இலங்கையை இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தாரைவார்த்தாலும் சீனாவை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு, சீனா குறித்த பல கருத்துகளை நாளும் நாம் கேட்கவும் வாசிக்கவும் கிடைக்கிறது. இங்கு மூன்று கேள்விகள் எழுகின்றன.
முதலாவது, நாம் சீனாவை விளங்கி இருக்கிறோமா?
இரண்டாவது, ஏற்கெனவே இருக்கின்ற சட்டகங்களின் வழி, சீனாவை விளங்கிக் கொள்ளவியலுமா?
மூன்றாவது, சீனாவுக்கு நாம் எவ்வாறு எதை எப்போது வினையாற்றுவது?
இந்த மூன்று கேள்விகளையும் சற்று விரிவாக, பகுதிகளாக ஆராயும் முயற்சியின் தொடக்கமிது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து, இலங்கையின் முதன்மையான அரசறிவியலாளரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட, “இலங்கையில் சீனாவின் அதிகரிக்கும் கரிசனை, அரசியலை விடப் பொருளாதார நோக்கங்களை அதிகமாகக் கொண்டது. சீனா பொருளாதார தர்க்கத்தின் (economic logic) அடிப்படையிலேயே செயற்படுகிறது. அதனடிப்படையில் அது இலங்கையில் அதிகளவான பொருளாதார மூலதனத்தை விரும்புகிறது. இலங்கையர்கள், அமெரிக்க கண்ணுடன் சீனாவைப் பார்க்கக்கூடாது. சீனாவை வில்லனாக்குவது அதிகளவில் இடம்பெறுகிறது. சீனாவை வில்லனாகச் சித்திரிப்பது அமெரிக்காவின் புதிய கெடுபிடிப்போரின் வெளிப்பாடு. சீனாவுடனான இந்தியாவின் முரண்பாடு இதன் ஒரு பகுதியே” என்று கூறுகின்றார்.
பேராசிரியர் உயன்கொட, சில முக்கியமானதும் ஆழமானதுமான செய்திகளை இங்கே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
மாஓ சேதுங் தனது வழிகாட்டலில் முன்னகர்த்திய சீனாவுக்கும் அவரது மறைவுக்குப் பின்னர், டென்சியோபிங் முன்னெடுத்த முதலாளித்துவத்தை நோக்கிய பொருளாதார அரசியல் மாதிரியில் அமைந்த சீனாவுக்கும் வேறுபாடுகள் அதிகம். இந்த வேறுபாட்டை உணராதவர்கள் தான், இன்னமும் ‘சோசலிச சீனா’ என்று சொல்கிறார்கள்.
சீனாவின் வரலாற்றின் முக்கிய அம்சம், 1949ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட புரட்சியாகும். உலக வரலாற்றில் ரஷ்ய புரட்சிக்குப் பின்னரான அதிமுக்கிய அரசியல் நிகழ்வு சீனப் புரட்சியாகும்.
1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அந்நிய ஆட்சியைத் தூக்கியெறித்து நிகழ்த்திய சீன விடுதலைப் பிரகடனம், சீனாவின் விடுதலையை மட்டுமன்றிக் கொலனி ஆட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் வருவதற்கிருந்த விடுதலை எழுச்சிகளையும் எடுத்துரைப்பதாக அமைந்தது.
சீனா பற்றிய தகவல் திரிபு, இந்தியாவில் 1961ஆம் ஆண்டு முதல் தீவிரமாக இருந்து வந்துள்ளது. சீனாவிலிருந்து வெளிவருகிற நூல்கள், சஞ்சிகைகள் மீது தடை இருந்து வந்துள்ளது. இவை, அண்மைக் காலங்களில் கணிசமான நெகிழ்வுக்கு உட்பட்டாலும் சீனாவைப் பகைமையாக நோக்குகிற போக்குக்குப் பின்னால், இந்திய மேலாதிக்க நிறுவனமும் இப்போது அமெரிக்காவுடனான நெருக்கமும் பெரிய காரணங்களாக உள்ளன.
இந்தப் போக்கு, ஈழத்தில் தமிழர்கள் மத்தியிலும் இருந்தது. இந்தியாவின் கண்களின் ஊடாக, சீனாவைப் பார்க்கும் போக்கின் விளைவு இது. ஈழத்தில் தமிழ்த் தேசியவாதிகளிடையே, சீன எதிர்ப்புக்கு முக்கியமான காரணம் இத்தேசியவாதிகளின் சமூகநீதி மறுப்பையும் உயர்வர்க்க நடைமுறைகளையும் எதிர்த்தும் அம்பலப்படுத்தியும் வந்தவர்கள் இடதுசாரிகளாவர்.
கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கட்சியும் சீரழிந்து போன பிறகு, ‘சீன சார்பு’ கம்யூனிஸ்ட்டுகள் எனப்பட்டோரே, இலங்கையின் வடக்கில் காத்திரமான இடதுசாரிகளாக இருந்தனர். இதுவே தமிழ்த் தேசியவாதிகளுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது. 1960கள் தொட்டு, தமிழர்களிடையே சீனவிரோதம் தீவிரமாகப் பரப்பப்பட்டது.
இதில் கவனிக்கத்தக்க விடயமொன்றுண்டு. சீனா ஏகாதிபத்திய எதிர்ப்பின் அதி முக்கியமான சக்தியாக இருந்த 1960களிலும் 1970களிலும் தமிழ்த் தேசியவாதிகளின் சீன எதிர்ப்பு, மிகத் தீவிரமாக இருந்தது. அந்த எதிர்ப்பை நாம், அவர்களது ஏகாதிபத்தியச் சார்பான பார்வையிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. அது, உலகின் சகல கொலனிய எதிர்ப்புப் போராட்டங்களிலும் அக்கறையின்மையாக வெளிப்பட்டது.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போரட்டங்களைக் கம்யூனிச வன்முறையாகவும் அமைதியைக் குலைக்கும் கலவரங்களாகவும் அது காண முற்பட்டது. உலகின் எந்த மூலையில் நடந்த விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க முன்வராத தமிழ்த் தேசியவாதம் சீனாவிலும் சோவியத் யூனியனிலும் கிளறிவிடப்பட்ட கலவரங்களை மெச்சத்தவறியதில்லை. உலகின் பல நாடுகளில் நடந்த விடுதலைப்போராட்டங்களை அங்கிகரிக்காத ஆதரவு வழங்காத வரலாறு தமிழ்த் தேசியவாதிகளின் வரலாறு.
சீனாவை விளங்குவதற்கு சீனாவின் அயலுறவுக் கொள்கைகளை விளங்குவது பிரதானமானது. அதன்வழியே சீனாவின் நடத்தையை விளங்கிக் கொள்ள முடியும். சீனாவின் அயலறலுக் கொள்கை சீனப் புரட்சியைத் தொடர்ந்து 1950களில் ஐந்து அடிப்படைகளில் உருவாக்கப்பட்டது.
1.நாடுகளது இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பரஸ்பரம் மதித்தல்
- பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
- ஒருநாடு மற்றதன் உள் அலுவல்களில் தலையிடாமை
- சமத்துவமும் பரஸ்பர நன்மையும்
- சமாதானமாக உடனிருத்தல்
இவையே சீனாவின் அயலுறவுக் கொள்கைகளைக் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இந்த அணுகுமுறை, மேற்குலக நாடுகளினதும் இந்தியாவினதும் அணுகுமுறையிலிருந்து மிகவும் வேறுபட்டது.
இன்று, சீனா சோசலிசத்திலிருந்து நகர்ந்துவிட்டபோதும் இதன் அம்சங்களே இன்றும் சீனாவை வழிநடத்துகின்றன. இவ்வடிப்படைகளே கெடுபிடிப்போர் உச்சமடையத் தொடங்கியதன் பின்னர், உருவான மூன்றாவது அணியான அணிசேரா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச உறவுகளுக்கான அடிப்படையாயிற்று.
இங்கு கவனிக்க வேண்டியது, சீனாவின் அயல் உறவுகளின் தன்மை கடந்த கால் நூற்றாண்டுக்குள் சீனாவின் பொருளாதாரம் கண்ட பெரும் மாற்றத்தாலும் அதன் விளைவான பெரிய ஆனால் சமனற்ற வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனா இன்று எண்ணெய் உட்பட பல்வேறு மூலப் பெருட்களின் உற்பத்தியின் மீது தங்கியுள்ளது. அதை விடச், சீனாவின் வணிக நிறுவனங்கள் மூன்றாமுலக நாடுகளில் பெருமளவில் அளவில் முதலீடுகளைச் செய்துள்ளன. எனவே சீனாவுக்குத் தனது அயல் வணிகத்தையும் முதலீடுகளையும் காப்பாற்றும் ஒரு நிர்ப்பந்தம் உள்ளது. இன்றுவரை சீனா இராணுவ முறையில் அதைக் கையாள முற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவ்வகையில் அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையில் இருந்து சீனா வேறுபட்டு நிற்கிறது.
இலங்கையுடனான சீனாவின் உறவு மிக நீண்டதும் முக்கியமானதுமாகும். கொரியப் போரின் போது அமெரிக்கா சீனாவுக்கு எதிரான வணிகத் தடையை விதித்திருந்த நிலையில் அதை மீறி, இலங்கையின் அன்றைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க சீனாவுடன் ‘அரிசி- இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’ ஒன்றை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1952ஆம் ஆண்டு செய்து கொண்டது.
இலங்கைக்கு மிகவும் சாதகமான முறையில் சீனா வாங்கும் விலையை உலகச் சந்தையை விடக் கூடுதலாகவும் இலங்கை வாங்கும் விலையைக் குறைவாகவும் நிர்ணயித்தது. இதன் பலன்களை இருபதாண்டுகளுக்கு மேலாக இலங்கை அனுபவித்தது. இதுவே இலங்கை-சீன நட்புறவின் அத்திவாரமாகியது. இன்றுவரை இலங்கை செய்துகொண்ட வர்த்தக உடன்படிக்கைகளில் இலங்கைக்கு மிகுந்த பயன்விளைவித்ததும் நீண்டகாலம் நிலைத்ததுமான உடன்படிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உடன்படிக்கையையொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள் இலங்கை வரலாற்றை அறிய விரும்புபவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எஸ்.பி. அமரசிங்கம் எழுதிய ‘Rice and Rubber: The Story of China-Ceylon Trade’ இது குறித்த விரிவான தகவல்களைத் தருகிறது.
(அடுத்தவாரம் தொடரும்…)