கடந்த ஆட்சிக்காலத்தில், பொருளாதார நிலை மிகவும் கீழ் இறங்கிக் காணப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்களை ஈடு செய்வதற்காகப் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திரும்பப் பெறப்பட்டு, வேலைத்திட்டங்களும் இடைநடுவில் கைவிடப்பட்டன. இந்நிலைமை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு, அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டது என்ற வங்குரோத்து நிலையை வௌப்படுத்தி நிற்கின்றது.
இந்நிலையிலேயே, 2020 தேர்தல் ஆண்டாகப் பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம், மாகாண சபை தேர்தல்களை நடத்தியே ஆக வேண்டிய நிலைக்கு, புதிய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, சர்வதேச நாடுகளிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் எதிர்வரும் ஆண்டுகளாகவே உள்ளன.
2021 முதல் 2024 என்பது, கடன்களை அதிகளவில் செலுத்தும் காலப்பகுதியாக பொருளியலாளர்களாலும் அரசியல்வாதிகளாலும் கூறப்பட்டு வரும் நிலையில், இந்தப் பொருளாதாரச் சுமையை, எவ்வாறு நாட்டு மக்கள் தாங்கிக் கொள்ளப்போகின்றனர் என்பதே, தற்போதைய கேள்வியாக உள்ளது.
ஏற்கெனவே, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான வாக்குறுதியை, எவ்வாறு நிறைவேற்றுவது எனவும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவதிலும் புதிய அரசாங்கத்துக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. இந்நிலையிலேயே புதிய அரசாங்கம் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க உள்ளது.
வெறுமனே, நாடாளுமன்றத் தேர்தலை மய்யமாகக் கொண்டு, வாக்குறுதிகளை வழங்குவதில் புதிய அரசாங்கம் காட்டி வரும் சிரத்தை, பொதுத் தேர்தலின் பின்னரான காலத்தில், எவ்வாறு நிறைவேற்றுவது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமை, தற்போது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணத்தின் மூலமாகவே பிரதான வருமானம் கிடைக்கப் பெறுகின்றது. இலங்கை, இந்த நிலைமைக்குச் சென்றுள்ளமையானது, பெரும் துர்ப்பாக்கியமாகவே பார்க்கப்படுகின்றது.
தேயிலை, இறப்பர், கொக்கோ போன்ற பெருந்தோட்டப் பயிர்களைப் பிரதான வருமானமாகக் கொண்ட இலங்கை, பெருந்தோட்டக் காணிகளை மக்கள் குடியிருப்புகளாகவும் குடியேற்றங்களாகவும் மாற்றியதன் விளைவாகவே, வெளிநாட்டு பணியாளர்களின் வருமானத்தைப் பிரதான வருமானமாகப் பார்க்க வைத்துள்ளது.
எனவே, இலங்கை போன்ற சிறிய நாடுகள், எதிர்காலத் திட்டமிடல் இன்றி, நாட்டில் செயற்படுத்தும் ஒவ்வொரு நகர்வும் அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே, இவ்வாறான நெருக்கடிகள், குடிமக்களை பொருளாதார ரீதியில் பாதிப்படையச் செய்யும். இந்தநிலைமையிலேயே, மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முனைவர். அதற்கான சூழல், இலங்கையில் மிகவும் அண்மித்துக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன. இந்நிலைமையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவீனங்களை, புதிய அரசாங்கம் எவ்வாறு ஈடு செய்யவுள்ளது என்பதே, தற்போதைய கேள்வியாகும்.
உலக வங்கியின் தகவல்களின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு, இலங்கையின் பொருளாதார செயற்றிறன் திருப்திகரமானதாக அமைந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் எனவும் உலக வங்கி குறிப்பிட்டிருந்தது.
இதன் காரணமாக, 2015ஆம் ஆண்டில் காணப்பட்ட 7.6 சதவீதம் என்ற நிதிப்பற்றாக்குறை, 2016ஆம் ஆண்டில் 5.4 சதவீதமாகக் குறைவடைந்திருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்ட வரட்சியால் விவசாயத்துறையில் ஏற்பட்ட தாக்கம், மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்தி, அதை 4.4 சதவீதமாகக் குறைத்திருந்தாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறாகப் பொருளாதாரத்தில் காணப்பட்ட ஏற்ற இறக்க நிலைமையினால், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி, உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, தற்போதையை அரசாங்கம் முனைகின்றது.
விவசாய உற்பத்திப் பொருள்கள் பலவற்றுக்கான இறக்குமதித் தடை ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், உள்ளூரில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி, நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் போதுமானதாக உள்ளதா என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.
2006ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், வெளிஇடங்களில் இருந்து விவசாய உற்பத்திப் பொருள்களைக் கொண்டு வருவதற்கான தடை விதிக்கப்பட்டு இருந்தமையால், உள்ளூர் விவசாய உற்பத்தியில் பெருக்கம் ஏற்பட்டு, விவசாய உற்பத்திகளில் தன்னிறைவு காணப்பட்டது.
இயற்கையான பசளைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருள்களால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், எவ்வித பாதிப்புகளையும் எதிர்கொள்ளாததுடன் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விலைகளும் மிகவும் குறைவாகவும் நியாயமாகவுமே காணப்பட்டன.
இதேபோன்ற நிலைமையையே தற்போது இலங்கை அரசாங்கமும் கையாள நினைக்கின்றது. குறித்த செயற்பாடு, வரவேற்கத்தக்கதாகக் காணப்பட்ட போதிலும், விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்றங்களும் நீர் நிலைகளில் மக்களால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களும் இலங்கையின் விவசாய துறையிலான வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிப்பதாகவே அமைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையிலேயே, இலங்கையின் அயல் நாடான இந்தியாவிலும் 201 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி சரிவை நோக்கிச் சென்றதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
2019 – 2020ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏழு சதவீதமாக இருக்கும் எனக் கணித்த ‘ரிசேர்வ் வங்கி’ தற்போது வளர்ச்சி வீதம் 6.9 சதவீதத்தைவிடக் குறைவாகும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொருளாதார ஆய்வு நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.2 சதவீதத்தைத் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளன.
எனவே, அயல் நாடுகளில் அதிலும் இலங்கைக்கு உதவும் நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், இலங்கையின் அரசியல் கட்டமைப்பு ஊடாக, அதன் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தியா, தனது பொருளாதார வளர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்துச் சிந்தித்து, மிகுந்த அவதானம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பிரதான விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான இறக்குமதித் தடையை, இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
எனவே, குறித்த தடையை நீக்க வேண்டிய நிலைக்கு, இலங்கை அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும். அல்லது, மறைமுகமாகவேனும் அனுமதி வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இவ்வாறான சூழலில், விவசாய உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு காணுவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்ற போது, பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறான நிலைமைகளைச் சீர் செய்வதற்கு, எந்தக் கட்சி ஆட்சிப்பீடம் ஏறினாலும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியமை தவிர்க்க முடியாதது ஆகும்.
இவ்வாறான நிலைமைகளை மக்கள் உணர்ந்துகொள்ளக்கூடிய அல்லது தெளிவுறும் நிலையை ஆட்சியாளர்கள் தற்போது முன்னெடுக்க மாட்டார்கள்.
பௌத்த மேலாதிக்க உணர்வோடு உள்ள பெரும்பான்மைச் சமூகம், இந்த நச்சுச்சூழலை உணரும் நிலைப்பாட்டில் இல்லாமையும் புலப்படுகின்றது.
நாட்டில் ஏற்படப் போகும் பொருளாதார தாக்கத்தின் விளைவுகளை, மக்கள் சந்திக்கின்ற போது, ஏதும் செய்ய முடியாத அல்லது அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தச் சந்தர்ப்பமின்றிய காலத்தில், மக்கள் இருப்பார்கள் என்பதே நிஜம்.