எனக்கு நினைவு தெரிந்த முதல் தேர்தல் 1965 தான்.வட்டுக்கோட்டையில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் எனது தந்தையும் தமிழ் காங்கிரஸ் கட்சியில் திரு சுப்பிரமணியமும், குடைச்சின்னத்தில் திரு தம்மிப்பிள்ளையும் தேர்தலில் நின்றனர். “ எங்கள் லிங்கம் அமிர்தலிங்கம், போடு புள்ளடி வீட்டுக்கு நேரே, எங்கள் அரசு தமிழரசு, தூக்கு மேடை பஞ்சு மெத்தை, சிறைச்சாலை பூஞ்சோலை போன்ற கோஷங்களை முதல் தடவையாக கேட்ட நினைவுகள். இந்த தேர்தலில் எனது தந்தை 11,000 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது தேர்தல் -1970. எனது தந்தை வட்டுக்கோட்டை தொகுதியில் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டார். வரை எதிர்த்து திரு தியாகராசா அவர்கள் சைக்கிள் சின்னத்தில் தமிழ் காங்கிரசில் போட்டியிட்டார். இந்த தேர்தல் எனக்கு ஓரளவுக்கு விபரம் தெரிந்த தேர்தல். இதில் சில தேர்தல் பிரசார கூட்டத்தில் நானும் எழுதி பாடமாக்கி பேசியதுண்டு. வட்டுக்கோட்டை, காங்கேசன்துறை, மானிப்பாய் போன்ற தொகுதிகளில் சென்று பேசினேன். எனது தாயாரும் எனது தந்தையின் தீவிர ஆதரவாளர்களும் எனது தந்தையிடம் ஏனைய தொகுதிகளில் பிரசாரத்தில் நேரத்தை செலவிடாமல் சொந்த தொகுதியில் கூடுதலான நேரத்தை பிரசாரத்தில் செலவிடுமாறு வலியுறுத்தினர். பல தொகுதிகளை கவனிக்க வேண்டியிருந்ததால் அவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த தேர்தலில் எனது தந்தை 700க்கு கிட்டிய வாக்குகளால் தோல்வியுற்றார். எதிர்பாராத அதிர்ச்சியான தோல்வி, எனது தந்தைக்கும் அவர்தம் ஆதரவாளர்களுக்கும். எமது வீட்டில் கூடிய கூட்டத்திற்கு அளவில்லை. சிறந்த வீட்டு நிலைமை. தந்தை செல்வா தலைவர்கள் நாகநாதன், கதிரவேற்பிள்ளைஆகியோருடன் அந்த தேர்தலில் வெற்றிபெற்ற பலரும் வந்திருந்தனர். பல ஆதரவாளர்கள் எனது தந்தையின் காலில் விழுந்து கதறி அழுதனர். எனது தந்தையின் தோல்விக்காக நானும் அன்று அழுதேன். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அன்றைய தென்னிந்திய திருச்சபையின் பிஷப் குலேந்திரன் அவர்கள் எனது தந்தையின் தோளில் தட்டி “ அமிர் இவ்வளவு அன்பையும் ஆதரவையும் பார்ப்பதற்கு எத்தனை முறை வேண்டும் என்றாலும் தேர்தலில் தோல்வி அடையலாம் எனக்கூறியது மறக்க முடியாதது.
அடுத்த தேர்தல் 1974ல் காங்கேசன்துறை இடைத்தேர்தல் , தமிழ் மக்கள் அன்றைய திருமதி பண்டாரநாயக்காவின் முக்கூட்டு முன்னணி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்த்த தனது பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை நடாத்த சொன்ன போது இரண்டு வருடங்களின் பின்னரே அரசாங்கம் தேர்தலை நடத்தியது. இதில் அரசாங்க வேட்பாளராக திரு வ. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்றார். எனது தந்தை இந்த தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்தபோது நானும் அவருடன் அந்த தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்தேன்.
அடுத்த தேர்தல் 1977ல். இதில் காங்கேசன்துறை தொகுதியில் எனது தந்தை போட்டியிட்டார். இது தமிழ் ஈழ பிரகடனத்திற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கான தேர்தலாக கணிக்கப்பட்டது. இந்த தேர்தலின் போது என் தந்தையுடன் கூடவே இருந்து அவர் சென்ற கூட்டங்களுக்கெல்லாம், கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு கூட்டங்களுக்கு வவுனியா முதல் யாழப்பாணம், வட்டுக்கோட்டை வரை சென்றிருந்தார். அவரது சாரதியாகவே நான் செயல்பட்டேன். இக்காலத்தில் நான் படித்த அனுபவங்கள் எண்ணில் அடங்காது. அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானது தெரிந்ததே.
அடுத்த தேர்தல் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலாகும். 1981ல் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டது, திரு யோகேஸ்வரன் வீடு, ஈழ நாடு பத்திரிகை அலுவலகம் தமிழர் விடுதலை கூட்டணி பிரதான காரியாலயம் என்பன இலங்கை பொலிஸ் படையால் எரியூட்டப்பட்டு நிலைமை மிக பதட்டமானதாக இருந்த நேரம்.
நான் முதலும் கடைசியுமாக வாக்களித்தது அதிக சிக்கலுடன் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் தான்.
இறுதியாக நான் பார்த்த தேர்தல் உள்ளூராட்சி சபை தேர்தலாகும். இது நடந்தது 1983ம் ஆண்டாகும். தமிழர் விடுதலை கூட்டணியும் ஏனைய கட்சிகளும் தேர்தலில் பங்கு பற்ற ஆயத்தமாகி கொண்டிருந்த நேரம். தமிழீழ விடுதலை புலிகள் இந்த தேர்தலை பகிஷகரிக்கும்படி முதலில் வேண்டுகோள் விடுத்தும் பின்னர் வேட்பாளர்களை வாபஸ் செய்ய வைத்தனர். அவர்களுக்கு புரியவில்லை தனிப்பட்ட வேட்பாளர் வாபஸ் வாங்குவதாக அந்த கட்சி வாபஸ் வாங்க முடியாது என்பது. பல வேட்பாளர்கள் தாங்கள் வாபஸ் வாங்கியதாக அறிவித்தனர். செல்லக்கிளி என அழைக்கப்பட்ட முக்கிய புலி உறுப்பினர் கைத்துப்பாக்கி சகிதம் வந்து கூட்டணி அலுவலகத்திற்கு வெளியே நின்று தங்களது நிலைப்பாட்டை அங்கு கூடியிருந்த சிலரின் முன் கூறினார். ஜனநாயக அரசியல் இயக்கத்திற்கும் ஆயுத இயக்கத்திற்கும் ( தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முதல் மோதல் இதுவேயாகும். தனிப்பட்ட முறையில் வேட்பாளர்கள் கடத்தப்பட்டு பயமுறுத்தப்பட்டனர், தாக்கப்பட்டனர். இதில் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் பலர் தாங்கள் வாபஸ் வாங்குவதாக எழுதி கொடுத்த பின்னர் விடப்பட்டனர்.
சித்திரவதைக்கு முகம் கொடுத்து வாபஸ் வாங்க மறுத்த வேட்பாளர்களும் உண்டு. எனது தந்தை இந்த தேர்தல் பற்றி பின்னர் பேசும் போது குறிப்பிட்டார் “ புலிகள் இதை எம்முடன் ஆரம்பத்திலேயே பேசியிருந்தால் இந்த தேர்தலையிட்டு ஒரு இணக்கமான முடிவை எட்டியிருக்கலாம் , ஆனால் அவர்கள் ஒருதலைப்பட்சமாக முடிவை எடுத்து விட்டு எம்மீது திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது “ என. இந்த ஒருதலைப்பட்சமான முடிவுகள் தானே எம்மை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றது! . இந்த தேர்தலை பகிஷகரிக்க கூடாது என ஒரு துண்டு பிரசுரத்தை அச்சடிக்க சென்று இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நான்காவது மாடி வரை நான் சென்றது இன்னொரு செய்தி.
இன்று பிரதேச, உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நடை பெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் பல கூறுகளாக பிரிந்து தேர்தலில் நிற்கும் இந்த நிலைமையை கோபத்துடனும் விரக்தியுடனும் பதிவு செய்கிறேன்.
(Amirthalingam Baheerathan)