(அ. வரதராஜா பெருமாள்)
வட்டிவீதங்களின் அதிகரிப்பில் அரசின் இரட்டை இலக்குகள்
- பண்டங்களின் அதீத விலை அதிகரிப்பு ஏற்படுகிற போது பணம் கையிருப்பில் இருந்தாலும் அல்லது வங்கிகளில் வைப்புகளாக இருந்தாலும் அல்லது வேறு வகைகளில் நீண்டகால அடிப்படையில் அரசினதோ அல்லது அரசு சார் நிறுவனங்களினதோ அல்லது பெரும் தொழில் நிறுவனங்களினதோ, கடன் பத்திரங்கள், உறுதிப் பத்திரங்கள் மற்றும் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்தாலும் அந்தப் பணங்களின் மெய்யான பெறுமதி வீழ்ச்சியடையும் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே. உயர்ந்த வருமானம் பெறுவோரும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பெற்றோரும் மற்றும் பணக்காரர்களுமே வங்கிகளில் தமது பணத்தை பெருந்தொகையில் வைப்புக்களாக வைத்திருப்பர். அதேபோல, பெரும் பணக்காரர்களும் பெரும் தொழில் நிறுவனங்களுமே அரசு சார் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வர்.
இவ்வாறாக வைப்பு செய்யப்பட்டிருந்த அல்லது முதலீடு செய்யப்பட்டிருந்த அனைத்தினதும் மெய்யான பணப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இதனால் உயர் மத்திய தர வர்க்கத்தினரதும் பெரும் பணக்காரர்களினதும் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆட்சியாளர்கள் உள்ளானது இயல்பானதே. அறகலயவுக்கு அந்த வகையினர் தற்காலிகமாகவேனும் ஆதரவு அளித்ததற்கு இதுவும் ஒரு காரணமே.
அரசின் பிழையான கொள்கைகளாலும் பாதகமான செயல்களாலும் சாதாரண பாமர மக்கள் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டாலும், அதனால் அவர்கள் ஆட்சியாளர்கள் மீது எவ்வளவுதான் வெறுப்பும் ஆத்திரமும் கொண்டாலும் அதனை அட்சியாளர்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை.
2
அதனை ஆட்சியாளர்கள் தமது பிரச்சார யந்திரங்களைக் கொண்டு திசை மாற்றி விடுவார்கள் அல்லது தமது அதிகார யந்திரங்களைக் கொண்டு பரந்துபட்ட பொதுமக்களின் ஆத்திரமும் வெறுப்பும் விரக்தியும் ஓர் அரசியல் எழுச்சியாக கிளர்ந்து விடாமல் அடக்கி விடுவார்கள் – ஒடுக்கி விடுவார்கள்: சட்டம், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றிற்கான நியாயங்களையும் தமது செல்வாக்குக்கு உட்பட்ட ஊடகங்களினூடாக கட்டியெழுப்பி விடுவார்கள்.