இன்னும் விலகாத மர்மம்

இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப் பறக்கிறார் நேதாஜி. எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் (இப்போது தாய்வான்) மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதுவரை புரியாத மர்மம்!

வானொலியில் வந்த மரணச் செய்தி

“நேதாஜி பயணம் செய்த விமானம் மதியம் 12.45 மணிக்கு மஞ்சூரியாவை விட்டுப் புறப்படும்போது, எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானதில் நேதாஜி உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள். அவரது உதவியாளர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினார்கள்” என்று 1945 ஆகஸ்ட் 22-ல் ஜப்பான் வானொலி சேதி சொன்னது. நேதாஜி அபிமானிகள் இந்தச் செய்தியை நம்பவில்லை. காரணம், அதற்கு முன்பும் பலமுறை அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டிருக்கின்றன.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் நேதாஜிக்கும் நெருக்கம் உண்டு. நேதாஜி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, தேவர் அரசியல் கைதியாக ஆந்திர மாநிலம் அமராவதி சிறையில் இருந்தார். அங்கிருந்தபடியே, “விமான விபத்து ஏதும் நடக்கவில்லை. இது திட்டமிட்ட நாடகம்” என்று அறிக்கை கொடுத்தார். ஆனால், விடுதலையான பிறகு, இரண்டு ஆண்டுகள் நேதாஜியைப் பற்றி எதுவும் பேசவில்லை தேவர். 1949 ஜனவரி 23-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நேதாஜி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய தேவர், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது” என்று உறுதிபட அறிவித்தார். இந்த நிலையில், 1950-ல் தேவரும் தலைமறைவானார். அவர் எங்கே போனார் என்ற விவரம் யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில், ஓராண்டு கழித்து, மீசையை மழித்துக்கொண்டு பாகவதர் கிராப்பில் வித்தியாசமான தோற்றத்துடன் மீண்டும் வெளியுலகுக்கு வருகிறார்.

சுஜ்ஜோ எல்லையில் நேதாஜி முகாம்

1951-ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில், “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை நான் சந்தித்துவிட்டு வந்தேன்” என்று மீண்டும் அறிவித்தார் தேவர். நான்கு ஆண்டுகள் கழித்து, பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேவர், “நம்முடைய நேதாஜி இறக்கவில்லை. இந்தியா, சீனா, பர்மா ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் சுஜ்ஜோ என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அதற்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருக்கிறார் நேதாஜி. அங்கே ‘ஆசிய சுதந்திர சேனா’அமைத்து, போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் இந்தியாவில் ராணுவ ரீதியிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். இவை அனைத்தும் பிரதமர் நேருவுக்கும் அவரது சகோதரியும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் தெரியும். தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் மௌனம் காக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு நல்லெண்ணம் இருக்குமானால், நேதாஜி மர்மம்குறித்து விசாரணை ஆணையம் அமைக்கட்டும்” என்று பேட்டி கொடுத்தார். இதை அடுத்துதான் 1956-ல், ஐ.என்.ஏ-யில் லெஃப்டினென்டாக இருந்த ஷாநவாஸ் கான் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார் நேரு.

மத்திய அரசு அமைத்த மூன்று ஆணையங்கள்

ஓராண்டுக்குள் விசாரணையை முடித்த ஷாநவாஸ் கான், நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக 1957-ல் அறிக்கை சமர்ப்பித்தார். இதை இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது காங்கிரஸ் அரசு. “விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் மஞ்சூரியாவுக்கே போகாமல், அறைக்குள் உட்கார்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஏற்க முடியாது” என ஃபார்வர்டு பிளாக் மட்டுமல்லாமல், காங்கிரஸில் இருந்த நேதாஜி அபிமானிகளுமே கேலிசெய்தார்கள். அத்தோடு அடங்கிப்போனது அந்த அறிக்கை பிரளயம். இதன் பிறகு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட கோஸ்வாமி ஆணையமும் நேதாஜி இறப்பை உறுதிசெய்தது. 1999-ல் பா.ஜ.க. ஆட்சியில் மீண்டும் எம்.கே. முகர்ஜி என்பவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார்கள்.

விமான விபத்தே நடக்கவில்லை – தாய்வான்

விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் தாய்வான் நாட்டு அரசிடம், 1945 பிப்ரவரியிலிருந்து டிசம்பர் மாதம் வரை நடந்த விமான விபத்துகள்பற்றிய விவரங்களைக் கேட்டது முகர்ஜி ஆணையம். அதற்கு, ‘அந்தக் காலகட்டத்தில் எந்த விமான விபத்தும் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை’ என அங்கிருந்து வந்த அறிக்கையால் மேலும் சர்ச்சையானது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் நாடாளுமன்றம் வராமலேயே அறிக்கை படுத்துக்கொண்டது. இதற்கிடையில், 1964-ல் நேரு இறந்தபோது, அவருக்கு நேதாஜி அஞ்சலி செலுத்த வந்ததாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகும், நேதாஜி ரஷ்யாவில் இருக்கிறார், மத்தியப் பிரதேசம் சவுல்மாரி ஆசிரமத்தில் கும்னாமி பாபாவாக இருந்த துறவிதான் நேதாஜி என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

அந்த 33 கோப்புகளில் இருப்பது என்ன?

இவை எதுவுமே நம்பும்படியாக இல்லை என்று சொல்லும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர்கள், ‘‘இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின்போது நேதாஜி சர்வதேசப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதன் பிறகு ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட நேதாஜி, அங்கேயே சிறைவைக்கப்பட்டார். அவர் மீதிருந்த நல்லெண்ணத்தால்கூட அவரை ஸ்டாலின் பிரிட்டிஷ் காரர்களிடம் ஒப்படைக்காமல் இருந்திருக்கலாம். இது சம்பந்தமான 33 கோப்புகளை ரஷ்ய அரசாங்கம் இந்திய அரசிடம் ஒப்படைத்திருக்கிறது. அதில் உள்ள விவரங்களை வெளியிட மறுக்கிறது மத்திய அரசு’’ என்கிறார்கள்.

போராடும் நேதாஜியின் உறவுகள்

நேதாஜி பற்றிய ரகசியக் கோப்புகளை வெளியிட உதவுமாறு நேதாஜியின் அண்ணன் சரத் சந்திர போஸின் பேரன் சந்திரகுமார் போஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் ஒரு ஆண்டுக்கு முன்பே கோரிக்கை மனு கொடுத்தார். ‘‘தாத்தா நேதாஜி போஸ் தொடர்பாக ரஷ்யா தங்களிடம் அளித்த 33 கோப்புகள் பத்திரமாக இருப்பதாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட ஒரு நபருக்குப் பதில் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. அதை வெளியிட்டு, தாத்தாபற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் மம்தாவின் உதவியை நாடினோம். ஆனாலும், இதுவரை எங்களது கோரிக்கை எடுபடவில்லை. இனியாவது, தாத்தா சம்பந்தமாக மத்திய அரசும் உளவு அமைப்புகளும் தங்கள் வசம் உள்ள ரகசிய விவரங்களை உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்’’ என்கிறார் சந்திரகுமார் போஸ்.

நகைகள் யாருக்கு?

இதற்கிடையே, “ஐ.என்.ஏ-வுக்காகப் பொதுமக்கள் நன்கொடையாகக் கொடுத்த தங்க நகைகள் 40 பெட்டிகளில் இருந்தன. இவை அனைத்தும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ‘நேதாஜி பவன்’ என்ற அமைப்பை உருவாக்கி, நேதாஜி விட்டுச்சென்ற பணியைத் தொடரப்போகிறோம். அதற்காக, இந்திய அரசு வைத்திருக்கும் அந்த நகைப்பெட்டிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரிக்கை எழுப்பிக் கொண்டிருக்கிறது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி.

இத்தனைக்கும் மத்தியில், இன்னமும் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள் அவரது அதிதீவிர அபிமானிகள்.

23, ஜனவரி 2014 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் பிரசுரமான கட்டுரை