மறுபுறத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அரசியல் மிதவாதத் தலமைகள் தமது கொழும்பு வாழ் சுக போக வாழ்விற்கான அரசியலை உறுதி செய்யும் அப்புக்காத்து வேலைகளுக்கு அப்பால் எதனையும் செய்யவில்லை…. செய்வதாக நோக்கமும் இல்லை.
இதற்கு அவர்கள் கொழும்பில் ஒரு முகத்தையும் வடக்கு கிழக்கில் இன்னொரு முகமான தமிழ் குறும் தேசிய வாதத்தையும் தமது அரசியல் மூலதனமாக பாவித்தனர்… பாவிக்கின்றனர்.
1980 களில் ஈழவிடுதலை அமைப்புக்கள் பல தோன்றி இதற்குள் ஒரு இடதுசாரிக் கருத்தியல் அது சார்ந்த செயற்பாடுகள் மேலெழுந்த போது இங்கு நிலவ வேண்டிய பன்முகத்தன்மையை தகர்த்து ஒற்றைத் தலமையிலான வலதுசாரிகளின் எழுச்சியை அது இலங்கை அரசு பின்பு இந்திய அரசிற்கு எதிரான ‘முற்போக்கான’ போராட்டமாக இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் திராவிடக் கொள்கையாளர்கள் பகுத்தறிவாளர்களாக அதிகம் பார்க்கப்பட்ட நிலமைகளை ஏற்படுத்தியது.
அது இறுதியில் முள்ளிவாய்காலில் பொதுமக்களும் புலிகளுடன் சேர்ந்து கொல்லப்படுவதை தடுத்த நிறுத்த முடியாமல் செய்துவிட்டது.
தமிழ் பேசும் பிரதேசத்தில் பன்முகத் தன்மை தொடர்ந்தும் பேணப்பட்டிருந்தால் இந்த அழிவு நிச்சயம் இந்த அளவிற்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.
ஆயுதங்களால் தடுத்து நிறுத்த முடியாத இறுதிக்கட்ட அழிவுகளை இந்த பன்முகத் தன்மை நிச்சயமாக பலமாக ஒருங்கிணைந்து பலமுனையில் நின்று தடுத்து நிறுத்தியிருக்கும்.
புலிகளின் இந்த ஒற்றைப் போக்கும் அதற்கு முண்டு கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த கொலைகளின் இலங்கை அரசுக்குரிய சம பங்களாளழகளாக மாறி இருக்கின்றனர்.
இது கசப்பானது ஆனாலும் இந்த உண்மையில் இருந்துதான் இன்றைய அரசியலை நாம் நகர்த்தியாக வேண்டும்.
புலிகளின் ஒற்றைத் தலமையை பெரும்பானமை சிங்கள அரசியல் கட்சிகளில் யாரும் விரும்பவில்லை இடையிடையே தமது தேவைகளுக்காக இதனைப் பாவித்துக் கொண்டனர்.
இதில் முதன்மையானவர் பிரேமதாச, இரண்டாமவர் ரணில் விக்கிரம சிங்க, மூன்றாவர் சந்திரிகா.
இவர்கள் யாவரும் புலிகளின் பிரசன்ன காலத்தில் புலிகளுடனும் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் தமது உறவுகளை வைத்துக் கொண்டனர்.
இதனை இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் உருவான இணைந்த வடக்கு கிழக்கு மகாண சபையை இல்லாம் ஒழிப்பதற்கு பிரேமதாசாவும் வடக்கு புலி கிழக்குப் புலி என்ற மோதலால் பிளவுபடுதலுக்கு சந்திரிகாவும் நல்லாட்சி என்பதாக ரணிலும் நன்றாகவே பயன்படுத்தினர்.
அப்போது எல்லாம் இந்த புலி எதிர்ப்பு தமிழ் தேசிய அரசியல் எதிர்ப்பு என்பதில் ஜேவிபி தன்னை இணைத்துக் கொண்டுதான் இருந்தது.
அதனை தமிழ் தேசியம் என்று பேசியவர்கள் இது தமிழருக்கு எதிரான ஜேவிபி இன் செயற்பாடாக காட்டுவதற்கு ஏதுவாக பயன்படுத்தினர்.
இவை எல்லாவற்றின் தொடர்ச்சியாக அரகரல போராட்டத்தில் போராளிகளாக மட்டும் அல்ல அதற்கு முன்னரான கொழும்பு என்றான சிங்களப் பிரதேச வெள்ளப் பெருக்குகளில் மனிதாபிமான செயற்பாட்டாளர்களாக இணைந்து செயற்படாத தமிழ் மக்கள் தொடரவும் செய்ய வழி வகுத்தது.
பத்து வருடத்திற்கு மேலாக வடபகுதி ஜேவிபி இன் செயற்பாட்டிற்கு பொறுப்பாக தோழர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டு புங்கங்குளம் சந்தியிற்கு அண்மையில் அவர்கள் அலுவலகம் அமைத்து செயற்பட்டாலும் ஜேவிபியினால் அதிகளவில் தமது அமைப்பிற்கான சிறந்த உறுப்பினர்களை உள்வாங்க முடியவில்லை.
இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு பாரம்பரிய சீன கம்யூனிஸ்ட் கட்சியில் வேலை செய்த பலரும் ஜேவிபி இன்பால் அதன் தலைவர் றோகனா விஜயவீர மீது வெறுப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமையினால் இடதுசாரி கருத்தியலைக் கொண்ட யாரும் ஜேவிபியின் பால் செல்லவும் இல்லை அவ்வாறு யாரும் பேசுவதை மறுத்துரைப்பவர்களாகவும் இருந்தமையும் வடக்கில் தமக்கான உறுப்பினர்களை இணைத்தல் என்பது அதிகம் சாத்தியப்படாத சூழலில்…
அனுராகுமாரவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி யாழ்ப்பாணக் குடா நாட்டிலும் ஏனைய வட பிரதேசங்கள் எங்கும் தேர்தலில் நிற்பதற்கான ஜேவிபி வேட்பாளர்களாக சிறந்தவர்களை நிறுத்துவதில் சங்கடங்களை சந்தித்த சூழலிலேயே இன்றை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்த நிலமை ஒப்பீட்டளவில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மலையகத்தில் குறைவாக இருந்தாலும் அங்கும் இது உணரப்பட்டாலும் தமிழ் தேசியம் பேசுபவர்களை விட சிறந்து வேட்பாளர்களாகவே ஜேவிபின் வேட்பாளர்கள் பொதுவில் அடையாளப்படுகின்றனர் என்ற உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியிற்கு பின்னர்தான் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்னமும் இடதுசாரிச் செயற்பாட்டளர்களாக அறியப்படும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர் தமது கட்சியின் சார்பாக தேசிய மக்கள் சக்தியிற்கு ஆதரவாக பாராளுமன்றத் தேர்தலில் செயற்படுதல் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.
இதனை ஜேவிபி உம் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் பல மாதங்களுக்கு முன்னரே தோழமை சக்திகளாக பேச்சுவார்த்தைகள் மூலம் நெருங்கி இருக்க வேண்டும்.
அப்படியான ஒரு நிலமை ஏற்பட்டிருந்தால் தற்போதைய தமிழ் பிரதேசங்களின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை விட சிறந்த வேட்பாளர்களை இனம் காண்பதில் ஜேவிபி இற்கு இருந்த சங்கடத்தை இந்த உறவு தீர்த்திருக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும்.
இதற்கு அப்பால் தமிழ் தேசியம் பேசும் கூறுகள் பலவாக பிரிந்து நிற்றலும் இதுவரை இலங்கையை ஆண்ட பேரினவாதக் கட்சிகளின் பிரதிநிதிகளாக தேர்தலில் தமிழ் பிரதேசங்களில் நிற்பவர்களும் தனக்காக ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்துவிடும் என்பதாக அங்காங்கே அரசியல் செய்கின்றனர்.
இதில் டக்ளசின் அரசியலும் உண்டு. ஆது அமையவிருக்கும் ஆட்சியில் பங்கு என்பதாகவே நகரும் விருப்பத்துடன் வழமை போல் தொடர்ச்சியாக வெல்லுதல் என்பதாக நகரும்.
இதில் மருத்துவ நீதி கேட்டுப் போராடிய அருச்சுனாக்களும் அவசர இணைப்பாக இணையத் தவறவில்லை.
கிழக்கில் குறு நில மன்னர்களாக பிள்ளையானும் கருணாவும் தமக்குள் சண்டையிட்ட வண்ணம் ஒரு இடத்தையாவது பிடித்துவிட வேண்டும் என்ற ஓட்டங்கள் நடாத்திக் கொண்டும் இருக்கின்றனர்…
இந்த எல்லா ஓட்டங்களிலும் நிச்சயமாக தமிழ் பிரதேசங்கள் எங்கும் மாவட்டத்திற்கு ஆகக் குறைந்தது ஒரு உறுப்பினர் என்றாக தேசிய மக்கள சக்தி வெல்வதற்குரிய வாய்பைக் கொடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் தயாராகி வருவதாக உணர முடிகின்றது.
இன்னும் சிறப்பாக திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் இரண்டிற்கு குறைவில்லாத பாராளுமன்றப் பிரதிநிதிகளை பெறுவது என்பதும் மாகாணரீதியில் செயற்படும் தமிழ் கட்சிகள் ஒரு உறுப்பினைக் கூட பெறமுடியாமல் போகும் சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இந்த பலவாகிப் பிரிந்து நிற்றல் என்பது ஒரு அதிசய வெற்றிக்குரிய வாய்பையும் வாக்குகள் பிரிவதன் மூலம் ஏற்படுத்தலாம் தமிழ் பிரதேங்களில். அது சிறப்பாக வட பகுதியில்.
(தொடரும்…)