இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!சிங்களவர் அல்ல (பாகம் 2)

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

சிங்கள இனவாதம்

1920 இல் கொழும்பில் 1,000 மலையாளிகள் இருந்தார்கள். இவர்கள் ஆங்கிலேயரால் தங்களது தொழிற்சாலைகளில் பராமரிப்புத் தொழில் செய்வதற்குக் கொண்டு வரப்பட்டவர்கள். 1935 இல் மலையாளிகளது தொகை 35,000 ஆக உயர்ந்தது. பெரும்பாலும் கள் இறக்கல், துறைமுகம், தொடர்வண்டி திணைக்களம், தொழிற்சாலை, தேநீர் கடைகள், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு இருந்தனர். இவர்களுக்கு எதிரான போராட்டத்துக்குத் தொழிற் சங்கவாதியாக இருந்த ஏ.இ. குணசிங்கா தலைமை தாங்கினார்.

மலையாளிகளது தேநீர்க் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என கொழும்பு நகரம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மலையாளிகள் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறினர். சிலர் தமிழ் அல்லது சிங்களப் பெண்களை மணந்து இலங்கையில் தங்கி விட்டனர். S.W.R.D. பண்டாரநாயக்காவின் முதல் அமைச்சரவையில் பவுத்தமத கலாசார அமைச்சராக பதவி வகுத்தவர் இந்த மலையாளிகளில் ஒருவரான ஜெயவீர குருப்பு ஆவர்!

1939 ஆம் ஆண்டு ஏ.இ. குணசிங்கா 15,000 தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் எனக் கேட்டுச் சட்டசபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதே ஆண்டு அண்மையில் அரச பணியில் சேர்ந்த தமிழர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை டி.எஸ். சேனநாயக்கா கொண்டு வந்தார்.

இலங்கையில் 1860 முதல் தோட்டத் தொழிலாளர் போராட்டம் நடத்திய போதும் 1899 இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு தோற்றம் பெற்ற போதிலும் 1920 இல் மட்டுமே இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகள் உருவாகின.

ஒன்று ஊடகவியலாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் (Ceylon Indian Workers Federation) மற்றது ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கம்.

1925 இல் நடேசய்யர் தனது அமைப்பை குணசிங்காவினுடைய தொழிற் சங்கத்தோடு இணைத்தார். ஆனால் 1928 ஆம் ஆண்டளவில் குணசிங்கா இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார். அதனால் நடேசய்யர் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார்.

கூலி வேலைக்கு அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்

மலையகத் தமிழர் 1,800 முற்பகுதி தொடங்கி தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயரால் கோப்பி, தேயிலை, இரப்பர் தோட்டங்களில் கூலி வேலை செய்ய ஒப்பந்தக் கூலிகளாக (indentured labour) அழைத்து வரப்பட்டவர்கள். வெள்ளைத் துரைமார்களால் கூலிகள் என அழைக்கப்பட்டவர்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நுழைந்த சில சொற்களில் இந்தக் கூலி என்ற சொல்லும் ஒன்று. மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு அதிக நேரம் தேயிலை, இரப்பர், காப்பித் தோட்டங்களில் வேலை செய்தார்கள். லயம் என்று சொல்லுகிற தகரக் கொட்டில்களில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். சமையல், சாப்பாடு. படுக்கை எல்லாம் இந்த லயத்தில்தான். இறந்த பின் இவர்களது உடல்கள் தோட்டங்களில் புதைக்கப்பட்டு தேயிலைச் செடிகளுக்கு உரம் ஆகின.

இவர்களின் குடிப்பெயர்வு மிகவும் சோகமானது. பயணம் செய்ய வேண்டிய நாளில் கையில் இரண்டொரு துணிமணியோடு வீட்டு வாசல்களில் காத்திருப்பார்கள். கங்காணிகள் இவர்களை கால் நடையாக இராமேஸ்வரம் வரையும் கூட்டி வருவார்கள். அதற்குப் பிறகு தோணிகளில் மன்னார் கொண்டு வரப்படுவார்கள். மன்னாரை அடைந்ததும் அங்கிருந்து பல மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய, தென்பகுதி இடங்களுக்கு கால் நடையாகக் காடு, மலைகள் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நீண்ட, கரடு முரடான பயணத்தில் நாலில் ஒரு பகுதியினர் நோய் காரணமாக சாவை அணைத்துக் கொண்டார்கள். ஏழ்மையும் வறுமையுமே இந்த மக்களைத் தாம் பிறந்த தாய் நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. ஏழ்மைக்குக் காரணம் கல்வி இன்மையே. சமூக ஏணியின் கடைசிப் படியில் இருந்த இந்த மக்களை சமூகம் மக்களாகவே கணிக்கவில்லை. இந்து மதம் இவர்களைத் தீண்டாதார் என்று முத்திரை குத்திச் சேரிகளில் ஒதுக்கி வைத்தது. சாமி கும்பிடக் கூட இந்த மக்களுக்கு உரிமை இருக்கவில்லை. இன்று கூட தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்கள் உலகத்தில் மிக மோசமாகச் சுரண்டப் படும் தொழிலாளர்களாக எண்ணப்படுகிறார்கள்.

1827 இல் மட்டும் இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இது 1877 இல் 1,46,000 ஆக உயர்ந்தது (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்). 1946 குடிமக்கள் கணக்கெடுப்பின் போது மலையகத் தமிழர்களது எண்ணிக்கை 780,589 ஆக உயர்ந்திருந்தது.

(தொடரும்…..)