இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு – ஒரு மீள்பார்வை

  1. இவ்வருடம் ஜூலை 03ம் திகதியுடன் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு 65(2008) வயதாகின்றது. 1943 இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஜூலை 03ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைச் சார்ந்த கம்யூனிஸ்ட்டுகள் 1935ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் அங்கம் வகித்தனர். இக்கட்சியின் பிரதான இலக்குகள் இரண்டாக இருந்தன. ஒன்று, அப்போது இலங்கையை தனது காலனித்துவப்பிடியில் வைத்திருந்த பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவித்து, இலங்கையை ஒரு சுதந்திர நாடாக்குவது. இரண்டாவது, சுதந்திர இலங்கையில் சோசலிச அரசொன்றை நிறுவுவது. இந்த இரண்டு நோக்கங்களையும் அடைவதற்காக, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அடக்குமுறைகளின் கீழ் லங்கா சமசமாஜக் கட்சி கடுமையாகப் போராடியது.