இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி…

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே? தடம் இதழில் உங்களது பேட்டி படித்தேன். அது பற்றிய எனது கருத்தை பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.இந்த பேட்டி இலக்கியத்தைவிடவும் உங்களை சுற்றியுள்ள சர்ச்சைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு சோட்டா கவர்மெண்ட்க்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ற வரிகளை ரசித்தேன்.

ஈழப்போரை பற்றி கூறியுள்ள பதில் குழப்பத்தை தந்தது. தனக்கு எதிராக உள்ளவர்களைதான் அரசு கொன்றது. அது எப்படி இனபடுகொலையாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். இறுதிபோரில் கொல்லப்பட்டது புலிகள் மட்டுமல்ல. ஐ.நாவின் கணக்குபடியே இறுதி சில மாதங்களில் மட்டும் நாற்பதாயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள். பாதுகாப்பு வளையம் என்று கூறி, மக்களை குழுமசெய்து, பிறகு அந்த இடத்தில் கொத்துகுண்டுகள் வீசப்பட்டது என்று தப்பித்துவந்தவர்கள், செய்தியாளர்கள் என பலரும் உறுதிசெய்துள்ளனர். இதை எப்படி நக்சைலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களை பகுதியாகவோ, முழுமையாகவோ திட்டமிட்டு கொலை செய்தால், அது இனபடுகொலை என்று ஏற்கிறது ஐக்கிய நாடுகளின் சபை. புலிகள் மக்களை கேடயமாக்கினர் என்று கொண்டாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்குமான ஒரு அரசு, இப்படி திட்டமிட்டு மக்களின் சாவு எண்ணிக்கையை பற்றி கவலைபடாமல் குண்டு வீசி கொல்லுமென்றால் அதை இனபடுகொலை என்று கூறுவதில் என்ன பிழை? ஒரு வேளை புலிகள், சிங்கள மக்களை கேடயமாக்கியிருந்தால், அரசு இதேவிதமாக குண்டுகளை வீசி மக்களை கொன்றிருக்குமா?

ஏப்ரல் 29ம்தேதி, புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனையில் குண்டு வீசப்பட்டது. அதைபற்றி கேட்டபோது, கோத்தபய ராஜபக்சே, அந்த மருத்துவமனை லெஜிட்மேட் டார்கெட்தான் என்று பேட்டியளித்தார். 2009 வருடம் மார்ச் மாதம் புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் ஏராளமான மக்கள் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சையளித்தால் காப்பாற்றலாம். மருந்துபொருட்கள் இல்லை. எனவே மருந்துபொருட்களை அனுப்பி உதவுங்கள் என்று அங்கு பணிபுரிந்த தமிழ் மருத்துவர் வரதராஜா இலங்கை அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்புகிறார். அங்கு தகுதியான மருத்துவர்கள் இல்லை எனவே மருந்துபொருட்கள் அனுப்பமுடியாது என்று இலங்கையின் சுகாதார அமைச்சர் பதில் அளிக்கிறார். உணவு பொருட்களையும், மருந்தையும் போர் கருவியாக பயன்படுத்தினால், அது மனிதகுலத்திற்க்கு எதிரான குற்றம் என்று ஐ.நாவின் சர்வதேச குற்றவியல் சட்டம், ரோம் உடன்படிக்கைபடி கூறுகிறது. இது போல் ஆவணமாக்கப்ட்ட ஆதாரங்கள் ஏராளம்.

மேலும் அங்கு நடந்த ஆயுத போராட்டத்தால் குமரன் பத்ம்நாபா போன்ற ஆயுத தரகர்கள் பலன்பெற்றனர் என்று கூறியுள்ளீர்கள். குமரன் பத்மநாபா புலிகள் அமைப்பை சேர்ந்தவர். புலிகளுக்கு மட்டும் ஆயுத கொள்முதல் செய்தவர். இவரை போன்றவர்கள் பலன் பெறதான் போரே நடந்தது என்கிற தொனி அந்த பேட்டியில் உள்ளது ஆயுத விற்பனைக்காகதான் ஈழப்போர் நடக்கிறது என்கிற வரிகளை சுஜாதா போன்றவர்கள் வேண்டுமானால் மேலோட்டமாக எழுதி செல்லலாம்.

எப்படியிருப்பினும் கண்ணுக்குமுன் நடந்த ஒரு மனிதபேரவலத்தை, வலியை பிரதிபலிப்பதாக அந்த பதில் அமையவில்லை.

அன்புள்ள

செந்தில்குமார்

அன்புள்ள செந்தில்,

சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு சிக்கலான அனுபவம் நிகழ்ந்தது. கேரளத்தில் ஒரு சர்வதேச நாடகவிழாவுக்கு சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினர் ஆகையால் அங்குவந்த அனைவரிடமும் விரிவாகப்பேச வாய்ப்பு கிடைத்தது. அவ்விவாதங்கள் தனிப்பட்டமுறையிலானவை என்பதனால் உடனடியாக எழுதவில்லை.

அதில் பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், இந்தியாவில் இஸ்லாமியர் இனஅழித்தொழிப்பு செய்யப்படுகிறார்கள் என. நான் அதிர்ச்சியுடன் அதை மறுத்தேன். அவர் இந்தியாவில் 1947க்குப்பின் நடந்த மதக்கலவரங்களின் பட்டியலைச் சொன்னார். அனைத்துமே இனஅழித்தொழிப்புக்காக இந்தியர்களால் திட்டமிட்டு நடத்தப்படுபவை என்றார்.

ஏன், குடும்பக்கட்டுப்பாடே இஸ்லாமியரை இல்லாமலாக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட சதித்திட்டம் என்று வாதிட்டார் அவர். நான் அவரை ஒருகட்டத்தில் வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் கண்ணீர் மல்கினார். தொண்டை அடைத்தது. உண்மையிலேயே நம்பித்தான் அதைச் சொல்கிறார் எனப்புரிந்துகொண்டேன்.

அடுத்தநாளே மணிப்பூர் மாநிலத்தைச்சேர்ந்த ஒருவர் சொன்னார், இந்தியா மணிப்பூரிகளை இனஅழித்தொழிப்பு செய்கிறது என. அங்கு நடந்த இந்திய அரசுசார்ந்த அனைத்துத் தாக்குதல்களையும் பட்டியலிட்டார். இனஅழித்தொழிப்புக்கு அவர் சொன்ன ஒரு வழிமுறை அதிர்ச்சிகொள்ளச்செய்தது, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது இன அழித்தொழிப்புக்காக இந்திய அரசு கண்டுபிடித்த வழிமுறையாம்.

இவர்களுடன் விவாதிப்பதே முடியாத காரியம். ஏனென்றால் உறுதியான ,உணர்ச்சிபூர்வமான நம்பிக்கை அது. போரிடும் தரப்புகள் மட்டுமே அப்படி உச்சகட்ட ஒற்றைப்படையாக்கத்தை நிகழ்த்தும். அதற்கு அப்பால் சென்று சிந்திப்பது அந்த உணர்ச்சிவளையத்துக்குள் இருப்பவர்களுக்கு எளிதல்ல.இதோ இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் காஷ்மீரில் இந்தியா செய்யும் இனஅழித்தொழிப்புக்கு எதிராக அறைகூவுகிறது.

இப்படி அறைகூவுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுவார்கள். ஒன்று தங்கள் சார்பில் செய்த மீறல்களை.இரண்டு, தங்கள் கொள்கையுடையவர்கள் செய்த இனஒழிப்புகளை தாங்கள் ஆதரிப்பதை

இந்தியாவில் நடந்த அனைத்து மதக்கலவரங்களிலும் இஸ்லாமியரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதயோ கணிசமான மதக்கலவரங்கள் இஸ்லாமியர் தங்கள் மத உணர்வுகள் புண்பட்டதாகச் சொல்லி ஆரம்பித்தவை என்பதையோ கணக்கில்கொள்ள மாட்டார்கள். மணிப்பூரில் ஆயுதந்தாங்கிய ராணுவங்களை அரசு எதிர்ப்பாளர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதையோ அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெருந்தாக்குதல்களை இந்திய ராணுவத்தின்மேல் தொடுத்திருக்கிறார்கள் என்பதையோ பேசமாட்டார்கள். இஸ்லாமியத் தீவிரவாதம் பாகிஸ்தானியர்களின் கண்களில்படாது. அவை வேறுவழியில்லாத எதிர்ப்புகள் மட்டுமே என வாதிடுவார்கள்.

இவர்கள் கண்ணில் இவர்களுக்கு சாதகமான அமைப்பு உண்மையிலேயே நிகழ்த்தும் இனஒழிப்ப்பும் படாது. குர்துக்கள் ஐம்பதாண்டுக்காலமாகக் கொன்று ஒழிக்கப்படுவதை இஸ்லாமியர் கருத்தில்கொள்ளமாட்டார்கள். சிறுபான்மையினரான குக்கி இனக்குழுவை மணிப்பூர் அங்கமிகள் கொன்று ஒழிப்பது இன ஒழிப்பு அல்லவா என நான் கேட்டபோது அந்த மணிப்பூர் நண்பர் சீறி எழுந்துவிட்டார். திபெத்தில் இன ஒழிப்பு நிகழ்கிறதா ந கேட்டால் நம்மூர் மாவோயிஸ்டுகள் கொதிப்பார்கள். ஏன் ,விடுதலைப்புலிகள் முஸ்லீம்களை துரத்தியது இனத்தாக்குதலா என்று கேட்டால் வெகுண்டு எழுவார்கள்.

ஆக, இந்த இனஅழித்தொழிப்புக் குற்றச்சாட்டு எப்போதும் அகவயமானது. மிகையுணர்ச்சிகளால் முன்வைக்கப்படுவது. அதை ஐயப்பட்டாலோ விவாதித்தாலோ அப்படிக் கேட்பவர்களை எதிரிகளாகக் கட்டமைப்பது. நேரடியான, அப்பட்டமான ஃபாஸிஸம். பிறிதொன்றுமில்லை. அது சில குழுக்களின் சொந்த லாபத்துக்காகச் செய்யப்படுவது. மிகையுணர்ச்சியுடன் முன்வைக்கப்படும் எதையும் பாய்ந்து ஏற்றுக்கொண்டு கூச்சலிடும் எளிய மனங்களை தங்களுடன் சேர்த்துக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்.

இனஅழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச்செயல்பாடுகள்’ [ http://www.preventgenocide.org/genocide/officialtext-printerfriendly.htm] அத்தகைய ஒரு செயல்பாடு ஈழத்தில் எண்பதுகளுக்கு முன்னர் தொடர்ந்து நடந்தது 2009க்குப்பின்னர் நீடிக்கிறது என நான் நினைக்கவில்லை. பாகிஸ்தானிகள் ஒவ்வொருநாளும் இந்தியாவில் பல்லாயிரம் இஸ்லாமியர் கொன்றுகுவிக்கப்படுகிறார்கள் என நம்புவதுபோல அங்கும் அதெல்லாம் நிகழ்கிறது என நம்புபவர்களிடம் பேச ஒன்றுமில்லை.

அப்படியென்றால் அங்கே நிகழ்ந்தது என்ன? முதலில், அங்கிருந்தது இனப்பாகுபாடு மற்றும் இன ஒடுக்குமுறை. அது எண்பதுகளில் இலங்கையில் இருந்ததைவிட அதிகமாக இன்று மலேசியாவில் உள்ளது. இனரீதியாக சமத்துவம் மறுக்கப்படுதல். சட்டங்களின் மூலம் ஓர் இனத்தின் வளர்ச்சி தடுக்கப்படுதல். அங்கே பிரச்சினையின் தொடக்கம் அது.

இதில் இங்குள்ளோர் மறந்துபோன ஒன்றுண்டு, அது எப்போதும் சுட்டிக்காட்டப்பட்டாகவேண்டும். சாஸ்திரி- சிரிமாவோ ஒப்பந்தபடியும் பின்னர் இந்திராகாந்தி காலத்திலும் இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளியினரான மலையகத்தமிழர் கூட்டம்கூட்டமாக குடியுரிமை மறுக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக கப்பல் ஏற்றி அனுப்பப்பட்டனர். இங்கே மத்திய அரசு உருவாக்கிய மலைக்குடியிருப்புகளில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். Tantea போன்ற அமைப்புக்கள் அவர்களுக்காக உருவாக்கப்பட்டன. இன்றும் ஊட்டியில் அவர்கள் அப்படியே பரிதாபகரமாக மலைச்சேரிகளில் வாழ்கிறார்கள். ஆர்வமிருப்பவர்கள் சென்று அவர்களின் கதைகளைக் கேட்கலாம்.

இலங்கை மண்ணில் பிறந்து அந்த நாட்டை உருவாக்கிய அம்மக்களுக்கு குடியுரிமை மறுக்கபடவேண்டும் என்றும் அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்றும் வாதிட்டவர்கள் இலங்கைத்தமிழர்கள்தான். அவர்களின் பெருந்தலைவர் சி.ஜி.பொன்னம்பலம்தான் நாடாளுமன்றத்தில் அக்கொரிக்கையை முன்வைத்தார். அது இன ஒடுக்குமுறையேதான். ஆனால் அதைச்செய்தவர்கள் அங்குள்ள தமிழர்களும்தான். ஏனென்றால் அந்த ஏழைமக்கள் ‘தோட்டப்பறையர்கள்’ ‘கள்ளத்தோணிகள்’. ஆனால் அப்போதே தாங்கள் இன அழித்தொழிப்புக்கு ஆளானோம் என இப்போது நம்மிடம் சொல்கிறார்கள்.

இனஒடுக்குமுறைக்கு தாங்களும் பலியாகத் தொடங்கியபோதுதான் மெல்ல யாழ்ப்பாணத் தமிழர்கள் அதற்கு எதிராகத் திரண்டனர். போராட்டங்கள் தொடங்கியதுமே மிகவிரைவிலேயே ஆயுதப்போர் ஆரம்பித்தது. யாழ்ப்பாணச்சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட அப்போரில் இருந்து அங்குள்ள மலையக மக்கள் கடைசிவரை முழுமையாகவே விலகி நின்றனர் என்னும் வரலாற்று யதார்த்தம் நம் முன் உள்ளது. மட்டக்களப்பு மக்களும் அதில் இரண்டாமிடமே வகித்தனர். கருணா தலைமையில் மட்டக்களப்பு மக்களின் விலக்கமே இறுதியில் முழுமையான தோல்விக்கும் காரணமாகியது.

இத்தனை சின்னஞ்சிறிய சமூகம் போரை முன்னெடுக்கமுடியுமா, வெல்லமுடியுமா என்பதேதும் சிந்திக்கப்படவில்லை. இந்திய உளவுத்துறை அப்போருக்கான முழுமுதல்காரணம் என்பதை வரலாறு அறிந்தோர் மறுக்கமாட்டார்கள். பின்னர் சர்வதேச ஆயுதக்கடத்தல் அரசியல். போர் அம்மக்கள்மேல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது என்பதை நான் பேசிய ஒவ்வொரு ஈழத்தமிழரும் இன்றுஅந்தரங்கமாகச் சொல்கிறார்கள். கால்நூற்றாண்டுப்போருக்குப்பின் அந்தப்போராட்டம் முழுமையான தோல்வியை அடைந்தது.

அதன் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதன் தியாகங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதன் விளைவு சகோதரப்போரும், உள்பூசல்களும், கொலைகளும்தான். கடைசியாக முழுமையான அழிவு. இன்று இந்த வரலாற்றை எப்படி கொஞ்சமேனும் சமநிலையுடன் எதிர்கொள்வது, எப்படி ஆராய்வது என்பதே கேள்வி. அதை உணர்ச்சிக்கொந்தளிப்பான புராணமாக ஆக்கிக்கொள்வது அல்ல. இன்று கொந்தளிப்பவர்கள் பலர் செய்தித்தாளில் அரைகுறையாக வாசித்து மேலோட்டமாக அறிந்து தரப்புகள் எடுப்பவர்கள். நான் குறைந்தது இருபத்தைந்தாண்டுக்காலமாக அதற்கு ஏதோ ஒருவகையின் அணுக்கமாக இருந்துகொண்டிருந்தவன்.

அங்கே அரசு நிகழ்த்தியதை இன அழித்தொழிப்பு என்று வாதிடுவது நம் உணர்ச்சிகரவாதம். அங்கே மலையகத்தமிழர் சிங்களர் சூழ்ந்த பகுதிகளில் மட்டும்தான் வாழ்கிறார்கள். இன அழித்தொழிப்புக்கு அவர்கள் ஆளானார்களா என்ன? போர் உச்சகட்டமாக நடந்துகொண்டிருந்தபோதுகூட அவர்கள் தாக்கப்படவில்லையே.அல்லது அவர்கள் தமிழர்களே அல்லவா?

போர் எப்போதுமே உச்சகட்ட ஒற்றைப்படைப் பிரச்சாரம், அதிதீவிரமான உணர்வுநிலைகள் வழியாக நிகழ்வது. அதன் கசப்புகளும் காழ்ப்புகளும் முழுக்க இன்று கடந்தகாலமாக ஆகிவிட்டன. அப்போரில் இரு தரப்புமெ எல்லா எல்லைகளையும் மீறிவிட்டன.பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்கள் , இதழாளர்கள் கொல்லப்பட்டனர். அந்தப்பட்டியல் மிகமிகப்பெரிது. அது எப்போதுமே அப்படித்தான். எந்த போருமே விதிவிலக்கு அல்ல.

இறுதியாக போர்முனையில் எளியமக்கள் கொன்றழிக்கப்பட்டனர். அது அரசவன்முறை. ஆனால் அந்த மக்களை போர்முனைக்குக் கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டுசென்றது சிங்கள அரசல்ல. அந்தமக்களை கொன்றது இனப்படுகொலை என்றால் அவர்களை கேடயமாகப் பயன்படுத்தியவர்கள், அவர்கள் தப்பமுயன்றபோது தாக்கியவர்கள் அதில் எந்தப்பொறுப்பும் அற்றவர்களா என்ன?

அப்படியென்றால் அங்கு நிகழ்ந்தது என்ன? அது போர்க்குற்றம். புலிகள் எளிய மக்களை போர்முனைக்குக் கொண்டுசென்றார்கள். ஆனால் அந்த மக்கள் சிங்கள அரசின் குடிகள். அவர்களை அவர்களின் அரசு தாக்கியதென்பது போர்க்குற்றம். அதன்பின் கைதானவர்களை சட்டப்படி நடத்தாமல் கொன்றதும் போர்க்குற்றமே. போர்க்குற்றத்துக்காக சிங்கள அரசு சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்படவேண்டுமா என்றால், ஆம்.

ஆனால் அதைச் சொல்லும்போது புலிகளின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவிட்டு சொல்ல முடியாது. சொன்னால் அதற்கு எந்தவிதமான மதிப்பும் இருக்காது. புலிகள் ஓர் அரசு அல்ல, சிங்கள அரசு ஜனநாயகபூர்வமாகத் தேர்வுசெய்யப்பட்டது. பிற அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அது சர்வதேசச் சட்டங்களை கடைப்பிடிக்கக் கடமைப்பட்டது. ஆகவே அதை விசாரிக்கமுடியும்.

அது ஏன் இன்னமும் நிகழவில்லை? அந்தக்கோரிக்கைக்கு ஃபேஸ்புக்குக்கு வெளியே ஏன் மதிப்பே இல்லை? ஏனென்றால் அங்கே நிகழ்ந்தது இனஅழித்தொழிப்பு என்று வாதிடப்படுவதுதான்.

அப்படி வாதிடும்போது அதற்கு எந்த சர்வதேசமன்றத்திலும் மிக எளிமையான நேரடிப்பதிலே சிங்கள அரசால் சொல்லப்பட முடியும். அது இன அழித்தொழிப்பு என்றால் 2009க்குப்பின் எத்தனை வன்முறைகள் நடந்தன? மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள், மறுவாழ்வு அளிக்கப்படுகிறது என அரசு சொல்லமுடியும். எங்கும் அதுசெல்லுபடியாகும். இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைபாடே அங்கு இன அழிதொழிப்பு நிகழவில்லை என்பதுதான்.

மேலும் அது இனஅழித்தொழிப்பு என்றால் அது போர்நின்றதும் நின்றுவிடாது. இன்றும் அது அங்கே நிகழ்கிறது என்று சொல்லும்போது அங்கு இப்போது மக்களால் தேர்வுசெய்யப்பட்டு நிகழும் அரசை, அங்குள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் சிந்தனையாளர்களையும் இனஅழித்தொழிப்புக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என சித்தரிக்கிறார்கள். அதற்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்?

உண்மையில் இதை திருப்பித்திருப்பிச் சொல்பவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பியநாடுகளில் வாழும் ஈழத்தமிழரில் ஒருசாராரும் தமிழகத்தின் பிரிவினைபேசும் தமிழ்த்தேசியர்களும் மட்டுமே. சர்வதேச அளவில் எவராலும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தியாவில்கூட அதற்கு ஆதரவாக ஒரு சிறு குரலை உருவாக்க முடியவில்லை. ஏனென்றால் அதற்கு புறவயமான ஆதாரங்கள் இல்லை.

இனப்படுகொலை என்றேல்லாம் நான் நம்புகிறேன், மேடைகளில் கொந்தளிப்பேன், ஃபேஸ்புக்கில் சண்டைபோடுவேன் என்பதற்கெல்லாம் எந்த பொருளும் இல்லை. அது பொதுவாக உலகின்முன் நிறுவப்படவேண்டும். உலகம் அத்தகைய ஒரு நிலைபாட்டை முழுமையாகவே புறக்கணிக்கும். காரணம், அது ஒரு மிகையுணர்ச்சி வெளிப்பாடு மட்டுமே.

ஆனால், போர்க்குற்றம் என்பதே குற்றச்சாட்டு என்றால் அது எங்கும் நிற்கும். எத்தனை ஆண்டுக்காலம் கழித்தும் அது நீடிக்கும். போர்க்குற்றம் எப்போதுவேண்டுமென்றாலும் விசாரிக்கப்படலாம். அதற்கு இன்னமும் கூட ஆதாரங்கள் சேகரிக்கப்படலாம் அதை ஐநாவில் முன்வைத்துக்கொண்டே இருக்கலாம்.

அதனால் நடைமுறைப்பயன் உண்டா என்றால் நேரடியாக இல்லை. ஏனென்றால் உலகிலுள்ள அத்தனைநாடுகளும் ஈழத்தில் சிங்கள அரசு செய்ததை தாங்களும் செய்பவையே. அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய சிங்களர்களையே பல்லாயிரக்கணக்கில் கொன்றழித்தது சிங்கள அரசு என்னும்போது வேறென்ன பார்க்கவேண்டும்? இந்தோனேசியாவில், தாய்லாந்தில் ,மலேசியாவில் எல்லாம் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் எவையும் தண்டிக்கப்பட்டதில்லை

ஆனால் அப்படி ஒரு கோரிக்கை அல்லது குற்றச்சாட்டு இருந்துகொண்டிருக்கும் வரை சர்வதேச அளவில் ஒரு கட்டாயம் இருப்பதனால் சிங்கள அரசு எங்கும் சற்றுத் தயங்கும். இன ஒதுக்குமுறையை நேரடியாகச் செய்யமுடியாது. அது ஒன்றே அம்மக்களுக்கு லாபம்

ஆனால் ஏன் அதைச் சொல்லமாட்டேன் என்கிறார்கள்? ஏன் இன அழித்தொழிப்பு என்றே முழங்குகிறார்கள். இந்த ஈழவிவகாரத்தில் புலம்பெயர்ந்து ஐரோப்பியநாடுகளில் அகதிகளாக முழுக்குடியுரிமை பெறாது வாழ்பவர்களின் தனிப்பட்ட இலக்குகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அவர்களுக்கு இலங்கையில் இனஅழித்தொழிப்பு இன்னமும் நிகழ்கிறது, எனவே அங்கே திரும்பிச்செல்லமுடியாது என்ற வாதம்தான் அந்நாடுகளில் குடியுரிமை பெற அவசியமானது. அதற்கான குரல்களையே தமிழகத்திலும் எழுப்புகிறார்கள்.

இந்திய முஸ்லீம்கள் இன அழித்தொழிப்புக்கு ஆளாகிறார்கள் என்னும் வாதம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு அவசியமானது. அதைப்போன்றதே இதுவும். உண்மையில் இதனால் இலங்கை மக்களுக்கு பெரும் நெருக்கடியும் இழப்பும்தான் ஏற்படும். அவர்களின் அரசியலை அவர்களே தீர்மானிக்கவிட்டுவிடுவதையாவது நம்மவர்கள் செய்யலாம்.

இங்கும் ஐரோப்பாவிலும் வசதியாக அமர்ந்தபடி டக்ளஸ் தேவானந்தாவும் விக்னேஸ்வரனும் எல்லாருமே இன அழித்தொழிப்புக்குத் துணைநிற்கும் துரோகிகள் என முழங்குகிறார்கள். சென்றகாலங்களில் இப்படிப்பட்ட ‘துரோகி’ முழக்கங்களால்தான் தமிழ்ச்சமூகம் பிளவுண்டது. தனிமைப்படுத்தப்பட்டது. அந்த மூடத்தனமாக வேகம் இப்போதும் இங்கே நீடிக்கிறது. பாருங்கள், இன்றும் என்ன சொல்கிறார்கள். ‘இனஒழிப்பு என்பது என் தரப்பு, அதை மறுத்து அந்த அழிவை அரசபயங்கரவாதம் என்பவன் தமிழ்விரோதி, சிங்கள ஆதரவாளன்’ இந்த மூர்க்கம் அல்லவா இத்தனை அழிவுக்கும் ஆதாரம். இத் இருக்கும் வரை எதிரிகளை ஏன் வெளியே தேடவேண்டும்?

இத்தகைய கூச்சல்கள் வழியாக இவர்கள் இலங்கைவாழ் தமிழர்களுக்கு பெரிய அநீதி இழைக்கிறார்கள். அதற்கான எதிர்ப்பு அவ்வப்போது தீவிரமாக இலங்கைத்தமிழ் தரப்பிலிருந்து வெளிப்படவும் செய்கிறது. சமீபத்தில் இலங்கை ஜெயராஜ் ‘இலங்கையில் இனப்படுகொலை நிகழும்போது கொழும்பில் கம்பன் விழா நடத்துகிறார்’ என ஆஸ்திரேலிய புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்களால் குற்றம்சாட்டப்பட்டபோது மிகக்கடுமையான மொழியில் ‘உங்கள் பிழைப்புக்காக எங்கள் வாழ்க்கையை அழிக்காதீர்’ என பதில்கொடுத்தார்.

உண்மையில் ‘தொப்புள்கொடி’ உறவுகள் மேல் இத்தனை ஆர்வமும் பற்றும் நம்மிடம் உள்ளதா என்ன? இருந்திருந்தால் இங்குள்ள அகதிமுகாம்கள் கால்நூற்றாண்டாக இத்தனைபரிதாபகரமான நிலையிலா இருந்திருக்கும்? மாறிமாறிவந்த அரசுகள் அவர்கள்மேல் அடிப்படை மனிதாபிமானத்தையாவது காட்டினவா?

தனிப்பட்ட முறையிலும் என் நண்பர்களுடன் இணைந்தும் அகதிகளாக உள்ள ஈழமாணவர்களுக்கு உதவ பல பணிகளை முன்னெடுக்கையில் காண்பது முற்றிலும் வேறு யதார்த்தம். இங்கு எவருக்கும் அந்த மக்களின் மேல் எந்த அனுதாபமும் இல்லை. மிகச்சிறிய அளவில்கூட நிதி வசூலாவதில்லை. அவர்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் வைத்திருக்கிறோம் நாம். உண்மையில் இனஅழிப்பு நடப்பது இங்கே அகதிமுகாம்களில்தான் என்றுகூட சொல்லிவிடத் தோன்றுகிறது.

இந்தமண்ணில் பிறந்து இங்கே வளர்ந்த இலங்கை வம்சாவளியினருக்கு இங்கே குடியுரிமை கிடையாது. அகதியாகப்பிறந்து அகதியாக வாழும் அம்மக்களுக்கு இங்குள்ள அரசு அளிக்கும் கல்விச்சலுகைகள் இல்லை. எந்த அரசுசார் உரிமைகளும் இல்லை. படித்தபின் வேலையும் இல்லை. திபெத், கிழக்கு வங்காள மக்களை பத்தாண்டுகளுக்குள் குடியுரிமை கொடுத்து ஏற்றுக்கொண்ட இந்தியா அவர்களை இன்னமும் அகதிகளாகவே வைத்துள்ளது

சென்ற இருபதாண்டுக்காலத்தில் பெருவல்லமையுடன் தமிழக அரசியல்கட்சிகள் பல மத்திய அரசை கட்டுப்படுத்தியிருக்கின்றன. தமிழக அரசியல்வாதிகள் பலர் தேசிய அளவில் செயல்படுகிறார்கள். நினைத்திருந்தால் பத்துநாளில் முடியவேண்டியபணி.

சென்ற நான்காண்டுகளாக இதைத் திரும்பத்திரும்ப எழுதிவருகிறேன். பல மக்கள் பிரதிநிதிகளுக்கு நானே நேரில் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஆதரவாக ஒருகுரலும் எழுந்ததில்லை. இங்கே நிகழும் கொந்தளிப்புகளைப்பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் சாகவே இல்லை என நான் சொல்லிவிட்டேன் என்று எனக்கு நாளொன்றுக்கு இருபது கடிதங்கள். எதற்கு எப்படி விளக்கம் சொல்வது?

கொந்தளிப்பவர்கள் இங்குள்ள அகதிகளை நாம் இன அழித்தொழிப்பு செய்வதற்கு எதிராக ஏதாவது செய்யலாம். ஒரு ஃபேஸ்புக் பதிவுக்கு ஆயிரம் ரூபாய்வீதம் அம்மக்களுக்குச் செல்லும் என்றால் எவ்வளவு பெரிய தொகை! இத்தனை ஆண்டுகளில் இத்தனைகுழுக்கள் இங்கிருக்க இவர்களுக்கு உதவ ஒரு மையநிதியமைப்பை உருவாக்கியிருக்கலாம். வங்காளிகள் அதைச்செய்து அம்மக்களை அந்தமானிலும் அஸாமிலும் மறுகுடியமர்வுசெய்தனர். குடியுரிமை பெற்றுக்கொடுத்தனர். இங்கே கூச்சல்கள் அதிகம் , செயல் என எதுவுமே இல்லை. குறைந்தபட்சம் அவர்களை இந்தியக்குடிமக்கள் ஆக்கவேண்டுமென ஒரு பெரும் மனு உருவாக்கி மக்களவை உறுப்பினர்களுக்கு அளித்து கட்டாயப்படுத்தலாம்.

அல்லது குறைந்தது நண்பர் முத்துராமன் போல களத்தில்நின்று சேவைசெய்பவர்களுக்கு ஏதேனும் பண உதவிகள் செய்யலாம். விஷ்ணுபுரம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட சந்திரசேகர் அறக்கட்டளை ஈழ அகதி மாணவர்களின் படிப்புக்காக மட்டுமே செயல்படுவது. நண்பர் முத்துராமன் அதை முன்னின்று நடத்துகிறார்.

ஜெ

பி.கு குமரன் பத்மநாதன் என்னும் பெயர் பிழையாக தடத்தில் அச்சாகி உள்ளது. புலிகளின் ஆயுத விவகாரங்கள் அனைத்தையும் கையாண்டவர், பிரபாகரனுக்கு ஒருபடி மேலாக இருந்த தலைவர், இலங்கையில் இப்போது நலமாக , சுதந்திரமாக இருக்கிறார். ஏன் எந்தப்போரும் அவரை ஒன்றும் செய்யவில்லை?

சந்திரசேகர் அறக்கட்டளை