இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 3

தேயிலை ஏற்றுமதியாளர்கள் இலங்கையின் நாணயப் பெறுமதியின் இறக்கத்திற்கு தொடர்பற்ற வகையில் ஏறத்தாழ முன்னைய டொலர் பெறுமதியின்படியே தேயிலைக்கான வருமானத்தைப் பெறுகின்றனர். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், கடந்த ஆறு மாதத்தில் கொழும்பு சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்றுமதிக்கான
தேயிலையின் சராசரி விலையை கடந்த ஆண்டு நிலவிய விலையோடு ஒப்பிடும் போது சுமார் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே விலை உயர்ந்திருக்கிறது.

இலங்கை ரூபாயில் பார்த்தால் கடந்த மார்ச் மாதத்தில் 850 ரூபாயாக இருந்தது. ஆகஸ்டில் 1450 ரூபாவாக உயர்ந்திருக்கிறது (Teasrilanka.org/Tea-Prices). ஆனால் அது தேயிலைத் தோட்டத் தொழிலாளருக்கும் உரியதாக ஆக்கப்படவில்லை.

உண்மையில் டொலர் பெறுமதியில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கூலி சுமார் 45 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆயினும் தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் மற்றும் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் பக்கமிருந்து அது பற்றி குறிப்பிடத்தக்கதாக இன்னமும் சத்தமெதுவுமில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முந்தியதான 1000 ரூபா கூலி என்பதற்கு மேலாக அது நகரவில்லை. சம்பளத்தை வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புக்கு ஏற்ப உயர்த்தும்படி தனியார் துறைகளுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்தால் அரசாங்கமும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதால் அரசாங்கம் அப்படி ஒரு விடயம் இருப்பதாகக் கூட காட்டிக் கொள்ளாமல் இருப்பதில் திறமையாக உள்ளது.

மேலும் உழைப்பாளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராட்டங்களை நடத்தும் நோக்குடன் எவரும் முன்முயற்சிகளை எடுத்துவிடாத வகையில் தேசிய பாதுகாப்பு, பொதுச் சொத்துக்களுக்கு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என அரசு தனது அனைத்து அடக்குமுறை, ஒடுக்குமுறை கருவிகளையும் முடுக்கிவிட்டு அரசியல் சமூக தலைவர்களை அமைதி காக்க வைத்துள்ளது.

அத்துடன் அவ்வாறான போராட்டங்களை மக்கள் விரும்பாத மாதிரியான ஓர் எண்ண அலையையும் அரசாங்கம் விரித்து பரப்பியுள்ளது. வேலையின்மையும் வறுமையையும் இங்கு நியதியாக முன் நிற்கின்றது

ஆடை ஏற்றுமதி வருமானமும் தேயிலை ஏற்றுமதி வருமானமும் அரசுக்கு மிக முக்கியமானவை. எனவே அவற்றிற்குத் தேவையான மூலப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களின் இறக்குமதியில் அரசாங்கம் தாராளமாகவே நடந்து கொள்கிறது.

ஆனால் கட்டிடத் தேவைகளுக்கான பண்டங்களின் இறக்குமதி மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உழைப்பாளர்களில் சுமார் 8 சதவீதமானோர் கட்டிடத் தொழிற் துறையோடு உள்ளவர்கள்.

கட்டிடப்பொருட்களின் தட்டுப்பாடுகளும் அதீத விலையேற்றமும் அத்துறையிலுள்ள அரைவாசிக்கு மேற்பட்டோரை வேலையற்றவர்களாக அல்லது போதிய நாட்களுக்கு வேலை கிடைக்காதவர்களாக ஆக்கியுள்ளது.

விவசாயத்துக்கான இரசாயன உரம் மற்றும் இரசாயனப் பொருட்கள் திறந்த
சந்தையில் தட்டுப்பாடாகவும் மிக அதிக விலையிலுமே கிடைக்கிறது. முன்னர் விவசாயிகள் ஓர் ஏக்கர் நில நெல் விவசாயத்துக்கு 100 கிலோவுக்கும் அதிகமாக இரசாயன உரத்தை பிரயோகித்தனர். துல்லியமான முறையில் விவசாயம் செய்தாலும் ஓர் ஏக்கர் நெல்லுக்கு குறைந்த பட்சம் 60 கிலோ இரசாயன உரம் தேவையென அனுபவமுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அரசாங்கம் சென்ற வாரம் வரை 30 கிலோ யூரியாவை மட்டுமே கிலோ 200 ரூபா என்ற அடிப்படையில் வழங்குவதென செயற்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு மேலாக தேவைப்பட்டால் விவசாயிகள் வெளிச்சந்தையில் 50கிலோ யூரியாவுக்கு ரூபா 20000க்கு மேல் கொடுத்து வாங்கட்டும் என இருந்தது.

ஆனால் உரத்தை இறக்குமதி செய்வதற்கான அவசர உதவிகள் சில நாடுகளில் இருந்து கிடைத்தமையினால் இப்போது விவசாயிகளுக்கு நெல் பயிர் செய்கை பண்ணப்படும் ஓர் ஏக்கருக்கு அரசாங்கம் 50 தொடக்கம் 55 கிலோ யூரியாவை வழங்குவதற்கு ஆரம்பித்திருக்கிறது.

2019ம் ஆண்டோடு ஒப்பிடுகிற போது இலங்கை நாணயத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி இரண்டு மடங்கே அதிகரித்துள்ளது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் உரத்தின் விலையோ 5 மடங்குக்கு மேல் அதிகமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடமும் இந்த வருட முற்பகுதியிலும் விவசாயிகள் 50
கிலோ யூரியாவுக்கு 40000 ரூபா, 50000 ரூபா எனக் கொடுத்து வாங்க
வேண்டியிருந்தது. இப்போது இந்த அளவுக்காவது குறைந்த விலைக்கு யூரியாவை வாங்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகளை அரசாங்கம் எண்ண வைத்திருக்கிறது.

யூரியா தவிர்ந்த வேறு வகையான அவசியமான இரசாயனங்கள்
கிடைக்கும் நிலை ஏற்படவில்லை. நெல் மற்றும் சோளம் தவிர்ந்த வேறெந்த உள்ளுர் உணவு உற்பத்திக்கும் எந்த வகையான உதவியையும் சலுகையையும் அரசாங்கம் வழங்குவதாக இல்லை.

அந்நிய செலாவணியின் தேவைக்காக ஆடை உற்பத்தித் தொழிலுக்குத்
தேவையான இறக்குமதிகளை அரசாங்கம் வேண்டிய அளவு அனுமதித்திருந்தாலும் ஏனைய எந்தவொரு உள்ளுர் ஆக்க உற்பத்தித் தொழில்களுக்கு தேவையாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மிகுந்த தட்டுப்பாடாகவே உள்ளன, அத்துடன், அவை மிக உயர்ந்த விலையிலேயே கிடைக்கின்றன.

அதனால் அரைவாசிக்கு மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுவிட்டன, உணவு விற்பனைக் கடைகளும் கணிசமாக மூடப்பட்டு விட்டன. சில்லறை விற்பனைக் கடைகளில் தொகை ரீதியில் பொருட்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

அடுத்தபடியாக இலங்கையின் முக்கிய தொழிலான மீன்பிடியானது அதற்கான எரி பொருட்கள் தட்டுப்பாட்டால் அதன் மொத்த உற்பத்தி பெரும் வீழ்ச்சி நிலையில் உள்ளது. அதே போல போக்குவரத்துத் துறையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் மேற் குறிப்பிட்டுள்ள இத்துறைகளில் தங்கியிருந்த தொழிலாளர்களில் கணிசமான சதவீதத்தினர் வேலையிழந்தவர்களாக – வருமானம் இழந்தவர்களாக உள்ளனர்.

இதற்கெல்லாம் ஆட்சிக் கதிரைகளை நிரப்பியிருக்கிற அரசியல் வாதிகளோ, அல்லது கனவிலும் நினைவிலும் லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளில் மட்டுமே தமது முழுக் கவனத்தையும் அக்கறையையும் செலுத்திக் கொண்டிருக்கிற அமைச்சர்களோ, அரச அதிகாரிகளோ அல்லது இன்றைய நிலைமைக்கு அரச தலைமைகளின் மோசடியான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளோ நடைமுறைகளோ அல்லது, சாதாரண மக்களிடையே நிலவும் அறியாமைகளையும் மூட நம்பிக்கைகளையும் இன, மத மற்றும் சாதி அடிப்படையிலான குறுகிய மனோபாவங்களையும் பயன்படுத்தும் முதலாளிகளும் பணக்காரர்களும் அதிகாரத்தில் இருப்போரும் சுரண்டல்களையும் சூறையாடல்களைம் சொத்துக்
குவிப்புகளையும் மேற்கொள்வதற்கு வசதியாக பரந்து பட்ட மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளையும் இயலாமைகளையும் பகைமைகளையும் பராமரிக்கின்ற மோசடித் தனமான முதலாளித்துவ கட்டமைப்போ காரணமல்ல என்பது போலவும், ஏதோ இயற்கைப் பேரழிவு போல திடீரென அந்நிய காரணங்களால் ஏற்பட்ட அந்நியச் செலாவணி பற்றாக்குறையேதான் காரணம் என்பது போன்றதுமான சமாதானத்தை பரந்துபட்ட பொதுமக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் பாராயணம் செய்கிறார்கள்.

இலங்கை ஆட்சியாளர்களின் புதிய பொருளாதார கோட்பாடு

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் எரி பொருட்கள் உட்பட இறக்குமதிகள் பெரும்பாலும் அரைவாசியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அதனால் அவற்றின் விலைகள் உள்ளுர் சந்தையில் மூன்று மடங்குக்கு மேல் உள்ளன.

இதனால் மக்கள் கொள்வனவுகளை கணிசமாக குறைத்துள்ளனர். அதனால் இப்போது மக்கள் பொருட்களை வாங்கத் தயாராக இருப்பதற்கும் (இது பொருளியல் மொழியில் ‘கேள்வி’ எனப்படும்) பொருட்கள் சந்தையில் கிடைக்கும் தொகைரீதியான அளவுக்கும் (இது பொருளியல் மொழியில் ‘நிரம்பல்’ அல்லது’வழங்கல்’ எனப்படும்) இடையில் ஒரு சமநிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலை இயல்பாக ஏற்பட்டுள்ளதென்று இல்லை. மாறாக அரசின் செய்பாடுகளால் ஏற்பட்டிருக்கிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளினால் சந்தையில் பொருட்கள் கிடைப்பது குறைக்கப்பட்டமையாலும், அதனால் நாட்டில் உள்நாட்டு
பொருளாதார உற்பத்திகளின் வீழ்ச்சி ஏற்பட்டமையாலும் எழுந்துள்ள ஒரு
பொருளாதார நெருக்கடியை, கேள்விக்கும் நிரம்பலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒரு சந்தைச் சமநிலை போல காட்சிப் படுத்தும் தந்திரத்தை அரசாங்கம் கெட்டித் தனமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் தேவைகளுக்கு இப்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவே போதும் என்றதொரு
வகையான நிலைமையை அரசாங்கம் காட்சிப் படுத்தியுள்ளது.

இங்கு ஒரு சில அம்சங்கள் பொருளாதார மந்தம் என்னும் நோயின் குணங்கள் என்றாலும், மறுபக்கம் பொருட்களின் அதீத விலையேற்றம் அதற்கு எதிர்மாறாக உள்ளது. அரசின் செலவுகளை சமாளிக்க ஒரு பக்கம் அரசாங்கம் பணத்தை அச்சிட்டு நாட்டுக்குள் நடமாட விடுகிறது.

மறுபக்கமாக அரசாங்கம் வங்கிகளின் வட்டி வீதத்தைக் கூட்டி நாட்டில் சுற்றோட்டத்தில் உள்ள பணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்கின்றது. அதேவேளை வரிகளை அதிகரிக்கிறது.

அதனால் விலைகள் மேலும் உயரும். இறக்குமதிகளை
தேவையான அளவு மேற்கொள்ளாமல் தேசிய உற்பத்திகளின் அளவை பழைய நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. அது ஏற்படாவிட்டால் வேலையின்மை தொடர்ந்து அதிகரிக்கும்.

இங்கு பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தும் பல மாறிகள் ஒன்றுக்கொன்று முரணாக பல்வேறு வீச்சில் வினையாற்றுகின்றன. ஒரு பக்கத்தால் வெட்டும் வேலையையும் இன்னொரு பக்கத்தால் ஒட்டும் வேலையையும் அரசாங்கம் ஒரே நேரத்தில் ஆற்றுகின்றது.

(பகுதி 4ல் தொடரும்)