் எல்லாம் கடையில் வாங்கியது. எதுவுமே எங்கள் உற்பத்தி அல்ல. இருந்தும் பத்து ஏக்கர் வயல் சொந்தக்காரர் போலவும், பட்டி மாடுகள் வைத்திருப்பவர் போலவும் தடல் புடல் ஏற்பாடுகள் நடக்கும்.
இத்தனையும் செய்து முடித்தபின் சுப்பிரமணியம் அண்ணையை அழைத்துவரவும் வேண்டும். வீட்டில் அத்தனை ஆண்கள் இருந்தபோதும், அவர் வந்து பொங்கல் பானையை அடுப்பில் வைத்து, ஏற்க்கனவே வாங்கிவைத்திருந்த துரைசிங்கம் மாஸ்டர் வீட்டு பசுவில் கறந்த, தண்ணீர் கலக்காத பாலை ஊற்றி வீரை விறகோடு தென்னம் பாளையும், அதன்மேல் கற்பூரமும் வைத்து தீயை மூட்டுவார்.
பால் பொங்கி வெளியே தள்ளும்முன் கல்நீக்கி களைந்து வைத்திருந்த, தீட்டிய சிவப்பு பச்சை அரிசியை அப்பனே மருதடியானே என சூரியனை நிமிர்ந்து பார்த்துவிட்டு பொங்கல் பானையுள் போடுவார். நீளமான நன்கு சீவிய பலமான கம்பில் செருகிய தேங்காய் சிரட்டை தான், பொங்கலை கிளறும் அகப்பை. அரிசி முட்டுப் பதமாக வெந்ததும் சக்கரை கரைசலை ஊற்றுவார். பொங்கல் தடித்ததும் கிளறுவது கடினமாகும்.
தொடர்ந்து கிளறாவிட்டால் அடிப்பிடித்து விடும். ஆறடி உயர சுப்பிரமணியம் அண்ணை, அதை லாவகமாக செய்வார். எங்கள் வீட்டில் அத்தனை ஆண்கள் இருந்தும் அவரை ஏன் கூப்பிடுகிறோம் என்பது இப்போது புரிந்திருக்கும். முருக்கு பருத்தாலும் தூணுக்கு உதவாதல்லவா? பொங்கல் தடிக்க எங்கே உள்ளுடன் என கேட்ப்பார். நெய்யில் வதக்கிய கசுக்கொட்டை பிளம்ஸ், வறுத்தபயறு அவர் கைக்கு மாறும். ஒரு சொட்டு நெய்யும் மிஞ்சாமல் வழித்து பானைக்குள் கொட்டுவார்.
பொங்கல் தயார். இனி படையல் மட்டுமே பாக்கி. பெரிய தட்டத்தில் தலை வாழை இலை வைத்து நடுவில் பொங்கலை படைத்து சுற்றிவர கறுத்த கொழும்பான் மாம்பழம், கப்பல் வாழைப்பழம், மாதுளம்பழம், தோடம்பழம், கரும்பு என அணைகட்டி வைத்து, பொங்கலின் நடுவில் உரித்த காதலி வாழைப்பழத்தில் சந்தண குச்சி பத்த வைக்கப்படும். இன்னொரு தட்டத்தில் வெற்றிலை மேல் கற்பூரம் எரிய காத்திருக்கும்.
பொங்கல் மணம் மூக்கில் ஏறியதும் எவரும் கேட்க்காமலே. பிடியதன் உருகுமை கொளமிகு கரியது என நான் பாடத்தொடங்கி, சொற்றுணை வேதியன் சோதி வானவன் என இழுத்து, நீள நினைத்தடியேன் உன்னை நித்திலம் கைதொழுவேன் என பாடும் போது, கற்பூர தீபம் காட்டி படையல் தொடங்கும். பொங்கல் மட்டுமே நாச்சார் முற்றத்தில். மற்றப்படி வடை வழமையான குசினியில்.
படையல் முடிந்ததும் வீட்டில் உள்ள அத்தனை பட்டினி பட்டாளங்களும் ஆளுக்கொரு வாழை இலை முன் அமர்ந்துவிடுவோம். பொங்கல் வடை வாழைப்பழம் மாம்பழம் என பகிரப்பட்ட அனைத்தையும் வயிற்றில் திணித்த பின் விடும் ஏப்பம் எங்களை எழுந்திருக்க சொல்லும். பால் பொங்கி வழிந்த போது வெடித்து மீதமான சீன வெடிகளிற்காக மல்லுக்கட்டுவோம். யானை வெடி, புறா மார்க் வெடியோடு மூலை வெடி என்றும் ஒன்று இருந்தது.
எவர் கையில் மூலை வெடி உள்ளதோ அவர்தான் தெரு நாய்களின் எதிரி. இரண்டாம் காட்சி படம் பார்த்து இருட்டில் வருகையில், துரத்தி துரத்தி தன்னை கலைத்த தெரு நாய்களை அவர் விரட்டி விரட்டி வெடியை கொளுத்தி ஏறிய, கம்பிவேலி முதுகை கிழித்தாலும் புகுந்து ஒலிம்பிக்ஸ் வேகமெடுத்து அவை ஓடுவதை ரசிப்பார். உள்ளூர் தயாரிப்பான எறிவெடியை கோவக்காரர் மதில் மீது எறிந்து விட்டு ஓடிவிடுவோம். சிறிய சேதாரம் ஏற்ப்பட்டாலும் அது எமக்கு பெரும் மகிழ்ச்சி.
கல்லூரி படிப்பு தெற்கில் தொடங்க அறைகளில் தங்கி படித்ததால் எனது உறவுகள் அருகில் இல்லை. ஆனால் நண்பர்கள் பொங்கலை கொண்டாட முனைந்தனர். பிரபலமான தொழிற்சங்க தலைவரின் வளர்ப்பு மகன் என்னையும் நண்பேண்டா என அழைத்து, அவர் வீட்டில் பொங்கல் கொண்டாட முடிவெடுத்தார். அந்த தொழிற் சங்கவாதி தனது பாசமிகு வளர்ப்புமகனுக்கு பொங்கலுக்கு பொருட்கள் வாங்க பத்து ரூபா பணம் கொடுத்தார்.
நண்பனுடன் கூடவே தங்கியிருந்தவரும் பொருள் வாங்கச் செல்ல, ஹோட்டல் முகமதியா வாசலில் அவர்களை சூது கவ்வியது. நீளமான கயிறு அதை சிறிது சிறிதாக மடித்து விட்டு ஒரு ஊசியை நடுவில் குற்றினால், கயிற்றின் நடுவில் அது சரியாக அமரவேண்டும். அப்போது கயிறு சம அளவில் இரண்டாக தடைப்டும். தவறினால் முழு நீள கயிறும் ஒரு பக்கம் போய்விடும். ஒன்று வைத்தால் பத்து, பத்து வைத்தால் நூறு.
கூடப்போனவர் ஆசை மூட்ட நண்பன் பத்தையும் வைத்துத் தோற்றுப் போனான். பொங்கல் பணத்தை அபேஸ் பண்ணினார் அந்த ஆட்டக்காரர். விட்டதை எப்படி பிடிப்பது யாரைக் கொண்டு எதனை அடைவது, என்ற வித்தை தெரிந்த ஒரு விடா முயற்சியாளன் என் நண்பன். அப்போது அவன் வெற்றிக்கு நான் தேவைப்பட்டேன். எனது வாடகை அறைக்கு வந்தவன் விடயத்தைக் கூறியதும், உள் எழுந்த மனக்கலக்கத்தை வெளிக்காட்டாது அவனுடன் புறப்பட்டேன்.
என் வாழ்வில் பல விடயங்கள் காகம் இருக்க பனம் பழம் விழுந்த சம்பவங்களே. தோற்றவன் தலைப்பாகையை தட்டி விடுவதும், வென்றவன் கால் செருப்புக்கு காவல் காப்பதும் இன்றுவரை தொடர்வது போலவே, என் வெற்றிகளும் பலரால் பார்க்கப்பட்டது. அதுவேதான் நண்பனுக்காக என் கரத்தில் குற்றும் ஊசியை தந்தது. குருட்டு அதிஸ்டம் மட்டுமே என் கையை சரியான இடத்துக்கு இட்டு சென்றதால், கிடைத்தது பத்துக்கு நூறு.
தடல் புடல் ஏற்ப்பாடு தொடங்க எங்கள் செயல்பார்த்து, தன்னை சந்திக்க வந்த வெளிநாட்டவரை பொங்கல் நாளில் வரும்படி அழைப்பை விடுத்தார் நண்பனின் வளர்ப்பு தந்தை. தன் பங்கிற்கு தனது ஆசிரியர் சாம்பசிவம் அவர்களையும் நண்பன் அழைத்தார். நாமெல்லாம் எம் பங்கிற்கு நல்லவிதமாக பொங்கல் நிகழ்வை ஒழுங்கு செய்தோம். என் பள்ளிப்பருவத்தில் உறவுகளிடம் கற்ற அனுபவப்படியே அனைத்தையும் நான் செய்தேன்.
ஆரம்பத்தில் எல்லாம் சுமுகமாக நடந்தேறியபின்பு, உண்ணும் வேளையில் தான் விளக்க உரை தேவைப்பட்டது. வந்திருந்த வெளிநாட்டவர் பொங்கல் பற்றி விளக்கம் கேட்க, சாம்பசிவம் மாஸ்டர் அதை ‘சுவீற் ரைஸ்’ என்றார். வடை பற்றி கேட்க, அதை ‘ஒயில் கேக்’ என்றார். நாங்கள் பிடரி மயிரை சொறியும் வேளை, வெளி நாட்டவர் வெரி குட், வெரி குட் எனவும் வெரி நைஸ், வெரி நைஸ் எனவும் ரசித்து ருசித்து உண்டனர்.
இத்தனை இன்பங்கள் உட்பட எத்தனையோ இன்பங்களை, என்னிடம் இருந்து பறித்த, 1983ம் ஆண்டு ஆடிக்கலவரம் என்னை தேடி வந்தது. அப்போது நான் அறை எடுத்து தங்கி இருந்த இடம், முழுமையான சிங்கள மொழி மட்டும்பேசும் மக்கள் வாழ்ந்த இடம். சூது வாது தெரியாத, பன்சலை எனும் புத்த கோவிலுக்கு, வெண்ணிற ஆடை உடுத்தி தாமரை மலர் கையேந்தி சென்று, அகிம்சை மட்டமே போதிக்கும் பிட்சுகளின் பாதம் பணியும் மக்கள்.
அந்த சூழலில் அன்றும் வழமை போலவே காலை புறப்பட்டு, தெகிவளை சந்தி வந்தபின்பே தெரியும், புலிகளின் கண்ணி வெடியில் திருநெல்வேலியில் இறந்த ராணுவத்தினர் பற்றிய செய்தி. ஏனோ என்மனம் ஏற்க்கனவே நடந்த 1977 மற்றும் 1981 கலவரம் போல கொழும்பில் பரவாது என்ற நம்பிக்கையில், காலை உணவை வழமையாக உண்ணும் விஜயா ஹோட்டல் முதலாளியிடம், இன்று மட்டும் கடையை மூடுங்கள் என கூறிவிட்டு, என் வேலைத்தளம் சென்றடைந்தேன்.
அங்குதான் விபரீதத்தின் தார்ப்பரியம் எனக்கும் புரிந்தது. எங்களில் இருவரை தவிர எவரும் தமிழரல்ல. உரிமையாளர் பாக்கிஸ்த்தான் போரா சமூகத்தவர். நிகழ்வுகளின் தாக்கம் தெரியாமல் அனைவரும் வேலைக்கு வந்துவிட்டனர். ஆனால் அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புகள் அவர்களை அச்சமுறச் செய்தன. உயிர்ப் பயம் அவர்களை என்னிடம் கெஞ்ச வைக்க, கம்பனி வாகனங்களில் அனைவரையும் அவரவர் இருப்பிடம் அனுப்பி வைத்தேன்.
நான் வெளியேறும் முன் ஊரடங்கு நிலை அறிவிக்கப்பட்டது. எஞ்சியது நானும், ஊரில் உறவு ஏதும் இல்லாத சிங்கள சிற்றூழியர் மட்டுமே. இரவு உணவை அவர் எப்படியோ அருகில் இருந்த சீன குடும்பத்துடன் தொடர்பு கொண்டு ஏற்ப்பாடு செய்தார். கலவர காலத்தில் சிக்கின் நூடில்ஸ் சுவைபட உண்டேன். உணவுக்காக அவனுக்கு நன்றி சொல்லி தூங்க சென்ற என்னை எழுப்பியது, எங்கள் கம்பனி வாசல் கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம்.
என்ன ஏது என நான் சிந்திக்கும் முன்பே அந்த சிற்றூளியன் யன்னலை திறந்து, பக்கவாட்டில் கட்டி இருந்த கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்க கட்டியிருந்த மூங்கிலை பிடித்து அடுத்த வீட்டுக்கு தாவிவிட்டன். என் உயிர்காக்க அதே மூங்கிலை பற்றி கீழே போனால் கும்மிருட்டு. தடவித்தடவி ஒருகதவை கண்டு உள்ளே புகுந்தால் அது குளியலறை. உயிரை கையில் பிடித்தபடி குந்தியிருந்த என்னை ஒரு மென்கரம் பற்றி இழுத்து வீட்டினுள் அழைத்து சென்றது.
அன்று அடுத்தவீட்டு சீனப் பெண் தந்த பாதுகாப்பில், இரவு முழுவதும் தூக்கம் வராது பயத்துடன் விழித்திருந்தேன். காலை தேநீர் பருகும் நேரம் அந்தப் பெண் வந்து இம்தியாஸ் வந்திருப்பதாக கூறினார். அவர் எமது வாகன சாரதிகளில் ஒருவர். நேற்று இரவு கதவை பலமாக தட்டியது அவரே. நான் உள்ளே இருப்பது தெரிந்து எனக்கு உணவு கொண்டுவந்திருக்கிறார். எனது சிங்கள சிற்றூளியன் எம்மை தாக்க யாரே வந்திருப்பதாக நினைத்ததால் வந்தவினை தான் இரவு நிகழ்வு.
உறவுகளை, நண்பர்களை கடந்து தோழர்களுடன் சங்கமிக்கும் அத்தியாயம் தொடங்கியது. யாழில் கபூரின் சையிக்கிளில் வந்த நாபா, தமிழ்நாட்டில் பயிற்சி முகாம்கள் தொடங்கியதை சொன்னார். யாழ் மட்டக்களப்பு திருகோணமலை கும்பகோணம் என ஆண்டுகள் பல கழிந்தன. வருடத்துக்கு ஒரு முறை வரும் பொங்கல் போரதீவில் தினம் தினம் வந்தது. காரணம் மிகுந்த நிதித் தட்டுப்பாடு. மதிய உணவாக அருகில் இருந்த கோவில் படையல் பொங்கல் தான் எங்களை பலநாள் பசியாற்றியது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாண சபையை பொறுப்பேர்க்கும் சந்தர்ப்பத்தை வலிந்து தந்தது. மாகாண சபையை இயங்குநிலைக்கு கொண்டுவந்த வேளையில், பொங்கல் பண்டிகையும் வந்தது. மிகப்பெரிதாக அதனை கொண்டாடும் ஏற்பாடுகள் செய்தபின், அலுவல் நிமித்தம் கொழும்பு சென்றேன். பொங்கலுக்கு முதல் நாள் வந்த செய்தி பேரதிர்ச்சி தந்தது. திருமலையில் நாம் மாகாண சபையை அமைக்க மூல காரணமான தோழன் கொல்லப்பட்டான்.
ஜோர்ஜ் தவராஜா தம்பிராஜா என்ற அந்த உன்னதமான தோழன் பலியெடுக்கப்பட்டபின், பொங்கல் நிகழ்வு அவன் இறுதியாத்திரை ஊர்வலமாகியது. பின்பு ஒன்றன் பின் ஒன்றாக பல தோழர்கள் பலி எடுக்கப்பட்டு, நாபாவின் படுகொலையுடன் தோழர்களும் திசைக்கொருவராகினர். என் உறவுகள் எல்லாம் இடப்பெயர்விலும், நண்பர்கள் எல்லாம் மேற்குலக நாடுகளிலும், தோழர்கள் எல்லாம் ஆளுக்கொரு கட்சியில், அல்லது தமிழக அகதி முகாங்களில், எஞ்சியவர்கள் அகதி அந்தஸ்த்துடன் அகிலமெல்லாம்.
எம் சொந்த நாட்டில் உறவுகளுடன், நண்பர்களுடன், தோழர்களுடன் கொண்டாடிய நினைவுகள் மட்டும் ஒவ்வொரு பொங்கல் பண்டிகை காலத்திலும் வந்து வந்து போகிறது. அன்று ஒவ்வொரு பொருளாக தேடிச்சென்று வாங்கிய நிலை, இன்று நான் வாழும் நாட்டில் இல்லை. பொங்கல் பானை உட்ப்பட அனைத்தும் பெட்டியில் போட்டு கிடைக்கிறது. வழமைக்காக பொங்குகிறேன். படைக்கிறேன். உண்ணும்போது ஏனோ இனிக்கவில்லை. உறவுகள் நட்பு தோழமை இல்லா வெறுமை….. என்னைப்போலவே எத்தனைபேர் இனிக்கும் பொங்கலுக்காக காத்திருக்கிறீர்களோ?
– ராம் –