தேசிய மக்கள் சக்தியை அதிகம் ஜேவிபி ஆக பார்த்த மக்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அது ஒரு தீவிரவாத அமைப்பில் இருந்து உருவான அரசியல் கட்சி என்றாகவும்…….
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் ஜேவிபியில் முக்கிய அங்கத்தவராக அடையாளபடுத்தப்பட்ட விமல் வீரவன்ச(Wimal Weerawansa) இன் இனவாத அரசியல் கருத்துகள் ஊடாகவும் கூடவே இதற்கு முன்பான ஜேவிபியின் தலைவர் சோம வம்ச அமரசிங்கா(Somawansa Amarasinghe)வின் இனவாதச் பேச்சகளும் ஜேவிபி உம் ஒரு இனவாதக் கட்சிதான் என்ற விம்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
கூடவே சிங்களப்பகுதியில் இருந்த ஐ.தே. கட்சி சீறீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவை இலங்கையில் 1970 இற்கு பின்னரான் கலவரங்களின் பின்னணியில் ஜேவிபிதான் இருந்தது என்று கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்தி தம்மை இதிலிருந்தும் விடுவிக்க முயன்றனர்.
இதனை மக்கள் ஓரளவு நம்புவதற்கு…? ஜேவிபி இனால் மேற்கொள்ளப்பட சிங்களத் தலைவர்கள் அதிலும் குறிப்பாக விஜய குமார ரனதுங்காவின் கொலைகளும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களின் கொலைகளும் காரணமாக இருந்தன.
ஜேவிபின் ஆரம்பகால 5 வகுப்புகளின் ஒன்றான இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றாக மலையக மக்களை இலங்கையிற்கு தொழிலாளர்களாக கொண்டு வந்ததை முன் நிறுத்தியதும் மலையக உழைக்கும் மக்கள் ஜேவிபி இன் பால் நம்பிக்கையுடன் அணுகுவதை தடுத்து நிறுத்தியது.
ஆனாலும் சில வருடங்களுக்கு முன்பு அனுர குமார திச நாயக்காவின் மலையக மக்களை வடக்கு கிழக்கு மக்கள் தம்மோடு இணைந்த தமிழ் மக்களாக கருதுவார்களா…? இணைப்பார்களா…? என்ற மலையக மக்களை ஒதுக்கலாக பார்க்கும் யாழ் மையவாத கருத்திற்கு சம்மட்டி அடிபோட்ட கருத்திலுக்கு தமிழ் தரப்பு தமது வெளிப்படையான இணைவுக் கருத்துகளை தெரிவிக்கவில்லை.
இதில் உள்ள ஆழமான விடயத்தை(பாகுபடுத்திப் பார்க்கும் மேலாதிக்கப் பார்வை) மலையக மக்களும் புரிந்து கொண்டதாக உணர முடியவில்லை.
முழு இலங்கையிற்குமான அதிகாரப் பரவலாக்கம் என்றான 13 வது திருத்தச் சட்டம் தமிழருக்கான அரசியல் தீர்வாக மட்டும் புரியப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தது இதனை ஆதரித்வர்களை ஒப்பந்தம் ஏற்பட்ட காலங்களில் தெற்கில் கொலை செய்தது இதன் தொடர்சியாக தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை பிரித்தது என்றான சந்தேகங்கள் ஜேவிபி மீது தொடர்ந்த வண்ணம் இருந்தன.
இவற்றை மீறி ஜேவிபி இனால் மேற்கொள்ளப்பட்ட இயற்கை அனர்த்தங்கள் அதிலும் சிறப்பாக சுனாமி காலத்தில்… நிவாரணத்தில்…. தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கில் அவர்கள் செயற்பட்ட விடயம்(தலையில் கடகங்களில் மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணப் பொருட்களை காவிச் சென்று உதவியதை நாம் அதிகம் பேர் அறியோம்.
ஆனால் இது அதிகம் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது.
காலி போன்ற இடங்களில் முஸ்லீம்கள் எதிரான சிங்கள காடையர்களின் தாக்குதலை தடுத்து நிறுத்திய சகோதரத்துவ செயற்பாடுகள் அதிகம் மக்கள் மத்தியில் முன்னிலை பெறவில்லை.
கூடவே தமிழ் பேசும் பகுதியில் இடதுசாரி ஜனநாயக சக்திகளிடம் இதில் சிறப்பாக ஈழவிடுதலை அமைப்புகளை பிரிவினைவாதிகள் என்றாக மட்டும் பார்த்து உறவுகளை அரசியல் ரீதியாக அதிகம் அணுக முடியாத உறவுகளை கொண்டிருந்ததும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னாள் விடுதலைப் போராளிகளிடம் பெரும் நம்பிக்கைகளை ஏற்படுத்தவில்லை.
ஆனால் நாடு முழுவதும் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை ஊழல் என்றாக உருவாகி ‘அரகலய’ போராட்டம் எல்லா மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்திய போது…..
இது வரை மாறி மாறி ஆண்டவர்களை தவிர்த்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதான உணர்வை மக்கள் அடைந்த போது தந்திரோபாய அடிப்படையில் அதுதான் சரியானது என்பதாக மக்கள் அதிகம் உணர முற்பட்ட போது ஜேவிபி தன்னை ஏனைய பலருடனும் இணைத்து தேசிய மக்கள் சக்தியாக காட்டிக் கொண்டு களம் கண்ட வெற்றிதான் அனுராவின் ஜனாதிபதி வெற்றி.
மாறாக தேர்தலின் போது அவர்களிடம் என்ன கொள்கை உள்ளது என்பது இரண்டாம் தரப்பட்சமாகவே மக்களால் பார்க்கப்பட்டது.
இவ்விடத்தில் இன்னொன்றை கூறியாக வேண்டும் ‘அரகலய’ போராட்டத்தில் அதிகம் களம் கண்ட முன்னிலை சோசலிச கட்சி இந்த இடத்தை தவறவிடப்பட்டதாக உணர முடிகின்றது.
ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்று உருவான முன்னிலை சோசலிச கட்சியும் ஜேவிபி உம் ஐக்கியப்பட்டு பயணிப்பதற்கான சூழலும் ஏற்படவில்லை.
இதனை இரு தரப்பும் ஏற்கவும் இல்லை.
இதன் தொடர்ச்சியாக மூன்று அமைச்சர்கள் ஓரளவிற்கு சரியான நியமனங்கள் என்றாக மாகாணங்களுக்கான கவனர்கள், நிறுவனத் தலைவர்கள் என்றான ஒரு மாதம் கடந்த நம்பிக்கை தரும் நகர்வுகள் அவர்களுக்கான மக்கள் ஆதரைவை நாடு முழுவதும் அதிகரித்து இருக்கின்றது.
இதற்கு வலுச் சேர்ப்பதாக தனது கட்சிக்கு அப்பால் மக்கள் நலன்களில் அதிக அக்கறை ஈடுபாடு உடைய படிச்ச பெண் ஒருவரை பிரதம மந்திரியாக தெரிவு செய்ததும் பெண்கள் மத்தியில் மட்டும் அல்ல இதற்கு அப்பாலும் ஆதரவுத் தளத்தை அதிகரித்தும் இருக்கின்றது.
பதவி ஏற்பு நிகழ்வுகளை நடத்துதல் ஏனைய நிர்வாகச் செயல்களில் காட்டும் எளிமையும் மக்களை அதிகம் கவர்ந்து வருவதுடன் அவர்கள் மேல் நம்பிக்கையும் கட்டியெழுப்பி வருகின்றது.
இதனால் பாரளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுவருவதாக உணர முடிகின்றது.
அது தமிழ் பேசும் மக்கள் என்றாக மலையக மக்கள் முஸ்லீம்கள் மத்தியிலும் பாராளுமன்ற பிரதிநிதிகளை தனதாக்கும் அளவிற்கும் விரிந்தும் இருக்கின்றது.
இதற்கு சாதகமாக முதுபெரும் வயதான பாரம்பரிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தலில் பங்கு பற்றுவதற்கு ‘அஞ்சி’ ‘ஓய்வு’ ஐ அறித்ததும் இங்கு தேசிய மக்கள் சக்தி வெற்றிகளை பெறுவதற்கான கட்டியங்களை அதிகம் பொது வெளியில் காட்டி நிற்கின்றது.
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வென்ற பின்பு அவர்கள் சந்திக்க இருக்கும் சவால்களே அதிகம் இது பற்றி அடுத்த பதிவில் பேசுவோம்…
(தொடரும்…)