ஆண்டு 1978 . அப்போது எனது வயது 22. கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் காலடி வைத்து மிக சிறிய காலத்துள் கிழக்கில் பெரும் சூறாவளி வீசிய செய்தி வந்தது. ஓடிச்சென்று புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதை மீண்டும் பதிவதை தவிர்த்து அங்கு நான் பெற்ற அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன்.
அதில் முக்கியம் பெறுவது என் தலையங்கம் கோடிட்டு காட்டும் ஈழ வரைபடம். அதுவரை நான் பிறந்த வேளை இலங்கை முடியரசாக இருந்து, 1971ன் பின்பு சிறீலங்கா குடியரசான வரைபடம் மட்டுமே ( இரண்டும் ஒன்றுதான்.
மாற்றம் தேசாதிபதி ஜனாதிபதி ஆனது மட்டுமே ) என் பார்வையில் பட்ட வேளையில் நாபா உடன் வந்த லண்டன் மனோ கூறிய ஈரோஸ் அமைப்பின்
ஈழதேச வரை படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டியது.
அதை நான் வரை படமாக பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது குருமண்வெளியில் அமரர் அருள் செல்வநாயகம் என்ற யாழ் இசை கருவியை அறிமுகம் செய்த சுவாமி விபுலானந்தர் பற்றி ஆய்து பதிவுகளை இட்ட கல்விமான் என அறியப்பட்டவரின் வீட்டில்.
விதியின் விளையாட்டாக அன்று அவர் மூத்த புதல்வி ஜெயந்திமாலா (திருமதி அழகு குணசீலன்) என் பல்கலைக்கழக சக மாணவி. மண்டூர் புனர்வாழ்வு முகாம்களுக்கு செல்லும்போது சில வேளைகளில்
இரவில் தோணிகள் சேவையில் இல்லை என்பதால் இரவில் தங்க மட்டும் அல்ல உண்ண உணவுக்கும் எம்மை எந்த நேரமும் அரவணைத்த அம்மா திருமதி அருள் செல்வநாயகம்.
அப்படி ஓர் இரவு தங்கிய வேளை சிவகுமார் ( பின்னாளில் விடுதலை புலி உறுப்பினர் ) எங்களுடன் தொண்டனாக செயல்ப்பட வந்திருந்தார்.
கல்விமானின் வீட்டில் ஒரு கரும்பலகை இருந்தது. பல நிறம் கொண்ட எழுதும் சுண்ணாம்பு கட்டிகளும் இருந்தன. ஐந்து நிமிடங்களில் ஈழ வரைபடத்தை சிவப்பு நிற சுண்ணாம்பு கொண்டு அவன் வரைந்ததை வாய் பிளந்து பார்த்தேன்.
அன்று தான் புத்தளம் முதல் பொத்துவில் உகந்தை உட்பட யாழ், முல்லை, திருமலை, மட்டக்களப்பு என கரையோரம் கவரும் ஈழ வரைபடம் விரியும் காட்சி வரைவை நேரில் பார்த்தேன்.
இன்று மீண்டும் அதே வரைபடத்தை தம் ஆடையின் முதுகில் வரைந்து கொழும்பு நகரில் வலம் வருவோர் எனது 62 வயதில் ஒரு செய்தியை சொல்வதாகவே உணர்கிறேன்.
‘’ நதியின் வழி நீர்!. விதியின் வழி வாழ்க்கை!. நம்பிக்கையின் வழி நாளைய விடியல்!’’.
– ராம் –