(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேர்தல்கள், பலவேளைகளில் ஜனநாயக முகமூடியின் காவலாய் விளங்குவன. அரிதாக, உண்மையான சமூக மாற்றத்தின் குறிகாட்டியாவதுமுண்டு. அவ்வாறு நடந்தாலும் அவை கவனம் பெறுவது குறைவு. தேர்தல் முடிவுகள், மக்களின் தெரிவைக் கூறுவதை விட, மக்களின் எண்ணப் போக்கையே பெரிதுங் கோடுகாட்டுகின்றன. பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றோர், மக்களின் விருப்புக்குரியோர் எனவியலாது. ஆனால், வாக்குகளைப் பெற்றோர் சார்ந்திருக்கும் அல்லது பிரதிநிதித்துவஞ் செய்யும் விடயங்கள் மக்களின் விருப்புக்குரியன எனச் சொல்லலாம்.
கடந்த வாரம் வெளியான ஈரானிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், சில முக்கிய விடயங்களை உறுதியாகச் சொல்லுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கின் மிக விருத்திபெற்ற முற்போக்கான பண்புகளுடைய நாடாக ஈரானின் வளர்ச்சிக்கான சான்றுகளைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஈரான், ஷியா முஸ்லிம்களைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத நாடு எனவும் 1979ஆம் ஆண்டுப் புரட்சியின் பின், படுபிற்போக்கான மதகுருமார்கள் ஆண்டுவரும் நாடு எனவும் ஈரான் பற்றி ஒரு விம்பம் கட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் இஸ்லாமிய முடியாட்சி நாடுகளைப் போல ஈரானையும் பார்க்குமாறு, ஊடகங்கள் நம்மைப் பழக்கியுள்ளன. மத்திய கிழக்கின் அனைத்து முடியாட்சிகளும் சுன்னி முஸ்லிம் ஆதிக்கத்திலுள்ளன என்பதும் ஈரான், ஷியா முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டதென்பதும் வசதியாக மறக்கப்படுகிறது.
இன்றைய உலக அரசியலின் மையமாக மத்திய கிழக்கு உள்ளதால், தவிர்க்கவியலாது, ஈரான், மத்திய கிழக்கு அலுவல்களிலும் உலக அலுவல்களிலும் ஒரு முக்கிய அரங்காடியாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரான், ரஷ்யா உட்பட்ட சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டதாலும் உலகின் இரண்டாவது பெரிய உறுதிப்பட்ட இயற்கைவாயு இருப்பையும், நான்காவது பெரிய பெற்றோலிய இருப்பையும் கொண்ட நாடென்பதாலும் ஈரானில் நிகழும் மாற்றங்கள் முக்கியமானவை.
290 உறுப்பினர்களைக் கொண்ட ஈரானிய நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி ஹசன் ரோஹானி தலைமையிலான ‘நம்பிக்கைப் பட்டியல்’ பெரும்பாலான ஆசனங்களை வென்றமை ஒரு முக்கிய மாற்றமாகும். நம்பிக்கைப் பட்டியலின் வெற்றி மூலம், அதிதீவிர நிலைப்பாடுகட்கெதிரான சற்று மிதவாதப் பண்புடைய சமூகச் சீர்திருத்த நோக்குடையோர், முதன்முறையாக நாடாளுமன்றப் பெரும்பான்மையாகியுள்ளனர். அதினும் முக்கியமாக, 18 பெண்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவானமை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அதைவிட, மதகுருமாரைப் பெரும்பான்மையாகக் கொண்டமைந்த நாடாளுமன்றுக்கு இம்முறை 16 மதகுருமாரே தெரிவாகியுள்ளனர்.
இம் மூன்றும், எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள ஈரான் நாடாளுமன்றின் மீது, பலரது கவனத்தையும் திருப்பியுள்ளது. மதகுருமாரை விட அதிக எண்ணிக்கையிற் பெண்கள் தெரிவானமை, ஈரான் பற்றிப் பரப்பப்பட்ட சித்திரத்துக்கு முரணாயுள்ளது. அதனால் இத்தேர்தல், ஊடகங்களில் முக்கிய செய்தியாகியது. ஈரான் நவீனமயமாவதை இம்முடிவுகள் காட்டுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இங்கு சில தரவுகள் பயனுள்ளன. அயதுல்லா கொமேனியின் தலைமையில் 1979ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியப் புரட்சியையடுத்த நாடாளுமன்றுக்கு, 164 மதகுருமார்கள் தெரிவாயினர். அடுத்தடுத்த நாடாளுமன்றுகட்குத் தெரிவான மதகுருமாரின் தொகை தொடர்ந்து குறைந்து வந்தது. சென்ற நாடாளுமன்றில் 27 மதகுருமாரே அங்கத்துவம் வகித்தனர்.
இதற்கு முன் ஒரு தடவை நாடாளுமன்றில் 14 பெண்கள் அங்கத்துவம் வகித்தனர். பெண்களின் நாடாளுமன்ற அங்கத்துவம் ஈரானிய ஜனநாயகத்தின் அம்சமாக இருந்துள்ளது. எனினும், இம்முறையே பெண்கள் முதன்முறையாக நாடாளுமன்றுக்குத் தெரிவாயினர் எனுந் தோற்றத்தை உருவாக்குவது, ஈரான் பற்றிய பொதுப்புத்தி மனநிலையைத் தக்கவைத்து, அதன் ஜனநாயகத்தைக் குறைமதிப்பிடுவதற்கே. தனது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடின், ஈரான் வளர்ச்சியடைந்த சமூகமாக இருந்துவருகிறது. கல்வியறிவு, தொழில்நுட்பம், சமூக நலத் திட்டங்கள் என்பவற்றில் உயர்நிலையில் உள்ள நவீன நாடுகட்கு ஈடுகொடுக்குமளவுக்குக் கடந்த மூன்று தசாப்தங்களில் ஈரான் முன்னேறியுள்ளது.
ஈரானின் கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. 1905-1911 காலத்துப் ‘பாரசிக அரசியலமைப்புப் புரட்சியில்’ ஊடகவியலாளர்களாக, கூட்ட ஏற்பாட்டாளர்களாக, பாடசாலைகளை நடாத்துவோராகப் பலவாறும் பொது அலுவல்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. அதுவே நூற்றுக்கணக்கான பாரசிகப் பெண்கள் எழுத்தாளர்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் வழிசெய்தது. அதன் விளைவாக, பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய முதலாவது சஞ்சிகையாக அறியப்படும் ‘தானேஷ்’ 1907ஆம் ஆண்டு ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து வெளிவரத் தொடங்கியது.
பின்னர் ஷாவின் ஆட்சியில், பெண்களின் உரிமைகள் பல பறிபோயின. 1979இல், அயதுல்லா கொமேனி தலைமைதாங்கிய புரட்சியில், பெண்கள் ஒரு முக்கியமான அங்கமாக இருந்தனர். பெண்களின் ஆடை பற்றிய கட்டுப்பாடுகளும் நடத்தை பற்றிய மதக் கட்டுப்பாடுகளும் வலுத்தாலும், புரட்சிக்கு முன்னர் 42சதவீதமாக இருந்த பெண்களின் கல்வியறிவு, இன்று 98சதவீதத்துக்கு அதிகரித்துள்ளது. பெண்களின் சராசரி திருமண வயது 23 ஆகக் கூடியது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு கணித நோபல் பரிசாகக் கருதப்படும் பீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற முதற் பெண் என்ற பெருமையை அமெரிக்காவிற் பணியாற்றும் ஈரானியரான மர்யம் மிர்ஸகானி பெற்றார்.
இலங்கையினளவுக்குச் சட்டத்திலும் சமூக வழமையிலும் பெண்களின் அனைத்து உரிமைகளையும் ஈரான் வரன்முறையாக உறுதிப்படுத்தாவிடினும், சவூதி அரேபியா போன்ற முடியாட்சிகள் மறுக்கும் பல்வேறு உரிமைகள் ஈரானில் வழக்கிலுள்ளன. பெண்களின் அரசியற் பங்குபற்றலை இதன் ஒளியில் நோக்குவது தகும். இம்முறை தெரிவான பெண்கள் அனைவரும் கல்விப்புலமையுடைய தொழிற்றுறையினராவர். ஈரான் நாடாளுமன்றுக்குத் தெரிவான பெண்களின் தகைமைகள் பொதுப்பட ஏனைய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகைமைகளினுஞ் சிறப்பானவை.
இன்றைய ஈரானின் வலுவான நிலை, உலகு ஈரானை ஏறெடுத்துப் பார்க்க வைத்திருக்கிறது. நீண்டகாலமாக அமெரிக்காவினதும் மேற்குலகினதும் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஈரான், இன்று அவ்வாறில்லை என்பது சிலரது கவலை. மேற்குலகுடன் நெருங்கிய நட்பற்ற நாடுகள் மீது மனித உரிமை மீறல், ஜனநாயகமின்மை என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ஈரானை விட மோசமாக மனித உரிமைகளை மீறிக் காட்டுமிராண்டித் தண்டனைகளை நடைமுறைப்படுத்தும் மத்திய கிழக்கின் முடியாட்சிகள் பெரிதும் கண்டிக்கப்படுவதில்லை.
அமெரிக்க – ஈரான் அணுசக்தி உடன்படிக்கையின் பின், உலக அரசியலில் ஈரானின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஈரானுக்குச் சவால்விடுமாறு, சவூதி அரேபியாவை அமெரிக்கா தூண்டுகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய சவூதி விஜயம் அதை உறுதிப்படுத்தியது. சரியும் எண்ணெய் விலைகளும் உலக எண்ணெய் வர்த்தகத்தில், ஈரானின் மீள்வருகையும் அமெரிக்க – சவூதிக் கூட்டணியின் விருப்புக்கு ஒவ்வாதன.
அமெரிக்கா, ஈரானின் மீதான ஆதிக்கத்துக்கு அறுபது ஆண்டுகட்கும் முன்பே அத்திபாரமிட்டது. அமெரிக்க – பிரித்தானிய முயற்சியால், 1953இல் ஈரானின் ஆட்சித் தலைவர் மொகமட் மொஸாடெக் கொலையுண்ட பின், ஈரானில், ஷா முடியாட்சி நிறுவப்பட்டது. அதையொத்த பயங்கர சர்வாதிகாரக் கொடுங்கோன்மை ஆசியாவில் வேறெதுவும் இல்லை எனுமளவுக்கு, அந்த ஆட்சி சகல எதிர்ப்பாளர்களையும் கடுங்கண்காணிப்பு, ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை என்பன மூலம் கட்டுப்படுத்தியது. இஸ்லாமியப் புரட்சி, அதை 1979இல் தூக்கி எறியும் வரை ஈரான் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தது.
பெருமளவான மக்கள் ஈரானின் மதவாத ஆட்சியின் தவறுகட்காக அதை வெறுத்தாலும் அதைக் கவிழ்க்க ஈராக் – ஈரான் போரைத் தூண்டி, சதாம் ஹுஸேனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு முடிவில் இஸ்லாமிய மதவாதிகளின் கைகளை வலுப்படுத்தின. ஈரானின் பொருளாதாரம் அமெரிக்காவின் நெருக்குவாரங்களால் ஒரு புறமும் ஈரானிய ஆட்சியின் பழைமைவாதப் போக்கால் இன்னொரு புறமும் பல சிக்கல்களை எதிர்நோக்கியது. இதுவும் ஈரானின் தேர்தல் முடிவுகளை விளங்க உதவும்.
மத்திய கிழக்கில், அமெரிக்க ஆதிக்கத்துக்கும் சீனாவைச் சுற்றி வளைத்துத் தனிமைப்படுத்தும் முயற்சிக்குத் தடையாகவும் உள்ள வலுவான, முக்கியமான ஆசிய நாடாக ஈரான் உள்ளது. அமெரிக்காவின் ஒருமைய உலகின் சரிவும் ரஷ்யாவினதும் சீனாவினதும் எழுச்சியும் ஈரானின் கைகளை வலுப்படுத்தியுள்ளன. ஈரானிய நாடாளுமன்றத்
தேர்தலில், ஜனாதிபதி ஹஸன் ரோஹானி தலைமையில் மிதவாதிகள் அதிக ஆசனங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால், மிதவாதிகள் ஆட்சிக்கு வருவது இதுவே முதன்முறையன்று. 1997 முதல் 2004 வரை ஜனாதிபதி முகம்மட் கட்டாமி ஆட்சியில், மிதவாதிகள் ஆட்சியிலிருந்தனர். இரண்டு தசாப்தங்கள் பின்னர் மிதவாதிகள் ஆட்சிக்கு மீண்டுள்ளார்கள். கட்டாமியின் ஆட்சியை அடுத்து மத அடிப்படைவாதி எனப்பட்ட மஹ்முட் அஹ்மெடிநெஜாட் பதவிக்கு வந்தமை நினைவுகூரத்தக்கது.
ஈரானின் சனத்தொகையில் 60 சதவீதம் பேர், முப்பது வயதுக்குட்பட்டோர். அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் ஈரானின் பொருளாதாரம் சிதைந்துள்ளது. 20 சதவீதம் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். அணுசக்தி ஒப்பந்தத்தின் பின் பொருளாதாரத் தடை நீங்கியது. அதை இயலுமாக்கியவர் என்றளவில் ரவ்ஹானிக்கும் அவரைச் சார்ந்த மிதவாதிகட்கும் ஆதரவு அதிகரித்தது. கடும்போக்காளர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஆனால் இது கதையின் ஒரு பக்கம் மட்டுமே.
தலைநகர் டெஹ்ரானையும் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் எல்லா ஆசனங்களையும் பெற்றதால், ‘நம்பிக்கையின் பட்டியல்’ நாடாளுமன்றில் 40 சதவீத ஆசனங்களைக் கொண்டுள்ளது. தலைநகருக்குத் தொலைவில் உள்ள கிராமங்களில் பழமைவாதிகள் பெரும்பாலான (35 சதவீதம்) ஆசனங்களைப் பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் 25 சதவீத ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.
மிதவாதிகள் தெரியப்பட்டமையை வரவேற்கும் மேற்குலகு, இது மேற்குலக – ஈரான் உறவைச் சீர்ப்படுத்தி வளர்க்க உதவும் என எதிர்பார்க்கிறது. ஈரான், தொடர்ச்சியாக நவீனமடைந்து வந்தாலும் பழமைவாதிகள் தொடர்ந்தும் செல்வாக்குடையோராயும் விருப்புக்குரியோராயும்; இருக்க நல்ல காரணங்கள் உள்ளன. வரலாற்றில் மேற்குலகத் தலையீடுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. எனவே மேற்குலகுடன் உறவு பேணுவதில் நன்மையில்லை என ஈரானியர்கள் பலர் நினைக்கின்றனர்.
இது மேற்குலக விரோதப் போக்குடைய பழமைவாதிகளின் செல்வாக்கைப் பேணுகிறது. தேர்தல் முடிவுகள் நவீன ஈரானின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகின்றன. இவை பொருளாதார நலன்களை எதிர்பார்த்து நிற்கும் இளையோரின் குரல் என்பதில் ஐயமில்லை. அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஈரானிய ஜனாதிபதித் தேர்தல், இக்குரலின் சுரத்தை அளவிடும் கருவியாகும்.