இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 6)

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே ஏதோ இலங்கையின் அரசியல் ஒரு மாற்றத்துக்கான புயல் அடிக்கப்போவது ஆரம்பமாகிவிட்டது போலவும், அந்த மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு அரசியற் சூறாவளிகளைக் கிளப்பியபோது ஏதோ இலங்கைத் தமிழர்களின் அரசியல் வாழ்வு ஒரு தீர்மானகரமாக முன்னோக்கிச் செல்லும் கட்டத்தை நோக்கி நகரப் போகிறது போலவும் காட்சிகள் நடமாடின.

வடக்கு மாகாண சபை தேர்தல் வெற்றி;
“தமிழரசு மலர்ந்தது” என உதயன் பிரகடனம்

சட்டமேதைகளான கௌரவ சம்பந்தர் மற்றும் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்களையும், கௌரவ சுமந்திரன் மற்றும் டென்னிஸ் போன்ற சட்ட நியுணர்களையும்;, இருபது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் சட்டங்களை ஆக்கும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்து வரும் கௌரவ திரு சேனாதிராஜா, திரு அடைக்கலநாதன் செல்வம், திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. சிவசக்தி ஆனந்தன், திரு.செல்வராசா மற்றும் திரு. அரியநேந்திரன் போன்ற அரசியல் ஆளுமை மிக்க தலைவர்களையும், நிர்வாகத் துறையில் நிபுணர்களான கௌரவ திரு சிவஞானம் மற்றும் திரு குலேந்திரராஜா போன்றோரையும், சமூக மற்றும் இயற்கைவள அறிஞர்களான கௌரவ திரு ஐங்கரநேசன் மற்றும் திரு சர்வேஸ்வரன் போன்றவர்களையும் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் ஆட்சியை அமைக்கும் வடக்கு மாகாண சபையானது இலங்;கையில் ஓர் அரசியற் புரட்சிப் புயலை கிளர்ந்தெழ வைக்கும் என தமிழர்கள் நம்பியதைத் தவறெனக் கொள்ள முடியுமா?,

முப்பது வருட கால வன்முறைகளாலும் பயங்கரவாதத்தாலும், கண்மூடித்தனமான யுத்தத்தாலும் உயிர்களை இழந்து, உடல் அவயவங்களை இழந்து, சொத்துக்களை இழந்து, சொந்த வாழிடங்களை இழந்து வாழும் இலங்கைத் தமிழர்கள்; வடக்கு மாகாண சபை ஆட்சிமூலம் தமது வாழ்வில் த.தே.கூ வினர் முன்னேற்றகரமான ஒளியேற்பட தீபம் ஏற்றிவைப்பார்கள் என்று எதிர்பார்த்ததில் தவறு காண முடியுமா?

மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளால் வடக்கில் சாந்தியும் சமாதானமும் நிலவும், அரசபடைகளின் தொல்லைகள் நீக்கப்பட்டுவிடும், கல்விச்சாலைகள் அத்தனையிலும் மாணவர்கள் நிம்மதியாக படிப்பார்கள், வைத்தியசாலைகள் எங்கும் வைத்தியர் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடின்றி சுகாதார சேவைகள் கிடைக்கும், உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலையும் தாராளமாக சந்தைகளும் கிடைக்கும், வர்த்தகங்கள் பெருகும், விதவைகளான பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்போடு கௌரவமான வருமான உத்தரவாதங்கள்; கிடைக்கும், சுதந்திரமாக மீன்பிடித் தொழில்கள் பெருகும், படித்த அனைத்து இளைஞர்களுக்கும் உரிய வேலைகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தேவையாள அளவு கிடைக்கும் என தமிழ் மக்கள் காத்திருப்பது தவறாகுமா?

கழி மண் கிடைத்தால் பானையாக்குபவனே குயவன்

மக்களின் எதிர்பார்க்கைகள் இவ்வாறிருக்கையில் வடக்கு மாகாண சபை அதற்கு உரியவகையாக செயற்படுகிறதா? என்பது இப்போது பெருத்த ஒரு கேள்வியாக உள்ளது.
இங்கு வடக்கு மாகாண சபையைப் பற்றி மட்;டுமே குறிக்கிறேன்! கிழக்கு மாகாண சபை பற்றி அக்கறை எதுவும் காட்டவில்லையே என குறை நினைக்காதீர்கள். வடக்கு மாகாண சபை சரியாகவும் வலுவாகவும் செயற்பட்டால் அது கிழக்கு மாகாண சபைக்கு மட்டுமல்ல இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் முன்னுதாரணமாகவும் உந்து சக்தியாகவும் விளங்கும் என்பதே எனது கருத்து.

இலங்கையின் அரசியல் யாப்பின் மூலம் மாகாணசபைகளுக்கென கடமைகளும் பொறுப்புகளும் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்தக் கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான நிதிவளங்களைத் திரட்டிக் கொள்வதற்கும் – பெற்றுக் கொள்வதற்குமான வழிவகைகளும் அவற்றுக்கான அதிகாரங்களும் 13வது திருத்த அரசியல் யாப்பு மூலம் தரப்பட்டுள்ளன.

மாகாணசபைகளுக்கு மட்டுமென தரப்பட்டுள்ள அதிகாரப்பட்டியலில் 34 வகைப்பட்ட தலைப்புக்களில் கடமைகளும் பொறுப்புக்களும் அவற்றுக்கான அதிகாரங்களும் தரப்பட்டுள்ளன. அதே பட்டியலில் 21 வகையான தலைப்புகளில் மாகாண ஆட்சிக்கான நிதிவருமான மூலங்கள் – வழிகள் தரப்பட்டுள்ளன.

அதேவேளை நாடாளுமன்ற சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் சட்டங்களை ஆக்கவும் அவை தொடர்பாக நிறைவேற்று அதிகாரங்களைப் பிரயோகிக்கவும் முப்பத்தி ஆறு வகையான தலையங்கங்களின் கீழ் விடயங்கள் அரசியல் யாப்பின் மூலம் தரப்பட்டுள்ளன.
அந்தப்பட்டியல்களில் உள்ள விடயங்களை இங்கு நான் மறுபதிப்புச் செய்ய வேண்டியது அவசியமற்றது எனக் கருதுகிறேன். மக்கள் மீதும் அரசியல் மீதும் அக்கறையுள்ளவர்கள் 13வது திருத்த அரசியல் யாப்பை வாசித்து அல்லது யாரையாவது வாசித்து சொல்லும்படி கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் இருக்கையில், எதற்காக – என்ன காரணங்களுக்காக வடக்கு மாகாண சபை இதுவரை ஒரு சட்டத்தைக் கூட ஆக்காமல் இருக்கின்றது என்பது இங்கு ஒரு மிகப் பெரும் கேள்வியாகும்.

சட்டங்களை வரையும் சட்டவரைவாளர்கள் இல்லையென்று சொல்லுகிறார்களா? அல்லது வடக்கு மாகாண அமைச்சரவை எந்தவொரு சட்டத்தையும் ஆக்கும் முன்முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்று இருக்கிறார்களா? அல்லது வடக்கு மாகாண அமைச்சரவை எந்தவொரு சட்டத்தையும் ஆக்கும் முன்முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்று ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறாரா? அவ்வாறாக ஆளுநர் உத்தரவிட்டிருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு; எந்தவொரு சட்டத்தையும் ஆக்காது இருப்பது சட்டப்படி கட்டாயமானதா?
ஆளுநரையே மாற்றச் சொல்லிக் குரலெழுப்பும் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மாகாண ஆளுநரின் சட்டமுறையற்ற கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பதாகக் கூறினாலோ அல்லது கருதினாலோ அது பொருத்தமற்றதல்லவா?

மாகாண சபைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்ல, சில மத்திய அமைச்சர்கள் கூட வடக்கு மாகாண சபை ஆக்கபூர்வமான சட்டமெதனையும் ஆக்குவதில் இதுவரை எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டும் அளவுக்குத் தான் வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் இருக்கின்றன.

ஆனால் வடக்கு மாகாண சபை இதுவரை ஒரேயோரு சட்டத்தை மட்டும் நிறைவேற்றியிருக்கிறது. அதாவது மாகாண சபையின் நிர்வாகத்திற்கென மத்திய அரசினால் 2014ம் ஆண்டுக்கென தரப்பட்ட வருமானத்தை செலவு செய்வது தொடர்பாக மாகாண நிர்வாகத்துக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறது. அதைத் தவிர வேறு ஏதொரு சட்டத்தையும் இதுவரை மாகாண சபை நிறைவேற்றவில்லை – அதற்கான எந்தவொரு முயற்சியிலும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த தகவலே.

இந்த நிதி வரவு –செலவுத் திட்டத்துக்கான சட்டத்தை நிறைவேற்றியது ஏன்? அவசியம் தானா? அந்த நிதிகளை செலவு செய்யும் அதிகாரங்களை மாகாண சபை யாருக்கு வழங்கியிருக்கின்றது? இந்த நிதிச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்திருந்தால் என்ன விளைவுகள்? என்ற கேள்விகளை வேறோரு இடத்தில் எழுப்பி விடை காண முற்படுவோம்.

சிரங்குப் புண்களுக்கு சொறிவதே வைத்தியமானால்
சிரங்கோடு வாழ்வதே சொர்க்கமாகி விடும்.

வடக்கு மாகாண சபை இதுவரை நிறைவேற்றியுள்ள தீர்மானங்களைப் பார்த்தால், அவை எதுவும் மாகாண சபைகளுக்கு சட்டபூர்வமாகத் தரப்பட்ட கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பானவை அல்ல. மாறாக அதிதீவிர அரசியற் தீர்மானங்களாக மட்டுமே உள்ளன. உண்மையில் ததேகூக்காரர்கள் தமது கட்சி மாநாடுகள் அல்லது தமது கட்சிகளின் பொதுச் சபைக் கூட்டங்களில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களையே அவற்றிற்குப் பொருத்தமற்ற மன்றமான மாகாண சபையில் நிறைவேற்றி மாகாண சபையை ஒரு கட்சி மண்டபமாக மாற்றியிருக்கிறார்கள்.

மாகாண சபை என்பது சட்டவாக்க மன்றம்: அது மக்கள் ஆட்சியின் ஒரு பிரதான இருப்பிடம்;: அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒரு சட்ட ஆளுமை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றி;ல்லை:

அவ்வப்போது மக்களின் பொதுநலன்கள் மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் – தேவைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தையோ அல்லது மத்திய அமைச்சரவையையோ நோக்கி முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கான தீர்மானங்களாகவும் அமையலாம்;. ஆனால் இதவரை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் இலங்கை ஜனாதிபதிக்கும் மத்திய அரசுக்கும் எதிரானவையாகவும், சவால் விடுபவையாகவும் மட்டுமே உள்ளன. மாகாண சபை என்பது ஒரு மாகாண அளவிலான பிரதேச ஆட்சி மன்றம். அதனை ஓர் எதிர்க்கட்சி அரசியலுக்கான மேடையாக்குவது அதன் தரத்தைத் தாழ்த்தும் விடயமாகும்.

நாம் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்த கற்று பெற்றுக் கொண்டுள்ள ஜனநாயக பாரம்பரியத்தில் ஆளுங்கட்சிகளில் சிலரும் எதிர்க்கட்சிகளில் சிலரும் ஆட்சி மன்றங்களை தமது குழப்பம் விளைவிக்கும் கூச்சல் மேடைகளாகவோ அல்லது தமது மகாவீரபிரதாபங்களை வெளிக்காட்டும் களமாகவோ ஆக்குவது விதிவிலக்கு அல்ல. எனினும் அந்த ஆட்சி மன்றங்களின் பொறுப்பான தலைவரும், அமைச்சர்களும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களும் தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களாட்சி மன்றத்தை கூச்சல் குழப்பக்காரர்களின் கூடாரமாக ஆகிவிடுவதற்;கு இடமளிக்கக் கூடாது – வீதிச் சண்டைகள் நடத்தும் தெருக்கடைச் சந்தியாக அதனைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.

மாறாக ஒரு மக்கள் ஆட்சி மன்றப் பிரதிநிதிகள் என்ற பொறுப்போடு கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும்: சட்டரீதியாக ஏற்றுக்கொண்டுள்ள கடமைகளை உரியவகையாக பொறுப்போடு நிறைவேற்ற வேண்டும். ஒரு மக்களாட்சி மன்றத்துக்கேயுரிய கட்டுப்பாடுகளையும் தர்மங்களையும் மரபுகளையும் காப்பாற்ற வேண்டும் நிலைநிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த மக்கள் ஆட்சி மன்றம் ஒரு கட்டாக்காலிக் கூட்டத்தின் சந்தைக்கடையாகிவிடும்.

மக்களின் வாழ்வில் முன்னேற்றங்களுக்கே மாகாண சபை
கட்டாக்காலிகள் குத்தாட்டம் போடுவதற்கான கூடாரமல்ல

வடக்கு மாகாண சபையில் ஆட்சியாளர்களாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களல்ல. அது பல்வேறு போக்குடையவர்களை உள்ளடக்கிய ஒரு கதம்ப அரசியற் கூட்டு: என்பதனால் அதிலிருக்கும் சிலரின் அரசியல் அபிலாஷைகளுக்கு திருப்திகரமான இடத்தை ஓரளவு வழங்க வேண்டியது தவிர்க்கமுடியாதுள்ளது என்பதை நாம் முற்றாகப் புறக்கணிக்கவில்லை.

அதனால் ஆட்சியிலுள்ள கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் கொண்டுவரும் தீர்மானங்கள் சாராம்சம் அற்றவையோ அல்லது சட்டரீதியான அhத்தம் அற்றவையோயாயினும் அவற்றிற்கும் சிறிது இடமளிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே. அந்த உறுப்பினர்களின் அரசியற் சிற்றின்பங்களுக்கும் இடம் அளிப்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால் அந்தவாறான சிலரின் அரசியற் சிற்றின்ப தீர்மானங்களுக்கான மன்றமாக மட்டுமே வடக்கு மாகாண சபை மாற்றப்பட்டிருப்பதுதான் இங்கு விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரியது.

மாகாண சபை அதனது பிரதேச முன்னேற்றங்களுக்கும் அது பிரதிநிதித்துவப் படுத்தும் பொது மக்களுக்கும் உரிய வகையாக செயற்பட வேண்டியது அவசியம் இல்லையா? மாகாணசபையைப் பயனுடைய விதமாக நடத்தவே – செயற்படுத்தவே கூடாது என்று கருதுகிறார்களா? அல்லது முடியாது என்று கருதுகிறார்களா? அல்லது இந்த மாகாண சபையில் உருப்படியாதன சட்டம் எதனையும் ஆக்குவது எந்தவகையிலும் தமிழர்களுக்கு பயன்தரமாட்டாது என்று கருதுகிறார்களா?
அல்லது முழுமையாக இல்லாவிடினும் கணிசமாக பயன்தரக்கூடிய ஒன்றேயாயினும் அதனை எந்தவகையிலும் பயனற்றது என்று காட்டவேண்டும் என்ற பிடிவாதத்தோடு செயற்படுகிறார்களா? அல்லது அப்படி ஏதாவது ஆக்கபூர்வமாக செயற்பட முயன்று அதனால் ஏதாவது பலன் மக்களுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டால் தங்களது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அது தீங்காக அமைந்து விடும் என்று அஞ்சுகிறார்களா? மக்களின் இப்போதைய உடனடியான தேவைகளுக்குப் பயனுடையதாக மாகாண சபை இருந்தாலும தனித்தமிழீழம் கிடைக்கும் வரை வேறெந்த வகையான அரசியல் தீர்வையும் ஏற்கக் கூடாது என்று இருப்பவர்களை விட்டுவிடுவோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்களில் பெரும்பாலானவர்கள் அப்படியானவர்களில்லையே!

மாகாணசபையால் ஏதாவது பலன் தமிழர்களுக்குக் கிடைக்குமாக இருந்தாலும் அதனால் தமக்கு தனிப்பட்டரீதியில் என்ன பலன் கிடைக்கும் என்று நினைப்பவர்களையும் விட்டுவிடுவோம்.
ஆனால் இங்கு ததேகூக்காரர்களை உன்னிப்பாக அவதானித்தால், இராணுவம் வெளியேற வேண்டும்! முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தி மஹிந்தவையும் அவரது ஆட்களையும் சர்வதேசக் கூண்டில் ஏற்ற வேணும்! என்று செய்கிற அரசியலால் இப்போது சர்வதேச சமூகம் காட்டிவரும் அக்கறையும், அதைக்காட்டி தமிழர்கள் மத்தியில் உசுப்பி விடப்பட்டுள்ள இனஉணர்ச்சிமயமும் மாகாண சபைகளை ஆக்கபூர்வமாகச் செயற்படுத்துவதால் கெட்டுப் போய்விடும் – தணிந்து போய்விடும் என்று கருதி இந்த மாகாண சபையை அசைய மாட்டாத ஒன்றாக இவர்கள் ஆக்கி வைத்திருக்கிறார்களா? என்று கேட்கவே தோன்றுகிறது.

அடுத்த கடிதத்தில் தொடருவோம்.

இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்