70 ஆண்டு சுதந்திரத்தின் உச்ச கட்ட சீரழிவு
(சிராஜ் மஷ்ஹூர்)
1948 இல் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இப்போது 2018 இல் இருக்கிறோம். இந்த 70 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், தீர்க்க முடியாத பாரிய இழப்புகளும் வேதனைகளுமே எஞ்சியிருக்கின்றன. மிகப்பெரும் சீரழிவுகளே தொடர்கதையாகி வருகிறது. ஐ.தே.க. வும், சு.க வுமே இந்தச் சீரழிவின் பிரதான பங்குதாரர்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியுமே இதற்கு பிரதான பொறுப்பெடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, முதன்முறையாக இவ்விரு கட்சிகளும் இணைந்து ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்ற பெயரில், நல்லாட்சி விழுமியங்களை சீரழிக்கும் விதத்தில் ஆட்சி புரிந்தன என்பதுதான் வரலாற்று முரண்.
இலங்கை நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை தனித்தும் இணைந்தும் செய்யும் ஆற்றல் தமக்கு இல்லை என்பதை இவர்கள் மிகத் தெளிவாக நிறுவியுள்ளனர். சுதந்திர இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தின் உச்சகட்ட சீரழிவை அண்மைய பாராளுமன்ற அமர்வுகளில் கண்டு கொண்டோம்.
இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து உண்மையான அக்கறை கொண்ட சக்திகள் மிகத் தீவிரமாக சிந்திக்க வேண்டிய வரலாற்றின் பிரிசந்தியை நாம் வந்தடைந்திருக்கிறோம். பாராளுமன்ற ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுவது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தருணத்தில்தான் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் எங்கே தவறிழைத்தோம், தவற விடப்பட்ட வாய்ப்புகள் எவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுக் கொள்ள முடியும்.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம்.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை, டீ.எஸ். சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியே அமைத்தது. அதில் பல இனத்தவர்கள், பல தரப்பினர், பல குழுவினர் சம்பந்தப்பட்டிருந்தனர். அப்போது சுதந்திரக் கட்சி உருவாகியிருக்கவில்லை. களத்தில் இடதுசாரிக் கட்சிகளே பிரதான எதிர்க் கட்சியின் பாத்திரத்தை வகித்தன.
லங்கா சமசமாஜக் கட்சிதான் (LSSP), இலங்கையின் அரசியல் கட்சி வரலாற்றில் உருவான முதல் கட்சி. அதன் பின்னரே ஐ.தே.க, சு.க போன்ற ஏனைய கட்சிகள் தோன்றின என்பது வரலாறு. இடதுசாரிகளின் ஒரு சிந்தனைப் பள்ளியான (School of thought) ட்ரொட்ஸ்கியவாத கட்சியொன்று, நாடாளுமன்ற ஆசனத்தை உலகிலேயே முதன்முறையாக இலங்கையில்தான் வென்றது.
இடதுசாரிக் கட்சிகளும் சிறுபான்மை இனத்தவர்களும் இணைந்து, சுதந்திர இலங்கையின் முதல் அரசாங்கத்தை அமைக்கும் அரிய வாய்ப்பு அப்போது இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு மாற்றீடாக இருந்த இந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டது.
இடதுசாரி – சிறுபான்மை இணைந்த அரசாங்கம் இருந்திருந்தால், சுதந்திரத்திற்குப் பிந்திய இனப்பிரச்சினையின் வண்ணமும் வடிவமும் இந்தளவு பாரிய பின்விளைவு தரும் வகையில் அமைந்திருக்காது என அரசியல் ஆய்வாளர்கள் வாதிக்கின்றனர். முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூக- அரசியல் போக்கை- வரலாற்றை இந்த நாடு சந்தித்திருக்கும். இது கருத்தூன்றிக் கவனிக்கத் தக்க ஒரு விடயம்.
சுதந்திரக் கட்சியும் 1956 தனிச் சிங்களச் சட்டமும்.
ஐ. தே.க.வில் ஜே.ஆர். ஜயவர்த்தனவிற்கும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற அதிகாரப் போட்டியே, பண்டாரநாயக்க சுதந்திரக் கட்சியைத் தொடங்க காரணமாய் அமைந்தது. வாக்குகளை வெல்வதற்காக சிங்கள இனத் தேசியவாதத்தை அவர் தூக்கிப் பிடித்தார். அவர் 1956 இல் அறிமுகப்படுத்திய தனிச் சிங்களச் சட்டம் இனப் பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தது. 1959 இல் ஒரு பௌத்த மதகுருவே அவரைக் கொல்வதில் போய் அவரது கதை முடிந்தது.
தென்னிலங்கை சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியும் ஜே.வி.பியும்.
பின்னர் 1971 இல் தென்னிலங்கையின் கிராமப்புற சிங்கள இளைஞர்கள் ரோஹண விஜேவீர தலைமையில், பொருளாதார- சமூக நீதி வேண்டி ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1987- _89 காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியால் முழு நாடுமே ஸ்தம்பிதம் அடைந்தது.
இப்போது ஜே.வி.பி தம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டு, பாராளுமன்ற அரசியலில் பங்காளர்களாக உள்ளனர். மூன்றாவது அரசியல் கட்சியாகவும் நோக்கப்படுகின்றனர்.
தமிழர்களது சாத்வீகப் போராட்டமும் ஆயுதப் போராட்டமும்.
தனிநாடு கோரி, 70களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினர். அதுவரை இடம்பெற்ற சாத்வீகப் போராட்டங்களில் அவர்கள் நம்பிக்கை இழந்திருத்தனர். பண்டா- — செல்வா, டட்லி- – செல்வா ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டது போன்ற பல விடயங்களும், தமிழர்களது கட்சி அரசியலின் பாதையும் இதற்கு தூபமிட்டன.
70 ஆண்டு சுதந்திர வரலாற்றின் முதல் அரைப் பகுதியான 35 வருடங்கள் 1983 இல் நிறைவடைகின்றன. சரியாக அதே 1983 இல் ஜூலைக் கலவரமும், முழு அளவிலான ஆயுதப் போரும் (சிவில் யுத்தம்) வெடித்தன. 2009 இல் ஆயுதப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. பிரபாகரனும் அவரது முக்கிய சகாக்களும் கொல்லப்பட்டனர். மூன்று தசாப்த யுத்தம் பாரிய அழிவுகளைக் கொண்டு வந்தது. இதற்குள்தான் எத்தனை குத்துவெட்டுகள், குழிபறிப்புகள்!
மலையகத் தமிழர்களது போராட்டம்.
பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது முதல் தோட்ட முதலாளிகளின் சுரண்டல், வறுமை, போதிய உட்கட்டமைப்பு வசதியியின்மை, ஆயுதப் போராட்டத்தின் பின்விளைவுகள் என மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சுமை எண்ணிலடங்காதவை.
இந்த நாட்டின் முழுநிறைவான பிரஜைகள் என்ற அந்தஸ்ததைப் பெறுவதற்காக அவர்கள் மிக உக்கிரமாகப் போராடி வருகின்றனர்.
முஸ்லிம்களது போராட்டம்.
சுதந்திர இலங்கையில் இணக்க அரசியல் போக்கை முன்னெடுத்து வந்த முஸ்லிம்கள், வலுக் கட்டாயமாக தேசிய இனப் பிரச்சினையினுள் இழுத்து வரப்பட்டனர்.
தமிழ் ஆயுத இயக்கங்களினது – குறிப்பாக புலிகளின் – முஸ்லிம் விரோதப் போக்கு நிலமையை மேலும் சிக்கலாக்கியது. 1990 இல் ஒட்டுமொத்த வடபுல முஸ்லிம்களையும் புலிகள் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றினர். புலிகளது காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை என்பன இதில் முக்கியமானவை.
சாதாரண சிங்கள மக்கள்
இதேபோன்ற பல அடிப்படைப் பிரச்சினைகள், சாதாரண சிங்கள மக்களுக்கும் உள்ளன. இந்த நாட்டை ஆண்ட இரு பிரதான கட்சிகளும் பொருளாதார சுமை, நிலமின்மை, போதிய கிராமிய உட்கட்டமைப்பு வசதியின்மை போன்ற அப்பாவி சிங்கள மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்கவில்லை.
காலாகாலமாக தமக்கு வாக்கு போடும் பெரும்பான்மை மக்களையே கணக்கிலெடுக்காத இவ்விரு பிரதான கட்சிகளுமா, சிறுபான்மை சமூகங்களுக்கு தீர்வைத் தரப் போகின்றன? இங்குதான் இலங்கை மக்களாகிய நாம் அனைவரும் நம்பிக்கை இழந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இனம் -சிறுபான்மை இனங்கள் – சிறு சமூகங்கள் – என்ற வேறு பாடின்றி, ஒட்டுமொத்த இலங்கையரும் இந்த அரசியல் முறையிலும், அரசியல் கலாச்சாரத்திலும் நம்பிக்கை இழந்து விட்டோம்.
இப்போதைய தேக்க நிலைக்கு யார் காரணம்?
ஜே.ஆரின் 1978 அரசியலமைப்பு உருவாக்கிக் கொடுத்த உச்ச கட்ட குழப்பத்திற்குள் முழு இலங்கையும் அகப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது தோன்றியுள்ள இந்த உச்ச கட்ட குழப்பத்தினது சம பங்காளிகளாக மைத்திரி ,- ரணில்-, மஹிந்த ஆகியோர் உள்ளனர். அவர்களது உள்ளூர் மற்றும் சர்வதேச கூட்டாளிகள், திரைமறைவு சக்திகள், பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சக்திகள் அனைவருமே இதற்கு கூட்டுப் பொறுப்பை எடுத்தாக வேண்டும்.
இதிலிருந்து நாட்டை விடுவிக்க மைத்திரி- ரணில்- மஹிந்த ஆகியோரே முன்கை எடுக்க வேண்டும்.
தீர்வு ஒரு புதிய பாதையே!
இலங்கையராகிய நாம் திரும்பத் திரும்ப முயன்று பார்த்த, பரிசோதித்த பழைய பாதைகள் – வியூகங்கள் பிழைத்து விட்டன. இனி நமக்கு புதிய பாதையே அவசியம். ஆதலால்தான் மாற்று சக்தி குறித்து- மூன்றாவது பாதை குறித்து நாம் தீவிரமாக சிந்தித்து செயலாற்ற வேண்டியுள்ளது.
சாமூக- அரசியல் பன்மைத்துவமும், அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்கும் பரந்துபட்ட கூட்டணியே இன்றைய உடனடித் தேவை. அதற்காய் புதிய உத்வேத்துடன் சிந்தித்து செயலாற்றுவோம்.
வரலாற்றின் பிரிசந்தியில் நிற்கிறோம்.
புதிய ஓர்மத்துடன் அணி திரள்வோம்.