தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் நடத்தியிருக்கின்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், நாட்டு மக்களைப் பெரும் சோகத்துக்குள்ளும், சந்தேகப் பீதிக்குள்ளும் தள்ளியிருக்கின்றது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 320ஐத் தாண்டிவிட்டது; காயமடைந்த 500க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அத்தோடு, தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் இருந்த பலரும் காணாமற்போயிருக்கிறார்கள். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.
பேரிழப்புகளுக்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கின்ற அரசாங்கம், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் தவிர்த்திருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் கூறுகின்றது.
பேரிழப்பொன்று நிகழ்வதற்கு முன்னரேயே, அதனைத் தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும், அதைத் தவறவிட்டுவிட்டு, அரசாங்கம் தற்போது கோரும் ‘மன்னிப்பு’ உண்மையிலேயே அதற்கான தார்மீகத்தைக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகின்றது.
அரசாங்கத்துக்கும் அரச தலைவருக்கும் இடையிலான முரண்பாடு என்பது, தேசிய பாதுகாப்பை ஒரு கிள்ளுக்கீரை விடயமாகக் கையாள வைத்துவிட்டதோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகின்றது.
ஒக்டோபர் 26 சதிப்புரட்சிக் காலத்துக்குப் பின்னர், தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு பிரதமரோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரோ அழைக்கப்படவில்லை என்கிற விடயம் தற்போதுதான் வெளிவந்திருக்கின்றது.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான தன்முனைப்பு (ஈகோ) பிரச்சினையில், நாட்டின் பாதுகாப்பு விலையாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாதம், நான்காம் திகதியே சர்வதேசப் புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக, அறிவுறுத்தி இருக்கின்றன. அது தொடர்பில் இலங்கைப் புலனாய்வுத் தரப்பும், அறிக்கையொன்றைத் தேசியப் பாதுகாப்புத் தரப்புகளிடம் கையளித்திருக்கின்றது.
ஆனால், அந்த அறிக்கை குறித்தோ, அதிலுள்ள விடயங்கள் குறித்தோ, நாட்டின் பிரதமருக்கே தெரிந்திருக்கவில்லை என்பது, எவ்வளவு மோசமான அரசியல்- தலைமைத்துவ கலாசாரம், நாட்டில் நீடிக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இவ்வாறான அறமற்ற அரசியலே, மக்களைத் தொடர்ந்தும் பலிக்களங்களில் நிறுத்துகின்றது.
இன்னொரு பக்கம், தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு, பொலிஸ்மா அதிபரே அழைக்கப்படுவதில்லை என்ற விடயம் மேலெழுகின்றது. தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் அரசாங்கத்தின் இரண்டாவது தலைவரான பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சினைத் தன்னகத்தே வைத்திருக்கின்ற ஜனாதிபதியால் அழைக்கப்படுவதில்லை என்கிற விடயம் பாரதூரமானது.
தான் நாட்டில் இல்லாத சமயங்களில், அதுசார்ந்த பொறுப்புகளைப் பிரதமர் உள்ளிட்டவர்களுடன் பகிர்ந்தளிக்க வேண்டிய கடப்பாடும் ஜனாதிபதிக்கு உண்டு. நாட்டின் தலைவரான ஜனாதிபதி, நாட்டில் இல்லாத சமயங்களில், சம்பிரதாயபூர்வமாகப் பிரதமரே நாட்டின் தலைவராகச் செயற்பட வேண்டும்.
ஆனால், பெரும் அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்த பின்னரும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை பிரதமரால் உடனடியாகக் கூட்ட முடியாமல் போகும் அளவுக்குத்தான், நிலைமை இருக்கின்றது என்பது என்றைக்குமே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை.
மக்களே நாடொன்றின் இறைமையைக் கட்டமைக்கிறார்கள். அந்த இறைமையின் அடிப்படையிலேயே அரசுகள் தோற்றம் பெறுகின்றன. அந்த அரசுகளின் தலைமை என்பது, மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் ஜனநாயக உரிமைகளையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது நிகழ்ந்திருப்பது, பொறுப்பின்மை மற்றும் சின்னப்பிள்ளைத்தனங்களில் உச்சம்.
தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்கள், ஏற்கெனவே கிடைக்கப்பெற்ற நிலையில், அந்தத் தகவல்கள் குறித்தோ, அதுசார்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ ஜனாதிபதியோ, பாதுகாப்புச் சபையோ அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.
விடுமுறையைக் கழிப்பதற்காக ஜனாதிபதி வெளிநாடு சென்றிருக்கின்றார். நாட்டின் தலைவருக்கான ஆணையை மக்களிடம் கோரும் போதும், அந்தப் பொறுப்பை ஏற்கும் போதும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புத் தொடர்பில் உறுதியை வெளிப்படுத்துவது கடப்பாடாகும்.
ஆனால், அந்தக் கடப்பாடுகளுக்கு அப்பால் நின்று, மைத்திரி விடயங்களைக் கையாண்டிருக்கிறார் என்பதுதான், அவரின் அசண்டையீனங்களில் வெளிப்படுவதாகும்.
அரச இயந்திரமும், அரசாங்கமும் நாடு எதிர்கொண்டிருக்கின்ற அச்சுறுத்தல்களை ஒருமித்து நின்று எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது. ஆனால், இன்னமும் முரண்பாடுகளின் கட்டத்தில் நின்று, விடயங்கள் அணுகப்படுகின்றன. பேரழிவுக்குப் பின்னராக, ஊடகங்களை எதிர்கொள்ளும் அமைச்சர்களின் முகங்களில் வெளிப்பட்ட புன்னகையும் இன்னொரு தரப்பைக் குற்றம் சாட்டுவதில் காட்டிய முனைப்பும் உண்மையிலேயே தார்மீக அடிப்படைகளைக் கொண்டவையா?
எல்லா விடயங்களும், தேர்தல் அரசியல் என்கிற கட்டங்களை நோக்கி நகர்த்தப்படும் சூழல் என்பது சாபக்கேடு. இலங்கையின் அனைத்து இன மக்களும் இப்போது அதனை எதிர்கொண்டிருக்கிறார்கள். கடந்த நாள்களில் இடம்பெறும் சம்பவங்களும் அதற்குச் சான்று பகர்கின்றன.
இன்னொரு பக்கம் இன, மத, மார்க்க, உருவ அடையாளங்களின் வழி, மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு நோக்க ஆரம்பிப்பது என்பது, பல்லின சமூகங்கள் வாழும் சூழலில் பெரும் அச்சுறுத்தலானது.
இலங்கை போன்ற எழுபது ஆண்டுகளுக்கும் மேலான இன, மத முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்ற நாட்டுக்கு, அது புதிதில்லைத்தான். ஆனால், சந்தேகத்தின் அளவு, கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்திருந்த நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதல்களும், அதன் பின்னரான காட்சிகளும் அவ்வாறான கட்டத்தை நோக்கி நாட்டை வெகுவேகமாகத் தள்ளிவருகின்றது.
தொடர்ச்சியாக, இன- மத- மார்க்க அடிப்படைவாத சிந்தனைகளின் வழி, அரசியலை எதிர்கொண்டிருக்கின்ற இலங்கையில், அடிப்படைவாதச் சிந்தனைகளின் பரவலும், நிலைபெறுகையும் இலகுவானதுதான்.
ஒரு தரப்பு, தங்களது தேவைக்கான மத அடிப்படைவாதச் சக்திகளைத் தோற்றுவித்து, முரண்பாடுகளைத் தூண்டும்போது, அதற்கு எதிராக இன்னோர் அடிப்படைவாத சிந்தனை தோற்றம் பெறுவது தவிர்க்க முடியாதது.
இன்றைக்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. சாதாரண மக்களை நோக்கி, வேகமாகவே தங்களது அடிப்படைவாத நிலைப்பாடுகளைச் செலுத்தி வருகின்றன. அவ்வாறான நிலையில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு, புறச் சக்திகள் உள்நுழைந்து, தமது தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன.
இலங்கை மீது தொடுக்கப்பட்டிருக்கின்ற இந்தத் தீவிரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டு முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அடிப்படைகளோடு மாத்திரமல்ல, பிராந்திய, மத, மார்க்க ஆதிக்கத்தோடும் தொடர்புடையவை. மக்களை முரண்பாடான முனைகளை நோக்கித் தள்ளி, அதில் சிலமுனைகளில் அடிப்படைவாதம் என்கிற சிந்தனையை விதைத்து, அதிகாரங்களை அடைவதே, உலகம் தற்போது எதிர்கொண்டிருக்கின்ற தீவிரவாதம்.
அது, எந்த மத, மார்க்க அடையாளத்தோடும் வரலாம். ஆனால், அந்தத் தீவிரவாதத்தின் வேரில், வெந்நீரை ஊற்றும் பொறுப்பு என்பது, அரசுகள் சார்ந்தது மட்டுமல்ல, மதச் சுதந்திரம், அடையாள சுயாதீனம், அடிப்படையில் மனிதம் குறித்துச் சிந்திக்கின்ற அனைத்துத் தரப்புகளினதும் பொறுப்பாகும்.
தீவிரவாதிகளின் இனம், மதம், நிறம் குறித்து மாத்திரம் சிந்தித்துக் கொண்டு, சக மனிதன் மீதான அச்சத்தை வெளிப்படுத்துவது அவசியமற்றது. அந்த அச்ச மனநிலையைத்தான், அந்தத் தீவிரவாதிகள் எதிர்பார்க்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு, இலாப நட்டக் கணக்கை அவர்கள் போடுகிறார்கள். அப்படியான நிலையில்தான், சக மனிதன் மீதான சந்தேக உணர்வுகளைத் தாண்டி ஒருமித்து, தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டு மக்களுக்கு ஏற்படுகின்றது.
இன்னொரு பக்கம், தீவிரவாதத் தாக்குதல்களைக் காரணம் காட்டிக் கொண்டு, மீண்டும் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தலுக்குள் தள்ளும் பேரினவாதச் சிந்தனைகளை, அவசரகாலச் சட்டம் என்கிற போர்வையில் அரசும், அதன் சக்திகளும் செய்யாமல் இருக்க வேண்டும்.
நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை எவ்வளவு வேகமாக உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றதோ, அதேயளவுக்கு நாட்டு மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற சந்தேகங்களைக் களைய வேண்டியதும் கடமையாகும்.
அதனை, தன்முனைப்பு, சுய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று மைத்திரியும் அரசாங்கமும் செய்ய வேண்டும். இல்லையென்றால், நாடு இன்னும் மோசமான கட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.