(Ahilan Kadirgamar)
வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை, சி.க.செந்தில்வேல்,
(புதிய நீதி வெளியீட்டகம், ஜீலை 2017). யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும் பரிசோதனை செய்வதும், எங்களுடைய முக்கியமான கடமையாகும்.
ஆனால் யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான், நேர்மையுடனும் விமர்சன ரீதியாகவும் அந்த வரலாற்றைப் பதிந்திருக்கின்றன. இந்த வகையில், “வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை” என்ற சி.க செந்தில்வேலின் புத்தகம், போருக்கு பின்னான தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு புத்தகமாக அமைகின்றது.
ஒரு சமூகத்தினது அல்லது ஒரு பிரச்சினையினது வரலாறு என்பது, ஒருவராலோ ஒரு நிலைப்பாட்டிலிருந்தோ விளங்கிக்கொள்ளப்படக் கூடிய ஒரு விடயம் அல்ல. நாங்கள் வரலாற்றைப் படித்து எங்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், அது பல நோக்குகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு செயன்முறையாக அமைய வேண்டும்.
தோழர் செந்தில்வேல், ஒரு நீண்டகால செயற்பாட்டாளரும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தலைவரும் என்ற வகையில், ஆழமான அரசியல் அனுபவங்களைக் கொண்டு, தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தை, இந்தப் புத்தகத்திலே பதிவு செய்திருக்கின்றார். இந்தப்புத்தகம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எழுதப்பட்டிருக்கின்றது.
இந்த முயற்சியின் நோக்கம், வெறுமனே அறிவு சார்ந்த ரீதியில் ஒரு புத்தகத்தை எழுதுவது அல்லாமல், மாக்சிச நோக்கில் வரலாற்றைப் படித்து, எதிர்காலத்தை மாற்றும் நோக்குடன் செயற்படுவது தொடர்பான ஒரு பிரக்ஞையினை எம்மத்தியில் உருவாக்குவது பற்றியதாக இருக்கிறது.
தோழர் செந்தில்வேல், புத்தகத்தின் தொடக்கத்திலேயே, போரின் வளர்ச்சிப்போக்கில் பல ஆதிக்க சக்திகள் பங்காற்றியுள்ளன என்பதைக் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக பௌத்த சிங்கள பேரினவாத முதலாளிய ஆளும் சக்திகள் மற்றும் இந்திய – அமெரிக்க மேற்குலக மேலாதிக்க சக்திகளை இங்கு குறிப்பிடலாம்.
ஆனால் இந்தப் புத்தகத்தில் தமிழ் ஆதிக்க சக்திகளின் பங்களிப்புப் பற்றிய விமர்சனத்தையே, அவர் முக்கியமாகப் பகுப்பாய்வு செய்கின்றார். தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் பற்றிய மௌனத்தை உணர்ந்து, இந்தக் கட்டுரையும் தமிழ் அரசியல் சம்பந்தமான விமர்சனப்பார்வை ஊடாகவே இந்தப் புத்தகத்தைப் பகுப்பாய்வு செய்கின்றது.
இந்தப்புத்தகம், சமகால தமிழ் எழுத்துகளில் விவாதிக்கப்படாத விடயங்களை வெளிக்கொண்டு வந்து, புதிய தலைமுறைகளின் மத்தியில் ஓர் அரசியல் பார்வை தோற்றம் பெற உதவும். அதற்கு மேலாக, கடந்த பல தசாப்தங்களாக ஒரு நெருக்கடியின் மத்தியில் இருக்கும் தமிழ்ச் சமூகம் மற்றும் அதன் அரசியல் பற்றிய முக்கியமான வரலாற்று ரீதியான கேள்விகளை, இந்தப் புத்தகம் எழுப்பி இருக்கின்றது.
மேலும் தமிழ்க் குறுந்தேசியவாதத்தின் திசையும் திட்டமும் இல்லாத உணர்ச்சிவசமான அரசியலை விமர்சிக்கும் இந்த நூல், தமிழ் அரசியலை மாற்றுவதனையும், ஜனநாயகப்படுத்துவதனையும் நோக்கங்களாகக் கொண்டு, வரலாற்றை விமர்சனப்பார்வைக்கு உட்படுத்துகிறது.
இளந்தலைமுறைகளுக்கு இது ஒரு மிகவும் முக்கியமான புத்தகம். 1960ஆம் ஆண்டுகளில் நடந்த சாதி ஒழிப்புப் போராட்டங்கள், ஜே.வி.பியின் கிளர்ச்சிகளும் அவை கொடூரமாக அடக்கப்பட்டமையும், 1977ஆம் ஆண்டு வந்த ஜனாதிபதி ஜெயவர்தன ஆட்சியின் தாக்கம், பனிப்போர் காலத்தில் இருந்த சர்வதேச நிலைமைகள், இந்தியாவினுடைய தலையீடுகள் போன்ற விடயங்களை, இளைஞர்களுக்கு விளங்கக்கூடிய விதத்தில் எளிமையான வடிவில் இந்த நூல் பகுப்பாய்வு செய்கிறது.
இங்கு தோழர் செந்தில்வேல் முன்வைக்கும் தமிழ்த் தேசியவாதம் சம்பந்தமான விமர்சனம், மிகவும் முக்கியமானது. தமிழ்க் காங்கிரஸாக இருந்தாலும் சரி, தமிழரசுக் கட்சியாக இருந்தாலும் சரி, விடுதலைப் புலிகளாக இருந்தாலும் சரி மற்றைய இயக்கங்களாக இருந்தாலும் சரி, ஏன் இவர்கள் குறுந்தேசியவாத ரீதியிலான பிரிவினைவாதத்தை மையப்படுத்திய அரசியலை முன்கொண்டு போனார்கள்?
அவர்கள் ஏன் மற்றைய இனங்களுடன் சேர்ந்து இலங்கையின் அரசிலும் அரச கட்டமைப்பிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவர முயலவில்லை? அவர்கள் ஏன் அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி, ஏகாதிபத்திய மற்றும் சர்வதேச சக்திகளுடைய இலக்குகளை விளங்காது, தங்களுடைய அரசியல் திட்டங்களை உருவாக்கினார்கள்?
வரலாற்று நகர்வு
இந்தப் புத்தகத்தின் மிகவும் முக்கியமான பங்களிப்புகளாக, 1970ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் சம்பந்தமாகப் புத்தகத்தில் முன்வைக்கப்படும் குறிப்புகளையும் பகுப்பாய்வினையும் குறிப்பிடலாம். பலர், யுத்தத்தில் என்ன நடந்தது அந்த யுத்தம் எப்படி மக்களைப் பாதித்தது போன்ற விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால், எவ்வாறான சமூக, பொருளாதார, அரசியல் சக்திகளும் காரணிகளும், ஒரு மக்களையும் ஒரு நாட்டையும் இவ்வாறான ஒரு நீண்டகால கொடூர யுத்தத்துக்குள் தள்ளின என்ற கேள்வியாகும். மேலும், எவ்வாறான அரசியல் பார்வையும் செயற்பாடும், அந்தக் காலத்தில் வந்த போராட்டங்களை சாத்தியமற்ற பிரிவினைவாத அரசியலுக்குள் தள்ளின என்ற கேள்வி மிகவும் முக்கியமானது.
1960ஆம் 70ஆம் ஆண்டுகள், உலகத்திலும் சரி, இலங்கையிலும் சரி, தமிழ்ச் சமூகத்திலும் சரி, பாரிய சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்த காலப் பகுதிகளாக அமைகின்றன. உலகமெங்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடைய போராட்டங்கள் பலமாக எழுந்த போது, அவற்ைற ஆதிக்க அரசாங்கங்களும் சக்திகளும், வன்முறையைக் கையாண்டு அடக்கின.
1970ஆம் ஆண்டுகளில் வந்த பாரிய முதலாளித்துவ நெருக்கடிக்குப் பதிலாக, ஏகாதிபத்திய சக்திகளும் சர்வாதிகார அரசாங்கங்களும், நவதாராளவாத பொருளாதார கொள்கைகளின் ஊடாக மக்களுடைய உடைமை இழப்புக்களை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு, முதலாளித்துவ இலாபத்தையும் சேகரிப்பையும் மீளமைக்க முயன்றன.
இந்தச் சமூக – பொருளாதார சீரமைத்தலுக்கு உதவியாக இருந்த அரச அதிகாரத்துடன் வரிசைப்படுத்திய அராஜகமும் வன்முறையும் சேர்ந்து, மக்களையும் இளைஞர்களையும் கோரமாகப் பாதித்தன.
இவ்வாறான வரலாற்று ரீதியான நகர்வு என்பது ஒரு காரணியாலோ ஒரு சக்தியாலோ தோன்றுவது அல்ல. வரலாற்று அறிஞர்கள் கூறும் பல சக்திகளின் சந்தர்ப்ப மாற்றம் (conjuncture) தான், இவ்வாறான ஒரு பாரிய வரலாற்றுத் திசைத் திருப்பலுக்கு அடிப்படையாக இருந்தது.
மேலும் இவ்வாறான நகர்வுக்குத் திட்டமிட்ட அரசியல் முன்னெடுப்புகளின் பங்களிப்பும், முக்கியமானவையாக அமைந்தன. உதாரணமாக, நவதாராளவாத உலகமயமாக்கலின் நகர்வுக்கு, அமெரிக்காவின் ரேகன் மற்றும் பிரித்தானியாவின் தட்சர் போன்றோரின் ஆட்சி, முக்கியமானதாக அமைந்தது.
இந்த வகையில், தோழர் செந்தில்வேலினால் வழங்கப்படும் 1970ஆம் ஆண்டுகளில் தமிழ் அரசியலில் ஏற்பட்ட நகர்வுகள் சம்பந்தமான பகுப்பாய்வு, தமிழ்ச் சமூகம், இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களின் மீது முக்கியமாகக் கவனத்தைச் செலுத்துகிறது.
1960ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தோன்றிய சாதியத்துக்கு எதிரான ஆயுதப்போராட்டம், 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலான கட்சிகள் அடைந்த தோல்விகள், 1971ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜே.வி.பியின் கிளர்ச்சியும் அதற்கெதிரான அடக்குமுறையும், 1970ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் தலையீட்டுடன் பாகிஸ்தானின் பிரிவினை மற்றும் பங்களாதேஷின் தோற்றம் போன்ற விடயங்கள், முக்கியமான நிகழ்வுகளாக இங்கு நோக்கப்படுகின்றன.
இந்த வரலாறே, குறுந்தேசியவாத சக்திகள் ஒரு தீவிரப் போக்கைத் தழுவுவதற்கு உற்சாகப்படுத்தியது. இளைஞர் இயக்கங்கள், ஆழமான அரசியல் விளக்கம் இன்றி, ஆயுதப்போராட்டத்துக்கு முனைந்தார்கள்; ஆதிக்க குறுந்தேசியவாதக் கட்சிகள், சாத்தியமற்ற பிரிவினைவாதக் கொள்கையை வெளிப்படுத்தினார்கள்.
இவ்வாறு தோழர் செந்தில்வேல், 1970ஆம் ஆண்டுகளில் தமிழ் அரசியலில் ஏற்பட்ட நகர்வுகளையும் அவற்றின் சோக விளைவுகளையும், எமது சிந்தனையைத் தூண்டும் வகையில், தனது நூலிலே பதிவு செய்துள்ளார். இவ்வரலாற்றை, முற்போக்குப் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து ஆழமாக ஆராய வேண்டிய தேவையும் உண்டு.
சில கேள்விகள்
தோழர் செந்தில்வேல் குறுந் தமிழ்த் தேசியவாதம் மற்றும் விடுதலைப் புலிகளின் ஜனநாயக மறுப்பு பற்றி நேர்மையான முறையில் தனது கருத்துகளை இந்த நூலிலே பதிந்துள்ளார். துரோகிப்பட்டம் சூட்டுதல் மற்றும் ஏக பிரதிநிதித்துவக் கோரிக்கை போன்றன, தமிழ் அரசியலின் ஜனநாயக வளர்ச்சியை எவ்வாறு பாதித்தன என்பதை அவர், தெளிவாக விளக்குகின்றார்.
இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள், இந்திய இராணுவம், வேறு ஆயுதமேந்திய இயக்கங்களுடைய வன்முறை மீறல்களை, அவர் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளார்.
இவ்வாறான ஒரு முக்கியமான வரலாற்று ரீதியான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு, சில அரசியல் கேள்விகளை நான் இங்கு எழுப்ப விரும்புகின்றேன்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பற்றிய விமர்சனம், தமிழ்ச் சமூகத்துக்குள் இடம்பெறுவதைத் தமது சுயலாபத்துக்காகச் செயற்படும் தமிழ் அரசியற் சக்திகள் தடுத்து நிறுத்த முற்படுவதனை, நாம் இன்றும் நோக்குகிறோம். தோழர் செந்தில்வேல் உட்பட பல இடதுசாரிகள், விடுதலைப் புலிகளின் அரசியலை ஒரு பாசிச அரசியல் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளும் என்னிடத்தில் எழுகின்ற கேள்வி என்னவென்றால், ஒரு பாசிச இயக்கத்தினால் மக்களுடைய ஒடுக்குமுறைக்கு எதிரான நியாயமான அபிலாஷைகளை முன்கொண்டு செல்ல முடியுமா என்பதாகும்.
இங்கு ஒரு பாசிச இயக்கத்தின் போராளிகள் மற்றும் தலைமைத்துவம் மற்றும் அதன் அரசியலைப் பிரித்துப் பகுப்பாய்வு செய்ய வேண்டிய தேவை உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் இணைந்த போராளிகளின் பங்களிப்பையும் தியாகத்தையும் கண்டுணர்கின்ற அதே நேரம், அந்த இயக்கத்தின் தலைமையின் மற்றும் அரசியலின் பாரிய தவறுகளைக் கடும் விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை உள்ளோருக்கு, இவ்வாறான வரலாற்று விமர்சனம் என்பது பாரிய கடமையாகும்.
இன்னும் ஒரு முக்கியமான கேள்வியையும் முன்வைக்க விரும்புகின்றேன். குறுந் தமிழ்த்தேசியவாத அரசியலின் வரலாற்றுரீதியான பாதிப்புகளை, இடதுசாரிகள் நன்கு அறிவோம். இங்கு தேசியவாதம் சம்பந்தமான ஒரு பொதுவான கேள்வியும் எழும்புகின்றது.
ஒட்டுமொத்தமாகக் காலனித்துவத்துக்கு பின் வந்த தேசியவாத இயக்கங்களில் முற்போக்குத் தன்மை இருக்கின்றதா? அல்லது காலனித்துவத்துக்கு பின் வரும் தேசியவாதம் என்பது, பிற்போக்கானதும் அழிவையும் கொண்டுவரும் ஒரு கருத்தியல்தானா? தேசியவாதம் என்பது வர்க்க, சாதி, இனம், பால்நிலையை ஒட்டிய ஒடுக்கும் சக்திகளுக்குச் சாதகமாக இயங்குவதை, உலகின் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
பெண்களைத் தேசத்தின் கலாசாரத்தைச் சுமக்கும் பண்டங்களாக, பல தேசியவாதங்கள் இன்றும் நோக்குகின்றன. இலங்கையின் வடக்கு, கிழக்கிலே தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சி, தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவுகள் பாரிய அளவில் விரிசல் அடைவதற்கு ஒரு முக்கியமான காரணியாக அமைந்தது.
எமக்கு மத்தியில் வாழும் ஏனைய இனத்தவர்களின் நலன்கள், அபிலாஷைகளை, தேசியவாத அரசியல் புறமொதுக்க முற்படுகிறது. மேலும் தேசியவாதம் கூர்மையடையும் போது, அது பாசிசமாகும் தன்மையையும் கொண்டுள்ளது. ஆகவே எங்கள் வரலாற்றை விமர்சிக்கும் போது, தேசியவாதம் பற்றிய விவாதங்களையும் விமர்சனங்களையும் தொடங்க வேண்டிய தேவை எமக்கு உண்டு.
தமிழ் ஜனநாயகத்தை நோக்கி
இந்தப் புத்தகத்தில் இருந்தும் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் சோக வரலாற்றிலிருந்தும் நான் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், ஜனநாயகத்துடைய முக்கியத்துவம். அதாவது தமிழ் அரசியல், மக்கள் மயப்படுத்தப்பட்டு, மக்களுக்கான நீதியையும் மக்களுடைய அபிலாஷைகளையும் முன்வைக்காத பட்சத்தில், தமிழ் அரசியல் தொடர்ந்தும் நெருக்கடிக்குள்ளேயே இருக்குமே தவிர, அது விடுதலையையும் நீதியையும் நோக்கிப் பயணிக்கமாட்டாது.
தமிழ்ச் சமூகத்தின் சோகவரலாறு சம்பந்தமாகக் கூறியிருந்தேன். உண்மையில் இலங்கையின் சோக வரலாறு என்பது, எல்லா இனங்களுடைய மேட்டுக்குடி உயர் வர்க்கத் தலைமைத்துவங்களின் ஊடாக தீர்வுகளைக் காணும் முயற்சிகளே. ஏழு தசாப்தங்களாக அந்தத் தலைமைத்துவங்கள், ஒரு மேலோட்டமான தாராளவாத தீர்வைக்கூட எட்ட முடியாமல் இருக்கின்றார்கள்.
ஆகவே நாங்கள் எதிர்கால அரசியலைப் பற்றிச் சிந்திக்கும் போது, ஒரு மாற்று அரசியலை அணுக வேண்டிய தேவையை உணர்கிறோம். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகள், தமிழ், சிங்கள மேட்டுக்குடித் தலைமைத்துவத்தின் கொடுக்கல் வாங்கல்களில் இருந்து உருவாகமாட்டாது. அரசியல் தலைமைத்துவத்தை விமர்சிக்கின்ற துணிச்சல், மக்களுக்குத் தேவைப்படுகின்றது.
தேசியப் பிரச்சினைக்கான தீர்வை எதிர்காலத்தில் அணுகுவதற்கான முயற்சிகள், ஜனநாயகமாக்கல் மற்றும் மக்களுடைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் அபிலாஷைகள் என்பவற்றில் இருந்தே தொடங்க வேண்டும். அந்த அரசியல், ஒற்றையாட்சியை நிராகரித்தது, அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் அதே நேரம், வென்றெடுக்கப்படும் அதிகாரங்கள், பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கு ஒத்துப்போகாமல் இருக்க வேண்டும் என்பதனையும் உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகமாக்கல் என்பது, தமிழ்ச் சமூகத்துக்குள் இருக்கும் சாதி, பால்நிலை, வர்க்கரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களைப் பலப்படுத்தி, சமூக நீதியை நிலைப்படுத்த வேண்டும்.
இவ்வாறாகத் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தமான கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்புவதற்கும், யுத்தகாலத் தமிழ் அரசியலைப் பரிசோதிப்பதற்கும், தோழர் செந்தில்வேலின் இந்தப் புத்தகம், ஒரு முக்கியமான நங்கூரமாக அமைகின்றது. தமிழ்ச் சமூகத்தை பற்றி அக்கறை உள்ள அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், இந்தப் புத்தகத்தை வாசித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உண்டு.
(இந்தக் கட்டுரை, யாழ்ப்பாணத்திலுள்ள ட்ரிம்மர் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆற்றப்பட்ட நூல் தொடர்பான மதிப்பீட்டு உரையின் தொகுப்பாகும்.)