ஆனால், இவர்கள் அனைவரும் உடன்படுகின்றதும் எல்லோருக்கும் தெரிந்ததுமான ஒரு விடயம் யாதெனில், இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சி, நிச்சயமாக இலங்கையர்களின் கைகளில் இல்லை என்பதாகும். அப்படியாயின், இப்போது எழுகின்ற கேள்வி, அது யார் கைகளில் இருக்கின்றது என்பதாகும்.
இலங்கையின் பொருளாதாரம், தனது தன்னிறைவுச் சுயசார்புத் தன்மையை இழக்கத் தொடங்கியது முதல், அந்நியர் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. நாட்டின் பொருளாதார மீட்சிக்காக முன்மொழியப்பட்டுள்ள வழிவகைகள் அனைத்தும், அந்நியர் தயவிலும் உலக நிலைவரங்களிலுமே தங்கியுள்ளன. இலங்கையின் இன்றைய பொருளாதாரம் குறித்துப் பேசும் பலரும், பேசத் தயங்குகிற விடயம் இதுவாகும்.
இலங்கை மிகவும் சிக்கலானதும் ஆபத்தானதுமான ஒரு நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. ஒருபுறம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகள்; இன்னொருபுறம், மேற்குலக நாடுகளின் வர்த்தக, மூலோபாய நலன்கள், சீனா, இந்தியா, ஜப்பான் எனப் பல அரங்காடிகளின் களமாக இலங்கை மாறியுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சி, தவிர்க்கவியலாமல் உலகப் பொருளாதாரத்தின் வலுவான தன்மையோடு பிணைந்தது. இதற்கு எமது வரலாற்றிலேயே சான்றுகளுண்டு.
உலகசந்தையில் பெற்றோலிய விலை, 1973-74 காலப்பகுதியில் திடீரென நான்கு மடங்கு உயர்ந்ததால், இலங்கையின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. இதைப் பேசாமல், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகளாலும் தவறான அயலுறவுக் கொள்கையாலுமே, நாடு பல்வேறு பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேர்த்தது எனப் பேசுவோர் உள்ளனர்.
அன்று, மண்ணெண்ணெய்க்கும் பாணுக்கும் வரிசையில் நின்ற கதைகளையும் அரிசி பஞ்சத்தின் போது, அரிசியைக் கொண்டு செல்லத் தடைகள் இருந்ததையும் நினைவூட்ட அவர்கள் தவறுவதில்லை. சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் போன்றவற்றுக்கான இன்றைய வரிசைகளையும் மின்வெட்டையும் பல்வேறு பொருட்களின் தட்டுப்பாடுகளையும் அதனுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர்.
ஸ்ரீமாவின் ஆட்சியின் போது ஏற்பட்ட நெருக்கடிக்கும், இன்றைய நெருக்கடிகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. அரசாங்கத்தின் பாரிய நிர்வாகக் குளறுபடிகளை விட, ஊழலும் வேறு சக்திகளின் தாக்கமுமே இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணங்களாக உள்ளன.
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை எப்படியாயினும், அது எமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், அதையும் கணிப்பில் எடுத்தே பொருளாதார மீட்சிக்கான திட்டமிடல் நடைபெற வேண்டும். ஆனால், சரணாகதிப் பொருளாதாரத்துக்கு வழிவகுத்துள்ள அரசாங்கமும் அதன் இடைக்கால வரவு செலவுத் திட்டமும், சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பொம்மையாக நாட்டின் பொருளாதாரத் திட்டமிடலை மாற்றியுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதை விட, மோசமான உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உலகம் விரைவில் சந்திக்கக்கூடும் என்று, ஓகஸ்ட் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்பார்த்ததை விட, அதிகளவான பணவீக்கத்துடன் – குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மிகப்பெரிய ஐரோப்பிய பொருளாதாரங்களில் – உலக நிதி நிலைமைகள் இறுக்கமாகி வருகின்றன.
அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் வளர்ச்சி, கணிசமாகக் குறைத்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியில், சீனாவின் பொருளாதார மந்தநிலை எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது. உக்ரேன் யுத்தத்தின் எதிர்மறையான விளைவுகள் தொடர்கின்றன.
இதன் விளைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், உலகளாவிய உற்பத்தி சுருங்கியுள்ளது. உணவு, எரிசக்தி என்பவற்றின் விலைகள் மிகவும் மோசமான உயர்வைக் கண்டுள்ளன. ரஷ்யா, ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தலாம் என்பது உட்பட்ட, சில அபாயங்கள் அடுத்த மாதங்களில் இன்னும் பலமடங்காக விலைவாசி உயர்வுக்கு வழிசெய்வதோடு, மிகப் பரவலான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும்.
இன்றைய புவிசார் அரசியல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பைத் தடுத்துள்ளது. இந்த நெருக்கடியை அனைவரும் இணைந்து எதிர்கொள்வதற்கான வாய்ப்பை இல்லாமலாக்கி உள்ளது. இதனால் இலங்கை போன்ற நாடுகளே மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்கும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மோசமான பொருளாதார வலி சிறிய, அதிக கடன்பட்ட, வளர்ந்து வரும் நாடுகளையே பாதிக்கும். இலங்கை போன்றே வங்குரோத்தாகும் நாடுகளின் பட்டியலில் ஈக்குவடோர், கானா, ஜாம்பியா, எல் சால்வடோர் ஆகியவை அடங்குகின்றன. அதேவேளை, பாகிஸ்தான், துருக்கி போன்ற பெரிய நாடுகள்கூட ஆபத்தில் உள்ளன.
கடந்த கால உலகப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து, 2022ஐ வேறுபடுத்தும் மற்றொரு விடயம், முக்கிய கடன் வழங்குநராக சீனா இருப்பதும் அது, கடன் மீள்செலுத்துகை குறித்து, வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுமாகும்.
1980களின் உலகளாவிய கடன் நெருக்கடிகளைப் போலன்றி, தற்போதைய கடன் நெருக்கடியின் சமநிலை, இப்போது கணிசமாக வேறுபட்டது. இந்நாடுகளினுடைய சீனக் கடனின் பெரும்பகுதி, சீனாவின் ‘ஒரு வார்; ஒரு வழி’ உட்கட்டமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
பெய்ஜிங்குடன் கடன் நிவாரணம் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவது, தனிப்பட்ட நாடுகளுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் புதியது. பாரம்பரியமாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பணக்கார நாடுகளின் ‘பாரிஸ் கிளப்’ என்று அழைக்கப்படுபவை, துன்பகரமான கடனை மறுசீரமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.
ஆனால், இதுவரை பெய்ஜிங் தன்னிடம் கடன் வாங்குபவர்களுடன் தனிப்பட்ட ரீதியல் பேசவும், கடன் மீள்செலுத்துகை தொடர்பான, சொந்தமான செயற்பாட்டை விரும்புகிறது. இது சர்வதேச நாணய நிதியத்தினதும் மேற்குலக நாடுகளினதும் அபிலாஷைகளுக்குக் குறுக்காக நிற்கிறது.
இன்று, ஐரோப்பா எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை, வேகமாக அதிகரிக்கும் மின்சாரத்தின் விலைகள் ஆகும். கடந்த வார இறுதியில், செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் உள்ள வென்செஸ்லாஸ் சதுக்கத்தில், ஏறக்குறைய 70,000 பேர் கூடி, எரிசக்தி கட்டணங்களை உயர்த்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இது, ஒரு தொடக்கம் மட்டுமே; ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும்.
ஜேர்மன், பிரெஞ்சு, ஃபின்னிஷ் அரசாங்கங்கள், ஏற்கெனவே உள்நாட்டு மின் நிறுவனங்கள் வங்குரோத்தாவதில் இருந்து காப்பாற்ற முன்வந்துள்ளன. சமீபத்திய நாள்களில், ஜேர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் அனைத்தும் குடும்பங்கள், வணிகங்கள் என்பவற்றின் மீதான அழுத்தத்தைக் குறைக்க, ரேஷன் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுடன் சேர்ந்து பில்லியன் டொலருக்கு மேலான நிவாரணத் திட்டங்களை அறிவித்தன.
இந்நாடுகளின் அரசாங்க கடன் அளவுகள், ஏற்கெனவே திகைப்புடன் இருக்கும் நேரத்தில், இவ்வகையான நடவடிக்கைகளுக்கு நாடுகள் அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபத்தான உயர் கடன் பற்றிய கவலையை, இந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டது.
மோசமாகக் குறைவடைந்துள்ள வருமானம், வருமான இழப்பு, பெருகிவரும் சமத்துவமின்மை, சமூகப் பதட்டங்கள் அதிகரிக்கும் அபாயம் என்பன, உடைந்துபோன சமுதாயத்துக்கு மட்டுமல்ல, உடைந்த உலகத்துக்கும் வழிவகுக்கும். 1970களில் இருந்து இதுபோன்ற எதையும் உலகம் எதிர்கொள்ளவில்லை.
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், இப்போது உருவாகும் நெருக்கடியானது விரைவில் முடிவடையாது. வரலாற்றில் மிகப் பெரிய வளர்ச்சிப் பேரழிவை நாம் எதிர்நோக்கியுள்ளோம். முன்பு நடந்ததை விட, அதிகமான மக்கள் மிகவிரைவாக, மோசமான வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள்.
உலகப் பொருளாதாரத்துக்கு இது மிகவும் ஆபத்தான நேரம். இது இயல்பாகவோ அல்லது உக்ரேனிய யுத்தத்தாலோ ஏற்பட்டதல்ல. மாறாக, மக்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொண்டது. இந்த உண்மை சொல்லப்படுவதில்லை.
எல்லாவற்றுக்கும் உக்ரேன் போரே காரணம் என்ற தோற்ற மயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய மின்சாரப் பற்றாக்குறையின் வேர், உக்ரேன் போருக்கு முந்தையது. 2020ஆம் ஆண்டில், தொற்றுநோய் கட்டுப்பாடுகளிலிருந்து நாடுகள் வெளிவரத் தொடங்கியதால், பொருட்களின் விலைகள் உயரத் தொடங்கின. அமெரிக்காவில் மட்டும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்ததை விட, ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கூடுதல் பொருட்களை வாங்குகிறார்கள். இது திடீரென சக்தியின் தேவையை அதிகரித்தது.
இலங்கையின் பொருளாதார மீட்சி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியிலும் தங்கியுள்ளது. இன்னொருபுறம் சர்வதேச சந்தையில் பொருட்களை நியாய விலையில் பெற்றுக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரண்டுக்குமான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது வெளிப்டையாகத் தெரிகிறது. புதிய களங்கள் திறக்கின்றன; நெருக்கடிகள் அதிகரிக்கின்றன.