தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் மேற்கத்தைய வலதுசாரி நாடுகளும் அவற்றின் பாரம்பரிய அடிவருடி நாடுகளும்தான். தீர்மானத்தை எதிர்த்த 11 நாடுகளில் மேற்கத்தைய ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளான சீனா, ரஸ்யா, கியூபா, வெனிசூலா, எரித்திரியா, பொலிவியா, பிலிப்பைன்ஸ் என்பனவும் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஸ், சோமாலியா, உஸ்பெக்கிஸ்தான் என்பனவும் அடங்குகின்றன.
வாக்காளிப்பில் கலந்து கொள்ளாத 14 நாடுகளில் இந்தியா, யப்பான், இந்தோனேசியா, லிபியா, நேபாளம் என்பன முக்கியமானவை. வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளும் மேற்கு நாடுகளின் இலங்கைக்கு எதிரான மிரட்டல் போக்கை ஏற்றுக் கொள்ளவில்லை எனப் பொருள் கொள்வதில் தவறேதும் இல்லை. மனித உரிமைப் பேரவையில் உள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் மட்டும் தீர்மானத்தை ஆதரித்ததின் மூலம் இது ஒரு சிறுபான்மைத் தீர்மானம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு பெரிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இப்படியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அவை இன்றுவரை வெறும் காகிதங்களாகவே இருக்கின்றன. உதாரணமாக, கியூபா மீதான அமெரிக்க பொருளாதாரத் தடையை நீக்கும்படி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அமெரிக்கா இன்றுவரை அத்தீர்மானங்களை சட்டை செய்யவில்லை. அதேபோல, பாலஸ்தீனத்தில் தான் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் எனப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், இஸ்ரேல் அவற்றை மதித்து நடக்கவில்லை.
உண்மையில் சட்ட விரோதமாக நடந்து குற்றமிழைத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐ.நா. தீர்மானங்களை மதிக்காதபோது, அரசியல் உள் நோக்கங்களுடன் இலங்கைக்கு எதிராக வேண்டுமென்றே மேற்கு நாடுகளால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை மதித்து நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.