(ஒரு நண்பரின் பதிவு ஒன்று உரும்பிராய் தியாகி சிவகுமாரன் அவர்கள் பற்றிய 2013 இல் நான் இட்ட பதிவு ஒன்றை மீண்டும் பதிவிடுகிறேன்)
தியாகி சிவகுமாரன் , வீரன் சிவகுமாரன், உரும்பிராய் சிவகுமாரன் பொன் சிவகுமாரன் என பலராலும் விழிக்கப்பட்ட சிவகுமாரன் அவர்கள் ஒரு தற்கொலை போராளியல்ல. ஒரு மகத்தான உன்னதமான போராளி. வெறுமனே தமிழ் உணர்ச்சியிலும் தமிழ் தேசிய உணர்வலையிலும் போராட கிளம்பிய ஆரம்பகால போராளிகள் மத்தியில் சமூக உணர்வும் தமிழ் சமூகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற தெளிவிலும் போராட கிளம்பியவர் சிவகுமாரன் அவர்கள். அவரோடு சேர்த்து அவரது சகாக்கள் நால்வர். இவர்கள் அடங்கியதுதான் இவரது இயக்கம். இவர்கள் எல்லோருக்குள்ளும் தான் ஒருவரே சயனைட் குப்பியை கொண்டுதிரிந்தார். அப்பொழுது அவர் பொலிஸ் அத்தியேட்சகர் சந்திரசேகராவுக்கும் அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் தியாகராஜா என நினைக்கிறேன் இருவருக்கும் குண்டுவைத்து கொலைசெய்ய முயற்சித்தார் என்ற காரணத்தால் இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்தார். இதன் காரணமாக தன்னை போலீசார் பிடித்தால் சித்திரவதை செய்து கொல்வார்கள் என்ற நோக்கத்தால் சயனைட்குப்பியை தான் மட்டும் தனது சகாக்களுக்கு கொடுக்காமல் கொண்டு திரிந்தார். சகாக்கள் பிடிபட்டால் எல்லாவற்றுக்கும் காரணம் சிவகுமாரன் தான் என சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவைத்திருந்தார். ஆனால் போராடக்கிளம்பிய ஆரம்பங்களிலேயே அவர் கோப்பாய் வங்கி கொள்ளை முயற்சியில் பொலிசாரால் பிடிபடும்போது சயனைட் உட்கொண்டு வைத்தியசாலையில் மரணித்தார்.
புலிகளுக்கும் இவருக்கும் ஏன் பிரபாகரனுக்குமே தொடர்பு எந்தக்காலத்திலும் இருந்தது கிடையாது. அப்பொழுது புலிகள் அமைப்பும் கிடையாது. இவரை ஒரு மகத்தான போராளி என்பதில் புடம் போட்டு எடுத்தது உரும்பிராயிலிருந்த சாதிப்பிரச்சனைதான். அங்குதான் இவர் தமிழ் சமூகத்தையும் அதன் படிகளையும் கற்றுக்கொண்டார். சாதி தீண்டாமை யாழ்ப்பாணத்தில் அதி உச்சத்தில் இருந்த அறுபதுகள் எழுபதுகளில் உரும்பிராயிலும் அது தாண்டவமாடிய காலம். உரும்பிராய் தேநீர் கடைகளில் உயர் சாதிக்காரனுக்கு ஒரு கோப்பையும் கீழ் சாதிக்காரனுக்கு மூக்குப்பேனியும் என்று பிரித்து வைத்திருந்த காலங்களில் அதே மூக்குப்பேணியில் தனக்கும் தேநீர் தரச்சொல்லி அருந்தியவர். கீழ்சாதிக்காரன் என்று நீங்கள் பிரித்து வைத்திருக்கும் அவர்களும் எம்மைப்போல மனிதர்கள்தான் என்று தனது குடும்பத்தாரோடும் தனது சாதி சமூகத்தோடும் முரண்பட்டவர் சிவகுமார் அவர்கள். உரும்பிராயில் இந்தியாவின் சேரிகளை போல கொடுமையான சூழலில் இருந்த ஒரு பகுதி செல்வபுரம் எனப்படுவது. பொருளாதார ரீதியிலும் கல்வியிலும் அவர்களை முன்னேற விடாமல் அடக்குமுறைக்குள் வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சமூகத்தோடு நல்லுறவும் சிறுவர்களுக்கு படிப்பையும் சொல்லி தந்ததோடு செல்வபுரத்தில் தனது தலைமையில் சமபந்தி போசனம் ஒன்றையும் செய்திருந்தார் சிவகுமாரன்.
கல்வியறிவும் சமூகம் சார்ந்த முன்னேற்றகரமான தெளிவும் கெட்டித்தனமும் அஞ்சா நெஞ்சமும் மன உறுதியும் மனிதர்மேல் அன்பும் பெண்கள் மீது மரியாதையும் கொண்டிருந்தவர் சிவகுமார் அவர்கள். கண்டி போகம்பரை சிறையிலும் அனுராதபுர சிறையிலும் சில காலம் தீவிரவாதத்தை தழுவுவதற்கு முன்னால் இருந்தவர். அவர் போராட தொடங்கி சில காலங்களிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கிவிட்டார். அப்பொழுதெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தது பெரும்பாலும் சிறுபான்மை தமிழ் குடும்பங்கள் மத்தியில்தான். விஞ்ஞான அறிவும் பொது அறிவும் நகைச்சுவை உணர்வும் பழகும் பண்பும் எதையும் நேருக்கு நேர் பேசுகின்ற பண்பும் அதிகம் பெற்றவர் சிவகுமார் அவர்கள். மனித பண்பும் பிறர்மேல் அன்பும் பொருந்திய மக்கள் போராளிகளை காண்பது அரிது. தமிழர்களின் சாபமோ என்னவோ சிவகுமாரனும் இளம் வயதில் எம்மிடமிருந்து இல்லாமல் போனார். ஆனால் அவர் இருந்திருந்தால் பத்மநாபாவை போல அவரும் புலிகளால் கொல்லப்பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் நல்ல மனிதர்களையும் போராளிகளையும் புலிகளின் பாசிசம் விட்டுவைத்தது கிடையாது. இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் சிவகுமார் அவர்களுடைய நாமம் என்றும் உயர்வாய் நிலைத்திருக்கும். முள்ளிவாய்க்காலில் சயனைட் குப்பிகள் அணிந்திருந்தும் கேணல்களும் தலைவரும் வெள்ளைக்கொடியோடு சரணடைந்து கொல்லப்பட்ட போது கொள்கைவீரர்களும் மறவர்களும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு சிவகுமாரன் அவர்கள் கண்முன்னே வந்து நிற்கின்றார். அவர் நாமம் வாழ்க. சின்ன வயதில் ஒரே வீட்டில் ஒன்றாக பழகிய சிவகுமார் அண்ணனின் நினைவுகள் என் நெஞ்சை விட்டு என்றும் அகலாது.
சிவகுமார் அவர்கள் நல்ல கவித்துவமும் உள்ளவர். அவர் ஒரு சினிமா பாடலை தனது வரிகள் போட்டு நிரப்பியிருந்தார்.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.. அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நாம் அடிமைகள் இல்லை என்று பாடு ராஜா என்ற பாடலில் சரணத்தை இப்படி எழுதியிருப்பார்,
‘’அண்ணார்ந்து பார்க்கின்ற அலறி மாளிகை அதில் அம்மா குடியிருக்கும் அந்த மாளிகை நீ பொன்னான உரிமையை தர மறுத்தால் பெரும் புரட்சி வெடிக்கும் தனி நாடு பிறக்கும்.’’
சிவகுமார் அவர்கள் இந்து குடும்பத்திலிருந்து வந்த போதும் கிறீஸ்தவ செபங்களும் பாடல்களும் தெரிந்தவர். பாடல்களை அழகாக பாடிக்காட்டுவார். இவர் ஒரு சிறந்த தற்காப்பு கலை வீரர். இன்னும் எத்தனையோ நினைவுகள் இவருடனானவை இன்னும் என்னுள் நிழலாடுகின்றன.