தமிழ்பேசும் மக்கள் தங்கள்மீதான இலங்கை அரசின் இனவொடுக்குமுறைக்கு -இனப்படுகொலைக்கு எதிராகப் போராடத் தம் புதல்வர்களை அனுப்பியதும் , தாம் சேர்ந்து தோள் கொடுத்ததும் இதுவரையான வரலாறுதாம் .இயக்கங்கங்கள் தமது இயக்க இருப்புக்காகக் கட்டாயப்படுத்தி இளைஞர்களைச் சிறார்களை யுத்தக் களத்துக்கு அனுப்பிப் பல்லாயிரக் கணக்காய்ப் பலியெடுத்ததும் ஈன வரலாறுதாம்.அத்தகைய மக்கள் ,தமது பிள்ளைகளுக்காக இரங்கி ,அழுது “மாவீரர்கள்” என்று கொண்டாடுவது மகத்தானது .அதுவொன்றுதாம் அவர்கள் சுயமாகச் செய்யக் கூடியதாகவும் இந்த ஈழப்போராட்டத்துட் சாத்தியமானதாகவும் இருக்கிறது.அவர்களது இயலாமை ; இழப்பு ; ஆண்டுகள் தோறும் வலிசுமந்த அவர்களது இழப்பை மதிக்கிறோம்.அவர்களோடு நாமும் கண்ணீர் சிந்துகிறோம்!அவர்கள் ,எந்த இயக்கஞ்சார்ந்தும் இயங்கவே இல்லை.அவர்களிடம் இருப்பதெல்லாம் இழப்பும் -இயலாமையும் ;ஏமாற்றமும் மட்டுமே.
இயக்கங்களது துரோகத்தை அவர்கள் இப்படித்தாம் எதிர்கொள்கிறார்கள்.
அவர்கள் , எந்த இயக்கம் பற்றிய எதிர் மறை விமர்சனத்தையும் கண்டு “குய்யோ -மாயோ” என்று பதறவில்லை ;அல்லது, இயகங்களுக்குப் புனித ஒளிவட்டமும் அவர்கள் கட்டவில்லை ; பிசச்சை வேண்டாம் ,நாயைப் பிடி என்பதே அவர்களது நிலை!
ஆனால் ,இயக்கங்கள் மக்களது சிறுகச் சேமித்த செல்வத்தை இலங்கையின் வங்கிகளிலிருந்து கொள்ளையிட்டும் சில குழுக்கள் உலகம் பூராகவும் அந்தச் செல்வத்தைப் பதுக்கியுள்ளார்கள் ; போராட்டத்துக்கென மக்களிடம் தட்டிப் பறித்த செல்வத்தையும் இயக்கங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் மாபியாக்கள் இன்று பதுக்கிக் கொண்டார்கள். முள்ளி வாய்க்காலுக்கு முன்னும் -பின்னும் புலிகள் இயக்கத்துப் பல மில்லின் டொலர்களையும் உலகம் பூராகவும் புலிக்குத் தலைமைதாங்கிய ; உண்டியல் குலுக்கிய இன்னும் காக்கா பிடித்தவொரு கூட்டம் தமது செல்வமாக்கி வைத்துத் தமக்குள் ஒரு வியாபார வலைப் பின்னலை வைத்து இயக்குகிறது! அவர்கள் இன்று கொண்டுள்ள நிதி மூலதன வலு அனைத்துமே மக்கள் செல்வம்.
மக்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட செல்வத்தையெல்லாம் இயக்கங்களைச் சேர்ந்து ஒரு சிறு கும்பல் தமது பணமாக்கி வைத்துவிட்டு அவரவர் இயக்கஞ் சார்ந்து நினைவுகள் -விழாக்கள் ; மாவீர்ர் தினமெனக் கொண்டாடித் தமது செல்வத்தைத் தொடர்ந்து காப்பதற்கெடுக்கும் முயற்சியை எவராவது விமர்சித்தால் , தாமே தமிழ் மக்களது உரிமைக்காகப் போராடுவதாகச் சொல்லி மாற்றுக் கருத்துக்கு எதிராகக் களமாடுகிறார்கள்.
இங்கே , இயக்கங்களது பெருந்தொகையான நிதிகளை வைத்து இயக்கும் இந்தத் தரப்புத்தாம் மக்கள்சார்ந்து நாம் சொல்லும் கருத்துக்களை வன்மையாக மறுக்கிறார்கள் ; சேறடிக்கிறார்கள்.இவர்களுக்குத்தாம் நாம் சொல்வது வலிக்கிறது ; வதைக்கிறது.எவரொருவர் இத்தகைய குரலில் பேச முற்படுகிறாரோ அவர் ,ஏதொவொரு வகையில் இயக்கங்களது பணத்தோடு வாழ்பவராக இருப்பார்.இதுவே உண்மை.
மற்றும்படி இவர்கள்தாம் “தேசவிடுதலை ; ஈழம் ; தமிழ்த் தேசியம் “என்றும் ; “சிங்களவர் தமிழரை ஒடுக்குகிறார்கள் ” என்றும் தொடர்ந்து தூவும் இனவாதத்தை உயிர்ப்போடு வைத்திருக்க விரும்புபவர்கள்.
இவர்களுக்கு மக்களது வலியும் ; இயலாமையும் “மாவீரர்” தினத்தில் மிக வலுவான துருப்புச் சீட்டாகிறது.பாவம் அப்பாவி மக்கள் ; தொலைந்து போகங்கள் வேடதாரிகளே!; ஈனப் பிழைப்பு வாதிகளே!!
-ப.வி.ஶ்ரீரங்கன்
28.11.2018