‘புலிகளைப் பற்றி விமர்சிக்கிறது இருக்கட்டும். முள்ளிவாய்க்காலில அந்தளவு சனமும் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது, அழிஞ்சது பற்றி உங்களுக்கு கவலையில்லை, அக்கறையில்லை. அதைக் கொச்சைப்படுத்திறியள்’
புலிவால்கள் செய்வது, தங்களுக்கு தமிழ் மக்களின் உயிர்கள் மீது அன்பு இருக்கிறதாம் என்று பீற்றிக் கொள்ள.
நண்பர்கள் செய்வது, தங்கள் நடுநிலையை நிருபிக்க! உங்களை மாதிரி, சிங்கள அரசாங்கத்தை நாங்கள் சப்போர்ட் பண்ணேலை என்று, தாங்களாகவே எங்களை சிங்கள அரசாங்க ஆதரவாளர்களாக முடிவு பண்ணி, தங்களை மேலானவர்களாகக் காட்ட!
நண்பர்களைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. நண்பர்களைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்.
புலிகள் மக்களின் அழிவு பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்றவுடனேயே, ‘இதென்னடா, பட்ட மரத்தில பால் வடியுது!’ என்று சந்தேகம் எனக்கு வரும்.
போராட்டம் என்பதே, மக்களுக்கு அதிகளவு அழிவு ஏற்படக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி, தாக்குதல் நடத்துவது என்பது தான் புலிகளின் முறையாக இருந்தது.
அந்த அழிவு ஆட்சேர்ப்புக்கும் அனுதாபம் சேர்ப்புக்கும் பயன்பட்டது என்பதே நாங்கள் நேரில் கண்டது.
இவற்றை எல்லாம் விட, அந்த மக்களின் அழிவு வெளிநாட்டு அகதிக் கோரிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டது என்பது தான் எங்கள் போராட்டத்தின் இலட்சணம்.
புலிகளின் போராட்டத்தில் மக்களின் நலன் ஒருபோதுமே முன்நிலைப்படுத்தப்பட்டதேயில்லை.
தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள மக்களை மனிதக் கேடயமாகக் கூடப் பயன்படுத்தும் அளவுக்கும், தப்பியோட முயன்ற மக்களை சுட்டுக் கொள்ளும் அளவுக்கும் தான் புலிகளின் மக்கள் நேயம் இருந்தது.
புலிகளின் மக்கள் பற்றிய நிலைப்பாடு இது என்றால்…
புலிவால்கள் வேற லெவல்…!
வெளிநாட்டில் இருந்து கொண்டே, ‘சண்டை எண்டால் சனம் சாகும் தானே’ என்றவர்களையும் ‘சனம் செத்தால் தானே தீர்வு வரும்’ என்றவர்களையும் நேரில் கண்டிருக்கிறேன்.
வெளிநாடு தலையிடுவதற்கு இன்னமும் சனம் சாகாதா என்ற எதிர்பார்ப்போடு இருந்த புலி ஆதரவாளர்கள் எத்தனை பேர்?
ஆரம்ப காலங்களில் ‘என்ன ஒரு அட்டாக்கையும் காணேலை?’ என்று என் கண் முன்னாலேயே இயக்கக் கூட்டத்தில் கேட்டவர்களை கண்டிருக்கிறேன்.
தங்கள் அகதிக் கோரிக்கைக்கு வசதியாகவும், வெளிநாடுகள் அகதிகளைத் திருப்பி அனுப்பப் போகின்றன என்ற செய்தி வரும்போதெல்லாம் அதைத் தடுப்பதற்காகவும், புலிகளுக்கு மட்டுமே பண உதவி செய்தவர்கள் இருக்கிறார்கள்.
காரணம், புலிகள் நடத்திய சாகசத் தாக்குதல்.
இந்த சாகசத் தாக்குதல்களில் மக்கள் இறப்பார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தாலும், இவர்களுக்கு அது பற்ற்p எந்த அக்கறையும் இருந்திருக்கவில்லை.
தாக்குதல்களில் சிங்கள பொதுமக்கள் இறந்ததில் மகிழ்ச்சி கொண்டவர்களும், முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது நியாயப்படுத்தியவர்களும் தான் நாங்கள் கண்டவர்கள்.
தமிழ் மக்கள் அந்த தாக்குதல்களிலோ, தாக்குதல்களுக்கான பதிலடிகளில் இறந்திருந்தால் கூட, அது இவர்களுக்கு ஒரு Collateral Damage மட்டுமே.
போராட்டத்தில் எதிரியால் கொல்லப்பட்ட தமிழ் மக்களைக் காட்டி நீதி கேட்பதில் இருந்த அக்கறை, புலிகளால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கிடுகு வேலி கட்டி மறைப்பதாகவே இருந்தது.
அதைப் பற்றிக் கதைத்தால், போராட்டம் பின்னடைவு ஆகி விடும் என்ற நியாயப்படுத்தல் மட்டுமே இந்த புலிகளின் மக்கள் கொலைகள் பற்றி இவர்களுக்கு இருந்தன.
போராட்டத்தில் புலிகள் கொன்ற மற்ற இயக்கத் தலைவர்களை துரோகிகள் என்று அழைத்ததன் நியாயம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்கு அவர்களுக்கான உரிமையை யார் தந்தது என்ற கேள்வியும் இருக்கட்டும்.
எது அமைப்பு, யார் தலைவர் என்றே தெரியாமல், தமிழ் ஈழம் என்ற ஒரு கனவுக்காகவே இயக்கத்தில் சேர்ந்த மற்ற இயக்கங்களின் போராளிகள் உயிரோடு நெருப்பில் எரிக்கப்பட்டார்களே, அவர்கள் மக்கள் இல்லையா?
ஏன், கருணாவின் பிரிவின் போது, என்ன செய்வதென்றே தெரியாமல், தப்பி போகவும் முடியாமல் மாட்டுப் பட்டவர்களும், புலிகளை நம்பி வன்னி வந்தவர்களுமான புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டார்களே!
அவர்கள் எல்லாம் இயக்கர், நாகர்களா?
அவர்களின் கொலைகளை துரோகிகள் என்ற கணக்கில் மண்ணைப் போட்டு மூடினால், எல்லாமே சரியாகி விடுமா?
துணுக்காய் முகாம் உட்பட்ட பல்வேறு வதை முகாம்களில் சந்தேகத்தின் பேரில் அடைத்து, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்கள் எல்லாம் என்ன வேற்றுக்கிரக வாசிகளா?
சமாதான காலத்தில் கண்டவன் நிண்டவனையெல்லாம் போட்டுத் தள்ளி ‘இனம் தெரியாத நபர்களால் கொலை’ என்று கயிறு திரித்த போதெல்லாம் கொடுப்புக்குள்ள சிரிச்சுக் கொண்டு திரிந்தார்களே, அப்போதும் அவர்கள் மக்களாகத் தெரியவில்லையா?
தமிழ் மக்கள் மக்களாக இருந்தாலும், போராளிகளாக இருந்தாலும், புலிகள் தீர்ப்பளித்ததால், கொல்லப்பட்ட வேண்டியவர்கள் என்று தீர்ப்பளிக்கின்ற இவர்கள் இன்றைக்கு தமிழ் மக்களின் உயிர் என்று அழுது புலம்பும்போது சிரிப்பு வரவில்லையா?
தமிழ் நாடக வசனம் மாதிரி…. ‘அத்தான், அடியுங்கள், நன்றாக அடியுங்கள். என்னைத் தொட்டுத் தாலி கட்டிய உங்களுக்கு இல்லாத உரிமையா? என்னைக் கொல்லக் கூட உங்களுக்கு உரிமை இருக்கிறதல்லவா?’ என்ற மாதிரித் தான் தமிழ் மக்களைப் புலிகள் கொல்லும் போது இவர்களின் திருக்கூத்துக்கள் இருந்தன.
இவர்களைப் பொறுத்தவரை, தமிழனைத் தமிழன் கொல்லலாம்.
சிங்களவன் கொல்றதுக்கு அவனுக்கு உரிமையில்லை.
தமிழன் கொன்றால் துரோகி. சிங்களவன் கொன்றால்… அப்பாவித் தமிழ் மகன்!
புலிகளின் உயிர்கள் மீதான மதிப்பு, அக்கறை, நேயம் என்னும்போது, நான் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுவதுண்டு.
சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்தில் மக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன். அந்தப் படத்தை புதினத்தில் பார்த்து புல்லரித்தவர்கள் எத்தனை பேர்?
சமாதான காலத்தில் புலிகள் ஆயுதங்களுடன் நடமாடக் கூடாது என்று எழுத்து மூலமாக ஒப்பந்தம் செய்த பின்பும், தீவுப் பகுதிக் கடலில் வள்ளம் ஒன்றில் ஆயுதங்களை வைத்து பலகையால் மறைத்திருந்ததை, கண்காணிப்பாளர்கள் கண்ட போது, வன்னியிலிருந்து அவர்களை தற்கொலை செய்யுமாறு கட்டளை வந்து, அவர்கள் வள்ளத்தையும் எரித்து தற்கொலை செய்த போது, கண்காணிப்புக் குழுவினர் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வள்ளத்திலிருந்து பாய வேண்டியிருந்தது.
அரசியல் தீர்வு ஒன்றுக்காக பேச்சுவார்த்தை நடக்கின்ற சூழ்நிலையிலும், துரோகி என்று சொல்லி ஒருவனை பகிரங்கமாக அடித்துக் கொல்லுகின்ற மனிதத் தன்மையற்ற மிருகங்களை…
ஒரு சாதாரண பொய்யை மறைக்க, தேவையில்லாமல் மாவீரர்கள் ஆக்கத் தெரிந்த கொலைகாரர்களை…
போற்றிப் பாடிக் கொண்டு…
மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி கொத்து ரொட்டி சாப்பிடுகிறவர்கள் மக்கள் பற்றியும் மனித உயிர்கள் பற்றிப் பேசுவது விந்தையாக இருக்காதா?
இதெல்லாம் இறுதி யுத்தம் நடைபெறுவதற்கு முன்னால், இந்த மறத்தமிழர் தமிழர் உயிர்கள் பற்றிக் கொண்டிருந்த அக்கறை.
யுத்தம் தொடங்குகிறது.
மாவிலாறில் புலிகள் நீரைத் தடுக்கிறார்கள்.
ஏலுமெண்டாப் பண்ணிப் பார் என்ற வழமையான திமிரில்!
‘மோடன்’ பிரபாகரனுக்கு மறுத்தாம் போட பொருத்தமான ஒரு ‘மோட்டுச் சிங்களவன்’ வந்து சேர…
அதுவும் காசு வாங்கிக் கொண்டு யதார்த்தவாதி என்று புழுகினதையும் கேட்டு!
காட்சி மாறுகிறது.
நாய், பேய் அடியாக இராணுவம் தொடங்க, மக்கள் கொல்லப்படுகிறார்கள். மயானங்களில் தஞ்சம் அடைகிறார்கள்.
அப்போதும் யாரும் தமிழ் மக்களாகத் தெரியவில்லை. காரணம், அவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலையாக்கள்!
மன்னாரில் தாக்குதல் தொடங்குகிறது.
அழிவும் அவலமும் தொடர…
மக்கள் ஈவு இரக்கமற்ற, கனரக ஆயுதத் தாக்குதல்களால் கொல்லப்படுகிறார்கள்.
கொண்டு வந்த மடுமாதா சுருபத்தை மன்னார் ஆயர் திருப்பி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோயிலுக்கு கொண்டு போன துரோகத்துக்கு பொங்கி எழுந்த அளவுக்குக் கூட, மக்களின் அழிவுக்கு பொங்கவில்லை.
அது மன்னார் ஆக்கள்! தமிழ் மக்களில்லை!
அப்படியே, கிளிநொச்சிக்கும் வருகிறார்கள்!
இனித்தான், ‘உள்ளுக்க விட்டு அடிக்கப் போறாங்கள்!’
ஆமியை அடிக்க, காட்டு மரங்களில கொப்புகளை முறிச்சே புலிகள் தாக்குவார்கள் என்று ரேடியோவில் புழுகினவர் இங்கே கனடாவில் தான் இருக்கிறார்.
கல்மடுவில் இராணுவத்தை சுத்தி வளைச்சிட்டாங்கள், குளத்தை உடைச்சு லட்சக்கணக்கில ஆமியைக் கொண்டிட்டாங்கள் என்று புழுகிய ஆய்வாளர்களும் இங்கே இருக்கிறார்கள்.
இது வரைக்கும், ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
அவர்கள் தமிழ் மக்கள் இல்லை. வன்னிச் சனம்!
நாளிது வரையில், வெளிநாடுகளில் எந்த எழுச்சியும், பொங்கலும் இல்லை.
பார்ட்டி ஹோல்களில் மட்டும், சாப்பாடும் பணம் சேர்ப்பும்!
அந்த நாள் வரைக்கும் செத்தது, சனம் தான்.
தமிழ் மக்கள் இல்லை.
அதற்குப் பின் தான், வெள்ளம் தலைக்கு மேல் போன விசயம் தம்பிக்கு விளங்கினது!
…க்கப் போறாங்களடா! என்ற உண்மை மண்டையில் கடப்பாரையாக இறங்கியது.
தலைமைக்கே ஆபத்து என்ற உண்மை ஓடி வெளிச்சவுடன் தான்…
புலன் பெயர்ந்த மாவீரர்கள் றோட்டில் குதித்தார்கள்…
புலிகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உசுப்பேத்தலில்!
அப்போது கூட, தாயகத்தில் மக்களின் அழிவை, பேரவலத்தை முதன்மைப்படுத்துங்கள் என்று தான் எழுதினேன்!
மக்கள் அழியும் அந்த நேரத்திலும்…
பிரபாகரன் படமும், புலிக் கொடிகளும் புலி உடைகளும் என புலிகளுக்கு அங்கீகாரம் வேண்டி நின்றார்களே ஒழிய…
மக்களின் அழிவு பற்றி இவர்கள் பேசவேயில்லை.
தமிழில் கத்தினால் வெள்ளையனுக்கு விளங்காது என்று தங்களுக்கு தெரிஞ்ச இங்கிலிசில…
Our leader Prabaharan. We want Tamil Ealam.
இது தான் இவர்களின் கோசமாக இருந்தது.
மக்கள் அழிவதை விட, தலைமை அழியப் போகிறதே என்ற பயம் பீடித்தவுடன்…
நடந்த சகல திருக்கூத்துக்களும் தலைமையைக் காப்பாற்ற நடந்ததே ஒழிய…
மக்களின் அழிவை நிறுத்ததற்கான முயற்சி என்று எவராது இன்றைக்கு மனச்சாட்சியோடு முன்னுக்கு வந்து சொல்லட்டும்!
மனிதக் கேடயங்களாக மக்களைப் பயன்படுத்தி அமெரிக்கக் கப்பலில் தப்புவதற்காக கடற்கரைக்கு மிரட்டிச் சென்றது, மக்களுக்கு அழிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக வைத்தியசாலைப் பகுதியிலிருந்து இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியது என தலைமையைக் காப்பாற்ற மக்களைப் பலி கொடுப்பதையே ஒரே வழியாகப் பின்பற்றினார்கள்.
கடற்கரையில் வைத்து திரண்டிருந்த மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டியதை விமானப்படை எடுத்த வீடியோவில் கண்டதில்லையா?
வெளியேறிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பற்றி இன்றைக்கும் தப்பி வந்தவர்கள் சாட்சியம் சொல்வார்கள்.
மக்கள் போக விரும்பவில்லை, எங்களுடனேயே இருக்க விரும்புகிறார்கள் என்று சொன்ன நடேசன் வெள்ளைக் கொடியோடு அதே இராணுவத்தினடம் சரணடையப் போவதை உலகத்திற்கே சொல்லவில்லையா?
நடேசனைக் கொன்றது யுத்தக் குற்றம் என்று கூக்குரலிட்டவர்களால், வெளியேற முயன்ற மக்களைக் கொன்றதும் யுத்தக் குற்றம் என்று ஏன் சொல்ல முடியவில்லை?
தப்பி வந்து தடுப்பு முகாம்களில் இருந்த மக்கள் இராணுவத்திடம் உதவிக்கு தங்கியிருக்கிறார்கள் என்றவுடன் ‘விபசாரம் செய்கிறார்கள்’ எந்தக் கூச்சமும் இல்லாமல் சொன்னவர்கள் தானே இவர்கள்?
போர்க்குற்றத்தை அம்பலப்படுத்துகிறோம், பேர்வழி என்று இசைப்பிரியாவின் படத்தைக் காட்டி, அந்த அவலத்தில் இன்பம் கண்டவர்கள் தானே இந்த ஈனர்கள்? தங்கள் சகோதரிகள் என்றால் இத்தனை ஆவேசத்துடன் பகிரங்கப்படுத்தியிருப்பார்களா?
இத்தனை ஆயிரம் சிறுவர்கள் பலாத்காரமாக பறித்தெடுக்கப்பட்டு போர் முனையில் பலி கொடுக்கப்பட்டபோது, அவர்கள் தமிழ் மக்கள் இல்லையா?
இப்போது மட்டும் இந்த மக்கள் பாசம் எங்கேயிருந்தடா, ஈனர்களே, உங்களுக்கு எல்லாம் பொங்குது?
தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளும் தளபதிகளும் இரசாயன ஆயுதங்களால் அழிக்கப்பட்டு,
யுத்தத்திலிருந்து தப்பி மீண்டு தடுப்பு முகாம்களில் இருந்த லட்சக்கணக்கான மக்களும் கனரக ஆயுதத் தாக்குதலால் முற்றாக அழித்தொழிக்கப்பட்டும் இருந்தாலும்,
ஒற்றைப் பிரபாகரன் மட்டுமே தனி மனிதனாக தப்பித்திருந்தால்…
‘யுத்தம் எண்டால் சனம் சாகும் தானே, சனம் அழிஞ்சால் தானே தமிழீழம் வரும்’ என்று பெருமையோடு, ‘நம்புங்கள், நாளை தமிழீழம் மலரும்’ என்று பாடக் கூடிய ஈனர்கள் தான் இவர்கள் எல்லாரும்!
ஒரு இனமாகவே பொய்களையே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே, ஈனர்களே!
உங்களுக்கு எல்லாம் மனச்சாட்சி உறுத்துவதில்லையா?
இரண்டு வருடம் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் புலிகளால் ‘இனம் தெரியாத நபர்களால்’ கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்?
யுத்தம் முடிந்த பின்னால் இன்று 11 வருடங்களில் சிங்கள அரசாங்கத்தினால் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்?
இந்த ஒரே ஒரு கேள்வியோடு உங்கள் அஞ்சலிகளைச் செலுத்துங்கள்!
(தாயகம்)