மார்ச் 15ஆம் திகதியன்று, நியூசிலாந்திலுள்ள கிறைஸ்டசேர்ச் நகரப் பள்ளிவாசல்கள் இரண்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமெனக் கூறப்பட்டது. இதற்குப் பழிதீர்க்கவே, இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்குப் பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி, நேற்று முன்தினம் (29) இரவு, காணொளியொன்றின் மூலம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை விடுத்திருந்தார்.
கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள பக்டாடியின் 18 நிமிடங்கள் கொண்ட இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்து பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
இறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அபூபக்கர் அல் பக்டாடி, எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.
அந்தக் காணொளியில், சிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிரதேசம் , அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து, கடந்த பெப்ரவரி மாதம் பறிக்கப்பட்டமைக்கு பழி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் எனவே, இலங்கையில் நூற்றுக்கணக்கானோர் பலியானமைக்கு, ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும், அதை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிகவும் திட்டமிட்ட வகையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள், பூகோள ரீதியில், தெற்காசியாவுக்கு விடுக்கப்பட்ட மாபெரும் அச்சுறுத்தலாகவே கணிப்பிடப்பட்டுள்ளது.
ஈராக், சிரியாவில் முடக்கப்பட்ட ஐ.எஸ் அமைப்பு, தங்களுடைய பலத்தைக் காட்டவே, தெற்காசியாவை அதிலும் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது தெளிவு.
இந்தப் பயங்கரவாத அமைப்பானது, உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக, 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிரியா யுத்தத்தின் போதே அறியப்பட்டது. இருப்பினும், இவ்வமைப்பின் உருவாக்கம், பல ஆண்டுகளைக் கொண்டதாகும். எவ்வாறாயினும், 2003இல், அமெரிக்கப் படையினரால், ஈராக்கில் சதாம் ஹுஸைனின் நிர்வாகத்தைத் துடைத்தெறிந்த போது, சதாமின் பாத் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ஐ.எஸ் எனும் இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழுவுடன் இணைந்திருந்தனர் என்றும் அவர்கள், அல்கொ ய்தாவுக்கு ஒத்துழைப்பு வழங்கினர் என்றும் தெரியவருகிறது.
சிரியாவின் சிவில் யுத்தமானது, அந்நாட்டு ஜனாதிபதி பஷீர் அல் அஸாத்துக்கு எதிராக, எதிரணியினரால் ஆயுதம் ஏந்தியதோடு ஆரம்பமானது. அப்போது, அமெரி க்காவின் ஜனாதிபதியாக, பராக் ஒபாமாவே பதவியில் இருந்தார். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள், ஆயுதங்களை வாரி வழங்கி, சிரியாவின் எதிரணியினரை பலப்படுத்தினர். இதன்போது, அயல் நாடான ஈராக்கிலிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள், சிரியாவுக்கு வந்து, மேற்கத்தேயத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆயுதங்களுடன் பலமடைந்தனர்.
வியாபித்த பிரிவினைவாதக் கொள்கைகள் காரணமாக, ஐ.எஸ்ஸுடனான தொடர்பை, அல்-கொய்தா நிறுத்திக்கொண்டது. அதன்பின்னர், உலகின் பிரபலமான பயங்கரவாத அமைப்பாக, ஐ.எஸ் எழுந்து நிற்கத் தொடங்கியது. தாம் கைப்பற்றிய பிரதேசங்களை ஒன்றிணைத்து, தங்களுடைய இஸ்லாமிய அரசை அவர்கள் உருவாக்கினர். அபூபக்கர் அல் பக்டாடியின் தலைமையின் கீழான ஐ.எஸ்ஸில், உலகவாழ் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள், சிரியாவுக்குச் சென்று இணைந்துகொள்ள ஆரம்பித்தனர். தங்களால் பிடிக்கப்பட்ட மேற்கத்தேயப் படையினர், வைத்தியர்கள், தொண்டர் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை முழந்தாலிடச்செய்து, கழுத்தறுத்துக் கொலை செய்தனர். இதனூடாக, தங்கள் அமைப்பின் பயங்கரவாதச் செயற்பாடுகளை உலகறியச் செய்தனர். இதனைத் தொடர்ந்து, அந்தந்த நாடுகளில் வசிக்கும் ஐ.எஸ் பயங்கர வாதிகளால், தாக்குதல்கள் நடத்தத் தொடங்க ப்பட்டன. பிரான்ஸ் மற்றும் பிரித்தானி யாவிலும், தாக்குதல்கள் தொடர்ந்தன.
பயங்கர வாதிகள், தங்களுடைய இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், சிரியாவுக்குச் சென்று, ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டதாக, புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, மேலைத்தேய நாடுகள், ஆபிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் செயற்பட்டுவரும் இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழுக்களும், ஐ.எஸ்ஸுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கின. முழு உலகையும் கைப்பற்றுவதற்காக, தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக, அந்தப் பிரிவினைவாதக் குழுக்கள் உறுதிமொழி வழங்கின. இன்று, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற முஸ்லிம் நாடுகளிலும், ஐ.எஸ்ஸுக்கு சார்பான குழுக்கள் செயற்பட்டே வருகின்றன.
ஈராக்கில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் வீழ்ச்சி கண்டதாக, 2018ஆம் ஆண்டில், ஈராக் அரசாங்கம் அறிவித்தது. அதற்காக, அமெரிக்கா, ஈரான், குர்திஸ்தான் ஆகிய நாடுகள், ஈராக்குக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. சிரியாவிலிருந்து ஐ.எஸ் துடைத்தெறியப் பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த பெப்ரவரியில் அறிவித்திருந்தார். சிரியா போராட்டத்தின் போது, ரஷ்யாவின் ஜனாதிபதி விலாடிமிர் புட்டினும், சிரியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். இதற்குக் காரணம், மத்திய கிழக்கு வலயத்திலுள்ள ரஷ்யாவின் ஒரேயொரு முகாம், சிரியாவில் அமைந்திருந்ததே ஆகும்.
சிரியா ஜனாதிபதி பஷீர் அல் அஸாத்தின் அரசாங்கம், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்ததாகும். ஆனால், ஐ.எஸ் அமைப்பானது, சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்ததாகும். அதனால், சிரியாவின் போர் பூமிக்கு, ஈரானும் தனது இராணுவத்தை அனுப்பியிருந்தது. சிரியாவின் அயல் நாடான துருக்கியும், ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட, தனது நாட்டு இராணுவத்தை அனுப்பியிருந்தது. அமெரிக்காவின் பொது எதிரி ஐ.எஸ் என்றாலும், அதைத் தோற்கடிப்பதற்காக, குர்திப் போராளிகளுடன் மாத்திரமே அமெரிக்கா இணைந்துகொண்டது.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு என்ற எண்ணம் கனவாகிப் போனாலும் அங்கு, ஐ.எஸ் அமைப்பு முடக்கப்பட்டாலும், அவ்வமைப்பினால் உலகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் உள்ளதென, அமெரிக்காவின் சீ.ஐ.ஏ புலானாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அரசியல் ரீதியிலான ஸ்திரமின்மை மற்றும் கயிறிழுப்பு போன்ற பாதுகாப்பற்ற நிலைமைகள் காரணமாகவே, ஐ.எஸ் பயங்கரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்து, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்களை இலகுவாக நடத்தினரென, சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்காசியாவிலும், பிரிவினைவாத இஸ்லாமியக் குழுக்கள் பல காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானின் தலேபான், பாகிஸ்தானின் லஷ்கார் ஈ ஜங்காவி, லஷ்கார் ஈ தய்பா, ஜயேஷ் ஈ மொஹமத் என்பன, அவற்றில் சிலவாகும். ஈராக் மற்றும் சிரியாவில் பிரிவினைவாதத்தைப் பரப்பும் போது, ஐ.எஸ் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் தலேபானுடன் இணைந்திருந்தனர். இருப்பினும், உள்ளகப் பிரச்சினைகள் காரணமாக, தலேபானும் பிளவடைந்தது. இன்று, தலேபான் அமைப்பும் ஐ.எஸ் அமைப்பும், தனித்தனியே ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
ஐ.எஸ் போன்ற சர்வதேசப் பயங்கரவாத அமைப்பொன்று, ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸில் உள்ள இஸ்லாமிய பிரிவினைவாதக் குழுக்களுடன் இணைந்தமையானது, அந்தக் குழுக்களுக்கு பாரிய பலமானது. அந்தச் சிறிய குழுக்களுக்கும், தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இலகுவானது. இதற்குப் பிரதான காரணம், ஐ.எஸ் அமைப்பானது, நிதியியல் ரீதியில் பலமிக்கதாக விளங்கியதாகும்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு, தெற்காசிய பிராந்திய நாடுகளிலிருந்து, அதிகளவில் உறுப்பினர்களை இணைத்துக்கொள்வது இலகுவாகி இருந்தது. அதற்குக் காரணம், சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் அநியாயங்களே ஆகும். உதாரணத்துக்கு, மியன்மாரின் ரோஹிஞ்யா முஸ்லிம்களைக் குறிப்பிடலாம்.
மியன்மாரின் ரகீன் மாகாணத்தைச் சேர்ந்த ரோஹிஞ்யா முஸ்லிம்கள், தமக்கான தனி மாகாணத்தை உருவாக்கிக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அதனால் ஏற்பட்ட மோதல்களின் பிரதிபலனாகவே, அவர்கள் இன்று அகதிகளாகியுள்ளனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம்களும், அந்நாட்டு இராணுவத்தினரின் தொந்தரவுகளுக்கு அடிக்கடி இலக்காகி வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் இளைஞர்கள், ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துகொள்வதாக, சர்வதேசப் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன. இதனால், சிறிய பிரிவினைவாதக் குழுக்களினூடாக, தமது அமைப்புக்கான உறுப்பினர்களை இணைத்துக்கொள்வது, ஐ.எஸ்ஸுக்கு இலகுவாகியுள்ளது.
தாக்குதலொன்று நடத்தப்படக்கூடுமென, இந்தியா மாத்திரமன்றி, அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், இலங்கை அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதிருந்தது வருந்தக்கூடிய விடயமாகும். எவ்வாறாயினும், இனியேனும் தெற்காசிய வலய நாடுகள் மத்தியில், முறையாதொரு பயங்கரவாத ஒழைபடபு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக, தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பொன்றை ஒழிக்க, ஒரு நாட்டுக்குள் நடந்த உள்ளகப் பிரச்சினையாகக் கருத முடியாது. தெற்காசியாவைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, விசேட பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
எவ்வாறாயினும், இவ்வாறான நடவடிக்கைகளை, மிகக் கவனமாகக் கையாள வேண்டும். அதற்குப் பல காரணிகள் உள்ளன. பயங்கரவாத ஒழிப்பின் போது, மனித உரிமைகள் பேணப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக, பாதுகாப்புப் பிரிவிடம் அதிகாரங்களைக் கையளிப்பதும், கவனமாகக் கையாளப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது, மதங்களைக் கடந்து, உலகின் அனைவராலும் கண்டிக்கப்பட்டது. சுதந்திரமாக எவரும் தாங்கள் விரும்பிய மதத்தை அனுஷ்டிப்பதற்கும் வாழ்வதற்கும் உரிமையுண்டு. அவ்வாறான உரிமையைப் பறிக்க முற்படுவோர் மனிதர்களல்லர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நோக்கம் தெளிவானது. இந்த அமைப்பு, முழு உலகத்துக்கும் அச்சுறுத்தலாகும். சிரியா, ஈராக்கில் இவ்வமைப்பு முடக்கப்பட்டாலும், தாங்கள் கைப்பற்றும் இடங்களை ஒன்றிணைத்து, இஸ்லாமிய அரசை உருவாக்கும் அவர்களது எண்ணம் முடக்கப்படவில்லை.
இஸ்லாமிய அரசை உருவாக்குவது எவ்வாறாயினும், பயங்கரவாதத் தாக்குதல்கள் ஊடாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பிரிவினைவாதச் சிந்தனைகளைப் பரப்ப, ஐ.எஸ் அமைப்பு தீர்மானித்தாகி விட்டது. எவ்வாறாயினும், ஐ.எஸ்ஸை முறியடிக்க, தனியொரு நாட்டால் முடியாது. அதற்காக, முழு உலகமும் ஒன்றிணைய வேண்டும்.
(புதுடில்லியிலுள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரத்னம் அலி சீராத் மற்றும் ஜோன் ஆரோக்கியராஜ் ஆகியோரால், “ஐசிஸ் இன் சவுத் ஏசியா” என்ற தலைப்பில், எழுதப்பட்ட கட்டுரையின் தமிழ்வடிவம்.)