இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடு படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900ல் நீர்ப்பாசன பிரிட்டிஸ் பொறியிலாளர் று.பிரௌன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரௌன் அப்பொதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.
இரணைமடு கட்டுமானத்தை மேற்கொள்ள பெரும் மனிதவலு வேண்டும் என்பதற்காக ஒரு குடியிருப்பை நிறுவும் முயற்சியில் முதலில் பிரௌன் ஈடுபட்டார். இவர் தற்போது கிளிநொச்சி நகரிலுள்ள ‘ரை’ ஆறு குளம் என்ற தேக்கத்தை உருவாக்கி அதன் கீழ் மக்கள் குடியிருப்பை உருவாக்கினார். இந்த ‘ரை’ ஆறு குடியிருப்பு குஞ்சுப்பரந்தன் மக்களைக் கொண்டே இரணைமடு கட்டுமானம் எம்மக்களின் முழுமையான வியர்வையால் கட்டப்படத் தொடங்கியது 1902ல் ஆகும்.
1920 ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1954ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம் ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. 3 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975ல் நடைபெற்றது. 1977ல் முழுமையடைந்த அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.
1977ல் முடிவடைந்த இந்தப்பணிக்குப்பின் இரணைமடு முழுப் புனரமைப்புக்கு இதுவரை உட்படுத்தப்பட்டவில்லை. 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது. 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெற்றுள்ளது.
இடதுகரை வலதுகரை என இரு வாய்க்கால்களைக் கொண்ட இரணைமடுவின் இடதுகரையில் ஊட்டக்குளமான கிளிநொச்சிக்குளம் அல்லது ரை ஆறு குளம் உள்ளது. இதனிருந்துதான் கிளிநொச்சி நகருக்கான குடிநீர் வழங்கல் முன்னர் நடைபெற்றது. இப்பொழுது மீளவும் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடு நடக்கின்றது.இதைவிட திருவையாறு என்ற மேட்டுநீர் பாசன குடியிருப்பு பயிர்செய் நிலங்களுக்கான ஏற்றுப்பாசன பம்பி இடது கரையில் இருக்கின்றது. 1990 உடன் இது செயலிழந்தது. மீளவும் அது இயங்கவில்லை. இதனால் திருவையாறு இன்றும் வரண்டு கிடக்கின்றது.
வலதுகரையில் ஊரியான்குளம் அதன் ஊட்டக்குளமாக உள்ளது. மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன. திருவையாறு ஏற்றுப்பாசனத்தை நம்பிய 1004 ஏக்கர் நிலங்கள் வரண்டு வாடுகின்றன. இரணைமடு நீருக்காக காத்திருக்கின்றது. இந்த ஏற்றுப்பாசனம் நிகழுமாயின் திருவையாறு பெரும் விளைச்சல்மிகு நிலமாக மாறும்.
ஆண்டுகளின் முன்னரான மனித மூதாதைகள் இரணைமடு படுகையில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஸ்ரீலங்காவின் முன்னாள் தொல்லியல் ஆணையாளர் சிரான் தெரனியகலை கல்லாயுதங்களை எடுத்தார்.
நீர் அரசியல்.
இரணைமடு இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கம். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பகுதியில் உள்ள இந்த நீர்த்தேக்கத்துக்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து நீர் வருகிறது. ஆனால் இந்தக் குளத்தின் பாசனநீர் மற்றும் பயன்பாட்டு நீர் கிளிநொச்சி மாவட்டத்திற்கே செல்கிறது. 1912இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அரசியலில் செல்வாக்காக இருந்த சேர். பொன். இராமநாதனின் பரிந்துரையில் அவருடைய 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்காகக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டும் பணியில் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பின்னர் அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு இப்பொழுதுள்ள ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ஹெக்டர் நீர்ப்பரப்பளவைப் பெற்றுள்ளது. இந்தக் குளத்தில் இருந்தே கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதியில் நெற்பயிரிடல் மேற் கொள்ளப்படுகிறது.
இந்த நீர்த்தேக்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்பகாமம் என்ற காட்டுப்பிரதேசத்தில்தான் விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் 1975 காலப்பகுதியில் இருந்துள்ளது. வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இராணுவத்தின் பெருஞ்சமரான ஜெயசிக்குறு நடவடிக்கையில் இந்தக் குளம் மட்டுமே படையினரால் கைப்பற்றப்படாமல் இருந்தது. இந்தக் குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அணைக்கட்டின் வழியாகவே கிழக்கு வன்னிக்கும் மேற்கு வன்னிக்குமான பயணங்களும் தொடர்பும் நடந்தன. இந்த நீர்த்தேக்கத்தில்தான் 2002இல் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் அவருடைய துணைவி அடேல் பாலசிங்கமும் விமானத்தில் வந்து இறங்கினர். பாலசிங்கம் தம்பதிகளை விடுதலைப்புலிகளின் தலைவரும் அவருடைய மனைவி மதிவதனியும் புலிகளின் தளபதிகளும் பொறுப்பாளர்களும் வரவேற்றனர். இந்த நீர்த்தேக்கத்தின் மேற்கே கிளிநொச்சி நகர் உள்ளது. கிழக்கே விடுதலைப்புலிகளின் விமான நிலையம் உள்ளது. இப்பொழுது இந்த விமான நிலையத்தைப் படையினர் தமது கட்டுப்பாட்டில் எடுத்துப் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்கள். போர் முடிந்த பிறகு இந்த நீர்த்தேக்கத்திற்கு இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷ விஜயம் செய்திருந்தார். நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் உள்ள படைத்துறைத் தலைமையகத்தில் இலங்கையின் மந்திரிசபைக் கூட்டத்தை நடத்தினார். இலங்கையின் வரலாற்றில் வடக்கில் நடத்தப்பட்ட முதலாவது மந்திரிசபைக் கூட்டம் இதுவாகும்.
நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் இப்பொழுது இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான படைத்துறைச் செயலகம் உள்ளது. இதை அண்மித்த பகுதியில்தான் செஞ்சோலை சிறுவர் இல்லம் உள்ளது. முன்னர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் ஜெனனி என்ற மூத்த பெண் போராளியின் பொறுப்பில் இருந்த இந்த இல்லத்தை இப்பொழுது நிர்வகித்து வருபவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி என்ற குமரன் பத்மநாதன். இரணைமடுவுக்கு மேற்கே உள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும் பொறியியற் பீடமும். போரினால் பாதிக்கப்பட்டிருந்த கட்டடங்களை மீளப் புனரமைத்து புதிதாக மேலும் கட்டடங்களை உருவாக்கி வருகிறார்கள். இங்குள்ள கலாச்சார மையத்தை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நிர்மாணத்துக்கும் புனரமைப்புக்கும்கூட இந்திய அரசு உதவியிருக்கிறது. இரணைமடுவை ஆதாரமாகக் கொண்டே கிளிநொச்சியின் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகத்தைச் செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த எதிர்ப்பை கிளிநொச்சியில் உள்ள இரணைமடு நீர்த்தேக்கத்தின் கீழ் பயிர் செய்யும் விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கான பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் இயங்குகிறார்கள். குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிலர் எதிர்ப்பு அலையை உருவாக்கி வருகிறார்கள். இதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர்த் திட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு, வடமராட்சி, தீவகம், தென்மராட்சி, யாழ்ப்பாண நகர் போன்ற இடங்களில் நீர்ப்பிரச்சனை உண்டு. இங்கே நல்ல தண்ணீரைப் பெறுவதற்காகத் தலைமுறை தலைமுறையாக மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்குத் தீர்வுகாணும் நோக்கில் இரணைமடு நீர்த்தேக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீரை மட்டும் பெறும் திட்டம் உருவாக்கப்பட்டது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிக்கடன் திட்டத்தின்கீழ் இரண்டு ஆயிரத்து முன்னூறு கோடி இலங்கை ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளின் ஒப்புதலும் வேண்டும். ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி முடிவடைகிறது என்று ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துத் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதாக எச்சரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் – இப்போதுள்ள நீர்த்தேக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, அணைக்கட்டை மேலும் உயர்த்தி அதிகளவு நீரைத் தேக்குவதாகும். அப்படித் தேக்கப்படும் கூடுதலான நீரில் இருந்து 12 சதவீதம் நீரை மட்டுமே யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்துவதாகும். விவசாயிகளின் எதிர்ப்புக்குக் காரணம் – விவசாயத்துக்கான பாசனத்துக்கு நீர் போதாமையாகிவிடும் என்ற அச்சம்.
நீர் மேலாண்மை அடிப்படையில் குடிநீரும் விவசாயத்துக்கான பாசன நீரும் உரியமுறையில் பகிரப்பட வேண்டும். இதுவே தேசிய நீர்ப்பங்கீட்டுக் கொள்கையாகும். அத்துடன் நீர்த்தேக்கத்தைப் புனரமைத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு நீரைத் தேக்கிய பின்னரே குடிநீர் பெறப்படும். இதில் விவசாயிகளின் நலன் 100 சதவீதம் பாதுகாக்கப்படும்.
ஆனால் இதை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தத்தம் நலன்சார்ந்து பெரும் விவகாரமாக்கி விட்டனர். தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் திட்டத்தை மாற்று ஏற்பாடாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித் துள்ளது. இரணைமடு நீர்த்தேக்கத்தைத் தனியாகப் புனரமைப்பது என்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கடல்நீரை நன்னீராக மாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைப்பற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கடல்நீரை நன்னீராக மாற்றுவது பற்றியே பேசப்பட்டதாகவும் இரணைமடு நீர்த்தேக்கத்தைப் புனரமைப்பதைப்பற்றிப் பேசப்பட்டபோது ஆசிய அபிவிருத்தி வங்கி அதற்கு இணங்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் இந்த நீர்த்தேக்கம் உள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாசன நீர், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர்ப் பிரச்சனைகள் நீக்க இத்திட்டம் நிறைவேறுவது அவசியம். இத்திட்டம் விவசாயி களின் ஒப்புதலுடன் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்படுவது வடமாகாண அரசின் கையில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரமான இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வடமாகாண தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும். மாகாண அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிடில் இலங்கை அரசு இரணைமடுவை கையகப்படுத்தி தேசிய நீர் மேலாண்மை கொள்கையின் அடிப்படையில் தீர்வுகாணும் சாத்தியம் உள்ளது. மாகாண அரசுகள் மேலும் பலவீனமடைந்து அதிகாரம் மைய அரசிடம் குவியவே இது வழிவகுக்கும்.
(Sivakumar Subramaniam)