இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி

(ஜெரா)

இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர்.இன்று தென்னமரவடி என இக்கிராமம் அழைக்கப்பட்டாலும், “தென்னவன் மரபு அடி” என்ற அர்த்தப் பிரிப்பைக் கொண்டுள்ளதென, அங்கு வசிக்கும் மூத்தவர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, சோழர் காலத்தில் ஆட்சி புரிந்த தென்னவன் என்கிற மன்னனின் மரபு வழிவந்த மக்கள் தாம் என்பதை நினைவுபடுத்தி வைத்து, சந்ததி கடத்தவே இக்காரணப்பெயரை வைத்ததாக நம்புகின்றனர். அத்துடன், இப்போதிருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், சோழர் வருகைக்குப் பின்னர் உருவானது எனவும், அதற்கு முன்னர் இக்கிராமத்தவர்கள், இதற்கு அயல் கிராமமாக இருக்கின்ற கந்தசுவாமி மலை, அமரிவயல், கொட்டடி (இந்தக் கிராமங்கள் இன்றைய நிலையில், மக்களால் கைவிடப்பட்டு வனமாகவும் பயன்பாடற்ற வெளிகளாகவும் மாறியிருக்கின்றன) ஆகிய இடங்களில் வசித்தனர். அவ்விடங்களை எல்லாம் நீரும் சகதியும் ஆக்கிரமிக்க, அங்கிருந்து இடம்பெயர்ந்தே, அதற்கு அருகிலிருந்த கடற்கரையோடு அண்டிய மேட்டுப்பகுதியான தென்னமரவடியில் குடியேறியதாகக் குறிப்பிடுகின்றனர். இந்தச் சம்பவங்கள், இன்று, நேற்று நடந்தவையல்ல. இலங்கைக்குச் சோழர் வருகைக்கு முன்னரான காலப்பகுதியில் இடம்பெற்றவை.

இவ்வகையில் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய இக்கிராமத்தில், கந்தசுவாமி மலை என்ற ஓரிடம் இருக்கிறது. திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில், இந்து சமுத்திரத்துடன் இணையும் நிலப்பகுதியில், இந்த மலை இருக்கிறது. மலையின் அடிவாரத்தை இந்து சமுத்திரத்தின் அலைகள் தழுவும் விதமான இயற்கை அமைப்பை இம்மலை பெற்றிருக்கிறது. இதன் மறுகரையாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் தென் எல்லையில் இருக்கும் கொக்கிளாய் முகத்துவாரம், கொக்குத்தொடுவாய் கிராமங்களின் கடற்கரைகள் இருக்கின்றன. புவியியல் அமைப்பின்படியும், நிர்வாக அமைப்பின் படியும், வடமாகாணத்தின் இறுதிக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாயையும், கிழக்கு மாகாணத்தின் முதற்கிராமமான தென்னமரவடியையும் பிரித்திருக்கிறது, கொக்கிளாய் நீரேரி. இந்த நீரேரியை மய்யப்படுத்தியே, கந்தசுவாமி மலை அமைந்திருக்கிறது. இன்றைய தென்னமரவடிக் கிராம மக்களில் ஒரு தொகுதியினர், இந்த மலைச் சூழலிலேயே வாழ்ந்திருக்கின்றனர். அங்கு, பூர்வீகமாக காணி உறுதி பெற்று வாழ்ந்தமைக்குக் கூட அவர்களிடம் ஆதாரங்கள் உண்டு. பிரித்தானியரால் வழங்கப்பட்ட காணி உறுதிகளை, இன்றும் கவனமாக வைத்திருக்கின்றனர்.

இந்த மலையின் உச்சியில், முருகன் ஆலயமொன்று இருக்கிறது. அந்த ஆலயம் எப்போது, யாரால் அமைக்கப்பட்டது என்பதெல்லாம், அவர்களிடம் நினைவிலில்லை. “எங்க பாட்டன், பூட்டன் காலத்திலயிருந்து, அங்க கோவில் இருந்தது” என்ற பதில் மட்டுமே, அவர்களிடம் ஆதாரமாக உண்டு. அதைவிட, எப்போதோ வெளியான ஆலய விழா மலர் ஒன்றில், குறித்த கந்தசுவாமி ஆலயம் பற்றி வெளியான ஒரு பக்கக் கட்டுரைப் பிரதியையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

வடக்கு – கிழக்கு மக்களின் மிக முக்கியமான பண்பாட்டு இணைப்புப் பயணமாக, பருத்தித்துறை முனையிலிருந்து கதிர்காம முருகன் ஆலயத்துக்கு செல்லும் யாத்திரை அர்த்தப்படுத்தப்படுகின்றது. இந்தப் பயணத்தின்போது, தமிழர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த இடங்கள், தொன்மையான ஆலயங்கள் போன்றவற்றுக்கு யாத்திரிகர்கள் செல்வதும், அங்கு தங்கிச் செல்வதும், ஒரு மரபாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது. அதன்படி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்படும் கதிர்காம யாத்திரிகர்கள், அதற்கு அடுத்த நிலையில் தங்கி, தரிசித்துச் செல்லும் ஆலயமாக, தென்னமரவடியில் இருக்கும் கந்தசுவாமி மலை இருக்கின்றது.

ஆனால், துரதிர்ஷ்டம் என்னவெனில், இப்போது இந்த மலையில் ஆலயம் இல்லை. ஆலயத்தை அமைக்க, யாரோ இனந்தெரியாதவர்கள் பொறுத்துக்கொள்கிறார்கள் இல்லை என, ஊர் மக்கள் கூறுகின்றர்.

“இங்க, எனக்குத் தெரிஞ்ச காலத்தில இருந்து, முருகன் கோவில் இருந்தது. இங்க படிக்கிற கந்தபுராணப் படிப்பு மிக முக்கியமானது. நாங்கள், 1984இல இடம்பெயர்ந்து போனாப் பிறகு, பழைய கோவில இடிச்சுப்போட்டாங்கள். வந்து பார்க்கேக்க, கோவிலின்ர கட்டடத்துண்டுகள், சிலையள் எல்லாம், மலை முழுவதும் உடைச்சு எறிஞ்சிருந்தாங்கள்” என்றார், அங்கு வசிக்கும் றசீக்குமார்.

“நாங்கள், 2013ஆம் ஆண்டு மீளக்குடியேறின்னாங்கள். வந்தவுடன கோவிலப் போய் பார்த்தம். அங்க ஏதுமிருக்கேல்ல. எல்லாம் அழிக்கப்பட்டிருந்தது. பிறகு, 25,000 ரூபாய்க்கு முருகன் சிலையொண்ட வாங்கிக்கொண்டுபோய், பிரதிஸ்டை செய்தம். ரெண்டு கிழமையால போய்ப் பார்த்தால், அந்தச் சிலையையே காணேல்ல. எங்கேயோ தூக்கியெறிஞ்சிட்டாங்கள்.

“…பிறகு, ரெண்டு முறை வேல் கொண்டு போய் வச்சம். வச்சுக் கொஞ்ச நாளிலேயே, அதுகளும் காணாமல் போயிடும்” என, நிலவும் சூழலை றசீக்குமார் தெளிபடுத்திக்கொண்டிருக்கையில், பரமநாதன் என்கிற 67 வயது நிரம்பிய பெரியவர் குறுக்கிட்டார்.

“நான் கண்டிருக்கிறன், ரெண்டு பௌத்த பிக்குகள் இங்க வந்து போனவர்கள். ஆனால் அவையள், முருகன் சிலையப் பிடுங்கி எறிஞ்சத நான் காணேல்ல. 2013ஆம் ஆண்டில, பௌத்த பிக்கு ஒருத்தர் வந்தவர். மலைப் பக்கம் போய்ப் பார்த்திற்று வந்து, எங்களிட்டக் கேட்டார், ‘இங்க இருக்கிற ஆக்கள், எந்தக் கடவுள கும்புடுறனீங்கள்?’ என்று. நான் சொன்னன், ‘பிள்ளையாரத்தான் கும்புடுவம்’ என்று. அப்பிடியென்றால், இங்க புத்த விகாரை வைக்கத்தேவையில்ல என்று சொல்லிப்போட்டு, ஆள் போனவர். இப்ப புதுசா வந்திருக்கிற பிக்குதான், இந்த மலையில் புத்தர் சிலை வைக்கப் பாடுபடுறார் போல கிடக்கு.

“…இப்ப, போன கிழமையில இருந்து, மலையடிவாரத்தில ஒரு கட்டடம் கட்டுப்படுது. எங்க ஆர்.டி.எஸ் (கிராம அபிவிருத்திச் சங்கம்) அவ்விடத்துக்குப் போய், ‘நீங்கள் யார்? என்ன கட்டுறியள்?’ என்று கேட்டதுக்கு, ‘அதெல்லாம் உமக்குச் சொல்லத்தேவையில்ல’ என்று சொல்லியிருக்கிறாங்கள். அதுக்குப் பிறகு நாங்கள், பிரதேச செயலாளருக்கும் பிரதேச சபைக்கும் போய்ச் சொன்னம்.

“அவையள், தொல்லியல் திணைக்களமாம். உவையள் முதல், தொல்லியல் திணைக்களம் என்றுதான் வருவினம். பிறகு, புத்தர் சிலையையும் வச்சுப்போட்டு, ஒரு பிக்குவையும் குடியேத்துவினம். அதுக்குப் பிறகு, அந்தச் சிலையிருந்த இடத்தில, பெரிய விகாரை வரும். பிறகு அதைக் கும்பிட, சில சிங்களக் குடும்பங்கள மாத்தறையிலிருந்தோ, ஹம்பாந்தோட்டையிலிருந்தோ, காலியிலிருந்தோ கொண்டு வந்து குடியேத்துவினம். இப்பவே மலைக்கு அந்தப் பக்கமாக, கடற்கரையோர இருந்த எங்கட காணியொன்றை, அடாத்தாப் பிடிச்சு, 3 சிங்களக் குடும்பங்கள் குடியேறியிருக்கு. காலியிலிருந்து வந்திருக்கினமாம். இப்பத்தான் மணலாறு, வெலியோயாவாக எங்கட கண்ணுக்கு முன்னால மாற்றப்பட்டது. அதே நிலைதான், இன்றைக்கு தென்னமரவடிக்கும் வந்திருக்கு” என்ற அந்தப் பெரியவரின் வார்த்தைகள், முழுவதும் அனுபவங்களாக இருந்தன.

2013ஆம் ஆண்டு கந்தசுவாமி மலையை, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் திணைக்களமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த மலையில் இருந்த முருகன் ஆலயத்தைக் காப்பதற்கு, இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை. மாறாக, காலத்துக்குக் காலம் இடித்தழிக்கப்பட்டே வந்திருக்கிறது. தற்போது மலையடிவாரத்தில் தொல்லியல் திணைக்களம், கட்டடமொன்றைக் கட்டத் தொடங்கியிருக்கிறது. அக்கட்டடமும் தனியார் காணிகளுக்கும், கடற்கரைக்கும் செல்லும் வீதியில் நடுவில் அமைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு, குச்சவெளி பிரதேச சபை தடைவிதித்து, அறிவித்தல் ஒன்றையும் கொடுத்திருக்கின்றது.

அந்தப் பகுதியில் சிங்களமயப்படாமல் எஞ்சியிருப்பது, தென்னமரவடிக் கிராமம் மட்டும்தான். ஏனைய அனைத்துக் கிராமங்களும், பல்லாயிரம் ஏக்கர்கணக்கில், வயல்களும் குளங்களும் சிங்களவர்களுக்குரியனவாக மாற்றப்பட்டிருக்கின்றன. அதே பகுதியில் இருக்கும் காணிகளுக்கு, தமிழர் பெயரில் உறுதியும், சிங்களவர் பெயரில் காணி அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டிருக்கும் நிர்வாக அதிசயத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த நிலை, இன்றும் தொடர்வதையும், தென்னமரவடியில், சிங்களவர்களுக்கு மத்தியில் தாம் தனித்துவிடப்பட்டிருப்பதையும், ஊர் மக்கள் குறிப்பிட்டனர்.

“1984ஆம் ஆண்டு மார்கழி (டிசெம்பர்) மாதம் 3ஆம் திகதி, இங்க ஒரு படுகொலை நடந்தது. கொக்கிளாய்ப் பக்கத்தில நடந்த அசம்பாவிதங்களுக்குப் பழிதீர்க்கும்முகமாக, தென்னமரவடியில் இருக்கிற தமிழ்ச் சனங்கள வெட்டப்போறாங்கள் என்று, முன்னுக்கே எங்களுக்குத் தகவல் கிடைச்சது. ஆனாலும் நாங்கள் அதைப் பெரிசுபடுத்தேல்ல. எங்கட ஆக்கள் 14 பேர், மாடு, ஆடு சாய்க்க, ருவன்புர பக்கம் போனவ. போன இடத்திலயிருந்து, ஒரு நாள் ஆகியும் வரேல்ல. அடுத்த நாள், நாலைஞ்சு பேர் அவையளத் தேடி அங்கயிருந்த ஆமி காம்ப்புக்கு (முகாமுக்கு) போனவ. போன ஆக்கள, இடையிலயே வெட்டியும் சுட்டும் சித்திரவதைப்படுத்திக் கொன்று போட்டாங்கள். மிக மோசமாக, வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு, தங்கட உறவுகள தேடிப்போன பொம்பிளையள வன்புணர்ந்து, நிர்வாணமாக அனுப்பியிருந்தாங்கள். அதுகள் பிறகு, செத்துப்போச்சுதுகள். அதுகள் வராட்டி, நாங்களும் இன்றைக்கு இருந்திருக்க மாட்டம்.

“அதுகள் வந்து சொன்ன பிறகு, பறையாற்றுக் காட்டுக்குள்ள போய், 3 நாள் இரவு மறைஞ்சிருந்தம். ஆனாலும் நிலைமை குறையிற மாதிரி இல்ல; காட்டுக்கரையெல்லாம் வந்து சுடுறாங்கள். அப்பிடியே, கொக்கிளாய் ஆற்றைக் கடந்து, கொக்குத்தொடுவாய் பக்கம் போயிற்றம். அங்க போய் மரங்களில் ஏறிநின்று, எங்கட தென்னமரவடியைப் பார்த்தம். வீடுகள், வாகனங்கள் வயலுகள் எல்லாம் பத்தியெரியுது. எல்லாத்தையும் எரிச்சிப்போட்டாங்கள்.

“அப்பிடியே இடம்பெயர்ந்து போனனாங்கள், 2013ஆம் ஆண்டில தான் மீளக் குடியேறினாங்கள். இங்க வந்து பார்த்தால், எங்களின்ர சொல்றதுக்கு எதுவுமே இல்ல. எல்லாமே சிங்கள ஆக்கள் எடுத்துப்போட்டாங்கள். அயல் கிராமங்கள் எல்லாமே, முழுவதுமா சிங்களவர்கள் குடியேறியிருந்தாங்கள். எங்கட வயலுகள், குளங்கள் எல்லாம், அவங்களுக்கு குடுபட்டிருந்தது” எனக் கூறினார் பரமநாதன். இடப்பெயர்வுகளின் அலைச்சல், அவரை நோயில் தள்ளியிருக்கிறது. ஆனாலும், தன் ஊர் பறிபோகும் கவலை, அவரை வெகுவாகவே பாதித்திருக்கிறது.

மிகுதியாக எஞ்சியிருக்கும் வயல் பகுதிகளிலாவது, எதையாவது செய்து வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்றால், அதற்கும் பல முட்டுக்கட்டைகள் உள்ளதென்கிறார், அந்தப் பெரியவர். “இங்க இருக்கிற எங்கட வயலுகள் நிறையவும், சிங்கள ஆக்களால அபகரிக்கப்பட்டிருக்கு: நல்லதண்ணீப்புலவில் 10 ஏக்கர்; மத்திய வகுப்புக் காணி 50 ஏக்கர்; பணிக்க வயல் 30 ஏக்கர்; துவரமுறிப்பு 125 ஏக்கர்; பணிக்கவயல் குளத்தின் அணையை வெட்டி, அதற்குள் 60 ஏக்கர் வயல் செய்யிறாங்கள். எங்களுக்குத் தண்ணியும் தாறதில்ல” என அவர், அபகரிக்கப்பட்டிருக்கும் வயல் காணிகளின் அளவை சொல்லிக்கொண்டிருக்கவே, றசீக்குமார் குறுக்கிட்டார்.

“எங்கட ஊருக்குள்ள இருக்கிற வயலுகள விதைச்சாலும், சிங்கள ஆக்களின்ர மாடுகள் விடுதில்ல. வயல் வரப்பிலயே கொண்டு வந்து, மாடுகளக் கட்டுறாங்கள். 4 மணிக்கு அவிட்டு விடுறாங்கள். அது, முழு வெள்ளாண்மையையும் அழிக்குது. பொலிஸுக்குப் போனால், பிடிச்சுக்கட்டிப்போட்டு வரச்சொல்றாங்கள். நான் அப்பிடியே வயலுக்க வந்த மாட்டை பிடிச்சுக்கட்டிப்போட்டு, பொலிஸுக்குப் போனன். பொலிஸ், ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கேல்ல. இதைப் போய் கமக்கார அமைப்பிட்டச் சொல்லட்டாம். இங்க இருக்கிற சிங்கள ஆக்கள நம்ப ஏலாது. எப்ப, எப்பிடி மாறுவாங்கள் என்று சொல்ல ஏலாது. எப்பவும் பயத்தோட தான் இருக்கிறம். எங்களுக்கு யாரும் துணையா இல்ல.

“வடக்கு மாகாணம், கூப்பிடுதூரத்திலதான் இருக்கு. ஆனால், பறையானாற்றுப் பாலம் உடைச்சிஞ்சிற்று. அதையும் திருத்தி, கொக்கிளாய் வாவிப் பாலத்தையும் போட்டால், நாங்கள் இலகுவாக கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு ஆக்களோட தொடர்புகொள்வம். அவையளும், அந்தர அவசரத்துக்கு வந்துபோவினம். எங்களுக்கும் ஒரு துணையா இருக்கும். வடக்கும் கிழக்கும் இணைஞ்ச மாதிரியும் இருக்கும். ஆனால், அதை அரசாங்கம் போட்டுத்தராது. அரசாங்கம் இந்தத் தொடர்பக் குறுக்கறுத்து, சிங்களக் குடியேற்றங்களத்தான் செய்துகொண்டு வருது” என, அந்த உரையாடலை நிறைவுறுத்திய றசீக்குமாரின் பேச்சில், பலமான அரசியல் இருந்தது. ஆனால், துணிந்து இதையெல்லாம் முன்னெடுப்பவர் யார் என்ற அங்கலாய்ப்பு, அவரிடம் மட்டுமல்ல தென்னமரவடியைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் அனைவரிடமும் உண்டு.