(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
போரின் அவலம் சொல்லி மாளாதது. ஆனால், போர்கள் இன்றிய காலமொன்றை வரலாற்றில் காணவியலாது. இன்று, போர்கள் பலரின் சீவனோபாயமாகி விட்டன. ஆயுத விற்பனை ஒருபுறமும், அதிகாரத்துக்கான ஆவல் மறுபுறமும் எனப் போர்கள் இன்று தவிர்க்க இயலாதனவாகி விட்டன. போர்கள் பற்றிய அறிக்கையிடல்களும் அதன் அவலத்தையன்றி, நவீன தொழில்நுட்பத்தையும் வெற்றியாளர் யார் என்பதையும் தெரிவிக்கும் தன்மையுடையனவாய் மாறிவிட்டன.
இன்று, ஈரானைப் போர்மேகம் சூழ்ந்துள்ளது. அதற்கான முதலாவது அடியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் வலிந்த சண்டைக்கு இஸ்ரேல் இழுக்கிறது; பொருளாதாரத் தடைகள் என அமெரிக்கா மிரட்டுகிறது.
அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மெல்லவும் முடியாமல் விழுங்காமல் முடியாமல், சொற்களால் தடுமாறுகின்றன.
நேட்டோ என்ன செய்யும் என்று, அதன் உறுப்பு நாடுகளுக்கே தெரியவில்லை. இதை, சிரியாவில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கான இன்னொரு வாய்ப்பாக, அசாத்தின் எதிரிகள் நோக்குகிறார்கள்.
‘பேனைப் பேயாக்கி’ ஈரானைக் காலிசெய்வதற்கான நல்லதொரு வாய்ப்பாக, சவூதி அரேபியா நோக்குகிறது.
இவர்கள் யாரும் அமைதியை விரும்பவில்லை. போர் அனைத்துக்குமான நல்லதொரு வழியாக இருக்கிறது.
கடந்தவாரம், ஈரானின் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். அதேவேளை, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பதாகவும், ஈரானை முடக்கும் பொருட்டு, மேலதிக தடைகளை விரைவில் விதிக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இவ்வுடன்படிக்கையில் இருந்து விலகுவது, மிகவும் ஆபத்தானதும் பொறுப்பற்றதுமாகும் என அமெரிக்காவின் கூட்டாளிகளான ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியன வலியுறுத்தியிருந்த நிலையில், ட்ரம்ப் இம்முடிவை எடுத்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி உடன்படிக்கையானது, 2015ஆம் ஆண்டு ஈரானுக்கும் P5+1 என்ற கூட்டுக்கும் (அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி) இடையில் எட்டப்பட்டது. ஈரானின் அணுசக்தி ஆற்றலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், நீண்ட இழுபறிகளின் பின்னர், இவ்வுடன்படிக்கை எட்டப்பட்டது. இவ்வுடன்படிக்கையை எட்டுவதில் ரஷ்யாவின் பங்கு பெரிது.
ஈரான் விடயத்தில் ரஷ்யாவின் அதிகரிக்கும் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, வேண்டாவெறுப்பாக அமெரிக்கா இவ்வுடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டது என்பதை, இங்கு நோக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாட்டின் வரலாறு மிகவும் நீண்டது. அதன் தொடர்ச்சியாகவே, இந்த உடன்படிக்கையை நோக்க வேண்டியிருக்கிறது.
ஈரானின் மீதான அமெரிக்க ஆதிக்கம், 60 வருடங்களுக்கு முன்னரே அத்திவாரமிடப்பட்டது. 1953 இல், ஈரானின் ஆட்சித் தலைவர் மொஸாடெக் படுகொலை செய்யப்பட்ட பின்பு, அமெரிக்க – பிரித்தானிய கூட்டுமுயற்சி மூலம், ஈரானில் முடியாட்சியொன்று நிறுவப்பட்டது.
அதைப் போன்ற பயங்கரமான சர்வதிகாரக் கொடுங்கோன்மை, ஆசியாவில் வேறெதுவும் இல்லை எனுமளவுக்கு அந்த ஆட்சி, சகல எதிர்ப்பாளர்களையும் கடுங்கண்காணிப்பு, ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை என்பன மூலம் கட்டுப்படுத்தியது.
அந்த ஆட்சி, கொமெய்னி தலைமையிலான ‘இஸ்லாமியப் புரட்சி’யால் 1979இல் தூக்கி எறியப்படும் வரை, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகவே ஈரான் இருந்தது. ‘ஈரானியப் புரட்சி’யைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மன்னிக்க முடியாத எதிரியாக ஈரான் மாறியது.
அன்றுமுதல், ஈரானில் தனக்கு வாய்ப்பான அரசாங்கமொன்றை நிறுவ அமெரிக்கா தொடர்ச்சியாக முனைந்து வந்துள்ளது.
மாறுகின்ற காலச்சூழலில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பொருளாதார நலன்களுக்காக, ஈரானுடன் வணிக உறவைப் பேண வேண்டிய நிலையிலிருந்தன.
ஈரானின் அணு சக்தி விருத்திக்கு உதவிசெய்து வந்த ரஷ்யா, இதில் தவிர்க்கவியலாத அரங்காடியாக மாறியது. ஈரானின் அணுசக்திப் பிரச்சினை, பாதுகாப்புச் சபைக்குப் போவதை சீனா விரும்பவில்லை. மத்திய கிழக்கில், அமெரிக்காவின் சரியும் ஆதிக்கம், இஸ்ரேலிய நெருக்குவாரங்களையும் தாண்டி, அமெரிக்கா இவ்விடயத்தில் ஓர் உடன்படிக்கைக்கு வருவதைக் கட்டாயாமாக்கியது.
இந்தப் பின்புலத்திலேயே, ஈரானின் அணுசக்தி தொடர்பான உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான முனைப்புகள் முதன்மைபெற்று, உடன்படிக்கை எட்டப்பட்டது.
கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை, வன்மையாக இருநாடுகள் ஒருசேர ஒரேகுரலில் கண்டித்தன. அதில் ஒன்று இஸ்ரேல்; மற்றையது சவுதி அரேபியா.
இன்று, ஈரானை மையப்படுத்தி அரங்கேறும் காட்சிகள், சில விடயங்களைக் குறித்து நிற்கின்றன. அவற்றை நோக்குவது, இந்நெருக்கடி பற்றிய ஒரு விரிந்த சித்திரத்தை எமக்கு வழங்கும்.
முதலாவது, இன்றைய உலக அரசியலின் மையமாக மத்திய கிழக்கு உள்ளதால், தவிர்க்கவியலாது, மத்திய கிழக்கு அலுவல்களிலும் உலக அலுவல்களிலும், ஒரு முக்கிய அரங்காடியாக ஈரான் உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான், சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் (ரஷ்யா உட்பட்ட) எல்லைகளைக் கொண்டதாலும், உலகின் இரண்டாவது பெரிய உறுதிப்பட்ட இயற்கைவாயு இருப்பையும், நான்காவது பெரிய பெற்றோலிய இருப்பையும் கொண்ட நாடென்பதாலும் ஈரானில் நிகழும் மாற்றங்கள் முக்கியமானவை.
இரண்டாவது, ஷியா முஸ்லிம்களைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத நாடு ஈரான் எனவும், 1979ஆம் ஆண்டுப் புரட்சியின் பின், படுபிற்போக்கான மதகுருமார்கள் ஆண்டுவரும் நாடு எனவும், ஈரான் பற்றி ஒரு விம்பம் கட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் இஸ்லாமிய முடியாட்சி நாடுகளைப் போல, ஈரானையும் பார்க்குமாறு ஊடகங்கள் நம்மைப் பழக்கியுள்ளன. மத்திய கிழக்கின் அனைத்து முடியாட்சிகளும் சுன்னி முஸ்லிம் ஆதிக்கத்திலுள்ளன என்பதும் ஈரான், ஷியா முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டதென்பதும் வசதியாக மறக்கப்படுகிறது.
பெருமளவான மக்கள், ஈரானின் மதவாத ஆட்சியின் தவறுகளுக்காக அதை வெறுத்தாலும், அதைக் கவிழ்க்க ஈராக்-ஈரான் போரைத் தூண்டி, சதாம் ஹுஸைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு, முடிவில் இஸ்லாமிய மதவாதிகளின் கைகளை வலுப்படுத்தின. ஈரானின் பொருளாதாரம், அமெரிக்காவின் நெருக்குவாரங்களால் ஒரு புறமும் ஈரானிய ஆட்சியின் பழைமைவாதப் போக்கால் இன்னொரு புறமும் பல சிக்கல்களை எதிர்நோக்கியது.
மூன்றாவது, மத்திய கிழக்கில் மிக விருத்திபெற்ற, முற்போக்கான பண்புகளுடைய நாடாக ஈரான் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. தனது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடின், ஈரான் வளர்ச்சியடைந்த சமூகமாக இருந்துவருகிறது. கல்வியறிவு, தொழில்நுட்பம், சமூக நலத் திட்டங்கள் என்பவற்றில் உயர்நிலையில் உள்ள நவீன நாடுகளுக்கு ஈடுகொடுக்குமளவுக்குக் கடந்த மூன்று தசாப்தங்களில் ஈரான் முன்னேறியுள்ளது. இந்த நவீனமயமாக்கமும் அறிவுச்சமூகத்தின் வளர்ச்சியும் ஏனைய அமெரிக்கச் சார்பு பிற்போக்கு இஸ்லாமிய முடியாட்சிகளுக்குச் சவாலாகவுள்ளன.
நான்காவது, மத்திய கிழக்கில், அமெரிக்க ஆதிக்கத்துக்கும் சீனாவைச் சுற்றி வளைத்துத் தனிமைப்படுத்தும் முயற்சிக்குத் தடையாகவும் உள்ள வலுவான, முக்கியமான ஆசிய நாடாக ஈரான் உள்ளது.
இன்று மத்திய கிழக்கில், சீனாவின் முக்கியமான பங்காளியாக ஈரான் உள்ளது. மத்திய கிழக்குக்கான பட்டுப்பாதையின் முதலாவது நகர்வைச் சீனா 2016ஆம் ஆண்டு, ஈரானை மையப்படுத்தியே தொடங்கியது என்பது கவனிப்புக்குரியது.
சீனாவின் வடமேல் மாகாணமான சின்ஜியாங்கிலுள்ள வர்த்தக நகரான யொ-ஹவோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹரானுக்கான சரக்கு ரயில் பயணிக்கிறது. சீனாவையும் மத்திய கிழக்கையும் ரயில்ப் பாதையால் இணைக்கின்ற முதலாவது முயற்சி இதுவாகும். தரைவழியிலும் கடல் வழியிலும் 15 நாடுகளுடன் நேரடி எல்லைகளைக் கொண்ட நாடான ஈரான், சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்துக்கு மிக முக்கியமானது. பட்டுப்பாதைக்காக ஈரான், 2016 முதல் 2022 வரையான ஆறு ஆண்டுகளுக்கு ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.
ஐந்தாவது, சிரிய யுத்தத்தில் சிரிய அரசுக்கான வலுவான ஆதரவுக்கூட்டணியில் ஈரானின் பங்களிப்பு பெரிது. சிரியாவில், அமெரிக்கா விரும்பிய ஆட்சிமாற்றத்தைத் தடுத்த இரு பெரும் சக்திகள் ரஷ்யாவும் ஈரானும் ஆகும். ஈரானின் நிபந்தனையற்ற ஆதரவு, சிரிய அரசாங்கத்தின் கைகளை வெகுவாகப் பலப்படுத்தியுள்ளது.
இந்த, ஐந்து காரணிகளின் பின்புலத்திலும் இப்போது தோன்றியுள்ள நெருக்கடியை நோக்கவியலும். இவை, ஈரான் ஏன் குறிவைக்கப்படுகின்றது என்பதை விளக்கப் போதுமானவையாகும். ஆனால், இப்போதைய நகர்வுகள் சில புதிய போக்குகளை நோக்கிப் பயணிப்பதைச் சொல்லியாக வேண்டும்.
‘ஈரான் அணுசக்தி’ உடன்படிக்கையிலிருந்து வெளியேற வேண்டாம் என ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்ட நிலையில், அமெரிக்காவின் வெளியேற்றமானது, அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய உறவில் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோர் விடுத்த ஒரு கூட்டான அறிக்கையானது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான குரலாகவும் ஈரான் அணுசக்தி உடன்படிக்கையைப் பாதுகாப்பதற்கான குரலாகவும் ஒலித்தது.
இம்மூன்று தலைவர்களினதும் அவ்வறிக்கை, ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதை ‘வருத்தத்துடனும் கவலையுடனும்’ குறிப்பிட்டதோடு, ‘உடன்படிக்கைக்கான தங்களது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை’ வலியுறுத்தினர்.
ஈரான் தொடர்ந்தும் அதன் அணு ஆயுதத் திட்டத்தின் மீதான சர்வதேச அணு சக்தி முகவராண்மையின் கண்காணிப்புக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கோரிய வேளையில், புதிய தடைகளை விதிக்காமல் இருப்பதற்கு அமெரிக்காவுக்கும் அழைப்பு விடுத்தன.
இவ்வறிக்கை இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டுகிறது. முதலாவது, சர்வதேச அணு சக்தி முகவராண்மை, ஈரான் விதிமுறைகளை மீறவில்லை எனவும் அதனது செயற்பாடுகள் முகவராண்மைக்கு நம்பிக்கையளிக்கின்றன என்றும் அண்மையில் தெரிவித்தது. எனவே அமெரிக்காவின் செயல் தவறு என்பதை மறைமுகமாகச் சுட்டிநின்றது.
இரண்டாவது, அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பாமையால், அமெரிக்காவின் செயலுக்கு வருத்தமும் கவலையும் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கான பிரிவின் தலைவியான ஃபெடரிகா மொகேரினி, “அமெரிக்கா, எங்களது நெருங்கிய பங்காளி மற்றும் நண்பன்” என்று பாராட்டினார். அவர், அமெரிக்கத் தடைகள் ஈரானில், ஐரோப்பிய வணிக நலன்களுக்குக் குறுக்கே வரலாம் என்ற அச்சுறுத்தலில் கவனம் குவித்தார். அதேவேளை, “ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்பவும் அதன் பொருளாதார முதலீடுகளைப் பாதுகாக்கும் விதத்திலும் செயற்படும் தீர்மானத்துடன் இருக்கிறது” என்று பொதுப்படத் தெரிவித்து, அமெரிக்காவுடனான மோதல் போக்கைத் தவிர்க்கப் பிரயத்தனப்பட்டார்.
இன்று உலகம் நெருக்கடியில் உள்ளது. முதலாளித்துவம் தன்னை விரித்துக் கொள்வதற்கான போட்டியில் ஒன்றுடன் ஒன்று மல்லுக்கட்டுகிறது. அதன் ஒருகட்டமே, இன்று ஈரான் தொடர்பில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எட்டியிருக்கின்ற மோதல் போக்காகும்.
ஈரானுடன் உறவைப் பேணுவதன் மூலம் தமது பொருளாதார நலன்களைத் தக்கவைக்கவும் விரிவாக்கம் செய்யவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முனைகின்றன.
ஈரானில் ஆட்சிமாற்றத்தை உருவாக்குவதனூடு முழு மத்திய கிழக்கையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், என்றென்றைக்கும் மத்திய கிழக்கின் வளங்களுக்கு உரிமை கொண்டாட அமெரிக்கா நினைக்கிறது.
இரண்டும் இறுதியில் மத்திய கிழக்கைச் சுரண்டிக் கொழுப்பது என்ற அடிப்படையில் அமைந்தவையே. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாளான சவூதி அரேபியாவும், ஈரான் தொடர்பான அமெரிக்கக் கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து 25க்கும் அதிகமான இஸ்ரேலியப் போர் விமானங்களும், அவற்றுடன் இஸ்ரேலின் தரை-விட்டு-தரை பாயும் ஏவுகணைகளும், சிரியாவின் மீது குறிப்பாக ஈரானின் இஸ்லாமிக் புரட்சிகரப் படை நிலைகளின் மீது தாக்குதல் நடத்தின.
இஸ்ரேலின் இவ்வாத்திரமூட்டும் தாக்குதல்கள், ஈரானை வலிந்ததொரு சண்டைக்கு இழுக்கின்றன. ஈரானை முழுமையானதொரு போருக்குள் ஈர்ப்பதன் மூலம், அங்கோர் ஆட்சிமாற்றமொன்றைச் செய்ய அமெரிக்கா முனைகின்றது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலைத் ‘தற்காப்பு’ என்று கூறி வழிமொழிந்ததோடு, சூழ்நிலையைத் ‘தீவிரமாக்கும் விதத்தில்’ ஈரான் எதையும் செய்யக் கூடாது என்று கோரியது. இவை மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கையாலாகாத தனத்தையும் பக்கச் சார்பையும் வெளிப்படுத்தி நின்றன.
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதை, ஐரோப்பிய நாடுகள் கண்டிப்பதற்கான காரணம், அது ஈரானைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டுவதற்கான அவற்றின் திட்டங்களுக்கு, அமெரிக்காவின் செயல் குறுக்கே வருகிறது என்பதும் ஈரானுடனான அமெரிக்காவின் ஒரு போரின் பொருளாதாரம் மற்றும் அரசியல் விளைவுகளைக் குறித்து அவை அஞ்சுவதுமேயாகும். ஈரானின் மீதான நியாயமான அக்கறை, ஐரோப்பிய நாடுகளுக்குக் கிடையாது. எல்லாம் ‘ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை’தான்.
உலகை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியின் அடுத்த நகர்வின் மையமாக, ஈரான் மாறியுள்ளது. இன்னொரு நீண்ட போருக்கான அத்திவாரங்கள் அமைதியாக இடப்படுகின்றன.