ஒவ்வோர் கால கட்டத்திலும் இனக் கலவரங்கள் நடந்த பொழுதிலும்….வடமாகாணத்தில் பரம்பரையாக பேக்கரி நடாத்திய சிங்களவர் ஒருவரேனும் 1983க்குப் பின்புவாழ அனுமதிக்கப்படாத நிலையிலும் வடமாகாணத் தமிழர்கள் இலங்கை முழுக்க தமது அரச தொழிலையும் வர்த்தகத்தையும் நடாத்தி வந்தார்கள்.
இது கடந்து போன உண்மை!
இன்றைய பல்கலைக்கழகப் பிரச்சனைகனைக்கு காரணம் நேரடியான காரணம் இருந்தாலும் சரி… மறைமுகமான அரசியல் காரணங்கள் இருந்தாலும் சரி அதனை பல்கலைக்கழ வளாகத்தினுள் அதனுடன் சம்மந்தப்பட்டவர்களே தீர்த்து வைப்பதுதான் நலம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்திலோ… கொழும்பு பல்கலைக்கழகத்திலோ ஒரு பரதநாட்டியம் நடக்க முடியுமானால்.. ஏன் யாழ். பல்கலைக்கழகத்துள் ஒரு கண்டிய நடனம் நடக்க கூடாது என நான் அறியேன்.
இணைவாக்கம் (INTEGRATION) என்பதனை 100வீதம் ஏற்றுக் கொண்ட புலம்பெயர் மக்கள் இதில் ஒரு பக்க இனவாதத்திற்கு துணைபோகக் கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
இரண்டு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் காதலோ… அன்றி வேறு ஏதாவது காரணத்திற்காக அடிபடுவது போல இங்கே இரண்டு இன மாணவர்கள் அடிபட்டிருக்கின்றார்கள். அதனை ஏன் அரசியல் ஆக்க வேண்டும் என்றும் நானறியேன்.
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலாக பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளும் கருத்துகளும் வெளியிட்டுக் கொண்டு இருந்தால் இன்னோர் ஜுலை கலவரத்துக்கு நாங்களே கொள்ளி எடுத்துக் கொடுத்தமைக்கு சமனாகும்.
மனித உயிர்களின் மேல் இனிமேலாவது நடாத்தப்படும் அரசியல் இனி எமக்கு வேண்டாம்.
பல்கலைக் கழகம் சிறிது காலம் மூடப்பட்டால் கல்விக்காலம் நீடிக்கப்படப் போவது எங்கள் பிள்ளைகளுக்குத்தான்.
எம் புலம் பெயர்ந்த சகோதரர்களே உங்கள் உற்றார் உறவினர்கள் அங்கு விடுமுறையைக் கழித்துக் கொண்டு நிற்கின்றார்கள் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
தொடர்ந்தும் அங்கு வாழ இருப்பது எங்கள் இனம் தான்.
இனியொரு தடவை கண்ணீர் அஞ்சலிக் கவிதைகளை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வாசிக்கும் நிலைமை வந்திட வேண்டாம்.
(Jeeva Kumaran)