பலரது ஆய்வுகள், சோவியத் ஒன்றியத்தின் இடத்தில் சீனாவைப் பொருத்தி, அமெரிக்கா எதிர் சீனா என்பதை, கெடுபிடிப் போர் சட்டகத்தில் விளங்கியதன் ஆபத்துகளில் ஒன்றே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கைச் சரியாகப் புரிந்துகொள்ளாமைக்குக் காரணம் எனலாம்.
சில நாள்களுக்கு முன்னர், தலிபான் அமைப்பின் பேச்சாளர், டுவிட்டரின் ஊடாகத் தெரிவித்த செய்தி முக்கியமானது. ‘ஆப்கானின் உள்விவகாரங்களில் தலையிடாமல், ஆப்கான் மக்களின் நலன்களுக்காகவும் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்கும், சீனா எடுத்துள்ள முயற்சிகளை நாம் வரவேற்கிறோம்’.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளை, முழுமையாக விலக்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தலிபான் பேச்சாளரின் இந்தத் ‘டுவிட்’ முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த இரண்டு தசாப்தகால சீனாவின் நடத்தையை விளங்கிக் கொள்வதற்கு, இதுவொரு பயனுள்ள எடுத்துக்காட்டு.
ஆப்கானில் தலிபான் ஆட்சியை ஒழித்து, ஜனநாயகத்தை நிலைநாட்ட 2001ஆம் ஆண்டு நிலைகொண்ட அமெரிக்கப் படைகள், 20 ஆண்டுகளின் பின்னர், அவமானகரமான தோல்வியுடன் வெளியேறுகின்றன.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலின் (9/11) பின்னணியில், விரிந்த உலக ஒழுங்கைக் கட்டமைத்த முதல் நிகழ்வு, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும் படைகளின் நிலைகொள்ளலும் ஆகும். எதை அமெரிக்கா செய்ய நினைத்ததோ, அதைச் செய்யவியலாமல் இன்று வெளியேறுகிறது. அந்த இடத்தைச் சீனா நிரப்புகிறது.
நாடுகளுடனான வேறுபட்ட அயலுறவு அணுகுமுறையின் பலன்களையே, சீனா அனுபவிக்கிறது. அச்சுறுத்தல் பாணியில் அமையாத நட்புறவு, உள்விவகாரங்களில் தலையிடாமை, பொருளாதார ஒத்துழைப்பு என்பன ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உவப்பானதாக இருக்கின்றன.
எந்தவொரு நாடும், தனது உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையிடுவதை விரும்புவதில்லை. இவ்வாறான தலையீடுகள் என்றுமே பயன் விளைவித்தவையல்ல!
அதேவேளை, இராணுவக் கூட்டுறவை மையமாகக் கொண்ட நாடுகளுடனான உறவுகள், ஒருவகையான அதிகாரச் சமமின்மையை ஏற்படுத்துகின்றன என்பதை மூன்றாமுலக நாடுகள் நன்கறியும். இதனால் சீனாவின் வேறுபட்ட அயலுறவு அணுகுமுறை, மூன்றாமுலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு உவப்பானதாக இருக்கின்றது.
அமெரிக்காவின் அயலுறவு அணுகுமுறையில், இராணுவ வலிமையும் மிரட்டலும் உள்ளார்ந்த அம்சங்களாக இருந்து வந்திருக்கின்றன; இன்றும் இருக்கின்றன. உலகின் முதலாவது அணு ஆயுத வல்லரசு அமெரிக்கா. மக்களைக் கொன்றொழிப்பதற்காக அணு ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தியுள்ள ஒரே நாடும் அமெரிக்கா தான்.
1950களின் பிற்பகுதியில், சீனாவுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலை, அமெரிக்கா விடுத்த போது, “அணுகுண்டு ஒரு காகிதப்புலி” என்று, மாஓ தைரியமாகக் கூறினார். அதேவேளை, அமெரிக்கா சீனாவைத் தாக்க முற்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்க, சீனாவைத் தயார்படுத்தும் தேவையை அறிந்திருந்தார்.
சோவியத் ஒன்றியத்தில், குருஷ்ச்சொவ் அதிகாரத்துக்கு வந்தபின்னர், அமெரிக்காவுக்கு எதிராக, சீனாவைப் பாதுகாக்க சோவியத் ஒன்றியத்துக்கு வாய்ப்பில்லை என்பதால், சீனா தனது பாதுகாப்பை தானே உறுதிப்படுத்துகிற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. நிலத்துக்குக் கீழான நீண்ட சுரங்க அறைகளும் பாதைகளும் மக்களின் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டன.
1963ஆம் ஆண்டளவில் சீனா தனது அணு ஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியவுடன், ஏற்கெனவே அணு ஆயுதங்களை வைத்திருந்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் அதைக் கண்டித்தன. சோவியத் ஒன்றியமும் தனது அதிருப்தியைத் தெரிவித்தது. அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் முரண்பட்டிருந்த பிரான்ஸ், அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தச் சீனாவுக்கு இருந்த உரிமையைக் கேள்விக்கு உட்படுத்த மறுத்தது. அதேவேளை, எந்த நிலையிலும் அணு ஆயுதங்களை, எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக, முதல் முதலாகப் பாவிக்கப் போவதில்லை என்று, சீனா அன்று அளித்த உறுதிமொழி இன்றுவரை தொடர்ந்தும் இருக்கிறது.
கடந்த அரைநூற்றாண்டுகால சீனாவின் நடத்தையும், உலக அலுவல்களில் சீனாவுக்கு வாய்ப்பாக உள்ளது. இந்த நடத்தை என்றென்றைக்குமானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், இன்று மூன்றாமுலக நாடுகள், ஏன் சீனாவை நட்பாக நோக்குகின்றன என்ற வினாவுக்கான பதிலைப் புரிய இதுவும் அவசியமானது.
சீனா, ஒரு வலுவான பொருளாதார வல்லரசாக மட்டுமன்றி, அரசியலிலும் விரிவான நட்பை (ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில்) உருவாக்கிப் பேணுகிறது. சீனாவின் பொருளாதாரச் செயற்பாடுகள், அதற்குத் துணையாக உள்ளன.
அமெரிக்க வணிக மிரட்டல்களுக்குப் பணிய மறுக்கும் சீனா, தனது ‘ஒரு வார் ஒரு வழி’ (One Belt One Road) திட்டத்தை முன்னரிலும் முனைப்பாக முன்னெடுக்கிறது. சீனாவின் 21ஆம் நூற்றாண்டுக்கான பிரதான எதிர்பார்ப்பாக இத்திட்டம் உள்ளது.
உடனடியாகப் பாரிய பொருளாதாரப் பயனைத் தராவிடினும், உலக நாடுகளைத் தரை வழியாகவும் கடல் வழியாகவும் இணைக்கும் சீனத் திட்டம், துரிதமாக நனவாகிறது. இது, புதிய வணிக முறைகளுக்கும் தொடர்புகளுக்கும் நிலைமாறும் வாய்ப்பை உருவாக்கும். இதில் இலங்கை ஓர் அங்கமாக இருக்கிறது.
ஆசியாவில் அதிகரிக்கும் சீனாவின் இருப்பு, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியா, தனது கொல்லைப்புறங்களில் சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கை வெறுக்கிறது.
ஆசியாவில் அமெரிக்காவின் அங்கிகரிக்கப்பட்ட ‘அடியாள்’ ஜப்பான், சீனாவால் மிகுந்த சங்கடங்களுக்கு உள்ளாகிறது. ஆசியப் பிராந்தியத்தில் அதிகரிக்கும் சீனச்செல்வாக்கு, அப்பாலும் எதிரொலிக்கும் என அவுஸ்திரேலியா அஞ்சுகிறது. இது சீனாவுக்கு எதிரான ‘ஆசியக் கூட்டை’ உருவாக்கியுள்ளது.
இன்னொருபுறம், சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி, மத்திய கிழக்கில் அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலியக் கூட்டணிக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று, சீனா பல நட்பு நாடுகளைத் தன்வசம் கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதார வலிமை, அதைச் சாத்தியமாக்கி உள்ளது. இதனாலேயே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், பாரிய தாக்கத்தை சீனாவில் ஏற்படுத்தவில்லை.
இவ்வாறு சீனா நடந்துகொண்டாலும், நாடுகளுடன் முரண்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன. தென் சீனக்கடலில் உள்ள தீவுகள் பற்றிய முரண்பாடுகள் உள்ளன. சில தீவுகளுக்கு வியட்நாம், தாய்வான், பிலிப்பைன்ஸ் உட்பட்ட பல நாடுகளும் பிரதேசங்களும் உரிமை கோருகின்றன. இதுவரை குறிப்பிடத்தக்க பெரிய மோதல் எதுவும் நிகழவில்லை என்றாலும், இப்பிரதேசங்களின் நிறைந்த கடல்வளமும் எண்ணெய் பற்றிய எதிர்பார்ப்புகளும் தீர்வுக்குத் தடையாக உள்ளன. எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதே, இதுவரை சீனாவின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.
இந்தப் பிரச்சினையை நீண்ட போராகவோ, அமைதியின்மையாகவோ மாற்ற, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்க முயற்சிக்கிறது. இதுவரை, அது சாத்தியமாகாமைக்கு சீனாவின் நெகழ்வான அயலுறவுக் கொள்கை முக்கிய காரணமாகும். தனது வலிமையால் எதையும் நிறுவுவதை, இதுவரை சீனா செய்யவில்லை.
இவை அனைத்தின் மத்தியிலும் கவனிக்க உகந்த முக்கியமான ஓர் அம்சம், சீனா இன்று வரை வேறெந்த நாட்டின் மண்ணிலோ கடற்பகுதியிலோ தனது படைத்தளம் எதையும் நிறுவவில்லை. வேறு நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற போரில்கூட, இதுவரை சீனாவின் படைகள் அயல்நாடுகளில் நிலைகொண்டு இருந்ததில்லை. இது சீனாவை மற்ற எந்த வல்லரசிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதுவரை இராணுவ மிரட்டல் மூலம், தனது தேவைகளை சீனா நிறைவேற்றிக் கொண்டதும் இல்லை. வலிமை குறைந்த நாடுகளை, வலிந்து மிரட்டுவதைச் சீனா எப்போதுமே நிராகரித்து வந்துள்ளது.
2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவமும் திறந்த சந்தையும் சந்தித்த சரிவு, மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தேசியவாத எழுச்சி, கொவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றின் பின்னணியிலேயே சீனாவின் எழுச்சியை நோக்க வேண்டியுள்ளது.
(அடுத்த வௌ்ளிக்கிழமை தொடரும்)