எம்.ஜி. இராமச்சந்திரனில் தொடங்கி, சீமான் வரை, ஈழப்போராட்டத்தை சரிவர விளங்காத, அணுக இயலாத, தங்கள் சுயஅரசியலுக்குப் பயன்படுத்தியோரை நம்பி, சீரழிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் அந்தநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தத் ‘தமிழக மயக்கம்’ வெறுமனே அரசியலுடன் மட்டுப்பட்டல்ல!
தமிழக மக்களிடையே உள்ள ஆதரவு, இலங்கை தமிழரது போராட்டத்துக்கு ஒரு தார்மீக ஆதரவாயிருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதைச் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்துவதற்கு, இலங்கை தமிழர் உடந்தையாக இருக்கக் கூடாது.
போர் அதன் கோர முடிவை எட்டுகின்ற போது, தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடையே ஈழத்தமிழர்களுக்காக அறம்சார்ந்த தீரம்மிக்க ஆதரவு எழுந்தது. அதை மடைமாற்றுவது, இந்திய அதிகாரத்துக்கு அவசியமானது. இதற்கு சீமான் பயன்பட்டார்.
சீமான் தமிழக இளைஞர்களின் நேசத்துக்கு உரிய திரையுலகப் பிரமுகராகத் தன்னை உயர்த்திக் கொள்ள, அவருக்கு ஈழத் தமிழரின் கண்ணீர் கைகொடுத்த அளவுக்கு, திரைப்படத் துறையில் அவருடைய ஆற்றல் கைகொடுத்திருக்கவில்லை. ஆனால், இன்று ஈழப்பிரச்சினைக்குக் காப்புரிமை வாங்கியது போல செயற்படுகிறார். அதற்குப் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வற்றாத நிதி உதவுகிறது.
ஈழத்தமிழர்களை, விடுதலைப் புலிகளுடன் சமன்செய்து, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் குறுக்குகின்ற பணியை, சீமானும் அவர்தம் ஆதரவாளர்களும் செய்கிறார்கள்.
சீமானும் அவர்தம் அடிவருடிகளும், ஈழத்தமிழர்களின் விடுதலையை வாங்கித் தருவார்கள் என்று, புலம்பெயர் ஈழத்தமிழர்களில் ஒருபகுதியினர் நம்புகிறார்கள். இது ஆச்சரியமானதல்ல! ஏனெனில், ஈழத்தமிழர்களின் விடுதலைக்குச் செய்ய வேண்டியவை பற்றிய சரியான புரிதல் இருந்திருந்தால், இந்த நிலையை நாம் அடைந்திருக்க மாட்டோம் அல்லவா?
எம்.ஜி.ஆரைச் சந்திக்க, பிரபாகரனைப் பழ நெடுமாறன் அழைத்துச் சென்றபோது, ‘ஈழத்தை பெற, எவ்வளவு பணம் தேவை’ என்று எம்.ஜி.ஆர் கேட்டதாகவும் அதற்குரிய தொகையைப் பிரபாகரன் சொன்னதாகவும், கேட்டதற்கு அதிகமாகவே எம்.ஜி.ஆர் கொடுத்ததாகவும், பழ நெடுமாறன் தனது நூலில் எழுதியிருக்கிறார். இது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல; பிற இயக்கங்களிலும் இந்த மனநிலை இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து, விடுதலையைப் பெறலாம் என நினைத்த புலம்பெயர் தமிழர்களின் மனநிலையின் தொடர்ச்சியே, சீமானுக்கான புலம்பெயர் தமிழர்களின் நிதியாதரவு.
சில விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த நிலையிலுமே தமிழக அரசு, மத்திய அரசை மீறிச் செயற்படத் துணிந்ததில்லை. உண்மையில், அந்த விதமான எண்ணம் இருந்ததுமில்லை; அதுவொரு தோற்றமயக்கம். அன்றிலிருந்து இன்றுவரை, இலங்கை விடயத்தில், இந்தியா குறுக்கிட வேண்டும் என்ற கோரிக்கை, நடை முறைச் சாத்தியமற்றது மட்டுமன்றி, அடிப்படையிலேயே தவறானதும் கூட. ஈழத்தமிழரின் விடுதலையை குத்தகைக்காரர்களால் பெற்றுத்தர இயலாது.
1983 வன்முறைக்குப் பின்பு, குறிப்பாக, 1984 முதல் 1987 வரை, போர்ச் சூழல் ஏற்படுத்திய உக்கிரமான நெருக்கடிகளின் விளைவாக, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஈழத்தமிழர்கள் சிதறி ஓடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்குப் போனவர்களில் வசதியுள்ளவர்கள், பிரதான நகரங்களில் குறிப்பாகச் சென்னையில், வசதிகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
கையில் எதுவுமில்லாமல் உயிருக்கு அஞ்சி ஓடியவர்களில் பெரும் பான்மையானவர்கள், முன்பு இலங்கையில் கற்பனை செய்திராத விதமாக அகதி முகாங்களிலும், ‘அகதி’ என்ற அடையாளமின்றி வெளியிலும் அன்று முதல் அல்லற்பட்டு வருகிறார்கள்.
இலங்கை மக்களின் அவலங்கள் பற்றி, எந்த விதமான அக்கறையுமே இல்லாமல், அவர்களுடைய அவலத்தை அரசியல் பிழைப்பாக்கிக் கொண்ட தமிழக அரசியல் தலைமைகள் ஒருபுறமும், அதற்குக் கொஞ்சமும் சளைக்காத, இலங்கை தமிழ்ச் சமூகத்தின் வேறு சில பலவீனங்களைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகிற தமிழகத்தின் வேறு சில குழுக்களும், ஈழத்தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்திகள் என்ற மாயையை உருவாக்கினார்கள்.
தாங்கள் உலகத்தால் கவனிக்கப்படவில்லை; தங்களைத் தமிழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம், இலங்கை கலைஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, இந்தியாவிலிருந்து வருகிற ‘குப்பை’களை எல்லாம், கலை இலக்கியம் என்று கொண்டாடிப் பரவலாக்குகிற ஒரு வணிகக் கூட்டமும் இருந்து வந்திருக்கிறது.
கோவில் திருவிழாக்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து சின்னமேளமும் மேளக்காரர்களும் வந்த நிலை, இன்று பெரும்பாலும் இல்லை. என்றாலும், அதன் இடத்தில் தமிழ்ச் சினிமா, சின்னத் திரை, இந்தியக் கலைஞர்களது நிகழ்ச்சிகள் என்பனவே, எமது பொழுதுபோக்குகளாக மாறியிருக்கின்றன.
இன்று, பேரினவாதத்துக்கு முகங்கொடுக்கத் தடுமாறுகிற ஒரு சமூகத்திடமும் புலம் பெயர்ந்தோரிடமும், ஒரு நல்ல மாற்றுச் சிந்தனை உருவாக்குவதற்கு வழிகாட்ட, தமிழ்த் தேசியத்தால் இயலவில்லை. எனவே, தமிழ் மக்களிடையிலும் படைப்பாளிகள் இடையிலும் கலைஞர்கள் மத்தியிலும் அறிஞர்கள் என்று சொல்லப்படுகிற தரப்பினரிடையிலும் உள்ள மன உளைச்சலை வைத்துப் பணம் பண்ணுவதில், தமிழகத்துச் சஞ்சிகைகள் சிலவும் வெளியீட்டு நிறுவனங்கள் சிலவும், புதிய உச்சங்களை எட்டியுள்ளன.
ஈழத்து எழுத்தாளர்களுக்குச் சடங்காசாரமான அங்கிகாரம், ஈழ எழுத்தாளர் குழுக்களுடன் விளம்பர, வணிகத் தொடர்புகள், இடையிடையே ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிச் சூடான விவாதங்களைக் கிளறிவிடுவது போன்ற உபாயங்கள் மூலம், தம்மை நிலை நிறுத்திக் கொண்ட சஞ்சிகைகளும் இலக்கியப் பிரமுகர்களும் பற்றி நிறையவே கூறமுடியும்.
படைப்பாளிகளிடமிருந்து பணம் பறித்து, அவர்கள் எழுத்துகளை வெளியிட்டுக் காசுபார்க்கும் இந்திய பதிப்பகங்கள் ஏராளம் வலம்வருகின்றன. தங்களது எழுத்துகளுக்கு நூல் வடிவம் வேண்டி ஏங்குகிறவர்களது அவலத்தை, தங்களுக்குப் பணமாக்கும் கலையை அவர்கள் கற்றிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகிற பணத்தை வழங்கி, தமிழ்நாட்டில் புத்தகம் பிரசுரமாவதை பாக்கியமாகக் கருதும் புலம்பெயர்ந்தோர் ஏராளம் உளர்.
இப்படியெல்லாம், ஈழத் தமிழர் ஏமாறக் காரணம் என்ன? நாம், நமக்கான ஒரு பண்பாடு உடையவர்கள் என்றும் நம்மிடையே உள்ள ஆற்றல்களைச் கொண்டு நம்மை அறிந்து, நம்மை மேம்படுத்தி மற்ற எல்லாருடனும் நல்லுறவு பேண வேண்டியவர்கள் என்பதையும் நாம் மறந்து விடுகிறோம்.
நமது உயர்வுக்குத் தேவையான பண்பாட்டுச் செயற்பாடுகள் நம்மிடையே நலிந்து வருகின்றன. நமது இசையும் நடனமும் தமிழகத்தில் பார்ப்பனியம் போட்ட கோட்டுக்கு வெளியே நகர மறுக்கிறது. அதை, ‘எமது’ என்று சொல்லி ஏமாறுகிறோம். தமிழகத்தில், அவர்களது கலைஞர்களுக்குக் கிடைக்கிற சிறிய அங்கிகாரமோ வெறும் உபசாரமான புகழுரையோ, நமக்குப் போதுமாகிறது. அதை ஏற்படுத்தவல்ல உள்ளூர்த் தரகர்கள் புரவலர்களாக, இலக்கியவாதிகளாக, ஊடக ஜாம்பவான்களாக, அரசியல்வாதிகளாக உலா வருகிறார்கள்.
நம்மிடம் வாசிப்புப் பழக்கம் போதாது. இளைய தலைமுறையினரிடம் அதை ஊக்குவிக்கின்ற ஆர்வமும் நம்மிடம் மிகக் குறைவு. மரபின் பேரால் நடக்கின்ற கேலிக் கூத்துகளிலும் சமூகத்துக் கேடான பொழுது போக்குகளிலும், நாசமாகின்ற காசையும் காலத்தையும் நமது எழுத்துகளையும் மேடைக் கலைகளையும் ஓவியம், சிற்பம் போன்றவற்றையும் அறியவும் ஊக்குவிக்கவும் துணிவோமானால், நம்மை மற்றவர்களின் தயவில் வைத்திருக்கிற அவலம் நமக்கு நேராது.
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், வெறும் உணர்ச்சி வசப்பட்டு நம்மைப் பற்றிய போலி அக்கறைகளுக்கும் வஞ்சகமான புகழுரைகளுக்கும் மயங்காமல், வெறுமனே பணத்தை வழங்குவதுடன் தங்களது பொறுப்பு முடிந்து விடுவதாக இல்லாமல், எல்லாவற்றிலும் தொடர்ச்சியான விமர்சன முறையிலான ஈடுபாடு காட்டுவார்கள் என்றால், அவர்கள் தங்களுக்கும் உலகத் தமிழ்ச் சமூகத்துக்கும் நல்ல சேவையாற்றுகின்றவர்களாவார்கள்.
தேங்கிய நீரில் தான் பாசி படருகிறது. நோய் பரப்பும் தீய உயிரினங்கள் விளைகின்றன. சமூகம் என்பது, பாய்கிற நதி போல எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமாயின் அது, என்றென்றும் உயிரோட்டத்துடன் இருக்கும்.