அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு,
எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு sangary6நீடித்திருக்கும். 1959ம் ஆண்டு கொழும்பு மாநகரசபை வேட்பாளனாக அரசியலில் ஈடுபட்டபோது நீங்கள் பிறந்திருக்கவில்லை. 1991ம் ஆண்டு சட்டத்தரணியாக நீங்கள் சத்தியபிரமாணம் செய்தபோது அத்துறையில் நான் 27 ஆண்டுகளை கடந்துவிட்டேன். நான் ஒரு செல்வந்தன் அல்ல. பெரிய ஒரு குடும்பத்தில் உறுப்பினர் ஆகையால் அன்று எஸ்.எஸ்.சி இன்றைய க.பொ.த(சா.தரம்) வகுப்புக்கு மேல் எனது பெற்றோரால் கல்வியை தர முடியவில்லை. ஓர் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியனாகவும், பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி கிடைத்த வருமானத்திலேயே சொந்த முயற்சியால் சட்டக்கல்லூரியில் கல்வி கற்க முடிந்தது. போதியளவு வருமானம் இன்மையால் அவசிய தேவைகள் பலவற்றைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. எனது அறிவை நூல் நிலையங்கள் மூலமாக பெருக்கிக் கொண்டேனே ஒழிய சட்டப்புத்தகங்கள் ஒன்றையேனும் என்னால் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியவில்லை.
1970ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவுடன் சட்டம், நொத்தாரிசு ஆகிய துறைகளில் எனது பயிற்சிகளை நிறுத்திக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 40 ஆண்டுகளின் பின்னர்தான்; நீங்கள் நியமன பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டீர்கள். தரப்பட்டுள்ள என்னைப்பற்றிய விபரங்கள், எமது நாட்டையும் அம் மக்களுடைய பிரச்சினைகளை பற்றி கணிக்கும் தகுதி எனக்கு உண்டென்பதை அறிய உதவும். நிச்சயமாக இந்த விபரங்கள் தெரிந்திருந்தால் பல சந்தர்ப்பங்களில் என்னைப்பற்றிய உங்களுடைய விமர்சனங்கள் நேர்மையானதாகவும், புத்திசாலித்தனமாகவும் அமைந்திருக்கும்.
நான் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலில் பிரவேசித்தேனே அன்றி பணம் சம்பாதிக்க அல்ல. எமது காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான கொடுப்பனவு 600 ரூபா மட்டுமே. அத்துடன் உதவியாளர் ஒருவரை நியமிப்பதற்காக மேலதிகமாக 75 ரூபா வழங்கப்பட்டது. சிறியளவில் விவசாயம் செய்தமையால் என்னால் சமாளிக்கக்கூடியதாக இருந்தது. சமூக சேவையிலும் கிளிநொச்சியை அபிவிருத்தி செய்யவேண்டுமென ஆர்வம் இருந்ததையும் அறிந்த எனது தந்தையார் ஏறக்குறைய முற்றுமுழுதாக என்னை கிளிநொச்சி மக்களுக்கென ஒப்படைத்திருந்தார். என்னை ஒரு அகிம்சாவாதியாகவும் நேர்மையானவனாகவும் தைரியமிக்க குடி பழக்கவழங்கங்களுக்கு ஆளாகாத ஒருவனாக வளர்த்திருந்தார். வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுத்துக்கொள்ள கற்றுத் தந்திருந்தார். எனது நேர்மை கௌரவம் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் தரக்கூடியவர்களில் மிக முக்கியமானவர் முன்னாள் ஜனாதிபதி கௌரவ திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களால்; வழங்கப்பட்ட நியமன பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வேறொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செலவுக்கென வழங்க முன்வந்த பணத்தையும் தேவையிருந்தும் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் எனது நாணயத்தை இழக்க விரும்பவில்லையென அவற்றை ஏற்க மறுத்தேன். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியாக பதவிவகித்த கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எனக்கு வழங்க முன்வந்த வடமாகாண ஆளுநர் பதவியையும் அதே காரணத்துக்காக அதனையும் ஏற்க மறுத்துவிட்டேன். 60 ஆண்டுகாலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன்;. எனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு கிளிநொச்சி மக்களே உள்ளுரில் பணம் சேகரித்து செலவிடுவது வழக்கம். 2004ம் ஆண்டு கட்சி பிளவு பட்டதன் பின்பு 2010ம் ஆண்டு தேர்தலின் போது ஜெர்மனியில் இருந்து கட்சி ஆதரவாளர் அனுப்பிய 50,000 ரூபாவை தவிர வேறு எதுவித பண உதவியை எவரும் வழங்கவில்லை.
இது தவிர யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் மதன்ஜீத்சிங் என்பவரின் சகிப்புத்தன்மையையும், அகிம்சையையும் முன்னெடுக்கவென தெரிவுசெய்யப்பட்டு நூறு இலட்சம் அமெரிக்க டொலர் இலங்கை பணத்தில் ஒரு கோடி ரூபாவுடனான விருது 2006ம் ஆண்டு எனக்கு கிடைத்தது. என்ன நோக்கத்துக்காக எனக்கு இந்த விருது வழங்கப்பட்டதோ அதை ஒத்ததாகவே எனது அரசியல் பணியும் அமைந்தது. அரசிடமும் வேறு வழிகளிலும் இவ்வாறான பெருந்தொகையான பணம் கிடைக்கப்பெற்றதாக பொய்யான கட்டுக்கதையை பொதுமக்கள் மத்தியில் அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அவை அத்தனையும் எனது கௌரவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கு எனது சேவை சென்றடையக்கூடாது என்பதற்காக ஏறக்குறைய 13 ஆண்டுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதியாகும்.
நீங்கள் ஒரு சட்டத்தரணி அத்தோடு 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் முதற்தடவையாக தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. சில மிக முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக உங்களுக்கு தெளிவு இல்லையென்பதை நான் ஒத்துக்கொண்டேயாக வேண்டும். அவை பற்றிய தெளிவை உங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பருத்தித்துறையில் நீங்கள் புதிய அங்கத்தவர்களை சேர்த்து உரையாற்றியபோது இலங்கை தமிழரசு கட்சி, அக் கட்சியின் ஸ்தாபகர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவராலேயே செயலிழக்க செய்யப்பட்ட கட்சியாகும். இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் வேறு எவரேனும் தவறாக அக்கட்சியின் பெயரையோ அல்லது அக்கட்சியின் சின்னமாகிய வீட்டு சின்னத்தையோ அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செய்தது போல துர்ப்பிரயோகம் செய்துவிடக்கூடாது என்பதற்காக அக்கட்சியின் பதிவை தொடர்ந்து வைத்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியவர் அக்கட்சியை தமிழ் மக்களுக்கு பெரும் சொத்தாக விட்டுவிட்டே இறந்தார். தற்போது புதிய உறுப்பினர்களை சேர்க்கும் இலங்கை தமிழரசு கட்சி வன்முறையில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சி முக்கியஸ்தரின் கட்டளைக்கிணங்க ஸ்தாபகர் இறந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு சுயநல நோக்குடன் செயற்படும் ஒருவர் தமிழரசு கட்சியை மீளமைத்தார். இன்னும் பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபடக்கூடிய இளம் சட்டத்தரணியாகிய நீங்கள் பொது மக்களுடன் மிக கவனத்துடன் செயற்பட வேண்டும். எனக்கொரு வாய்ப்பு தருவீர்களாயிருந்தால் நீங்கள் புதிதாக இணைத்துக் கொண்ட இளைஞர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தவறாக வழிநடத்தப்பட்டு வரும் தமிழ் மக்களுக்கும் என்னுடைய ஆலோசனையை வழங்கத் தயாராக இருக்கிறேன்.
நீங்கள் கூறியதுபோல தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடவில்லை. முழு உரிமையோடு அக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தை நீதிமன்றம் மூலமாக பாதுகாத்துக் கொண்டேன். கட்சியின் செயலாளர் நாயகமும் புதிய உபதலைவரும் தலைவராக என்னுடன் கலந்தாலோசிக்காமல் என்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்காக ஒரு கூட்டத்தை அம்பாறையில் நடாத்த தயாராகினர். விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் அன்று அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருந்தமையால் அம்பாறைக்கு நான் செல்வது முடியாத காரியமாகும். நான் அம்பாறைக்கு போக முடியாது என்பதை இவர்கள் நன்கு அறிந்திருந்தனர். இதன் காரணமாகவே நான் நீதிமன்றம் செல்ல வேண்டியேற்பட்டது. இதை நான் கட்டாய சூழலின் நிமித்தம் கட்சிக்கும் கட்சியின் ஸ்தாபகருக்கும் சாதகமாக எடுக்க வேண்டிய புனிதமான கடமையாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீதிமன்ற நடவடிக்கையால் தோல்வி கண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் சின்னமாகிய வீட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட நேர்ந்தது. அதற்குப் பின்பும் தொடர்ந்து நடைபெற்ற 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் என்ன நடந்ததென்பதை நீங்கள் அறியாததல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று கூறுவதிலும் பார்க்க இலங்கை தமிழரசு கட்சி வெட்கத்தை பொருட்படுத்தாது தாம் தேர்தலில் வெல்வதற்காக வன்முறையில் ஈடுபட்டிருந்த ஒரு அமைப்பின் உதவியை நாடி தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளி கட்சிகள் மூன்றையும் புறக்கணித்து செயற்பட்டது.
அக்குழுவின் போராளிகள் ஆயிரம் மோட்டார் சைக்கிள்களில்; அரைவாசி இலக்கத்தகடு இல்லாமல் மூலை முடுக்கெல்லாம் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்கு சேகரித்தனர். பொதுக்கூட்டங்கள், வீட்டுக்கு வீடு வாக்கு சேர்த்தல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், விளம்பரம் பிரசுரித்தல் போன்ற பல்வேறு பணிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளுக்கும் அனுமதி வழங்காது செயற்பட்டனர். நான் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை வடக்கு கிழக்கில் வாக்களிக்கவே விடவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் ஆசனங்கள் உட்பட 22 ஆசனங்களை கைப்பற்றியது. ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட பல நாடுகளால் ஆணையாளரிடம் புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அத்தகைய நடைமுறைக்கு சட்டத்தில் இடமில்லையென கூறி வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு நடந்திருந்தால் அன்றைய ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டிருக்கமாட்டார்கள். ஆகவே தமிழரசு கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தை பாவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, மிக பலமுள்ள ஜனநாயக கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிக்க உதவியது. முன்னொரு சந்தர்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது 18 பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தின் கால எல்லையை நீடித்தமையை கண்டித்து, அத்தனை பேரையும் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய வைத்து சர்வதேச ரீதியில் பாராட்டையும் பெற்றது.
அத் தேர்தலில் 95 வீத வாக்குகளை பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வெற்றியானது உங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தந்திருக்கும். காலையில் வெற்றி பெற்ற சிலர் மாலையில் தோல்வியடைந்ததும் காலையில் தோற்றவர்கள் மாலையில் வெற்றிபெற்றமை இத் தேர்தலில் நடைபெற்ற அபூர்வ சம்பவங்களாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு அத்தேர்தலில் 95 வீத வாக்குகளை பெற்று உலக சாதனையை நிலைநாட்டியது. சில வேட்பாளர்கள் ஆள் மாறாட்டம், சண்டித்தனம் போன்ற தந்திரங்களை கையாண்டு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றனர். நான் அதிக வாக்குகளை பெறும் ஓரிடத்தில் வெறும் 18 பேர் மட்டுமே வாக்களித்தது ஒரு சாதனையாகும். சிலர் தேர்தலில் தோல்வியுற்றவர்களை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று வர்ணிப்பது எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். இதுபோன்ற கூற்றுக்களை என்னையும் விட்டு வைக்காமல் நீங்களும் கூறி வந்திருக்கின்றீர்கள்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று நான் எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். மனித உயிர்கள் சம்பந்தமான விடயங்களில் தங்கள் நடைமுறையை அவர்கள் மாற்ற வேண்டுமென்பது எனது நிலைப்பாடு ஆகும். மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையையும், அவரையும் பெருமளவில் பின்பற்றுபவன் நான். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகிய திரு.ஆர்.சம்பந்தன் அவர்கள் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தானும் ஏற்கவில்லை என்றும் அதை தான் வெளியே கூறுவதில்லை என்றும் கூற, அதற்குப் பதிலாக நானும் கூறாது போனால் வேறு யார் இதனை கூறுவார்கள் என்று திரும்பக் கேட்டேன். ஆனால் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சம்பந்தமாக அரசுடனோ வேறு யாருடனும் பேசுவதானால் விடுதலைப் புலிகளுக்கு ஏகபிரதிநிதி அந்தஸ்து கொடுக்கலாம் என்றும் எல்லா விடயங்களிலும் அல்ல என்று நான் கூறியிருந்ததை அனைவரும் அறிவர். என்னுடைய இந்த விளக்கம் விடுதலைப் புலிகள் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் ஈடுபடுவதை எதிர்க்கின்றேன் என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் பரப்பப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் நான் ஆற்றியிருந்த உரைகளை வாசித்து பார்ப்பீர்களாக இருந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். நான் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் அல்ல என்பதை நீங்கள் உணர்வீர்கள். அத்தகைய சம்பவங்கள் இரண்டொன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு சந்தர்ப்பத்தில் அவசரகாலச்சட்டம் விவாதத்தின் போது பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை அவர்களை பார்த்து நீங்கள் பத்து ஆண்டுகள் போராடினாலும் பளையை மீள கைப்பற்றமாட்டீர்கள் என்றும் ஆனையிறவை கைப்பற்றுவதென்பது பகற்கனவு என்றும் கூறியிருந்தேன். ஆனால் ஆச்சரியப்படக்கூடிய வகையில் திருகோணமலை கூட்டணிக்கிளை தலைவர் திரு.ஆர்.சம்பந்தன் தலைமை தாங்கிய கூட்டத்தில் எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கொடுக்கப்பட்ட காரணங்களில் ஒன்று நான் ஆனையிறவை இராணுவத்திடம் கையளிக்குமாறு என்பதே. இது எனக்கு பாதகமாக ஏற்படக் கூடிய வகையில் தெரிவிக்கப்பட்ட திட்டமிட்ட பொய்யாகும். இன்னொரு சந்தர்ப்பத்தில் அதே அமைச்சருக்கு விடுதலைப் புலிகள் பலாலியில் இருந்து 40 மைல்களுக்கப்பால் உள்ள கிளிநொச்சியில் உள்ளனர் என்று நினைக்க வேண்டாம் என்றும் அவர்கள் மூன்று அல்லது நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள பூநகரியில்தான் தங்கியிருக்கின்றனர் என கூறியிருந்தேன். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தம்பி பிரபாகரன் யாசீர் அரபாத் போன்று உலக நாடுகளை சுற்றி வருவார் என்று கூறியபோது திரு.ஆர்.சம்பந்தன் எனது அருகில் இருந்தார்.
இதுபோன்று பல கதைகள் என்னிடம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாது. இக்கடிதத்தை முடிப்பதற்கு முன்பு மீண்டும் அடிக்கடி உங்களிடம் தொடர்பு கொள்வேன் என்பதை உறுதியாக கூறுகிறேன்
வீ.ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம் – த.வி.கூ