இராஜன் சத்தியமூர்த்தி ஏன் பிரபாகரனால் கொல்லப்பட்டார்?

யுத்த காலங்களில் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு இடர்களை துடைக்க அயராது பாடுபட்டு வந்தவர். சமாதானக்குழுவின் தலைவராக இருந்து பல்வேறு இன முறுகல் நிலைகளை தீர்த்துவைத்தவர். வர்த்தக சங்கத்தலைவர்,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக இருந்து இளைஞர்களின் வழிகாட்டியாக பயணித்தவர்.

2004 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் நாள் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவினைத் தொடர்ந்து அதனிமித்தம் அழிவுகளோ இழப்புகளையோ ஏற்பட்டுவிடக்கூடாதென்று இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் மிகக் கரிசனை கொண்டிருந்தார்.

கிழக்கின் தனித்துவம் பற்றியும் யாழ் மேலாதிக்கம் பற்றியும் மக்களின் உணர்வுகள் கொந்தளிக்கத் தொடங்கியிருந்த காலங்கள் அவை. பிளவுக்கு ஆதரவாக அறிவிக்கப்பட்ட மார்ச் 08 ஆம் திகதி ஹார்த்தாலையொட்டி மட்டக்களப்பில் இருந்த எல்லோருடைய கடைகளும் பூட்டப்படவேண்டும் என்பது மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினரது முடிவாயிருந்தது.

அதன்படி கடையடைப்புக்கான பொது வேண்டுகோள் ஒன்று மட்டக்களப்பு நகரெங்கும் பிரசுரமாக வெளியிடப்பட்டிருந்தது. இதனை திரித்து யாழ்ப்பாண வர்த்தகர்களையும் யாழ்ப்பாண மக்களையும் மட்டக்களப்பை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு என்று தினக்குரலில் செய்தி வெளியானது.இச்செய்தி தினக்குரல் பத்திரிகையின் கீழ்த்தரமான பண்பை வெளிக்காட்டியது.

இது தவிர யாழ்ப்பாணப் பரம்பரையினர் குறித்து பிரித்துப் பார்க்கும் அளவிற்கு அவர்கள் மட்டக்களப்பில் தனிப்பெரும் சமூகப்பிரிவொன்றாக வாழவில்லை.இத்தகைய பொய்யான செய்திகளை வெளியிடுவதினூடாக மட்டக்களப்பு மக்களின் தனித்துவத்திற்கான எழுச்சிகளை யாழ்ப்பாணத்தவர் மீதான காழ்ப்புக்கொண்ட நடவடிக்கைகளாக திசைதிருப்பிவிடுவதும் அதுபோன்ற ஜனநாயக மீறல்களில் அவர்களை ஈடுபடத்தூண்டுவதும் தினக்குரலின் நோக்கமாக இருந்தது.

இப்படியாக கருணாவை ஒரு பிரதேசவாதியென நிறுவி விடுவதற்கு தினக்குரல் கீழ்தரமான செய்திகளை வெளியிட்டு அம்பலமானது. கிழக்கில் உருவாகியிருந்த யாழ்ப்பாண மேலாதிக்கத்திற்கெதிரான ஒரு எதிர்க்குரலை, யாழ்ப்பாண பிரதேசவாதத்திற்கெதிரான ஒரு போராட்டத்தை மட்டக்களப்பு மக்கள் மீதே திருப்பிவிட்டு பிரதேசவாதியெனும் பட்டத்தை கருணாவின் தலையில் கட்டிவிடுவதற்கான சூழ்ச்சியாகவே இவ்வாறான வதந்திகளை பரப்பும் பிரச்சாரங்களை யாழ்ப்பாணத்தின் அறிவுலகம் மேற்கொண்டது.

இதன்காரணமாக மட்டக்களப்பிலுள்ள யாழ்ப்பாணத்து வியாபாரிகளுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதனைக் கருத்தில் கொண்டு ராஜன் சத்திய மூர்த்தி ஒரு கருமத்தில் இறங்கினார். மட்டக்களப்பு வர்த்தகர்களை தன் வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். தற்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கள் அடங்கும் வரையில் ‘யாழ்ப்பாணத்து வியாபாரிகள் இங்கிருப்பது நல்லதல்ல’ என்றும், ‘சிறிது காலத்துக்கு அவர்கள் வியாபார நிலையங்களை மூடிவிட்டு வடக்கு நோக்கி சென்றுவிடுவது உசிதமானது’ என்றும் அவர்களுக்கு ஆலோசனை சொன்னார்.

அதுமட்டுமன்றி அவருடன் உடன்பட்ட அத்தனை வர்த்தகர்களும் வவுனியாவுக்கு சென்று சேரும் வரையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விடயங்களையும் அவரே ஒழுங்கு செய்து கொடுத்தார். ஆனால் கிழக்குப் பிளவு ஏற்படுத்தபோது அவர் கிழக்கு மக்கள் கொண்டிருந்த மனக்கிலேசங்களின் குரலாக கருணாம்மான் ஒலிப்பதை ஆதரித்து நின்றார் என்பதனால் வன்னித் தலைமையின் கோபத்துக்குள்ளானார்.

விரைவில் வரவிருந்த தேர்தலில் அவர் பெரு வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அப்படி அவரது வெற்றி நிகழ்ந்தால் அது கிழக்குப்போராளிகளை தனித்தரப்பாக அங்கீகரிக்கக்கோரும் கருணாம்மானின் நோக்கத்தை சர்வதேச அரங்குவரை கொண்டு செல்ல வாய்ப்பாகப் போகும் என்று புலிகள் அஞ்சினர்.

இதன் காரணமாக அவரை உயிருடன் விட்டுவைத்தால் தமது எதிர்காலத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்று புலிகளின் புலனாய்வுத் துறையினர் கணித்தனர்.அதன் காரணமாக மட்/தாண்டவன்வெளி பிரதேசத்திலுள்ள வெட்டுக்காடு என்றழைக்கப்படும் புறநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுக்கொன்றனர். மார்ச் மாதம் 30ஆம் திகதி அதிகாலை 07.40 மணிக்கு அவர் தன்னுடைய பூசையறையில் முருகன் படத்தில் முன்னால் நின்று தீபம் ஏற்றி சாம்பிராணி கொளுத்தி வழிபாடு செய்து கொண்டிருக்கையில் சாராமரியாகச் சுடப்பட்டார்.

பேரின்பராஜா சத்தியமூர்த்தி என்னும் இயற்பெயரைக் கொண்ட 61 வயது நிரம்பிய இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் சுடப்பட்டபோது வீட்டிலிருந்த அவரது மைத்துனரான 52 வயதான கந்தையா கனகசபை என்பவரும் சூட்டுக்காயங்களுக்குள்ளாகிக் கொல்லப்பட்டார்.

அவரது மகள் சத்தியமூர்த்தி சிவகீத்தா இச்சம்பவம் நடப்பதற்கு சற்று முன்னரே வீட்டை விட்டு வெளியேறி கல்விசார் கருத்தரங்கு ஒன்றுக்காக சென்றிருந்தமையால் அவரது உயிர் பிழைத்தது. பிற்காலங்களில் இந்த சத்தியமூர்த்தி சிவகீத்தா அவர்களை மட்டக்களப்பு மாநகர மேயராக மக்கள் தெரிவு செய்தனர்.

கொல்லப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மரணச்சடங்கில் பெரும் தொகையான மக்கள் கோபக்கனல் தெறிக்க கலந்து கொண்டார்கள். பிரமாண்டமான ஊர்வலத்துடன் அவரது உடல் மட்/நாவலடியிலுள்ள அன்னை பூபதி நினைவுத் தூபிக்கருகில் அடக்கம் செய்யப்பட்டது. எனினும் வன்னிப்புலிகளது கொலை வெறி அத்தோடு அடங்கவில்லை.

அவரது புதைக்கப்பட்ட உடலத்தை அன்றிரவே தோண்டியெடுத்து சன்னதமாடி வாவிக்கரையிலே போட்டு எரித்து துவம்சம் செய்து மகிழ்ந்தனர்.

ஆயுதம் தூக்காது அமைதியை என்றும் விரும்பிய அந்த மனிதனை,மட்டக்களப்பு மக்களின் மனங்களை வென்ற அந்த சிவில் சமூகப் பிரதிநிதியை கொலைசெய்து அழித்தமையானது கிழக்குப் பிளவினை வன்முறை மூலம் அடக்கிவிடுவதற்கான உறுதியான தீர்மானம் ஒன்று வன்னித் தலைமையால் எடுக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்த்தியது.

இதன் காரணமாக பதட்டம் மேலும் அதிகரித்தது. இராஜன் சத்தியமூர்த்தி கொல்லப்பட்ட மார்ச் 30 ஆம் திகதி நள்ளிரவுக்குள்ளே மட்டக்களப்பிலுள்ள யாழ்பாணத்தவர்களை உடனடியாக வெளியேறுமாறு கோருகின்ற அறிவிப்பு கருணா தரப்பால் விடப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. அதன்படி ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிய வட மாகாணத்தைச் சேர்ந்த சில வைத்தியர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர்.

அதேபோன்று தன்மம்பிள்ளை கனகசபை என்னும் வேட்பாளரை கொலை செய்ய தயாரான வன்னிப்புலிகளின் பிஸ்டல் குழு ஒன்றை களுதாவளையில் அமைந்திருந்த அவரது வீட்டுக்கு அருகே வைத்து கிராமத்து இளைஞர்கள் சுற்றிவளைத்து பிடித்தமையால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. பின்னர் அந்த கொலையாளிகள் கருணாம்மான் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பு -அபத்தம்(கனடா) 15 வது இதழில் வெளியான இந்த வரலாற்றுப்பதிவு மிகுந்த தேடல்களின் விளைவான தகவல்கல் சேகரிப்புகளினால் தொகுத்து எழுதப்பட்டது. தயவு செய்து இதனை பிரதி செய்பவர்கள் எழுத்தாளர் பெயரையும் பதிவான இதழின் பெயரையும் தவறாது குறிப்பிடவும்.

(M R Stalin Gnanam)

Leave a Reply