இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள்
(வாசுகி சிவகுமார்)
தன்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனக் கூறும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அதனை அறிந்துகொண்டே தேர்தல் சகதிக்குள் குதிக்கும் எண்ணம் தமக்கில்லை என்கின்றார்.
வட மாகாண சபையின் வினைத்திறமின்மை பற்றியும், சமகால அரசியல் நிலவரம் பற்றியும் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு மனந் திறக்கின்றார்……
விசுவமடுவில் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்றபோது அவரை கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் வழியனுப்பி வைத்தனர். கேர்ணல் ரட்ணப்பிரிய அப்பகுதி மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றயிருக்கின்றார். இது எதனைக் காட்டுகின்றது? தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலையால் தமிழர்கள் இராணுவத்தின் உதவியை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதையா?
இதில் சில விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் உள்ளவர்கள் எவ்வளவுதான் புனர்வாழ்வு பெற்றிருந்தாலும், அங்கு புனர் நிர்மாண வேலைகள் நடைபெற்றாலும், அடிப்படையில் அங்குள்ள போரால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வேலைவாய்ப்பின்றி, போதிய வருமானமின்றியே இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் நல்ல சம்பளத்துடனான வேலைவாய்ப்பினை ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கின்றனர், இது முதலாவது. இரண்டாவது, அரசு கொடுக்கும் பணத்தைத்தான் இராணுவமும் செலவு செய்து இந்த வேலைத்திட்டங்களைச் செய்கின்றது. அரசின் பணத்தைத்தான் அதிகாரிகளும் செலவு செய்தாலும் அவர்கள் மக்கள் மீதான எந்தவிதமான அக்கறையுடனும் அவற்றைச் செய்வதில்லை. மக்கள் அன்றாடம் காணும் அதிகாரிகள் எவரும் அவர்களுடன் நட்புறவுடன் பழகுவதில்லை. எனவே அவர்களிடத்தில் மக்களின் பாசம் வெளிப்படுவதில்லை.
இங்கே ஒரு இராணுவ அதிகாரி தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை வெறுமனே உத்தியோகமாகப் பார்க்காமல், தான் ஊடாடிய சகலரினதும் இன்ப துன்பங்கள் பற்றிய அக்கறையோடும், அன்போடும் செயற்பட்டிருக்கின்றார். அவ்வாறு எல்லா அதிகாரிகளும் செயற்பட்டிருந்தால் மக்கள் எல்லோரிடமும் அன்பைச் சொரிந்திருப்பார்கள். அதில் தமிழதிகாரி அல்லது சிங்கள அதிகாரி என்ற பேதமிருக்காது. இதனை இராணுவம் என்ற கோணத்தில் பார்ப்பது தவறானது.
ஆனால், மக்களுக்கு வேலைவாய்ப்பினையோ, இருப்பிட வசதிகளையோ வழங்க வேண்டியது இராணுவத்தின் வேலை அல்ல என்ற விமர்சனங்கள் பரவலாக உள்ளனவே? இராணுவ அதிகாரி உதவிக்கரம் நீட்டியதன் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவே பலர் விமர்சிக்கின்றனரே?
என்னதான் நிகழ்ச்சி நிரல் இருந்தாலும் அதற்கும் அந்த இராணுவ அதிகாரிக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? ஒரு இராணுவ அதிகாரி தனக்கு சொல்லப்பட்டதைத்தான் செய்வான். யுத்தமொன்று நடைபெற்று இருதரப்பும் பாரிய சேதங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இங்கு நான் இரு தரப்பும் என்று சொல்வது சண்டையில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரையும் தான். அவர்கள் பரஸ்பரம் கோபமும் குரோதமும் நிறைந்தவர்களாகவுமே இருப்பார்கள். ஏனெனில் இரண்டு தரப்புமே பாதிக்கப்பட்டது. இராணுவத் தரப்பினர் தாங்கள் எந்த மக்களுக்கெதிராக கொடிய ஆயுதங்களைப் பாவித்தார்களோ அந்த மக்களின் மீது அன்பைப் பொழிய வேண்டும் என எண்ணுவதை மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக நான் கருதுகின்றேன். இராணுவத்தினர் தாங்கள் தமிழ் மக்கள் மீது கொடூரமாக நடந்துகொண்டதை உணர்ந்து, தற்போது இரக்கம் காட்ட நினைப்பதாக இதனைக் கொள்ளலாம்.
அது மாத்திரமல்ல, இதற்குப் பின்னாலுள்ள நிகழ்ச்சி நிரல் என்னவென்பதைப் பற்றியே கேட்கத்தேவையில்லை. வடக்கிலுள்ள மக்களுக்கென அரசு நிதியொதுக்கியிருக்கின்றது. மக்களுக்கு வேலை கிடைத்திருக்கின்றது. அவர்கள் நல்ல சம்பளம் பெறுகின்றார்கள். இதில் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்தால்த்தான் என்ன? அப்படிப் பார்த்தால் எல்லா விடயங்களுமே ஏதோ நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்காகத்தான் நடைபெறுகின்றதென விளக்கம் கொடுக்கலாம் அல்லவா?
ஆனால், வேலை வாய்ப்பு அதிக சம்பளம் போன்றவற்றை வழங்கி தங்களது அபிலாஷைகள் குறித்த உணர்வை தமிழர்களிடமிருந்து மழுங்கடிக்க அரசு முனைவதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே?
அப்படியானால் தமிழர்கள் வேலைவாய்ப்பேதுமின்றி பிச்சைக்காரர்களாக அலைய வேண்டுமா? தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் வங்குரோத்துத் தனத்தை மறைக்க அவ்வாறு பிரசாரம் செய்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைமைகள் அரசிடமிருந்து பதவிகளைப் பெறுகின்றார்கள், எவ்வளவு வசதிகளைப் பெறுகின்றார்கள்? வெறும் தமிழ்த் தேசியம் என்ற பேரில் நடக்கின்ற வார்த்தை ஜாலங்களை விட மக்களின் அடிப்படை வாழ்க்கை தொடர்பாக இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள்? அந்தப் பயத்திலேயே அவர்கள் இவ்வாறான பிரசாரங்களைச் செய்கின்றார்கள். அந்த இராணுவ அதிகாரி எவ்வாறு மக்களின் அபிமானத்தை வென்றாரோ, அதனை விட அதிகளவிலான மக்கள் அன்பை பெறும் வகையில் எங்கள் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் நடந்து கொள்ள வேண்டும். ஏன் அவ்வாறு தமிழ்த் தலைவர்களால் செயற்பட முடியாதிருக்கின்றது? அந்த இராணுவ அதிகாரியைப் போலவோ, அதனிலும் அதிகமான அன்பையோ எங்கள் தமிழ்த் தலைமைகள் மக்களுக்கு காட்டியிருந்தால் ஏன் அவர்கள் இராணுவ அதிகாரியை நாடுகின்றார்கள்? தற்போது எங்கள் தமிழ்த் தலைமைகள் எங்கு சென்றாலும் தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தானே காண்பிக்கின்றார்கள்?
எனவே, மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் அதன் பின்னணியைப் பற்றி ஆராயாமல், அரச அதிகாரியொருவர் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதையே உதாரணமாகக் கொள்ள வேண்டும். உண்மையில் அரச அதிகாரிகளை நாடும் பயம் தானே எங்கள் மக்களிடம் அதிகளவில் உள்ளது. தங்களை அதிகாரிகள் மதிக்கின்றார்கள் இல்லை. அலைக்கழிக்கின்றார்கள் என்ற எண்ணப்பாங்குதானே மக்களிடம் அதிகளவில் உள்ளது? அவ்வாறான சூழலில் ஓர் இராணுவ அதிகாரி தங்கள் மீது பாசம் காட்டினால் மக்கள் வரவேற்கத்தானே செய்வார்கள்? இராணுவ அதிகாரியிடமிருந்து எங்கள் அரச அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தனக்கான அதிகாரங்களைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் வடமாகாணசபை மேற்கொள்ளவில்லை என்று நீங்கள் அடிக்கடி குற்றம்சாட்டி வந்திருக்கின்றீர்களே?
ஆமாம். வட மாகாணசபை இது வரையிலும் 450 தீர்மானங்கள் வரை நிறைவேற்றியிருக்கின்றது. அவற்றில் மாகாண சபையின் அதிகாரம் தொடர்பில் ஏதேனும் தீர்மானம் அவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளதா? அவ்வாறானதொரு முயற்சியெதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மற்றையது, எப்போதும் அரசியல் யாப்புத் தொடர்பான விவாதம் இருந்தால், மாகாணசபைக்குக் கொடுக்க வேண்டிய அதிகாரம் கொடுக்கப்படவில்லையெனில், வெறுமனே மேடையில் பேசுவதிலும் அறிக்கை விடுவதிலும் பயன் ஏதுமில்லை. அதற்கான தீர்வைப் பெறக்கூடிய ஒரே இடம் உச்ச நீதிமன்றம் தான். அதனை எப்போதுமே அவர்கள் செய்ததில்லை. ஒரு சிறிய காணிப் பிரச்சினை என்றால் கூட நீதிமன்றம் போவார்கள்.
ஆனால் அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களில் ஏன் இவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடாமல் இருக்கின்றார்கள்? இதன் மூலம் இவர்களுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பில் எந்தவித அக்கறையும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் அதனை வைத்து எவ்வாறு அரசியல் வியாபாரம் செய்வது என்பதை மாத்திரம் அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
நீதிமன்ற உதவியை நாடியிருந்தால் தீர்வு கிட்டியிருக்குமா?
அது வேறு விடயம். தமக்கு சார்பாக எப்போதுமே தீர்வு கிடைக்கும் என நினைத்தா மனிதர்கள் எப்போதும் நீதிமன்ற உதவியை நாடுகின்றார்கள்? நீதிமன்றில் ஒருவருக்குச் சாதகமாகவும் இன்னொருவருக்கு பாதகமாகவுமே தீர்ப்பு வழங்கப்படும். நாட்டில் எத்தனை சட்டத்தரணிமார் இருக்கின்றார்கள்? எல்லோருமே தாங்கள் ஆஜரான வழங்குகளில் எல்லாம் வெற்றிதான் பெறுகின்றார்களா? எனவே நீதிமன்றத்தை நாடுவது என்பது அவரவர் கெட்டித்தனத்திலும் ஈடுபாட்டுலுமே தங்கியிருக்கின்றது. சட்டத்தரணிகள், எம்பிக்களாகவும், அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள். முதலமைச்சர் கூட தான்தான் அதிகாரமுடையவர் எனக்கோரி இதுவரை எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை. இவர்கள் இந்த விடயங்களை மாகாணசபைத் தேர்தல்களிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெறவும் அதன் சுகங்களை அனுபவிக்கவுமே பயன்படுத்துகின்றார்கள். இவர்களுக்கு சமூக அக்கறை எதுவும் கிடையாது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் வினைத்திறன் மிக்க எவராவது மாகாணசபையைக் கைப்பற்றினால் அவர்கள் அவ்வாறு சட்ட உதவியை நாடி திறன் மிக்க ஆட்சியை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?
எங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய பிரச்சினை பொய், வீம்பு பேசுபவர்களையே பெரிய நாயகர்களாக அவர்கள் நினைப்பதும், மதிப்பதும் தான் . மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்படும் வரை அவர்களுக்கான நல்லதொரு தலைமை கிடைப்பது கடினமானதே. அறிவு பூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் சிந்திக்கவும் அந்தச் சிந்தனையின் அடிப்படையில் செயற்படவும் முதலில் மக்கள் தயாராக இருக்க வேண்டும். மக்கள் தங்களது நலன்களுக்கு எதிரானவர்களைத் தெரிவுசெய்வதை நிறுத்தாதவரை மக்களின் நலன்களைப் பாதுகாப்பது யார்?
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் உங்களுக்கு இல்லையா?
எனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இருந்ததில்லை. என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவும் மாட்டார்கள். அதனை அறிந்துகொண்டே சகதிக்குள் இறங்கக் கூடாதல்லவா? சேறாகிப்போயிருக்கும் தமிழர் அரசியலை துப்பரவு செய்ய முயற்சிக்கின்றோம். அது வேறு விடயம். ஆனால் தமிழர் தரப்பில் உள்ள படித்தவர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என எல்லோரும் வீம்பு பேசுவதையே பெருமையாக நினைக்கின்றார்கள். சமூகத்தை ஏமாற்றும் கெட்டித்தனமும், மனோபாவமும் இருந்தால்தான் தேர்தலில் இறங்கலாம், அதனை விட கோடிக்கணக்கான பணமும் தேவை. முதலமைச்சரின் கீழ் அவரே தெரிவு செய்த நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் அவர்கள் ஊழல் செய்ததாக முதலமைச்சரே ஒப்புக்கொள்கின்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் பதவி நீக்கிய ஒருவரையே தனது வலது கையாக முதலமைச்சர் அழைத்துச் செல்கின்றார். அவ்வாறானால் இங்கு சமூக அக்கறை எங்கே இருக்கின்றது. அவ்வாறானவர்களைத் தானே தமிழ் மக்களும் தெரிவு செய்கின்றார்கள்? தமிழர்கள் தங்கள் தலைகளில் தாங்களே மண் அள்ளிப் போட்டால் என்னசெய்வது?
அமெரிக்கா ஐ.நா மனித பேரவையில் இருந்து விலகுவது இலங்கைக்கு பாதமானது என்று சொல்லப்படுகின்றதே?
அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகினாலும் அது தான் நினைத்ததை இன்னொரு நாட்டைக் கொண்டு நிறைவேற்றியே தீரும். தான் நினைத்ததைச் செய்ய அமெரிக்கா ஒரு சபையில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமேதுமில்லையே. தனக்குச் சாதகமாய் இல்லை என அதனை விட்டு வெளியேறினாலும் கூட, அந்தச் சபையை தனக்குச் சாதகமாகவே அது பயன்படுத்திக் கொள்ளும், அமெரிக்க நலனில் பார்த்தால் அது வெளியேறியதொன்றும் விசேடமானதல்ல. ஆனால் இலங்கையில் தமிழர்கள் அமெரிக்காவை இன்னமும் நம்பியிருப்பதுதான் அறிவற்ற செயல். முள்ளிவாய்க்காலுக்கு ஒபாமா கப்பல் அனுப்புவார் என்று எதிர்பார்த்துத்தானே இலட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள்? அவ்வாறு இனிமேலும் அமெரிக்கா காப்பாற்றும் என எதிர்பார்த்தால் என்ன செய்வது? தமது இயலாமைக்காக யாராவது சீமான் காப்பாற்ற வருவான் என எதிர்பார்க்கும் அதே பழக்கத்தில் தான் இப்போதும் அமெரிக்காவை எதிர்பார்க்கின்றார்கள். ஏனெனில் அமெரிக்கா எல்லோருக்கும் அடிக்குமாம். பெரிய பொலிஸ்காரனாம் ஆதலால் எங்களையும் காப்பாற்றும் என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். சினிமாவிலும் 50 பேரை அடித்து வீழ்த்துபவன் தானே நாயகன்? அவ்வாறான ஒரு கனவிலேயே தமிழர்கள் இருக்கின்றார்கள்.