ஈழத்தமிழர்களால் பாதிக்கப்படும் பிரெஞ்சு விவசாயிகள்..!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்க, நடுவே இத் தேவாலயம் அமைந்திருக்கும் அழகே மனதுக்கு அமைதியும் இதமும் தரக்கூடியது.

ஆனால் தேவாலயம் செல்லும் எமது தமிழர்கள், அங்கு விளைந்திருக்கும் அப்பிள் மற்றும் சோளம் என்பவற்றை விவசாயிகளின் காணிகளுக்குள் புகுந்து பிடுங்கி நாசம் செய்து செல்வதால், அப்பகுதியில் விவசாயம் செய்யும் பிரெஞ்சு விவசாயிகள் பலத்த சிரமங்களை எதிர்கொண்டதோடு, பலமுறை தேவாலய குருவிடமும் முறைப்பாடு செய்திருந்தனர். திருப்பலிகளின் போது அருட்தந்தைகள் பலமுறை பக்தர்களுக்கு எடுத்துச்சொல்லியும், மாடாடு போலவே மக்கள் நடந்து கொண்டனர். இதனால் மிகவும் நொந்துபோன அப்பகுதி விவசாயிகள் 37 பேரும் இணைந்து தமது நலனைப்பேண சங்கம் ஒன்றை அமைத்து பிரெஞ்சு அரசின் பாதுகாப்பு உதவியை நாடியிருந்தனர். இதன்படி பிரெஞ்சு காவல் துறையினர் சோளம் அப்பிள் என்பவற்றை பிடுங்கிய சிலரை கையும் களவுமாக பிடித்து எச்சரித்து சிலர்மீது குற்றப்பதிவும் செய்தனர். கடந்த திருநாளன்று தேவாலய நிர்வாகம் 100ற்கும் மேற்பட்ட தொண்டர்களை பாதைகளெங்கும் காவலுக்கு நிறுத்தியும், நம்மவர்களின் கைவரிசையை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பிள் தோட்டங்களுக்கு வேலியமைத்து ஓரளவுக்கு பாதுகாத்தாலும், வேலிகளற்ற சோளக்காணிகளை பாதுகாக்க முடியவில்லை.

இதை கட்டுப்படுத்த மிகத் தீவிரமாக யோசனை செய்த 37 விவசாயிகளும் தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்துள்ளனர். அது யாதெனில்…?

“இனிமேல் யாருமே சோளம் பயிரிடுவதில்லை”.

ஆமாம், காலாகாலமாக சோளம் பயிரிட்டுவந்த விவசாயிகள் யாவரும், தற்போது ஆரம்பித்துள்ள போகத்தில் ஒருவர்கூட சோளம் பயிரிடவில்லை. இனி இந்த நிலங்களில் தமிழர்கள் தின்னாத ஏதேனும் ஒன்றை இவர்கள் பயிரிடக்கூடும்.

கடந்த சனிக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுத்த பாதர் பிறிற்ரோ அவர்கள் வேதனையுடன் இந்த தகவலை தெரிவித்துவிட்டு, மக்களைப் பார்த்து கேட்டார், 
“வெறும் 50சென்ற்(சதம்) தானே இந்த சோளம், இதை வாங்கி சாப்பிட முடியாதா உங்களால்..?” .

ஆமென்..!

(Sreeno Sri Sreesu)