இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த சாதி அமைப்பு பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எதிலும் வல்லவர்களான யாழ்ப்பாணத் தமிழர்கள் பின்னர் அதைத் தமது தேவைக்கேற்ப வடிவமைத்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வியை எழுப்பக்கூடும். அதாவது இந்தியாவிலிருந்துதான் இலங்கைத் தமிழர்களுக்கு சாதியமைப்பு முறை கடத்தப்பட்டது என்றால், பிற்காலத்தில் – சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக பிரித்தானியரால் மலையகத் தோட்டங்களுக்கு கூலிகளாகக் கொண்டுவரப்பட்ட தமிழர்கள் மத்தியில் ஏன் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் உள்ள அளவுக்கு இறுக்கமான சாதியமைப்பு நிலவவில்லை என.நான் இது குறித்து மலையகத்தில் உள்ள சில தோழர்களிடமும், புத்திஜீவிகளிடமும் பல வருடங்களுக்கு முன்னரே விவாதித்திருக்கிறேன்.
அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து என்னவெனில், யாழப்பாணத்தில் சாதி அமைப்பை உள்வாங்குவதற்கான நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டமைப்பு ஏற்கெனவே இருந்தது என்பதும், மலையகத்துக்கு கொண்டு வரப்பட்டவர்கள் தென்னிந்தியாவில் மிகவும் வறுமையில் வாழ்ந்த பல்வேறு கிராமங்களையும் சாதிகளையும் சேர்ந்த மக்களாக இருந்ததுடன், அவர்கள் மலையகம் என்ற புதிய இடத்தில் கலந்து தொழில் செய்யும் கூலிகளாக – சரியாகச் சொல்வதானால் அடிமைகளாக வைக்கப்பட்டதால், அவர்களால் ஒரு சாதியக் கட்டமைப்பை இறுக்கமாகப் பேண முடியாமல் போய்விட்டது என்பதாகும்.இந்தக் கருத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்றாலும், இது ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
யாழ்ப்பாணத்தில் இந்த சாதிக் கட்டமைப்பு அங்கு வாழ்ந்த சைவ – வேளாள மேட்டுக்குடியினரால் போசித்து வளர்க்கப்பட்டது என்றாலும், இலங்கையைக் கைப்பற்றி சுமார் 400 வருடங்கள் வரை அரசாண்ட போரத்துக்கீச, ஒல்லாந்த, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களும் அந்த அமைப்பைத் தகர்க்க விரும்பாமல் அதைப் பேணியபடியே ஆட்சியை நடத்தியிருக்கின்றனர். அதற்கு உதாரணம், அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிகள் பற்றி வெளியிட்டுள்ள ஆவணங்களாகும். அதன்படி –1927இல் பிரித்தானியர் எடுத்த ஒரு கணிப்பீட்டில் பின்வரும் சாதிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
1. முக்குவர் 18. பண்டாரம்2. வேளாளர் 19. பண்டாரப்பிள்ளை3. கரையார் 20. வேடவேளாளர்4. சீர்பாதர் 21. குயவர்5. கோவிலார் 22. நளவர்6. முதலிகள் (செங்குந்தர்) 23. வண்ணார்7. செட்டிகள் 24. அந்தணர்8. பள்ளர் 25. சாண்டார்9. பறையர் 26. வன்னியர்10. திமிலர் 27. ஆண்டிகள்11. கோவியர் 28. சிற்பிகள்12. தெட்டி 29. தச்சர்13. மீன்தூக்கி 30. தவசிகள்14. சாயக்காரர் 31. கொல்லர்15. தட்டார் 32. அம்பட்டர்16. தனக்காரர் 33. சாணர்17. வாணிபர்
பிரித்தானியருக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த தொமஸ் வன்றீ என்ற ஒல்லாந்து தளபதி 1697இல் எழுதிய அறிக்கையொன்றிலும் பெரும்பாலும் இதே சாதிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் குறிப்பிடாத பின்வரும் சாதிகளும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் விபரம் வருமாறு:
சாலியர் துரும்பர்வடுகர் ஓடாவியார்சக்கிலியர் மடப்பள்ளி வேளாளர்வீர சைவர் அகம்படியார்சிவியார் கைக்குளர்இசை வேளாளர் எண்ணெய்க்காரர்சேணியர் வலைஞர்
இந்தச் சாதிகளில் சில காலப்போக்கில் ஒன்றாகக் கலந்துவிட்டதாகவும், அதனால் சில சாதிகள் தற்பொழுது வழக்கில் இல்லையென்றும் கூறப்படுகிறது. இந்தச் சாதிகளில் ஆகக் கீழ்நிலையிலுள்ள ஐந்து சாதியினரே “பஞ்சமர்” என அழைக்கப்படுகின்றனர்.
அந்தப் பஞ்சமர்கள் பின்வரும் விதங்களில் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஒடுக்குமுறைக்குள்ளாகி இருக்கின்றனர். அவையாவன:• பெண்களோ ஆண்களோ மேலங்கி அணியக்கூடாது, அப்படிப் போட்டவர்களின் சட்டைகள் கொக்கைச் சத்தகத்தால் இழுத்து கிழிக்கப்பட்டுள்ளது.• முழங்காலுக்கு கீழே உடை உடுத்தக்கூடாது• தோளில் துண்டு (சால்வை போன்றவை) போடக்கூடாது.• பெண்கள் தாவணி போடக்கூடாது•
வீதிகளிலும் பொது இடங்களிலும் நடமாடக்கூடாது. அவசியம் கருதி ஒரு வீதியால் போகவேண்டி இருந்தால், ஒரு பனம் காவோலையை இழுத்துச் சென்று தனது வருகையை அறிவிப்பதுடன், தனது காலடியை அழிக்கவும் வேண்டும். அவ்வேளையில் உயர்சாதிக்காரர் யாரேனும் அவ்வழியால் வந்தால் அவரைப் பார்க்காது வேலிப்பக்கம் திரும்பி நிற்க வேண்டும்.• தாம் வாழ்வதற்கு குடிசைகள் அமைக்கும்போது உயர்சாதியினர் குறிப்பிடும் முறையில் மட்மே அமைக்க வேண்டும்.•
நகைகள் அணியக்கூடாது• திருமணத்தில் தாலி கட்டக்கூடாது• சடங்குகளின் போது வெள்ளை கட்டக்கூடாது• உயர்சாதியினரின் பெயர்களை வைக்கக்கூடாது• பிரேதங்களை எரிக்காது புதைக்க வேண்டும், உயர்சாதியினரின் சுடலைகளைப் பயன்படுத்தக்கூடாது•
உயர் சாதியினரின் கிணறுகளில் தண்ணீர் அள்ளவோ, குளங்களைப் பயன்படுத்தவோ கூடாது• வைபவங்களில் வாத்தியங்கள் பயன்படுத்தக்கூடாது• குடை பிடிக்கக்கூடாது• பாதணிகள் அணியக்கூடாது• கல்வி கற்கக்கூடாது•
உயர் சாதியினர் வணங்கும் கோயில்களுக்குள் போகக்கூடாது, அவர்கள் வணங்கும் தெய்வங்களை வணங்கக்கூடாது, தாழ்த்தப்பட்ட சாதி ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்பட்ட தெய்வங்களையே வணங்க வேண்டும், தாம் வணங்கும் தெய்வங்களுக்கும் தேங்காய் அடிக்கக்கூடாது• தேநீர்க்கடைகளுக்குள் செல்லக்கூடாது• வாகனங்களில் ஆசனங்களில் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது•
பிற்காலத்தில் சில பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப்பட்ட போதும், அவர்கள் மற்றைய பிள்ளைகளுடன் ஆசனங்களில் அமராது நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டும்.இப்படி இன்னும் எத்தனையெத்தனையோ கட்டுப்பாடுகள்.
இவையெல்லாவற்றையும் கடந்துதான் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைய நிலையை ஓரளவு அடைந்திருக்கின்றனர். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்த ஒடுக்குமுறைகளில் சில மறைமுகமாக அமுல்படுத்தப்படுகின்றன.நிலைமை இப்படியிருக்கையில் நமது தமிழினம் உருப்படுமா? நமக்கு ‘விடுதலை’ கிடைக்குமா?
(யாழ் மணியம்)