இலங்கையைப் பொறுத்த வரையில், அணியின் அண்மையகால திறமைவெளிப்பாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்டு எந்த வீரரையும் தவறவிடப்பட்டவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல, சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய, ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க, முன்னாள் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் தவறவிடப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
அந்தவகையில், கடந்த காலங்களில் நிரோஷன் டிக்வெல்ல, அகில தனஞ்சய, தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க ஆகியோர் பிரகாசித்திருந்தபோதிலும், இலங்கைக் குழாமின் தெரிவானது, அண்மையில் முடிவடைந்த சுப்பர் மாகாணத் தொடரில் வெளிப்படுத்தப்பட்ட பெறுபேறுகளின் பிரதிபலிப்பாகவும் காணப்பட்டிருந்த நிலையிலும், பந்துவீச்சுப்பாணியை மாற்றியமைத்த பின்னர் முன்னரைப் போல அகில தனஞ்சய சிறப்பாகச் செயற்பட்டிருக்காத நிலையில் இவர்கள் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரையில் இளம் அதிரடி விக்கெட் காப்பாளராக றிஷப் பண்ட் காணப்பட்டிருந்தபோதும், போட்டிகளை முடித்து வைக்கக்கூடியவராக அடையாளப்படுத்தப்படாத நிலையில், தினேஷ் கார்த்திக்கிடம் தனதிடத்தை அவர் பறிகொடுத்ததுடன், கடந்த காலங்களில் அம்பாதி ராயுடு சிறப்பாகச் செயற்பட்டிருந்தபோதும், அண்மையை காலத்தில் சிறப்பாகச் செயற்பட்ட விஜய் ஷங்கர், அவரை விட களத்தடுப்பில் மிக வேகமாகனவராகவும் பந்துவீசக்கூடியவராகவும் இருந்தநிலையில் குழாமில் தனதிடத்தை அவரிடம் பறிகொடுத்திருந்தார்.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் டேவிட் வோணர், முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை வரவேற்றிருந்தபோதும், அண்மைய காலங்களில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் குழாமில் இடம்பிடிக்காத நிலையிலேயே அவர்கள் குழாமில் இடம்பிடித்திருந்தனர். இதுதவிர, கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட்டும் குழாமில் இடம்பிடித்திருக்கவில்லை.
இதேவேளை, அண்மையிலேயே இங்கிலாந்துக்காக விளையாட வேகப்பந்துவீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சர் தகுதிபெற்றிருந்தபோதும் அவரும் குழாமில் இடம்பெற்றிருக்காதபோதும், பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், உலகக் கிண்ணக் குழாமில் இடம்பெற்றிருக்காத இன்னொரு வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் ஜோர்டானுடன் இடம்பெற்றுள்ளார்.
அந்தவகையில், இங்கிலாந்தின் உலகக் கிண்ண குழாமில் ஜொவ்ரா ஆர்ச்சரும், கிறிஸ் ஜோர்டானும் தவறவிடப்பட்டுள்ளபோதும், பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் சிறப்பாகச் செயற்படும் பட்சத்தில், இவர்களிடமிருந்து லியம் பிளங்கெட், டொம் கர்ரன் ஆகியோர் அழுத்தத்தை எதிர்கொள்வர்.
இதேவேளை, பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், இங்கிலாந்தில் வைத்து அவ்வணி சம்பியன்ஸ் லீக்கில் சம்பியனாகுவதற்கு காரணமான வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர், அண்மைய கால மோசமான பெறுபேறுகளால் குழாமில் இடம்பெறாதபோதும், இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், இறுதி நேரத்தில் குழாமில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றார். இதுதவிர, அண்மைய காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் ஷின்வாரியும் குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில் அன்ட்ரே ரஸல் குழாமில் இடம்பெற்றுள்ளபோதும், கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ, சுனில் நரைன் போன்ற நட்சத்திர வீரர்கள் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
இதேவேளை, தென்னாபிரிக்க பொறுத்தவரையில் கடந்தகாலங்களில் அவ்வணி சார்பாக சிறப்பாகச் செயற்பட்ட சகலதுறைவீரர் கிறிஸ் மொறிஸின் உடற்றகுதி தொடர்பாக அவ்வணியின் தேர்வாளர்கள் கொண்டிருந்த சந்தேகத்தால் அவர் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
இதுதவிர, பங்களாதேஷ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களே குழாம்களில் இடம்பெற்றதுடன், குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு தவறவிடப்பட்ட வீரர்களெவரும் காணப்பட்டிருக்கவில்லை.