அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!
வடக்கு மாகாண சபைக்கான தேர்தற் பிரச்சாரத்தின் போது கௌரவ திரு. விக்கினேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிளப்பிய பிரச்சினைகளும் அதன்மூலம் தமக்குத்தாமே ஏற்படுத்திக் கொண்ட சவால்களையும் நாம் மீட்டுப் பார்ப்போமாயின் அவற்றில் பிரதானமாக முதன்மைப்படுத்தப்பட்டவை:-
1) இராணுவ அதிகாரியான ஒருவர் வடக்கின் ஆளுநராக இருப்பதை கொழும்பு அரசாங்கம் மாற்றியே ஆக வேண்டும்!
2) வடக்கில் உள்ள இராணுவத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும், குறைந்தபட்சம் வடக்கு கிழக்கில்; அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு அவற்றை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்!
மாகாண சபைக்கான தேர்தற் பிரச்சாரத்தின் போது மக்கள் தங்களுக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆணை தந்தால் இந்த இரண்டு பிரச்சினைகளையும் தங்களால் சாதித்துக் காட்ட முடியும் என்பது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வீரமுழக்கங்களை – வெற்றி முழக்கங்களை உரத்த குரல்களில் மேற்கொண்டனர். இவ்விடயத்தில் மதிப்பிற்குரிய திரு மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பின் தேசியக் குரல் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரோடு அப்போது கௌரவ திரு. விக்கினேஸ்வரன் அவர்களும் எந்த வகையிலும் குறைந்தவராக இல்லாமல் மேடை தோறும் முழங்கினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அந்த இராணுவ எதிர்ப்புப் பிரச்சாரங்களே மாகாண சபைக்கான தேர்தலில்
அவர்கள் மகாவெற்றியைப் பெற வழிவகுத்தது. ஆனால் அதுவே பின்னர் தன் வினை தன்னைச் சுடும்: நுணலும் தன் வாயில் கெடும் என்பது போல அவர்களையே நெருக்கடிகளுக்கு உள்ளாக்கும் வகையில் தவிர்க்க முடியாதபடி சுயமரியாதைப் பிரச்சினையாக ஆக்கியது.
தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களிற் பெரும்பாலோர் தாங்கள் முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநருக்கு முன்னால் சத்தியப்பிரமாணம் செய்யத் தயாராக இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே கலகம் செய்யும் நிலைக்கு வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் வடக்கு கிழக்கில் இராணுவத்தை மீளப்பெறாத – இராணுவத்தின் பிரசன்னங்களை உடனடியாகக் குறைக்காத ஜனாதிபதிக்கு முன்னால் தமிழ் முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் செய்வது இனத் துரோகம் என தமது முதலமைச்சருக்கு எதிராக வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியினரே அரசியற் குழப்பம் விளைவித்தனர்.
இந்த விநோதம் நிகழ்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் மேடைகளில் மேற்கொண்ட வீர முழக்கங்களே காரணமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் நடைமுறைகள் எப்படி உள்ளனவென்றால், எதிரிக்குச் சகுனம் பிழைக்கும் வேலையைச் செய்யப் போய் தங்களது மூக்கைத் தாங்களே அறுத்துக் கொள்வதாகவே அமைகின்றன.
இதையெல்லாம் நான் கூறுகிற போது ஏதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் விடயங்களையம் விளைவுகளையும் தெரியாமல் – புரியாமல் இருக்கிறார்கள் – செயற்படு;கிறார்கள் என நான் கூறுவதாக நீங்கள் கருதிக் கொள்ள வேண்டாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மிகத் தெளிவானவர்கள், மிக நுட்பமான ஆற்றல்கள் கொண்டவர்கள் என்பதில் நாம் சந்தேகப்பட இடமேயில்லை.
என்ன கண்மூடி கூத்தாடினாலும் கூட்டமைப்புக்காரர்கள் தமது சொந்தக் காரியங்களில் மட்டும் கண்ணாயிருப்பார்கள்
மக்களுக்கு என்ன தேவை! அவற்றை எப்படிச் சாதிப்பது! என்பவை அவர்களுக்குப் பிரதான விடயங்களே அல்ல. மக்களுக்கான அபிலாஷைகளை எப்படி வென்;றெடுப்பது என்பதில் தங்களது நேரத்தையும் சக்திகளையும் செலவழித்தால் தங்களுக்கு தனிப்பட்ட ரீதியாக பிரயோசனம் எதுவும் ஏற்படாது என்பது மட்டுமல்ல தங்களுக்கு தனிப்பட்டரீதியில் நட்டங்கள் கஷ்டங்கள் ஏற்படுவதற்கே வாய்ப்புக்கள் அதிகமென்பதால் மிகக் கவனமாகவே அவற்றை நழுவவிட்டு விடுகிறார்கள். எனவேதான் அந்த விடயங்களில் மக்களை தோற்றுப் போக விட்டுவிடுகிறார்கள்.
சிங்களவர்கள் மீது வெறுப்போடும், அரச படைகளுக்கு எதிரான உச்சகட்ட கோபத்தோடும், அரசாங்கத்துக்கு எதிரான தீராத ஆத்திரத்தோடும் எப்போதும் மக்களை எப்படி உணர்ச்சியின் விழிம்பில் வைத்திருப்பது, அவ்வாறாக உணர்ச்சியில் மிதந்து கொண்டிருக்கும் மக்களிடமிருந்து எவ்வாறு அவ்வப்போது வரும் தேர்தல்களின் போது வாக்குகளை அதிகப்படியாக கறந்து கொள்வது என்பதில் அவர்கள் மகா நிபுணர்களாக இருப்பதிலிருந்தே அவர்களின் அரசியற் திறமைகளை நாம் அளவிட முடியும்.
பக்கத்து வீட்டுக்காரனோடு முற்றத்தில் நின்று புஜத்தையும் தொடையையும் தட்டி வீராவேசமாகக் கர்ஜ்ஜிக்கும் இவர்கள், அதே பக்கத்து வீட்டுக்காரனிடமிருந்து பின்கதவுகள் வழியாக தமது வீட்டுக்கு வேண்டிய கறி புளியையெல்லாம் தவறாது வேண்டிக்கொள்வதை எல்N;லாரும் தெரிந்து கொண்டுதானே இருக்கிறார்கள். இவர்கள் தமக்கு தனிப்பட்டரீதியில் தேவையானவற்றை- கிடைக்க வேண்டியவற்றை எவ்வளவு கெட்டித்தனமாக தமிழர்களின் எதிரிகள் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து தவறாது கேட்டுப்; பெற்றுக் கொள்கிறார்கள் என்பதை நீங்களும் தானே பார்க்கிறீர்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளாந்த ஆற்றல்கள் பற்றிய விடயம் ஒருபுறமிருக்கட்டும். முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநரை மாற்றாமல் தமிழர்களுக்கு வாழ்வு இல்லை என்று நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை இங்கு சற்று கேள்விக்குள்ளாக்கி பரிசீலிப்போம்.
சிவில் அதிகாரியென்ன! இராணுவ அதிகாரியென்ன!
மாகாண ஆளுநர் எப்போதும் ஜனாதிபதியின் ஆளே!
மஹிந்த அரசாங்கம், அரச இராணுவம் ஆகியவை மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆத்திரங்களை கொட்டித் தீர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்றே வைத்துக் கொள்வோம். அத்தோடு தமிழர்களை உணர்ச்சிவசப்படுத்தி -உசுப்பேத்தி வாக்கு வேட்டையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அவர்களது அரசியல் மேடைகளில் வீரவசனங்களையும் உரத்த கோரிக்கைகளையும் முழங்குவது அவசியமானவைகளாக உள்ளன.
ஆனால் இங்கு எனது பிரதானமான கேள்வி என்ன வென்றால், ஆளுநர் யாராக இருக்க வேண்டும் – எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது ஒரு மாகாணசபை சிறப்பாக அமைவதற்கு அவ்வளவு பிரதானமானதா? என்பதே! ஓர் இராணுவ அதிகாரியாக இருந்தவர் ஆளுநராக இல்லாமல் ஒரு சிவில் நிர்வாகியாக இருந்த சிங்களவர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவதால் மட்டும் மாகாண சபை நிர்வாகங்கள் நிச்சயமாக சிறப்பாக செயற்படும் என்று கருத ஏதாவது அடிப்படையான நியாயம் உண்டா?
புலிகளுடனான கடைசி நேர யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான புலிகளையும் தமிழ்ப் பொது மக்களையும் கொன்று குவித்த இராணுவத்தின் ஒரு முன்னாள் அதிகாரியே இந்த ஆளுநர் என்பதன் காரணமாக உள்ள கோபத்தினால் ஏற்பட்டுள்ள கோரிக்கையா? அல்லது இலங்கை இராணுவத்தில் முன்னாள் அதிகாரியாக இருந்த எவருமே ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட எவராயினும் – ஆளுநராக எப்பவும் நியமிக்கப்படக் கூடாதா?
இங்கு முக்கியமாக அவதானிக்கப்ட வேண்டிய விடயம் என்னவெனில், ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அல்லது நியமிக்கப்படவுள்ள ஒருவர் எவராக இருந்தாலும் – முன்னர் அவர் எந்தத் துறையில் சேவை செய்தவராக இருந்தாலும், ஆளுநரானவர் ஜனாதிபதி மற்றும் மத்திய ஆட்சியில் உள்ள அமைச்சர்களினது செல்வாக்குக்கும் கட்டளைகளுக்கும் உட்பட்டவராகவே இருப்பார்.
இராணுவ அதிகாரிகளாகப் பயிற்றப்பட்டவர்கள் எப்போதும் அதிகாரத்தில் உள்ள அரசியற் தலைமையின் கட்டளைகளுக்கு விசுவாசமாக இருப்பதற்குப் பழக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அந்தக் கட்டளைகள் எந்த இனத்துக்கு எந்த மதத்தவர்களுக்கு சாதகமானது அல்லது பாதகமானது என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
அவர்களைப் பொறுத்த வரையில் அரசியல் அதிகாரத்தில் யார் இருந்தாலும் – அது மஹிந்தவாக இருந்தாலென்ன அல்லது ரணில் விக்கிரமசிங்காவாக இருந்தாலென்ன – அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவது தமது கடமையே என பயிற்சிக்கப்பட்டவர்கள் தான்
இராணுவத்தினர்;. இப்போது வடக்கின் ஆளுநராக இருக்கும் ஜெனரல் சந்திரசிறி அவர்களும் அப்படிப்பட்டவரே.
ஆனால் இராணுவ அதிகாரிகளை விட அதிகூடிய சிங்கள மேலாதிக்க எண்ணம் கொண்ட நிறையப்பேர் இலங்கையின் அரச சிவில் நிர்வாகத்தில் இருந்திருக்;கிறார்கள் – இப்போதும் அப்படிப்பட்டவர்கள் நிறையப் பேர்இருக்கிறார்கள். அவர்களிற் பலர் வாயால் தேனொழுக பேசிக் கொண்டு நெஞ்சில் கடும் சிங்கள பௌத்த மேலாதிக்க நஞ்சுணர்வுகளோடு செயற்படும் அதிகம் பேர் உள்ளனர். ஜெனரல் சந்திரசிறி அவர்களை நீக்கிவிட்டு இனவாத இரத்தம் ஓடும் சிவில் நிர்வாகி ஒருவரை ஜனாதிபதி ஆளுநராக நியமித்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமல்ல, அவர்களின் வீராவேச மேடை உரைகளைக் கேட்டு மயக்க நிலையில் இருக்கும் தமிழ் மக்களும்அவ்விடயத்தில் வாய் பேச முடியாதபடி தோற்றுப் போயிருப்பார்கள் அல்லவா?
வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக எனது அனுபவம்
வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான ஆளுநர் பற்றிய விடயம் வந்தபோது என் முன்னாலும் இதேமாதிரியான ஒரு பிரச்சினை வந்ததையும் அதில் எனது அணுகுமுறை எவ்வாறு அமைந்தது என்பதையும் பல தோழர்கள் அறிவார்கள். அது பற்றி இபபோது இங்கே பகிரங்கப்படுத்துவது பொருத்தமானது எனக் கருதுகிறேன். 1988ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபையை உருவாக்குவதில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெறவில்லை. அது தொடர்பான வரலாற்றுத் தகவல்களை இங்கு நான் விபரித்தால் நீண்டுவிடும் என்பதால் இங்கே அதனைத் தவிர்த்துக் கொள்கிறேன்.
1988ம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது மொத்தத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபையின் எழுபத்தி மூன்று ஆசனங்களில் எமது அணி ஐம்பத்தைந்து இடங்களைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து தோழர் நாபா அவர்கள் என்னை முதலமைச்சர் பதவியை ஏற்கும்படி பணித்தார். அப்போது வடக்குகிழக்கில் மாகாண சபைக்கான எந்த அடித்தளக் கட்டுமானமோ ஏன்! ஓர் அதிகாரி கூட இருக்கவில்லை. இன்றைய கிழக்கு மாகாண சபையின் அரச கட்டுமானங்களாக இருந்தாலென்ன அல்லது இன்றைய வடக்கு மாகாண சபையின் அரச கட்டுமானங்களாக இருந்தாலென்ன அவை நாங்கள் இட்ட அடித்தளத்திற்;தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன என்பதை அறிவார்ந்த
தமிழர்களில் எத்தனை பேர் அறிவார்களோ எனக்குத் தெரியாது.
அந்த விடயத்தில் எமக்கு முதன்மைச் செயலாளராக அமைந்த திரு சிவராஜா அவர்கள், முதலமைச்சரின் செயலாளராக அமைந்த கலாநிதி திரு விக்கினேஸ்வரன் மற்றும் மாகாணசபையின் செயலாளர்களாக எமக்கு வாய்த்த திரு பத்மநாதன், திரு சிவதாசன், திரு வாமதேவன், திரு மன்சூர், திரு நச்சினார்க்கினியன் போன்ற பல நிர்வாக நிபுணர்கள் புலிப்பயங்கரவாத ஆபத்துக்களின் மத்தியிலும் எமக்கு மனப்பூர்வமாக துணை நின்றதை நான் நன்றியோடு இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
1988 நவம்பரில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான ஆளுநராக யாரை ஜனாதிபதி நியமிக்கப் போகிறார் என பல ஊகங்கள் அடிபடத் தொடங்கி விட்டன. அதில் திரு சார்ள்ஸ் அபயசேகரா, முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் நளின் செனிவிரத்ன மற்றும் திரு நேசையா போன்றவர்களின் பெயர்களும் இருந்தன. அந்த ஊகங்கள் வெளிவந்த போது எந்தவொரு தீர்மானத்தையும் கருத்தையும் முன்கூட்டியதாக எமது கட்சி பகிரங்கத்தில் வெளியிடவில்லை.
மாகாண சபையின் ஆரம்பம் தொடர்பாக பேசுவதற்காக அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் என்னை அழைத்தார். நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவை அவரது அழைப்பிற்கிணங்க சந்தித்த போது அவர் என்னிடம் கேட்ட முதற் கேள்வி நீங்கள் எங்கே மாகாண சபையின் தலைமைச்செயலகத்தை மையமாகக் கொண்டு செயற்படப் போகிறீர்கள் என்பதுதான். நாங்கள் திருகோணமலையில் அதற்கான தயார் வேலைகளை ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அறிந்தே இருப்பார். அவரது கேள்விக்கு நான் திருகோணமலையை மையமாகக்கொண்டே செயற்பட முடிவு செய்துள்ளோம் என்றேன்.
அதற்கு ஜே ஆர் அவர்கள் வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதா இல்லையா என்பது பற்றி சர்வசன வாக்கெடுப்பு நடக்கவிருக்கின்றது. அதன் முடிவு என்னவாக இருக்குமோ தெரியாது நீங்கள் ஏன் யாழ்ப்பாணத்திலோ அல்லது மட்டக்களப்பிலோ மாகாண சபைக்கான மைய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி செயற்படக் கூடாது என்றார்;. மேலும்
அவர் அப்படி நீங்கள் செய்வதானால் நான் தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கிறேன் என்றார்.
அன்று நான் அறிவும் அநுபவமும் குறைந்த முப்பத்தி ஐந்து வயதுடைய இளைஞனாக இருந்த போதிலும் எனக்கு உடனடியாகவே ஜேஆர் என்ன சாதிக்க முயலுகிறார் என்ற வெளிச்சம் பற்றிக் கொண்டது.நான் அவருக்கு மிகவும் பக்குவமாக, ஐயா! ஆளுநர்; என்பவர் உங்களின் பிரதிநிதி அவர் யாராக இருக்க வேண்டும் என்று நான் உங்களைக் கேட்பது சரியல்ல. அது முழுக்க முழுக்க உங்கள் முடிவாகவே இருக்க வேண்டும். நாங்கள்
திருகோணமலையை மையமாகக் கொண்டு செயற்பட விருப்புவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று நீண்ட நிலப்பரப்பைக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு திருகோணமலையே மையமான இடம். மற்றது திருகோணமலையிலேயே மூன்று இன மக்களும் கணிசமான விகிதாசாரத்தில் வாழ்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இருந்து எங்களால் சமாதானமாக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் இந்த நாட்டில் மூன்று இனமக்களும் ஒன்றாக வாழ முடியாது என்றே அhத்தமாகும் எனவே அந்தப் பரிசோதனை அவசியம் என்று கருதுகிறோம் என்றேன்.
நான் இப்படிச் சொன்னதும் ஜேஆர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஆனால் ஒரு நமட்டுச் சிரிப்பை உதட்டுக்குள் உதிர்த்து விட்டு எனது கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டார். இறுதியாக அவர் உனக்கு நான்தான் சத்தியப்பிரமாணம் செய்து வைக்க விரும்புகிறேன் என்றார். நானும் அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். தோழர் நாபாவும் எனது
கட்சித் தோழர்கள் அனைவரும் மாகாண சபை தொடர்பான அனைத்து விடயங்களிலும் நிலைமைக்கேற்ப முடிவெடுத்து செயற்படுவதற்கு வேண்டிய சுதந்திரத்தை எனக்கு முழு நம்பிக்கையோடு வழங்கியிருந்தார்கள்.
இங்கு நான் இவற்றைச் சொல்ல முற்படுவதன் மூலம் எழுப்பும் கேள்வி என்னவென்றால், வடக்கு மாகாண சபையின் ஆளுநர் யார் என்பது பற்றிய விவகாரத்தை இவ்வளவு தூரம் அரசுடனான அரசியல் முரண்பாடாக மாற்றியிருக்க வேண்டுமா? என்பதுதான். அத்துடன் முதலமைச்சர் ஜனாதிபதியின் முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் விடயத்திலும் மாகாண சபை உறுப்பினர்களும் மற்றைய அமைச்சர்களும் ஆளுநர் முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் விடயத்தையும் இவ்வளவு தூரம் தமிழர்களின் தன்மானப் பிரச்சினையாக்கி தமது கூட்டுக்;குள்ளேயே குழப்பங்கள் உருவாக வழி வகுத்தது அவசியம்தானா?
ஏனென்றால் இவையெல்லாம் முடிந்து போன விடயங்கள் அல்ல. ஓர் ஆட்சியின் கட்டமைப்பில் அமர்ந்து செயற்படுவதோடு தொடர்பான சம்பிரதாயங்கள் சம்பந்தப்பட்டவை. இப்போது மேற்கொள்ளப்படும் தவறான தொடக்கங்கள் எதிர்காலத்தில் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் வழி வகுக்கும் என்பதை எவரும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இவ்வளவு குழப்பங்கள் நேர்ந்ததற்கு அது ஒரு சந்தர்ப்பவாத அரசியற் கதம்பம் என்பதனாலா அல்லது இந்தக் கூட்டமைப்பு கட்டியெழுப்பப்பட்டுள்ள தமிழின உணர்ச்சி அரசியலில் உள்ள அடிப்படைக் குறைபாட்டின்; வெளிப்பாடா? என்பவை அரசியல் ஆய்வுக்குரியவை.
அடுத்த கடிதத்தில் மேலும் தொடரும்
இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்