உலகின் மிகச்சிறந்த இராஜதந்திரிகளை மற்றும் அரசியல் நுட்பங்களை கொண்ட நாடாக இலங்கை மிளிர்கிறது.கடந்தகால வரலாறுகளை பார்க்கையில் இனப்போரின் ஆரம்ப காலத்தில் அது மேற்குசார்பான ஒரு நாடு.இந்தியாவுடனான தமிழர் தரப்பின் உரையாடல்களை அமிழ்வு நிலையில் பேணுகின்றமை.இறுதிப்போரில் உலகின் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து போரில் வென்றமை.கடைசியில் இப்போது எடுத்திருக்கும் சீன சார்பு நிலைப்பாடு.
இது உண்மையில் இராஜதந்திர ரீதியில் மெச்சத்தக்க ஒரு முடிவு.பூச்சிய நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அடுத்து வரும் “சீனாவின் உலகில்” முன்னணி பெறவும் இதனை விடவும் சிறந்த தேர்வு இல்லை.சாணக்கியம் , தீர்க்கதரிசனம் போன்ற சிறந்த சொற்றொடர்கள் அனைத்துக்கும் இலங்கையின் காய்நகர்த்துதலே சிறந்த உதாரணம்.
சீனாவுடன் சார்ந்து போதல் தொடர்பான சாதக பாதகங்கள் தொடர்பிலே கருத்து கூறுவது எனது நோக்கமல்ல.நடப்பு அரசியலை இலங்கை திறனுடன் அணுகுவதனை பாராட்டவே விரும்புகிறேன்.அடுத்தது சீனாவின் ஒழுங்கில் இயைந்து போவதற்கு இலங்கை பெரும்பான்மை மக்களின் பொதுநிலை பெரிதாக முரண்பாட்டினை காண்பிக்காது.
பெரும்பான்மையினரின் கருத்தினை பிரதிபலிக்கும் சனநாயகத்தில் நமக்கென்ன வந்தது? என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.
விடுதலை போராட்டங்களுக்கு காலவரையறை ஒன்று வேண்டும்.பூகோள அரசியலை புரியாது முப்பது வருடங்களாக போராடியும் கண்டது ஏதுமில்லை.”சான்ஸ் கிடைத்தால்தான் சச்சின் டெண்டுல்கர்” என்பார்கள்.நமது காமரேட்டுகள் பெருமையாக பேசும் வியட்நாம், கியூபா தேசங்கள் சும்மா விடுதலையடையவில்லை.உலக அரசியலை புரிந்துகொண்டு சோவியத் ஒன்றியம் பக்கம் நின்றதால் அவைகள் விடுதலையுற்றன.அதேபோல் பாலஸ்தீன விடுதலை இன்னும் சாத்தியப்படாமைக்கு மேற்குலக நாடுகளில் இருக்கும் யூதர்களின் அழுத்தமே காரணம்.இதுவே பூகோள அரசியல் தொடர்பான புரிதல்.
இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர் கியூபாவோ அல்லது வியட்நாமோ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருப்பின் அதன் பெயர் வேறு.நமக்கு பிடெலும் இல்லை.ஹோசிமும் இல்லை.ஆக காலமறிந்து காய்நகர்த்துதலே இராஜதந்திரம்.
நமது விடுதலை போராட்டத்தில் சர்வதேச உறவுகள் என்பது இந்தியாவை தாண்டி அதுவும் தமிழ் நாட்டை தாண்டியதாக அமையவில்லை.
சாட்டுக்கேனும் இந்தியாவை தமிழ் நாட்டினூடே அழுத்தம் கொடுத்திருக்க முடியும் முன்னாள் இந்திய பிரதமரின் விதியை முடிக்காமலிருந்தால்.இப்போது சீ…சீ… இந்த பழம் புளிக்கும் நிலைதான்.ஸடாலினாலும் இந்திய தேசத்தினை தாண்டி எதையும் சாதிக்க முடியாது.
சரி இப்போதைக்கு தமிழ் ஊடகங்கள் ,அரசியலாளர்கள்,பத்தியாளர்கள் அனைவரினதும் கடைசி நம்பிக்கை யாதெனில் இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்க, இந்தியா தமிழர்களை நாடும் என்பதுதான்.ஒருபோதுமில்லை.இந்தியா மீதான இந்த நம்பிக்கை என்பது, மிகவும் புளித்துப் போன அரசியல் என்பதுடன் நாம் மேலும் துண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதில் இருந்து மீளவில்லை என்பதே பொருள்.
ஒரு தரம் கையை சுட்டுக்கொண்ட இந்தியா எந்த நம்பிக்கையில் நம்மை நாடும்? உண்மையில் இந்திய சீனாவிடையில் யுத்தம் மூளப்போவதாய் வரும் இணைய செய்திகள் யாவுமே ஒருவித பூச்சாண்டி அல்லது இந்திய தேர்தல்களில் வாக்கினை வேட்டையாடும் அரசியல்.
இலங்கை முழுதுமாக சீனாவின் பிடியில் போனாலும் கூட இந்தியா தற்காப்பு ஆட்டமே ஆடும்.அது ஒருநாளும் தாக்குதல் வியூகத்தை எடுக்காது.ஏனெனில் ஒரு நீண்ட யுத்தத்தை சமாளிக்கும் பொருளாதார வல்லமை இந்தியாவிடம் இல்லை.ஒரு தொற்றுநோய் நிலையினை கூட முகாமை செய்யத்தெரியாத இந்தியா யுத்தத்தை சமாளிப்பது எங்ஙனம்? இதற்கு மாறாக தென்னாசியாவின் எல்லா நாடுகளையும் பரிபாலனம் செய்யுமளவிற்கு பொருளாதாரத்தை கொண்டுள்ளது சீன மக்கள் குடியரசு.
உண்மையில் இந்தியாவிற்கு சீனாவை எதிர்க்கும் ஆற்றல் (ability) இருக்கிறது.ஆனால் அதனை வெல்லும் தகுதிறன்(competency) இல்லை.எனவே சீனாவுக்கான போட்டியாளராக(rivalry) இந்தியாவை கூற முடியாது.இந்தியா தென்னாசியாவின் பெரிய நாடாக இருக்கலாம்.ஆனால் அது ஒரு வல்லரசுமல்ல; ஏனைய நாடுகளை தனது பிடிக்குள் வைத்திருக்கும் ஆற்றலுமில்லை.பாவப்பட்ட பூட்டான் தவிர்த்து எந்த நாட்டிலும் அதன் செல்வாக்கும் பூச்சியமே.
இதுதவிர இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டளவில் ஆக்கிரமிக்கப்பட்ட மங்கோலியா பிரதேசத்துக்காக இரஸ்யாவுடன் போர் என பகிரங்கமாக பிரகடனம் செய்திருக்கும் சீனா, இந்தியாவுக்கு எதிராக எந்தவித பிரகடனத்தையும் செய்யவில்லை.ஆக மொத்தத்தில் இந்தியாவை தற்காப்பு நிலைக்குள் வைத்திருக்கவே சீனாவும் விரும்புகிறது.இதனை சரிவர புரியாத நாம் ஐயோ சீனா வந்து விட்டது கோசத்தை கோரஸாக பாடுகிறோம்.
எப்போது கற்றுக்கொள்ள போகிறோம் நமக்கான அரசியலை நாம் செய்வதற்கு;மிதப்பு நிலையில் இருந்து கொண்டு.